| 1 | ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது. | லூக் 15:22 எபே 6:15 பிலிப் 1:27 |
| 2 | உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது. | நீதி 3:8 |
| 3 | உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது. | உன்ன 4:5 உன்ன 6:6 |
| 4 | உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. | உன்ன 1:10 உன்ன 4:4 |
| 5 | உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார். | ஏசா 35:2 எபே 1:22 எபே 4:15 எபே 4:16 கொலோ 1:18 கொலோ 2:19 |
| 6 | மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். | உன்ன 7:10 உன்ன 1:15 உன்ன 1:16 உன்ன 2:14 உன்ன 4:7 உன்ன 4:10 சங் 45:11 ஏசா 62:4 ஏசா 62:5 செப் 3:17 |
| 7 | உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது. | சங் 92:12 எரே 10:5 எபே 4:13 |
| 8 | நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. | உன்ன 4:16 உன்ன 5:1 எரே 32:41 யோவா 14:21-23 |
| 9 | உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது. | உன்ன 2:14 உன்ன 5:16 நீதி 16:24 எபே 4:29 கொலோ 3:16 கொலோ 3:17 கொலோ 4:6 எபிரெ 13:15 |
| 10 | நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது. | உன்ன 2:16 உன்ன 6:3 அப் 27:23 1கொரி 6:19 1கொரி 6:20 கலா 2:20 |
| 11 | வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம். | உன்ன 1:4 உன்ன 2:10-13 உன்ன 4:8 |
| 12 | அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். | நீதி 8:17 பிரச 9:10 |
| 13 | தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன். | ஆதி 30:14 |