உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

பாலியல் பாவங்களை மேற்கொள்வது எப்படி?
ஆசிரியர்: P. ஸ்ரவன்குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 23 நிமிடங்கள்

 

ஒரு கிறிஸ்தவனின் ஒப்புதல் வாக்குமூலம்

"மாயையானதைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" (சங்கீதம் 119:37) என்றும், "என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக" (சங்கீதம் 19:14) என்றும் நான் எத்தனையோ முறை ஜெபித்திருக்கிறேன். ஆயினும், என் பாவமுள்ள இருதயம் மாயையானவற்றையே பார்க்கவும், அவற்றையே சிந்திக்கவும் என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. நான் கர்த்தரை விசுவாசிப்பதற்கு முன்பு, மிக மோசமான பாவக் கட்டுகளுக்குள் வாழ்ந்து வந்தேன். வேதம் குறிப்பிடும் பாவங்களின் பட்டியலோடு என் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒருவகையில் அவை எல்லாவற்றையும் என் வாழ்வில் காண முடியும். ஆனால், இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், என்மேல் தம்முடைய கிருபையைப் பொழிந்து, என்னைத் தம்முடைய பிள்ளையாக மாற்றிக்கொண்டார். இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நான் செய்த காரியங்களுக்காக, சில நேரங்களில் என்னையே என்னால் மன்னிக்க முடியவில்லை. ஆனால், தேவன் எவ்வளவு நீடிய சாந்தமும், இரக்கமும் ஐசுவரியமும், கிருபையும் உள்ளவர் என்பதை எனக்குப் பிரத்தியேகமாக வெளிப்படுத்தினார்.

நான் விழுந்துபோன பாவப் படுகுழிகளில் ஒன்று 'திரைப்படங்கள் பார்ப்பது'. ஒரு காலகட்டத்தில் அது எனக்கு ஒரு போதையாகவே மாறியது. எவ்வளவென்றால், ஒரு திரைப்படம் வெளியாகும் நேரத்தில், எப்படியாவது பணத்தைச் சேர்த்துக்கொண்டு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று முதல் காட்சிக்கே சென்றுவிடுவேன். அந்தப் பாடல்களைப் பாடுவதும், வசனங்களைப் பேசுவதும், அந்த நடிகர்கள் நடந்துகொண்ட விதத்திலேயே நடப்பதும் இப்படிப்பட்ட செயல்கள் செய்வது எனக்கு விருப்பமாக இருந்தது. விபச்சாரம், ஆபாசம், காமம் போன்ற பாவங்கள் இல்லாத திரைப்படங்கள் இருப்பது மிகவும் அரிது. இவற்றுக்குப் பழகிப்போன எவரும், அத்தகைய காட்சிகளையே மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புவார்கள். தேவனுடைய வார்த்தை மிகத் தெளிவாக, "ஆகவே, விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்" (கொலோசெயர் 3:5) என்று சொல்லுகிறது. நான் காமத்திற்கு இடங்கொடுத்து, ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால், அது விபச்சாரம் என்கிற தேவனுடைய அளவுகோலின்படி, நான் அவர் முன்பாக விபச்சாரனாகவே இருக்கிறேன். அநேக கிறிஸ்தவர்கள் தங்களுக்குப் பாலியல் பலவீனங்கள் உண்டு என்பதைச் சொல்லிக்கொள்ளவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ விரும்புவதில்லை. நாம் எங்கே தரக்குறைவாகி விடுவோமோ என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. இதனால், இல்லாத பரிசுத்தத்தை வெளிக்காட்டும் சகோதரர்கள் இன்றைய கிறிஸ்தவ திருச்சபைகளில் அநேகர் உள்ளனர். ஆனால், நான் என்னுடைய பலவீனங்களைச் சொல்லிக்கொள்ளத் தயங்கவில்லை. பாலியல் ரீதியான சிந்தனைகளின் விஷயத்தில் நான் பாவத்தோடு போராடிக்கொண்டே இருக்கிறேன்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகர், ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பது, பிற பெண்ணை இச்சையோடு பார்ப்பது, விபச்சாரம் செய்வது போன்ற காரியங்களைச் செய்துகொண்டு, "ஒருமுறை முழங்கால் படியிட்டு தேவனிடம் மன்னிப்புக் கேட்டால் அவர் மன்னித்துவிடுவார்" என்று எண்ணிக்கொண்டு, கவலையற்றிருக்கிறார்கள். பிரியமான சகோதரனே, சகோதரியே! ஒருவேளை நீயும் இத்தகைய பாவத்தோடு போராடிக்கொண்டிருந்தால், இந்தக் கட்டுரையின் மூலம் தேவன் உன்னைப் பலப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இந்தக் கட்டுரையை நான் மற்றவர்களுக்குப் போதிப்பதை விட, எனக்கு நானே போதித்துக்கொள்ளும்படியாகவே எழுதுகிறேன்.

தேவன் பாலியல் இச்சைகளை ஏன் கொடுத்தார்? அன்பு என்றால் என்ன? காமம் என்றால் என்ன? என்று அறிந்துகொள்ள முடியாத வயதிலேயே, நாம் அனைவரும் இந்தக் கவர்ச்சிகளுக்கு அடிமைகளாகி விடுகிறோம். பாவ சுபாவம் கொண்ட நாம் அனைவரும் அசுத்தத்தையும், காமத்தையும் விரும்பி, அத்தகையவற்றைப் பார்க்கவும், அந்த விதமாகவே நடந்துகொள்ளவும் விரும்புகிறோம். நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல, நானும் அத்தகைய பாவியே. நான் இரட்சிப்பைப் பெறாதவர்களைக் குறித்துப் பேசவில்லை; ஏனெனில், தேவ ஆவியானவரின் பலம் இல்லாமல் யாராலும் பாவத்தை ஜெயிக்க முடியாது. எனவே, தேவனை அறிந்து, சுவிசேஷ சத்தியத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட என்னைப் போன்ற பிரியமான சகோதரர்களுடனே பேசுகிறேன்.

எத்தனையோ முறை தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, "ஆண்டவரே, இத்தகைய பாலியல் பாவத்தில் விழுந்துவிட்டேன். இது தவறு என்று பரிசுத்த வேதம் சொல்லுகிற காரியம் எனக்குத் தெரியும்; நான் இத்தகைய காரியங்களில் ஈடுபடக்கூடாது என்பதும் தெரியும். ஆயினும், நான் பலவீனனாக இருக்கிறேன்; ஆகையால் எதைச் செய்யக்கூடாது என்று நினைத்தேனோ, அதையே செய்கிறேன்" என்று சொல்லியிருப்பாய். உன் கையில் இருக்கும் கைப்பேசி மூலமாகத் தேவையற்றவற்றைப் பார்த்து, அவற்றின் மூலம் தூண்டப்பட்டு, சுய இச்சையினால் ஈர்க்கப்பட்டு எத்தனை முறை பாவத்தில் விழுந்திருக்கிறாய்? இப்படி விழுந்துபோன ஒவ்வொரு முறையும், "நான் இனி இத்தகைய காரியங்களைச் செய்யமாட்டேன்" என்று தேவனுக்கு முன்பாகத் தீர்மானித்து, மீண்டும் அதே பாவத்தில் விழும்போது, பலவீனனாக, ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், "நான் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா?" என்று எத்தனை முறை உன் இரட்சிப்பைக் குறித்தே சந்தேகம் கொண்டிருக்கிறாய்?

இப்படி நடப்பதை நம்முடைய வாழ்க்கையில் பலமுறை நாம் கவனித்திருப்போம். "எனக்குத் தேவனைப் பற்றித் தெரியும், தேவ வசனம் தெரியும், நான் வசனத்தையும் போதிக்கிறேன்; ஆனாலும் அந்த வசனத்தின்படி நடக்க, குறிப்பாகப் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதில் நான் ஏன் தோல்வியடைகிறேன்?" என்று சந்தேகப்படுகிறாயா? இது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை. "நான் இந்த காரியத்தில் எத்தனையோ முறை தோல்வியடைந்துவிட்டேன், தேவன் இனி என்னை மன்னிக்கமாட்டார்" என்ற எண்ணத்திற்கும் இடங்கொடுத்து விட்டாயா? ஆனால், நீ உண்மையாகவே கிறிஸ்துவை விசுவாசித்தால், தேவன் இந்தப் பாவத்திலிருந்து உன்னை விடுவிக்க விரும்புகிறார். நீ உண்மையாகவும் மனப்பூர்வமாகவும், "ஆண்டவரே, எனக்கு இரங்கும், உதவி செய்யும், என்னை விடுவியும்" என்று ஜெபித்தால், தேவன் உன் வேண்டுதலை நிராகரிக்கமாட்டார். ஆனால், ஜெபம் செய்துவிட்டுத் திரும்பவும் பழைய வாழ்க்கைக்கே சென்றுவிடுகிறவர்கள் அநேகர் உண்டு; அவர்களுக்காக நான் இந்த வார்த்தைகளை எழுதவில்லை. ஜெபம் செய்து, "தேவனுடைய பலத்தினால் போராடுவேன், பாவத்தைச் சாகடிப்பேன்" என்று தீர்மானித்திருப்பவர்கள், இந்த கட்டுரையை தொடர்ந்து படித்து பலமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

தேவன் பாலியல் இச்சைகளை ஏன் படைத்தார்?

நாம் பல நேரங்களில், "தேவனே, உண்மையில் இந்த இச்சைகள் எனக்குள் ஏன் இருக்கின்றன? இத்தகைய பாலியல் இச்சைகள் எனக்குள் இல்லாவிட்டால் எந்தப் பிரச்சனையும் இருக்காது, நான் பரிசுத்தவானாக இருப்பேனே" என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பாலியல் இச்சைகள் கெட்டவை அல்ல; அவற்றை தேவனே படைத்தார், ஒரு நோக்கத்தோடு படைத்தார். தேவனுடைய நோக்கங்களை அறிந்துகொள்ள முடியாமல், இத்தகைய இச்சைகள் இருப்பதே பாவம் என்று நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. நான் வாலிபனாக இருந்தபோது, ஒவ்வொரு பாலியல் இச்சையும் பாவம் என்றும், கணவன் மனைவிக்குள் இருக்கும் தாம்பத்திய உறவும்கூட பாவம் என்றும் நினைத்துக்கொண்டிருந்தேன். அது சரியான புரிதல் அல்ல.

தேவன் நமக்குக் கொடுத்த பாலியல் இச்சைகளுக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன:

  1. திருமணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் ஒரே சரீரமாவதற்கு.
  2. அவர்கள் பலுகிப் பெருகி சந்ததியை உருவாக்குவதற்கு (பிள்ளைகளைப் பெறுவதற்கு).

"உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேர்த்தியான பெண்மானும், அழகிய வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக" (நீதிமொழிகள் 5:18,19).

தன் சொந்த மனைவியுடன் கணவன் பாலியல் உறவு கொண்டிருப்பதைத் தேவன் நல்லது என்கிறார். ஏனென்றால் அந்த உறவை, அந்த ஈர்ப்பை, அந்த இச்சையைப் படைத்தவர் தேவனே. தேவன் நல்லவர் ஆகையால், அவர் படைத்த ஒவ்வொன்றும் நல்லதே. பாலியல் இச்சைகளும் நல்லவைகளே. ஆனால் அந்த விருப்பங்களும், இன்பங்களும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மட்டுமே இருக்க வேண்டும் என்று தேவன் எல்லைகளை விதித்துள்ளார். பரஸ்திரீயோடு பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாவம்; பிற பெண்ணை இச்சையோடு பார்ப்பது பாவம்; ஆபாசப் படங்கள் பார்ப்பது பாவம். வேறொரு ஆண் உன் மனைவியை இச்சையோடு பார்த்தால் உனக்குக் கோபம் வராதா? அதைக் குறித்து நீ சந்தோஷப்படுவாயா? அதேபோல, நீ வேறொருவரை (அது யாராக இருந்தாலும் - கல்லூரிப் பெண்ணோ, சினிமா நடிகையோ, அல்லது அடுத்த வீட்டுக்காரரின் மனைவியோ) காமப் பார்வையோடு பார்க்கும்போது, அவர்களின் சரீரத்தை இச்சிக்கும்போது, தேவன் உன்னைக்குறித்துச் சந்தோஷப்படுவாரா? நீ சிந்தித்து பார்.

பிள்ளைகளைப் பெறுவதற்காக மட்டுமே தேவன் பாலியல் இச்சைகளைப் படைக்கவில்லை; அதற்கு மாறாக, உன் மனைவியினிடத்தில் மகிழ்ச்சியாயிரு என்று வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்கள் ஒரே சரீரமாவார்கள், அவர்கள் ஒருவரில் ஒருவர் திருப்தி அடைவார்கள்; அந்த விதமாக அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவார்கள் (1கொரிந்தியர் 6:18-20).

தேவன் உனக்குக் கொடுத்த பாலியல் இச்சைகளைத் திருமணத்திற்கு வெளியே பயன்படுத்தக்கூடாது. அவை பரிசுத்தமானவை; உன் வாழ்க்கைத்துணைக்கும் உனக்கும் இடையே மட்டுமே இருக்கவேண்டியவை. திருமணத்திற்கு வெளியே நிறைவேற்றிக்கொள்ளும் எந்தப் பாலியல் இச்சையும் விபச்சாரமே. சகோதரர்களே, விபச்சாரம் செய்யாதீர்கள்; தேவன் உன் பாவத்தை முன்னிட்டு உன்னை அருவருப்பார்.

வழிதப்பிய பாலியல் இச்சைகள்

பாலியல் இச்சைகளைத் தேவன் ஏன் கொடுத்தார் என்று பார்த்தோம். திருமண உறவில் பரிசுத்தமாகப் பயன்படுத்த வேண்டிய ஆசீர்வாதத்தை, வெளியே வரைமுறையின்றிப் பயன்படுத்துவதும், அப்படிச் செய்தாலும் தவறில்லை என்று சொல்வதும் நம் சமூகத்தின் விசித்திரமான போக்கு. உண்மையில் இது விசித்திரமே அல்ல. தேவன் பரிசுத்தமாகப் படைத்த ஆதாம் ஏவாள், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், இந்த உலகத்திற்குப் பாவத்தையும், சாபத்தையும், மரணத்தையும் கொண்டுவந்தார்கள் என்று நாம் அனைவரும் அறிவோம். பாவத்திற்கு அடிமையான மனிதன் வேசித்தனத்தையும், அசுத்தத்தையும், காமத்தையும் நடப்பிக்கச் சிறிதும் தயங்கமாட்டான் என்பதை வேதத்தின் ஆரம்பத்திலிருந்தே நாம் கவனிக்கலாம். பழைய ஏற்பாட்டில் நாம் பல உதாரணங்களைப் பார்க்கலாம். தாயுடனும், சகோதரியுடனும், பிறன் மனைவியுடனும் பாலியல் உறவு கொண்டவர்கள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக விவரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதெல்லாம் நமக்குத் தெரியும். "எனக்குக் காம இச்சைகள் மிக அதிகமாக உள்ளன சகோதரரே, நான் எத்தனை முறை முயற்சி செய்தாலும் அந்த இச்சைகளின் விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறேன்" என்று வேதனைப்படும் உண்மையான கிறிஸ்தவ சகோதரர்களும் உண்டு. இந்த இச்சைகளினால் ஆபாசத் திரைப்படங்களையும், காணொளிகளையும் பார்ப்பவர்கள் சிலர் என்றால்; அவற்றைப் பார்க்கக்கூடாது என்கிற மனசாட்சி கொண்டு, அவற்றைவிடக் கொஞ்சம் குறைவான நிர்வாணத்தைக் காட்டும் திரைப்படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பவர்கள் வேறு சிலர். இந்த இரண்டையும் செய்யாத சிலர், பாலியல் தொடர்பான எழுத்துக்களை வாசித்து, அவற்றிலிருந்து இன்பம் காண்கிறார்கள். பாலியல் இச்சைகள் உண்டாகும் போது சுயஇன்பம் செய்வதும், ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதும் சர்வசாதாரணம் என்று சமூகம் நம்பிவிட்டது. நாம் இப்போது பார்க்கும் அநேக திரைப்படங்களில் இத்தகைய போக்கையே காணமுடிகிறது.

மனிதனுடைய இருதயத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து மாற்கு 7:21,22-ல் இவ்வாறு கூறினார்: "மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபட்டும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்". இரட்சிக்கப்படாத ஒவ்வொரு மனிதனின் சுபாவமும் இதுவே - வேசித்தனமும், விபச்சாரமும், காமவிகாரமும் (இங்கே நான் பாலியல் பாவங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்) இயல்பாகவே ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் உள்ளன. இவை பாவ சுபாவத்தினால் நாம் சம்பாதித்துக்கொண்ட சொத்து.

இந்தக் காலத்தில், ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும் சேருவது போன்ற காம விகாரச் செயல்கள் சரியானவையே என்றும், அது அவர்களுடைய சுபாவம் என்றும், அந்தச் சுதந்திரத்தை நாம் கொடுக்க வேண்டும் என்றும் நம்முடைய நாட்டின் உயர்ந்த நீதிமன்றங்கள் சொல்வதைப் பார்க்கிறோம். இத்தகைய செயல்களை முன்னிட்டே தேவன் சோதோம் கொமோரா பட்டணங்களை நாசமாக்கவில்லையா? அவர்களெல்லாரும் அக்கினிக்கும் கந்தகத்திற்கும் இரையாகவில்லையா? ரோமர் நிருபம் முதல் அதிகாரத்தில் பார்த்தது போல, இத்தகையவர்களைத் தேவன் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுக்கவில்லையா?

பிரியமான சகோதரனே / சகோதரியே, உன் பாலியல் இச்சைகளுக்கு இந்த உலகம் காட்டும் தீர்வு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே. தேவனுடைய கட்டளைகள் இந்த காரியத்தில் மிகத் தெளிவாகவும் கண்டிப்பாகவும் உள்ளன; அவரை நம்பிய நாம் அந்த வழியில் நடக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுவரை நீ இந்தக் கட்டுரையை வாசித்திருந்தால், நீ விழுந்துபோன இந்தப் பாவம் எத்தகையது என்றும், அதன் விளைவு என்னவென்றும் உனக்குப் புரிந்திருக்கும்.

காம விகாரச் செயல்களுக்குத் தேவன் அளிக்கும் தீர்ப்பு

தேவன் விபச்சாரம் செய்யாதே என்ற கட்டளையைக் கொடுத்தார்; அதற்குக் கீழ்ப்படியாமல் போனால் ஏற்படும் விளைவையும் தெரியப்படுத்தினார்.

  • "ஒருவன் பிறனுடைய மனைவியோடே சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த புருஷனும் அந்த ஸ்திரீயும் ஆகிய இருவரும் சாகக்கடவர்கள்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்" (உபாகமம் 22:22).
  • "கன்னிகையாகிய ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், ஒருவன் பட்டணத்தில் அவளைக் கண்டு, அவளோடே சயனித்தால், நீங்கள் இருவரையும் அந்தப் பட்டணத்து வாசல்வரைக்கும் கொண்டுவந்து... கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்" (உபாகமம் 22:24).
  • "உன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தும்படிக்கு அவளோடே சயனிக்கலாகாது" (லேவியராகமம் 18:20).
  • "அவர்களில் (இஸ்ரவேலர்களில்) சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரே நாளில் இருப்பத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக" (1 கொரிந்தியர் 10:8).

மேற்கண்ட வசனங்களின்படி, விபச்சாரம் செய்யாதே என்ற தேவனுடைய நியமனத்தை மீறியதற்காக மரண தண்டனையைத் தேவன் செயல்படுத்தியதைப் பார்க்கிறோம். இன்னும் அநேக விஷயங்களைக் குறித்து நாம் பேசலாம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவனுடைய ஜனங்கள் யாருடன் பாலியல் உறவு வைத்திருக்க வேண்டும், எந்த விதமாக இருக்க வேண்டும் என்ற காரியங்களைத் தேவன் நமக்காகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார். இதே அளவுகோலைக் கொண்டு இப்போது நமக்குத் தேவன் தீர்ப்பு அளித்தால், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகர் மரண தண்டனைக்குப் பாத்திரராவார்களோ என்னவோ!

ரோமர் நிருபம் முதல் அதிகாரத்தில், தேவனைப் பின்பற்றாமல் சிருஷ்டியை ஆராதித்தவர்களை, "தங்கள் இருதயங்களின் இச்சைகளினாலே ஒருவருக்கொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக... அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்" என்று பார்க்கிறோம். இதை ஒரு எச்சரிக்கையாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். நீ தேவனுடைய பிள்ளை என்று சொல்லிக்கொண்டு, அசுத்தமான காமச் செயல்களால் நிறைந்திருந்தால், தேவன் உனக்குத் நியாயத்தீர்ப்பு வழங்குவார்.

அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படிப் பரிசுத்தமாக இருப்பது?

இயேசுவை விசுவாசித்த ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தமாக இருக்கவே விரும்புவான்; அதற்காகவே முயற்சிப்பான். பாவத்தைச் சாகடிக்காமல் பரிசுத்தமாக இருப்பது சாத்தியமில்லை. நாம் பாவத்தைச் சாகடிக்க வேண்டும், அனுதினமும் சாகடிக்க வேண்டும். எப்படிச் சாகடிக்க வேண்டும் என்றால், பரிசுத்த ஆவியின் வல்லமையால் சாகடிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. நீ உண்மையான விசுவாசியாக இல்லாவிட்டால், உன் காமக் கிரியைகள், பாவச் சிந்தனைகள், மோகச் செயல்கள் மாறாது என்பதை முதலில் புரிந்துகொள். தயவுசெய்து சுவிசேஷத்தை ஏற்றுக்கொள். கன்னியின் வயிற்றில் பிறந்த கிறிஸ்து பாவிகளின் நிமித்தம் இந்த உலகத்திற்கு வந்தார்; கோரமான சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். யாரெல்லாம் நான் ஒரு பாவியென்றும், என்னுடைய பாவத்தை மன்னிக்க இயேசுவால் மட்டுமே முடியும் என்றும், அவரிடத்தில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் எல்லாரையும் அவர் பாவத்திலிருந்தும், பாவத்தின் விளைவான மரணத்திலிருந்தும் (நித்திய நரக ஆக்கினை) விடுவிப்பார். இதுவே சுவிசேஷம். எவர்கள் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறார்களோ, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

"நான் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லியும் வேசித்தனத்தைச் சாகடிக்க முடியவில்லையா? உன் மோக இச்சைகளினால் நீ திருமணத்திற்குப் புறம்பான கிரியைகள் மூலம் உன்னை நீயே திருப்திப்படுத்திக்கொள்கிறாயா? அப்படி நடந்த ஒவ்வொரு முறையும், "ஆண்டவரே, மன்னியும்; இன்னொரு முறை இப்படிச் செய்யமாட்டேன்" என்று வாக்குக் கொடுக்கிறாயா? அப்படியானால், இந்த விஷயத்தில் பாவத்தோடு போராடுவதற்குத் தயாராக இரு. தேவன் நமக்குத் துணையிருக்கிறார். ஆவியானவர் மூலமாக உன் சரீரத்தின் செய்கைகளைச் சாகடிக்கத் தயாராய் இரு.

முதலாவதாக இரண்டு விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறேன். 1கொரிந்தியர் 6-ஆம் அதிகாரத்தில் சில முக்கியமான கேள்விகளைப் பவுல் எழுப்புகிறார். முதலாவதாக, "அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்ஜியத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?", "வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா?" (1கொரிந்தியர் 6:9,16). இந்த இரண்டு கேள்விகளையும் கவனமாகச் சிந்தியுங்கள். பாவத்தில் வாழ்பவன் பாவத்திற்கு அடிமை; அந்தப் பாவத்தோடு போராட்டம் செய்யாமல், தேவனிடமிருந்து உதவியைத் தேடாமல் இருப்பவன் தேவனுடைய பிள்ளை அல்ல. அப்படிப்பட்டவன் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குப் பாத்திரன் அல்ல. "நான் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன்" என்று சொல்லிக்கொண்டு வேசியின் ஐக்கியத்தை நாடுகிறாயா? "நான் எந்த வேசியிடமும் செல்லவில்லையே" என்று நீ சொல்லலாம். நீ போனாலும் போகாவிட்டாலும் உன் சிந்தனைகள் எப்படி இருக்கின்றன? அத்தகைய காரியங்களை வெறுக்கிறாயா, அல்லது அத்தகைய வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறாயா? உன் உண்மையான மனது தேவனுக்குத் தெரியும். உன் சிந்தனைகள் உனக்குத் தெரியும்.

இரண்டாவதாக, பவுல் நம் முன் வைக்கும் வேறு இரண்டு கேள்விகளைச் சிந்தியுங்கள். "உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா?", "உங்கள் சரீரமானது தேவன் அருளினதாய் உங்களில் தங்கியிருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்... அறியீர்களா?". இதன்படி, நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்; நாம் கிறிஸ்துவின் மாதிரியாக வாழ வேண்டியவர்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டோம். நம்மை இரட்சித்துப் பரிசுத்தப்படுத்தக் கிறிஸ்து நம்மை வாங்கினார் என்றால், நாம் நம் சரீரங்களை நம்மை வாங்கிய நம் ஆண்டவருக்குக் கொடுக்காமல், வேசிகளுக்குக் கொடுத்து அவர்களுடன் ஒரே சரீரமாவோமா? அப்படிச் செய்கிறவர்கள் தங்கள் ஆண்டவரைப் பற்றியும், அவர் தங்களுக்காகச் செய்த தியாகத்தைப் பற்றியும், அவருடைய அன்பைப் பற்றியும் சிறிதளவாவது புரிந்து கொண்டிருக்கிறார்களா? சகோதரர்களே கவனியுங்கள், இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் அவயவம். அதனால்தான் பவுல் ரோமர் 6:13-ல், "நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்" என்று சொன்னார். மேலும் ரோமர் 6:18-ல், "பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்" என்றும் கூறுகிறார்.

நாம் கிறிஸ்துவுக்கு அவயவங்கள் எப்படி ஆனோம் என்றால், நமக்குள் பரிசுத்த ஆவியானவராகிய தேவன் வாசம் பண்ணுகிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். அதனால்தான் பவுல் ரோமர் 8:9-ல், "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல" என்று கூறுகிறார். நம் சரீரம் தேவனுடைய ஆலயம் என்ற விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1கொரிந்தியர் 3:16).

உன் பாலியல் இச்சைகள் உன்னைப் பாவம் செய்யும்படித் தூண்டும்போது, நீ இந்த விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்: "நான் தேவனுடைய ஆலயம், நான் கிறிஸ்துவின் அவயவம். நான் வேசியின் ஐக்கியத்தை நாடமாட்டேன். அத்தகைய செயலுக்கு இடங்கொடுக்கும் எந்தச் சிந்தனையையும் அழிக்காமல் விடமாட்டேன்." இப்படிச் சிந்திக்காமல், உன் சொந்த சரீரத்தைச் சுகப்படுத்திக்கொள்ளும் எண்ணம் உன்னில் ஆரம்பமாகும் போது, அதற்கே நீ முக்கியத்துவம் கொடுத்து, பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலையும், உன் மனசாட்சியையும் ஒதுக்கி வைத்தால், நிச்சயமாகப் பாவத்தில் விழுவாய்; மீண்டும் மீண்டும் அத்தகைய காரியங்களையே செய்வாய்.

நடைமுறை ஆலோசனைகள்

இதுவரை அநேக விஷயங்களைத் தெரிந்துகொண்டாய். இவை அனைத்தையும் நடைமுறையில் எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்துச் சில விஷயங்களைச் சொல்ல முயல்கிறேன்.

. உன் நேரத்தை வீணடிக்காதே:

தேவன் நமக்குக் கொடுத்த நேரத்தை வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். "சோம்பேறியின் மனம் சாத்தானின் குடிசை" என்பது போல, உன் மனதை வெறுமையாக வைக்காமல், தேவனுடைய வசனத்தால் நிரப்பு. தினமும் ஒரு திட்டத்தை வகுத்துக்கொள். வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்திற்குச் சென்றாலும் சரி, ஒவ்வொரு மணி நேரத்தையும் எப்படிச் செலவிட வேண்டும் என்ற ஒரு அட்டவணையை உன் குறிப்பேட்டில் எழுதிக்கொள். அதே விதமாகச் செய்யவும் முயற்சி செய். வெறுமையாய் இருந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படிச் செய்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்; இருப்பினும், நீ தேவனைப் பிரியப்படுத்த விரும்பினால், அனுதின நடவடிக்கைகளுக்கு ஒரு திட்டத்தைப் போட்டுக்கொள்.

அது இந்த விதமாக இருக்கலாம்:

  • காலை 6:00 - 6:30: நான் தூங்கி எழுந்து தயாராவேன் அல்லது எழுந்து வேதம் வாசிப்பேன்.
  • காலை 6:30 - 7:30: காலை உணவு, வீட்டில் ஏதேனும் அவசியமான உதவி செய்தல்.
  • காலை 7:30 - 8:00: ஜெபம் செய்தல் அல்லது அலுவலகத்திற்குக் கிளம்புதல்.

இப்படி உன் நாளைத் திட்டமிட்டுக்கொள். "என்ன சகோதரரே, ஒவ்வொன்றையும் இப்படி எழுதிக்கொள்ள வேண்டுமா? எனக்கு ஞாபகம் இருக்குமே" என்று நீ நினைக்கலாம். ஆனால் தயவுசெய்து இந்த வேலையைச் செய்து பார். உனக்குள் ஒரு ஒழுங்குமுறை வரும். ஒவ்வொருவருக்கும் அன்றாடத் திட்டமிடல் அவசியம். உன் நேரத்தை எதற்காகச் செலவிட வேண்டும், எந்த விதமாகச் செலவிட வேண்டும் என்பதை நீயே தீர்மானித்து, அந்த விதமாகச் செய்யும்போது, தேவையற்ற சிந்தனைகளுக்கு அதிக இடம் இருக்காது. நீ போட்டுக்கொண்ட திட்டத்தை அன்று முடிக்கும்போது தேவனுக்கு நன்றி சொல்; செய்ய முடியாதபோது மன்னிப்புக் கேட்டு, அடுத்த நாள் இன்னும் அதிகமாக முயற்சி செய்.

. உன் சிந்தனைகளைத் தேவ வசனத்தால் நிரப்பு:

தேவையற்ற காணொளிகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்போதும், பொழுதுபோக்கிற்காகத் திரைப்படங்களைப் பார்க்கத் தோன்றும்போதும், முதலாவதாக 'இல்லை' என்று மனதில் மட்டுமல்லாமல் வெளியேயும் சத்தமாகச் சொல். உடனே தேவனுடைய வசனத்தை எடுத்து வாசி. எந்தத் தவறைச் செய்ய உன் மனம் தூண்டுகிறதோ, அது தவறு என்று தேவன் சொல்லியிருக்கும் வேதப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசி. அப்படி வாசித்த பிறகு, சிறிது நேரம் ஜெபத்தில் செலவிடு. தேவ வசனம் தொடர்பான கிறிஸ்தவ ஆக்கங்கள் மற்றும் மிஷனரிகளின் வரலாற்றைத் தெரிவிக்கும் புத்தகங்களை வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்.

. தேவபக்தியுள்ள சகோதரர்களுடன் வாரத்தில் சில முறையாவது ஐக்கியம் கொள்ள முயற்சி செய்:

தேவனுடைய பிள்ளைகள் மத்தியில் நாம் இருக்கும்போது, ஐக்கியத்தை அனுபவிக்கும்போது நாம் உற்சாகத்தைப் பெறுவோம். அவர்களுடன் பேசுவதும், தேவனுடைய காரியங்களைப் பகிர்ந்துகொள்வதும், சேர்ந்து ஜெபம் செய்வதும் நம்மை எவ்வளவாகவோ பலப்படுத்தும். தேவன் நம்மை ஒரு பரிசுத்த ஐக்கியத்தில் வைத்திருக்கிறார்; நாம் அவருடைய ஜனங்கள் என்ற ஒரு உணர்வு உன்னைப் பற்றிக்கொண்டிருக்கும்.

. கிறிஸ்து உனக்காகச் செய்த காரியத்தையும், உனக்கு வரப்போகும் பலனையும் நினைத்துப் பார்:

ஆண்டவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்; இலவசமான இரட்சிப்பைத் தந்தார். தம்முடைய இராஜ்ஜியத்தின் குடிகளாக நம்மை நியமித்தார். திரும்ப வருவேன் என்று வாக்குத்தத்தம் செய்து, தமக்காகவே நம்மை வாழும்படி கட்டளையிட்டார். ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, நல்ல போராட்டத்தைப் போராடினால், "சபாஷ், உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே" என்று சொல்லப்படுவாய். ஆண்டவர் உன் கிரியைகளுக்குப் பலன் அளிப்பார். "பயந்தியோடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயப்பொருளைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" என்று அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர் 9:24-ல் சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்.

. உன்னைச் சோதனைக்குள்ளாக்கும் எந்தச் சாதனத்தையும் விட்டுவிடு:

குடிப்பதை நிறுத்திய ஒரு நபர், ஒயின் ஷாப்பிற்குள் சென்று அங்கே உட்கார்ந்துகொண்டு, "தேவனே, நான் குடிக்கக் கூடாது, எனக்கு உதவி செய்யும்" என்று ஜெபித்தால் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது, நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவான். விபச்சாரத்திற்குப் பழகிப்போனவன் விபச்சார விடுதிகளைச் சுற்றித் திரிந்துகொண்டு, "என்னை விபச்சாரம் என்ற பாவத்தில் விழாமல் காத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தால் என்ன நடக்கும்? அவன் விபச்சாரத்தில் விழுந்துபோகும் வாய்ப்பே அதிகமாக இருக்கும். ஆபாசப் படங்கள் உள்ள வலைத்தளத்திற்குள் சென்று, "நான் அதைப் பார்க்காமல் என்னைக் காப்பாற்றும்" என்று தேவனிடம் கேட்பது முட்டாள்தனம். உன்னைப் பாவத்தில் தள்ளக்கூடியது என்று தெரிந்தால், அந்தச் சாதனத்திற்கும், அந்த ஊடகத்திற்கும் சாத்தியமான அளவு தூரமாக இரு. திரைப்படங்கள் மூலமாக உனக்குத் தேவையற்ற பாலியல் இச்சைகள் உண்டானால், திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்திவிடு; தேவன் உதவி செய்வார். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், "கண்களை மூடிக்கொள்" என்று தேவன் சொல்லவில்லை; "அதைப் பிடுங்கி எறிந்துவிடு" என்றே சொன்னார். நீ கண்களை மூடிக்கொண்டால் பாவத்தில் விழுவதைத் தடுக்க முடியாது; அந்தக் கண்ணைப் பிடுங்கி எறிந்தால், அதாவது உன் பாவத்திற்குக் காரணமான மூலத்தை நீ தாக்கினால் ஜெயிப்பாய்.

முடிவுரை

தேவனுக்கு உன் பலவீனங்கள் தெரியும்; உன் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். "இந்தச் சோதனை என்னால் தாங்க முடியாதது, இந்தப் பாவத்தை என்னால் ஜெயிக்க முடியாது" என்று சொல்லாதே. ஆண்டவரே எல்லா விஷயங்களிலும் நமக்கு உதவி செய்வார். "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்" (1கொரிந்தியர் 10:13).

 

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.