ஆவிக்குரிய ஆபத்துகள் நிறைந்த காலத்திலே வாழும் நீங்கள், மற்றவர்களுடைய ஆத்தும நன்மைக்காக உங்களால் இயன்றதைச் செய்கிறீர்களா? செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் இருப்பதால், நற்செய்தி அறிவிக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தொடர்ந்து வாசிக்க...
"...காலமறிந்து இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்திருந்த தலைவர்கள்..." (1 நாளாகமம் 12:32).
பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் சரித்திரத்தில், சவுலின் மரணத்திற்குப் பிறகு, தாவீதுக்கும் சவுலின் குடும்பத்தாருக்கும் இடையே யாருக்குச் சேவை செய்வது என்பதில் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. அப்போது 'இசக்கார்' கோத்திரத்தார் தைரியமாகத் தாவீதைப் பின்பற்ற முன்வந்தார்கள். காலத்தின் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நல்ல ஆலோசனை சொல்லும் ஞானம் பெற்ற மக்களாக அவர்கள் இருந்தார்கள்.
அவர்களைப்போல நாமும் வாழ்கின்ற காலத்தின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும். நமது சொந்த வட்டத்திற்குள் மட்டும் அமர்ந்துகொண்டு, சபையிலும் உலகத்திலும் என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமல் இருப்பது மிகவும் பரிதாபமான கிறிஸ்தவமாகும். முதலில் நாம் வேதாகமத்தைப் படிக்க வேண்டும், பிறகு நமது இருதயத்தைப் படிக்க வேண்டும், அடுத்ததாக நாம் உலகத்தைப் படிக்க வேண்டும் என்று நமது கர்த்தர் விரும்புகிறார்.
புதிய ஏற்பாட்டில் தங்கள் காலத்தை அறிந்துகொள்ளாமல் போன யூத மக்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடிந்துகொண்டார் (மத்தேயு 16:13; லூக்கா 19:44). ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு வகையில் கிறிஸ்தவத்திற்கு ஆபத்தாக இருக்கும்; அந்தந்தக் காலங்களில் எழும் ஆபத்துகளை அடையாளம் காணும் கிறிஸ்தவர்கள் நமக்குத் தேவை. "எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?" (1 கொரிந்தியர் 14:8).
- கிறிஸ்தவத்தின் முழுமையான உண்மையையும், தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தின் அதிகாரத்தையும் பாதுகாப்பதே இன்றைய காலத்தின் தேவை.
1736-ல் பிஷப் பட்லர் எழுதிய வார்த்தைகள் இன்றைக்கும் பொருத்தமானவைகளாக உள்ளன.
"கிறிஸ்தவம் என்பது ஆராய்ந்து புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல என்று பலர் தாங்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். காலப்போக்கில் கிறிஸ்தவம் ஒரு கட்டுக்கதை என்று கூறும் அளவிற்கும் சென்றுவிட்டார்கள். அறிவுசார் மக்கள் அனைவரும் கிறிஸ்தவத்தை இவ்வாறு கருதுவதில் ஒருமனதாக உள்ளனர். மேலும், கிறிஸ்தவம் ஒரு முட்டாள்தனமான காரியமாகக் கருதப்படுவதோடு, நீண்ட காலமாக அது உலகத்தின் சந்தோஷத்திற்குத் தடையாக இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள்." (பிஷப் பட்லரின் 'சமய ஒப்பாய்வு' என்ற நூலின் அறிமுகத்திலிருந்து).
செய்தித்தாள்களும், பத்திரிகைகளும், புத்தகங்களும், விரிவுரைகளும், சிலவேளைகளில் பிரசங்கங்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் தொடர்ந்து கிறிஸ்தவத்தின் அஸ்திபாரங்களைத் தாக்கி வருகிறார்கள். கடவுளால் கொடுக்கப்பட்ட தேவபக்தி, வேதாகமம் அல்லது அற்புதங்களை நம்புவது, கல்வி அறிவுள்ளவர்கள் செய்யக்கூடாத காரியம் என்று தத்துவஞானிகளும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். திரித்துவம், கிறிஸ்துவின் தேவத்துவம், நரகம் ஆகியவற்றை நம்புவதை அவர்கள் முட்டாள்தனமாகக் கருதுகிறார்கள். விசுவாசத்தில் பலவீனமாக இருக்கும் கிறிஸ்தவர்களை எளிதாக ஏமாற்றுவதற்காகவே, தங்கள் அறிவைக் கொண்டு தந்திரமாக இப்படிச் செய்கிறார்கள்.
இவ்விதமான அவிசுவாசத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்படக் கூடாது. ஆதாம் ஏவாளுடைய காலத்திலிருந்து மக்கள் கடவுளை நம்பாதிருக்க வேண்டும் என்பதற்காகச் சாத்தான் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறான் (லூக்கா 18:8; 2 தீமோத்தேயு 3:13; 2 பேதுரு 3:3). இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடாது என்று நான் சொல்வது போலவே, இதனால் உங்கள் சிந்தையில் அசைக்கப்படாதவர்களாக நிலைநிற்க வேண்டும் என்றும் கூறுகிறேன். அவிசுவாசிகளின் அறிவுபூர்வமான எல்லாவித தாக்குதல்களையும் வேதாகமம் எப்போதும் மேற்கொண்டு நிலைநிற்கும். அவ்விதமான நம்பிக்கையற்றவர்கள் தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்துமுடித்த பிறகும், மறுக்க முடியாதபடி நிலைநிற்கும் மூன்று உண்மைகள் உள்ளன:
- அ) முதலாவது உண்மை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவம் உண்மையில்லை, அது கடவுளிடமிருந்து வரவில்லை என்றால், இந்த நம்பிக்கையற்றவர்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்? மனித உருவில் அவர் வெளிப்பட்டதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? கட்டாயத்தினாலோ தந்திரத்தினாலோ அல்லாமல், உலகத்தின் மீது அவர் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்கள் எப்படி விளக்குவார்கள்? மனித வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து அவரைப்போல யாரும் இருந்ததில்லையே, அதைப்பற்றி என்ன சொல்லுவார்கள்? வேதாகமம் அவரைப்பற்றிக் கொடுக்கும் விளக்கத்தைத் தவிர வேறு எந்த விளக்கமும் அவருக்குப் பொருந்தாது.
- ஆ) இரண்டாவது உண்மை: வேதாகமம். வேதாகமம் எப்படி இத்தனை மகத்துவமான நூலாக இருக்கிறது? சில யூதர்களால், உலகத்தின் வெவ்வேறு மூலைகளில், வரலாற்றின் வெவ்வேறு காலப்பகுதிகளில் வாழ்ந்த, ஒருவரையொருவர் அறியாத ஆசிரியர்களால் எழுதப்பட்ட இந்த நூல், தனது ஆழமான, எளிமையான, ஞானமான, தவறற்ற தன்மைகளினால் இன்னும் நிலைத்திருக்கிறதே, அது எப்படி? இதற்கான ஒரே விளக்கம், 'அது கடவுளால் அருளப்பட்ட நூல்' என்பதேயாகும்.
- இ) மூன்றாவது உண்மை: கிறிஸ்தவம் உலகத்தின் மேல் ஏற்படுத்திய தாக்கம். கிறிஸ்தவம் கடவுளின் வார்த்தையாக இல்லாமல் மனிதக் கண்டுபிடிப்பாக இருந்திருந்தால், அது மனிதகுலத்தின் மீது இப்பேர்ப்பட்ட மாற்றத்தை எப்படி உண்டாக்கியிருக்கும்? கிறிஸ்தவம் வருவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் உள்ள மனித ஒழுக்க நிலையின் வித்தியாசத்திற்கு என்ன காரணம்? கிறிஸ்தவம் உள்ள நாடுகளுக்கும் கிறிஸ்தவம் அற்ற நாடுகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை இந்த நம்பிக்கையற்றவர்கள் எப்படி விளக்கப்போகிறார்கள்? கிறிஸ்தவம் சத்தியத்தையும் பரிசுத்தத்தையும் நம்மிடம் கொண்டு வந்ததே, உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான ஒரே காரணமாகும்.
- கிறிஸ்தவ கொள்கைகளைப் பற்றிய உறுதியான மற்றும் தெளிவான கருத்துடையவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்க வேண்டியது தற்காலத்தின் தேவையாகும்.
நம்பிக்கையற்றவர்களாலும் அவிசுவாசிகளாலும் திருச்சபைக்கு வெளியே இருந்து வருகிற அதே அளவு ஆபத்து, திருச்சபைக்குள்ளே நாம் உபதேசங்களைக் குறித்துக் கவலையற்றவர்களாக இருக்கும்போதும் வருகிறது. இதைப் பற்றிய எனது பயத்தை நான் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பலர், சரியெது தவறெது என்பதைக் குறித்து நிச்சயமற்றவர்களாக இருக்கிறார்கள். புதிய, கவர்ச்சிகரமான கருத்துக்களைப் புத்திசாலித்தனமாகப் பேசுகின்ற பிரசங்கிகளால் மிக எளிதாக இவர்கள் ஈர்க்கப்பட்டுப் பாதிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய மக்கள், ஒரு ஆவிக்குரிய மேகமூட்டத்திலே வாழ்பவர்களைப்போல எதையும் தெளிவாகக் கண்டறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பக்தியிலிருந்து எந்தவிதமான நம்பிக்கையையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ளாமலே கல்லறைக்குச் சென்றுவிட முடியும் என்பதுதான் மிகவும் ஆபத்தான உண்மையாகும். மனித இருதயம் சுபாவப்படியே மெய்யான தேவபக்தியின் அழகை அறியாதபடி குருடானதாகவும், தேவபக்தியின் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமற்றதாகவும் காணப்படுகிறது. நாம் எல்லாவற்றோடும் ஒத்துப்போகிறவர்களாகவும், பிரச்சனைகளற்ற சுகமான வாழ்க்கை வாழ விரும்புகிறவர்களாகவும் இருக்கிறோம். இதன் விளைவாக, நம்முடைய விசுவாசத்தைக் குறித்துத் தெளிவற்றவர்களாக இருப்பதையே நாம் தெரிந்துகொள்கிறோம்.
இந்தவிதமான தீர்மானமற்ற மனநிலையைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கிறிஸ்தவத்தின் வெற்றி எல்லாக் காலத்திலும் தெளிவான உபதேசம் மற்றும் இறையியல் மூலமாகவே பெறப்பட்டது. கிறிஸ்துவினுடைய மரணம் மற்றும் அதன் பொருள், பாவத்தினுடைய சீரழிக்கும் தன்மை, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் மறுபிறப்பு, மனந்திரும்பிக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை நாம் மக்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டும். கடவுள் இப்படிப்பட்ட போதனைகளைத்தான் நூற்றாண்டுகள்தோறும் கனம்பண்ணி, அவற்றின் மூலமாகப் பெரும் வெற்றிகளைக் கொடுத்திருக்கிறார்.
- தனிப்பட்ட பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தையும், அனுதின நடைமுறை தேவபக்தியையும் அதிகமாக வலியுறுத்த வேண்டியது இன்றைய தேவையாய் இருக்கிறது.
சீர்திருத்த காலத்திற்குப் பிறகு, கிறிஸ்தவ வாழ்க்கைத் தரம் தற்போது உள்ளதைப்போல இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததில்லை. பரிசுத்தத்திற்கான வழியைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. இவ்வாறு நான் எளிமைப்படுத்துவது சிலருக்கு நகைப்புக்குரியதாய் இருக்கலாம். ஆனால், கடவுளுடைய பத்துக் கட்டளைகளை நாம் கவனமாக ஆராய வேண்டும். இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட மலைப்பிரசங்கத்தை அதிக கவனமாக உற்றுநோக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களின் பிற்பகுதியைக் கவனமாக வாசிக்க வேண்டும்.
இன்றைய கிறிஸ்தவம் தன் வலிமையை இழந்து காணப்படுகிறது என்பது இந்நாட்களில் உள்ள பொதுவான குறையாகும். இதற்கான காரணம், பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் காணப்படும் தரக்குறைவான வாழ்க்கையே என நான் நினைக்கிறேன். இதைப் பார்த்துப் பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகிறார்; நம்மைச் சுற்றியுள்ள உலகமும் நம்மைப் பார்த்துப் பரிகசிக்கிறது. வேதாகமத்தின் பரிசுத்தவான்களைப் போலக் கடவுளோடு நடக்கும் ஆண்களும் பெண்களுமே இன்றைய நமது தேவை! சுயத்தை வெறுத்தல் எங்கே? உலகத்தை விட்டுப் பிரிந்து வருதல் எங்கே? சுகபோகங்களை வெறுத்தல் எங்கே? நமது பரிசுத்த வாழ்க்கையின் தரத்தை நாம் உயர்த்துவோமாக!
- நமது ஆத்துமாக்களுக்கான நன்மையைப் பெற்றுக் கொள்வதில் விடாமுயற்சியோடு இருக்க வேண்டியது தற்காலத்தின் தேவையாகும்.
நாம் பொது இடங்களில் செய்யக்கூடிய எந்தவித பக்திக்குரிய நடவடிக்கைகளும், நமது தனிப்பட்ட பக்திக்குரிய நடவடிக்கைகளோடு இணைந்ததாகக் காணப்பட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். பொது இடங்களில் செய்யப்படும் தேவபக்திக்குரிய காரியங்களை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதைக் குறிப்பிடவில்லை; மாறாக, தனிப்பட்ட விசுவாசிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பக்திக்குரிய உறவை நாம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன். நமது தனிப்பட்ட தியானங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலமிது.
- அ) தனிமையில் அதிக கருத்தோடு நாம் ஜெபிப்போமாக. கிறிஸ்தவர்கள் தங்கள் பொது வாழ்வில் கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்த முடியாமல் போவதற்குக் காரணம், அவர்கள் வெகுகாலத்திற்கு முன்பே தங்கள் தனிப்பட்ட ஜெப வாழ்வைப் புறக்கணித்ததே ஆகும்.
- ஆ) நமது வேதாகமத்தை வாசிப்பதில் அதிக கவனம் செலுத்துவோமாக. இதில் நாம் தவறும்போது நமது சிந்தனைகளில் பல குழப்பங்கள் ஏற்படுவதோடு, பிசாசிற்கு நாம் எளிதாக இரையாகிவிடவும் நேரிடும்.
- இ) தனிப்பட்ட தியானப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வோமாக. நாம் தனிமையாக அமர்ந்திருக்கவும், நமது கடவுளோடு உறவுகொள்ளவும், வேத உண்மைகளைப் பற்றித் தியானிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். நமது ஆவிக்குரிய நல்வாழ்வு நமது தனிப்பட்ட தியானத்தில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது. "உன் அறைவீட்டுக்குள் சென்று, கதவைப் பூட்டி" (மத்தேயு 6:6) ஜெபம்பண்ணு என்ற இயேசுவின் கட்டளையே இந்நாட்களில் அதிகமாக அசட்டை பண்ணப்படுகிறது.
நான் உங்களிடம் ஒருசில கேள்விகளைக் கேட்கட்டுமா? இக்காலத்தில் இவ்வித ஆபத்துக்கள் இருப்பதை உங்களால் காண முடிகிறதா? அப்படிக் காண முடிந்தால், உங்கள் ஆத்துமாக்களுக்கான நன்மைகளை நீங்கள் உண்மையில் நாடுகிறீர்களா? சகிப்புத்தன்மை என்ற பெயரில் கொள்கைத் தெளிவில்லாமல் இருப்பதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். திருச்சபையில் தவறான போதகர்கள் குழப்பத்தை ஏற்படுத்திய காலத்தில் வாழ்ந்த விசுவாசிகளிடம் பேதுரு, "உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்" (2 பேதுரு 1:10) என்றார்.
இறுதியாக, இந்த ஆவிக்குரிய ஆபத்துகள் நிறைந்த காலத்திலே வாழும் நீங்கள், மற்றவர்களுடைய ஆத்தும நன்மைக்காக உங்களால் இயன்றதைச் செய்கிறீர்களா? செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் இருப்பதால், நற்செய்தி அறிவிக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடவுள் தாழ்மையுள்ள தமது வேலைக்காரர்களையே பயன்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பரலோகத்திற்குத் தனியாகச் செல்வதில்லை என முடிவு செய்துகொள்ளுங்கள்.