நரகத்தை மனிதர்களாகிய நாம் யாரும் பார்த்ததில்லை என்றாலும், ஏறக்குறைய எல்லா மதத்தின் புனித நூல்களும் நரகத்தைப் பற்றிப் பேசுகின்றன. தொடர்ந்து வாசிக்க...
நரகத்தை மனிதர்களாகிய நாம் யாரும் பார்த்ததில்லை என்றாலும், ஏறக்குறைய எல்லா மதத்தின் புனித நூல்களும் நரகத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஒரே மெய்யான தேவனின் வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமமும் நரகத்தின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. இதைக் குறித்தே இந்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம். வேதாகமத்தில் மிகவும் நம்பத்தகுந்த நபர் ஒருவர் இருக்கிறார். அவரே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. அவர் பொய்யான வார்த்தைகளை சொன்னதாக எங்கும் காணமுடியாது. மாறாக, அவர் பொய்யைக் கடுமையாகக் கண்டித்ததையே நாம் வாசிக்கிறோம். அவர் நரகத்தைக் குறித்த காரியங்களை தமது போதனைகளில் அதிகமாக எச்சரித்தார்.
உண்மையில் நரகம் என்பது யாருக்கும் விருப்பமில்லாத ஒரு பயங்கரமான இடம். அதைப் பற்றிப் பேசுவதற்க்கு கூட பலருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து அந்த நரகத்தைப் பற்றி அதிகமாகப் பேசினார். ஏனென்றால், நரகத்தைப் பற்றியும், அதன் பயங்கரத்தைப் பற்றியும் அவரைப் போல அறிந்தவர் வேறு எவருமில்லை என்பதே மிக முக்கியமான காரணம்; இந்த உலக மக்களை அவரைக்காட்டிலும் அதிகமாக நேசிப்பவர்கள் வேறு யாருமில்லை என்பது இரண்டாவது காரணம். அவர் மனிதர்களை அந்த அளவிற்கு நேசித்தபடியால்தான், பயங்கரமான அந்த நரகத்திற்குச் செல்லக்கூடாது என்று அவர்களை அதிகமாக எச்சரித்தார். உதாரணமாக: பரிசுத்த வேதத்தில் இவ்விதமாக பார்க்கிறோம் "அப்பொழுது, இடதுபக்கத்திலிருப்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னிடத்திலிருந்து நீங்கி, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்" (மத்தேயு 25:41) என்றும், "இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்" (மத்தேயு 25:46) என்றும் அவர் எச்சரித்தார்.
கவனியுங்கள்; புதிய ஏற்பாட்டில் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலும் நரகத்தைப் பற்றிய பல குறிப்புகள் நமக்குக் காணப்படுகிறது. உதாரணமாக: "பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களில் அநேகர் நித்திய ஜீவனுக்கென்றும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்குமென்றும் விழித்து எழுந்திருப்பார்கள்" (தானியேல் 12:2) என்று எழுதப்பட்டுள்ளது. ஆகையால், தேவன் இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ, நித்திய நரகம் உண்டு என்பதும் அவ்வளவு உண்மை. பொய் உரையாத சத்திய தேவனே இதைச் சொல்லியிருப்பதால் இதை நாம் உறுதியாக நம்பலாம். நரகம் என்பது நமது நம்பிக்கையைச் சார்ந்ததல்ல. அதாவது, நான் நம்பினால் அது இருக்கும், நம்பாவிட்டால் இருக்காது என்று சொல்வதற்கில்லை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நரகம் உண்டு என்பது மாற்றமுடியாத & மறுக்கமுடியாத நிதர்சனம்.
நரகத்திற்கு யார் பாத்திரவான்கள்?
கொலைகாரர்களும், பெரிய குற்றங்களைச் செய்தவர்களும் மட்டுமே நரகத்திற்குச் செல்வார்கள் என்றும், சென்றாலும் அங்கு கொஞ்சக்காலமே தண்டனை அனுபவிப்பார்கள் என்றும் அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், சிந்தனைகள் மூலமாகவோ அல்லது கிரியைகள் மூலமாகவோ தேவனுக்கு விரோதமாகச் செய்யும் எந்தக் குற்றமும், அது நம் பார்வையில் சிறியதானாலும் அல்லது பெரியதானாலும், அது நம்மை நித்திய நரகத்திற்குப் பாத்திரராக்குகிறது. அந்த நித்திய நரகத்தை அடைய ஒரே ஒரு குற்றம் போதுமானது. இதற்கு ஆதாரமாக இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்:
மத்தேயு 5:22 - "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனைப் பார்த்து வீணனே என்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்."
மத்தேயு 5:28 - "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று."
மத்தேயு 5:29 - "உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு; உன் சரீரம் முழுவதும் நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெடுவது உனக்கு நலமாயிருக்கும்."
தற்போதைய பலரைப் போலவே, அன்றைய யூதர்களும் ஒருவரைக் கொன்றால் மட்டுமே பாவம், விபச்சாரம் செய்தால் மட்டுமே பாவம், அத்தகைய செயல்களே நரகத்திற்குப் பாத்திரமாக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் இயேசு கூறியதின்படி; காரணமில்லாமல் ஒருவன்மேல் கோபப்பட்டாலே போதும், வீணனே என்று சொன்னாலே போதும், துரோகி என்று சொன்னாலே போதும், அது தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கும் நித்திய நரகத்திற்கும் நம்மை பாத்திரராக மாற்றும். அதேபோல ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ இச்சையோடு பார்த்தாலே போதும், அது நரகத்திற்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றும். அதாவது வெறும் செயல்கள் மூலம் மட்டுமல்ல, சிந்தனைகளில் பாவம் இருந்தாலும் நரகத்திற்குப் பாத்திரவான்களே.
அதேபோல திருட்டு, பண ஆசை, துன்மார்க்கம், வஞ்சகம், காரணமில்லாமல் கோபப்படுதல், பொறாமை, தூஷணம், கொலை, பெருமை, வஞ்சனை, வேடிக்கை பேச்சுக்கள், களியாட்டுகள், சண்டையிடுதல், திட்டுதல், அடித்தல், பகைகொள்ளுதல், குரோதம், பழிசொல்லுதல், மதியீனம், கெட்ட சிந்தனை, ஊழல், பொய் சொல்லுதல், தீமை செய்தல், பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை, வாக்குத் தவறுதல், தேவனை வெறுத்தல், தீயவைகளை உருவாக்குதல், இரக்கமில்லாதிருத்தல், மன்னிக்காதிருத்தல், தயவில்லாதிருத்தல், காமவிகாரம், விபச்சாரம், வேசித்தனம், பாலியல் சிந்தனைகள், ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் கொள்ளும் இயற்கைக்கு மாறான உறவுகள். இவற்றில் ஒரு குற்றத்தைச் செய்தாலும் அது நரகத்திற்குப் பாத்திரமாக்கும்.
நினைவில் கொள்ளுங்கள்; இவையெல்லாவற்றையும் செய்தால் மட்டுமல்ல, இதில் ஒன்றைச் செய்தாலும் அது நரகத்திற்கு நம்மை கொண்டு செல்லும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில், அதாவது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை இவற்றில் எதைச் செய்தாலும் அவன் நரகத்திற்கே செல்வான். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஏனென்றால், தேவன் இவ்வளவு சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கமாட்டார் என்று நாம் நினைக்கிறோம். நாம் அப்படி நினைப்பதற்கு முக்கிய காரணம்; தேவன் எத்தகையவர், அவர் எப்படி நியாயத்தீர்ப்புச் செய்வார் என்பது நமக்குத் தெரியாதது ஒன்று; இரண்டாவது, நாம் வகுத்துக்கொண்ட விதிகளுக்கு உட்பட்டே தேவன் தீர்ப்புச் செய்வார் என்று நினைப்பது.
ஆனால் இந்தச் சிருஷ்டியைப் படைத்தது யார்? தேவன். அப்படியானால் எப்படிப்பட்ட செயல் நரகத்திற்குத் தகுதியானது, எது தகுதியற்றது என்ற விதியை தேவன் வைக்க வேண்டுமா அல்லது நாம் வைக்க வேண்டுமா? நிச்சயமாக அதை தேவனே தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் இந்தச் சிருஷ்டி அவருடையது. ஆகவே எப்படிப்பட்ட விதிகளையும் அவரே வகுக்க வேண்டும். எனவே அவர் வகுத்த விதிகளின்படியே அவர் நியாயத்தீர்ப்புச் செய்வாரே தவிர, மனிதன் வகுத்துக்கொண்ட விதிகளின்படி அல்ல. ஆகையால் அவர் வைத்த விதிகளில் ஒன்று தவறினாலும் நரகமே. தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்துகொண்டால், அந்த விதிகளைப் பற்றிய புரிதல் நமக்கு ஓரளவுக்குக் கிடைக்கும்.
தேவன் பரிசுத்தர் என்று வேதம் கூறுகிறது. அவர் பரிசுத்தத்தில் பரிபூரண நிலையில் இருக்கிறார். அதாவது அதைக் காட்டிலும் மேலான பரிசுத்தம் என்பது இல்லை. தேவன் அதே பரிசுத்தத்தில் என்றென்றும் இருப்பார். அவருக்குள்ள பரிசுத்தம் கூடுவதோ குறைவதோ இல்லை. அவர் பரிசுத்தராய் இருப்பதாலேயே நமக்கு விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல அவர் அனந்த ஞானியாய் இருக்கிறார். அதாவது அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அதனால்தான் "என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" (சங்கீதம் 139:4) என்று எழுதப்பட்டிருக்கிறது. அவருக்கு நம் மனது மிகத் தெளிவாகத் தெரியும். நமக்கு மறதி இருப்பதுபோல அவருக்கு இருப்பதில்லை. அதேபோல அவர் சர்வவியாபியாய் இருக்கிறார். அதாவது ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருப்பது அவருக்கே சாத்தியம். இந்தக் காரணத்தினால் தேவனை நாம் காண முடிவதில்லை. ஏனென்றால் நாம் காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவர்கள், ஆனால் தேவன் அப்படியல்ல, அவர் அனந்தர், எங்கும் ஆவியாக வியாபித்திருப்பவர். அவர் இல்லாத இடமே இல்லை. இதையே "உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கே இருக்கிறீர்" (சங்கீதம் 139:7,8) என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
தேவன் சர்வ வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவரை மிஞ்சிய சக்தி ஏதுமில்லை. எதையும் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. எப்பொழுதும் அவர் தனக்கு மட்டுமே உள்ள இந்த குணாதிசயங்களின்படியே நியாயத்தீர்ப்புச் செய்வார். அதனால்தான் அவருடைய தீர்ப்பு மிகவும் துல்லியமாக இருக்கும். அவர் தீர்ப்பிடும்போது சாட்சிகள், ஆதாரங்களைக் கொண்டு சத்தியத்தின்படி மிகவும் துல்லியமாகத் தீர்ப்பிடுவார். "இவ்வளவு கடினமான விதிகளை என் அனுமதியில்லாமல் ஏன் வைத்தீர்? நான் நரகத்திற்குத் தகுதியானவன் அல்ல" என்று அவரிடம் வழக்காடவோ அல்லது வாதாடி ஜெயிக்கவோ கூடிய நபர் எவரும் இல்லை. நாம் செய்யும் தீர்ப்புகளில் குறைகள் இருப்பது இயல்பு, ஆனால் அவருடைய தீர்ப்புகளில் குறைகள் இருக்க வாய்ப்பே இல்லை.
எனவே, இந்த உலகத்தை தேவன் படைத்தார். அவருக்காகவே படைத்தார். அவருக்காகவே என்றால், அவருடைய குணாதிசயங்களை அனுசரித்து அதில் விதிகளையும் வைத்தார். அவர் மகா உன்னதமான நிலையில் இருப்பதால், நாம் செய்யும் சிறிய பாவம் கூட நம்மை அவருடைய கோபத்திற்கும் உக்கிரம் அடையச் செய்கிறது. நாம் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும் மறைமுகமாக தேவனிடம், "தேவனே நீர் பரிசுத்தர், பெரியவர், ஆனால் எனக்கென்ன? நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன்" என்று சொல்கிறோம். இவ்விதமாக நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் தேவனுக்கு விரோதமாகவே செய்கிறோம். நாம் அவருடைய சாயலிலும் ரூபத்திலும் படைக்கப்பட்டிருப்பதால், அவர் நம்மிடமிருந்து அதே நீதியையும் பரிசுத்தத்தையும் எதிர்பார்க்கிறார். அதில் கொஞ்சம் குறைந்தாலும் அவர் சகிக்கமாட்டார். அது எதானாலும், எவ்வளவு சிறியதானாலும் நித்தியரான தேவனிடமிருந்து நம்மை நிரந்தரமாகப் பிரித்துவிடும். தேவன் எவ்விதமாக எந்தப் பாவமும் இல்லாமல் பரிசுத்தராக இருக்கிறாரோ, அப்படியே எந்த நபர் அவர் வைத்த விதிகளின்படி பிறந்தது முதல் இறக்கும் வரை எந்தப் பாவமும் செய்யாமல் பரிசுத்தராக இருக்கிறாரோ, அத்தகைய நபர் மட்டுமே தேவனோடு இருக்க முடியும். இதன்படி பார்த்தால் நரகத்திற்கு யார் தகுதியானவர்? நேர்மையாக யோசித்தால் 'எல்லோரும்' என்ற பதிலே வரும். ஆம், எல்லோரும் நரகத்திற்குப் பாத்திரர்களே. இதையே வேதாகமம் வலியுறுத்திக் கூறுகிறது.
ரோமர் 3:10-12 - "நீதிமான் இல்லை, ஒருவனாகிலும் இல்லை; உணிருள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்."
ரோமர் 3:23 - "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி..."
நரகத்தில் தண்டனைகள் எப்படி இருக்கும்?
உண்மையகவே நரகத்தில் உள்ள தண்டனைகளையும், வேதனையையும் நம்மால் முழுமையாக விவரிக்க இயலாது. அது மிகவும் பயங்கரமான இடமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தேவன் அந்தத் தண்டனைகளை நாம் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளால் விவரித்துள்ளார். இந்த உலகத்தில் நாம் ஏதேனும் குற்றம் செய்தும்போது, அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களின்படி தண்டனைகள் இருக்கும். செய்தது ஒரே குற்றமானாலும், யாருக்கு விரோதமாகச் செய்தோம் என்பதைப் பொறுத்து தண்டனைகள் மாறுபடும். உதாரணமாக, ஒரு சாதாரண குடிமகனை அடித்தால் ஒரு தண்டனை, ஒரு அரசு அதிகாரியை அடித்தால் ஒரு தண்டனை, பிரதமரை அடித்தால் வேறொரு தண்டனை இருக்கும். இங்கே குற்றம் ஒன்றாகவே என்றாலும், வழங்கப்படும் தண்டனைகளில் வித்தியாசம் உள்ளது. ஏனென்றால், இங்கே என்ன குற்றம் செய்தோம் என்பதைவிட, யாருக்கு விரோதமாகச் செய்தோம் என்பதைப் பொறுத்து தண்டனைகள் மாறுகின்றன. அதாவது எதிராளியின் அந்தஸ்து உயர உயர தண்டனையும் அதிகரித்துக்கொண்டே போகும். இந்த உலகத்தில் விதிக்கும் தண்டனைகளே எதிராளியின் நிலையைப் பொறுத்து அமைந்தால், மகா உன்னதமான நிலையில் இருக்கும் தேவனுக்கு விரோதமாகச் செய்யும் பாவத்திற்கு மிகவும் கடுமையான தண்டனை இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் அந்த நித்திய தேவனுக்கு விரோதமாகச் செய்கிறோம், ஆகையால் பாவத்திற்கு தேவன் அளிக்கும் தண்டனை நித்திய நரகம். சிறிய பாவமானாலும், பெரிய பாவமானாலும், சிலவற்றைச் செய்தாலும், அதிகமாகச் செய்தாலும், கொஞ்சக் காலம் செய்தாலும், அதிக காலம் செய்தாலும், எல்லோரும் நித்திய நரகத்தில் வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலை ஒருபோதும் மாறாது. நம்முடைய உண்மையான வாழ்க்கை நாம் இறந்த பிறகே தொடங்குகிறது. நித்தியத்தோடு ஒப்பிடும்போது இந்த வாழ்க்கைக் காலம் ஒரு இமைப்பொழுதுக்குச் சமம். அதனால்தான் இயேசு கிறிஸ்து: "ஆத்துமாவைக் கொல்லவல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்" (மத்தேயு 10:28) என்று கூறினார்.
இந்த உலகத்தில் நம்மைத் துன்புறுத்தும் நபரால் அதிகபட்சம் நம்மைக் கொல்ல முடியுமே தவிர, அதன் பிறகு அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் தேவன் இறந்த பிறகும், அதாவது ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் வேதனைப்படுத்த வல்லவர். ஆகையால் மனிதர்களைக் காட்டிலும் தேவனுக்கே பயப்பட வேண்டும் என்று கர்த்தர் எச்சரித்தார். நரகத்திற்குச் செல்லும் நபர் இறந்த உடனே பாதாளத்தில் விழிப்பார். இங்கே கண்களை மூடிய உடனேயே, பல ஆயிரம் மடங்கு வேதனையோடு பாதாளத்தில் வேதனையை அனுபவித்தபடியே கண்களைத் திறப்பார்.
பரிசுத்த வேதம் நரகத்தை இவ்விதமாக விவரிக்கிறது:
1. சரீரம் மற்றும் ஆத்துமா நரகத்தில் அழிவது:
மத்தேயு 10:28-ன் படி, நரகத்திற்குச் செல்லும் நபருக்கு அழியாத சரீரம் கொடுக்கப்படும். அது இந்த உலகத்தில் உள்ள உடலைப் போல நெருப்பில் உருகிப்போகாது. அந்தச் சரீரமும் ஆத்துமாவும் இரண்டுமே இடைவிடாமல் அக்கினியில் வெந்து கொண்டிருக்கும்.
2. அழுகையும் பற்கடிப்பும்:
மத்தேயு 8:12-ன் படி "அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்."
அங்கே இடைவிடாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். அந்த அழுகைக்கு ஆறுதல் இருக்காது. அக்கினியில் ஒரு நபர் வேதனைப்படும்போது அவர்கள் தாங்கமுடியாத வலியை அனுபவிப்பார்கள், அந்த வேதனையினால் பற்களைக் கடித்துக்கொண்டிருப்பார்கள்.
3. அக்கினிச் சூளை:
மத்தேயு 13:41-ன் படி "மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இடறலுண்டாக்குகிற யாவரையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்."
ஒரு நபர் இந்த உலகத்தில் நெருப்பில் விழும்போது எவ்வளவு வேதனை அனுபவிப்பாரோ, அதைவிடப் பல மடங்கு அதிகமாக நரகத்தில் அத்தகைய வேதனையை அனுபவிப்பார்.
4. புறம்பான இருள்:
மத்தேயு 8:12-ன் படி "ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்."
மத்தேயு 22:13-ன் படி "அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவன் கைகால்களைக் கட்டி, இவனைப் புறம்பான இருளிலே தள்ளுங்கள்."
ஒரு பக்கம் அக்கினியில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் மனவேதனையையும் அனுபவிப்பார்கள். இந்த இருள் மனவேதனையைக் குறிக்கிறது. அநேகருக்கு இருட்டு என்றாலே பயம். அந்தப் பயம் நரகத்தில் பன்மடங்கு இருக்கும். பலர் நரகத்தில் எல்லோரும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்தில் இருந்து ஒரு கூட்டமாக வேதனைப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு மாறாக, அங்கே இருளை அனுபவிப்பார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது அங்கே போனவர்கள் தனிமையை அனுபவிப்பார்கள். பாதுகாப்பற்ற உணர்வோடும், வழிதப்பிய உணர்வோடும், திக்குத் தெரியாத நிலையிலும் அங்கே தனிமையில் வேதனை அனுபவிப்பார்கள்.
5. நிந்தை, நித்திய இகழ்ச்சி, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாக வேதனைப்படுதல்:
தானியேல் 12:2-ன் படி "...சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்குமென்றும் விழித்து எழுந்திருப்பார்கள்."
வெளிப்படுத்தல் 14:10-ன் படி "தேவகோபமாகிய மதுவை அவன் குடிப்பான்... பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்."
பொதுவாக இந்த உலகத்தில் மனிதர்கள் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பாவங்களைச் செய்வார்கள். ஏனென்றால் அவர்களின் இரகசிய வாழ்க்கை மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்களையே அவர்கள் அருவருப்பார்கள், அவமானம் உண்டாகும் என்ற பயம். ஆனால் நரகத்தில் அவர்கள் செய்த இரகசிய பாவங்கள் எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். ஆகையால் அவர்கள் கொடிய அவமானத்தை நித்திய காலமும் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். அனைவரும் இவர்களை அருவருப்பார்கள். இந்த உலகத்தில் வாழ்ந்தவரை அவர்கள் தங்கள் இரகசிய பாவத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து மிகவும் கௌரவமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் நரகத்தில் அவர்களின் உண்மையான நிலை தெரியும். அவர்கள் நரகத்தில் வேதனைப்படுவதைப் பரிசுத்த தூதர்கள் எல்லோரும் பார்ப்பார்கள். இங்கேயானால் அரசாங்கச் சட்டங்கள், அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்ற பயம் பாவம் செய்யாமல் இருப்பதற்குத் தடையாக இருக்கும். நரகத்தில் இத்தகைய தடைகள் எதுவும் இருக்காது.
6. தேவனால் கைவிடப்படுதல்:
2தெசலோனிக்கேயர் 1:9-ன் படி "அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்."
அவர்கள் நித்தியரான தேவனின் சமூகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். இனி ஒருபோதும் தேவனிடமிருந்து எந்த இரக்கத்தையோ, தயவையோ பெறமுடியாதபடி தூரமாகிவிடுவார்கள்.
7. இரவும் பகலும் அக்கினி ஜுவாலையில் யாதனைப்படுதல், தீராத தாகம், இளைப்பாறுதல் இல்லாமை:
வெளிப்படுத்தல் 14:11-ன் படி "அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்... இரவும் பகலும் இளைப்பாறுதலிராதிருப்பார்கள்."
லூக்கா 16:24-ன் படி "தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்."
இந்த உலக வாழ்க்கை கொஞ்சக்காலமே இருக்கும். ஆனால் நரகம் அப்படியல்ல, அது என்றென்றும் இருக்கும். அதற்கு முடிவு என்பதே கிடையாது. ஒருமுறை அதற்குள் பிரவேசித்தால் இனி நித்திய காலமும் அங்கே இருக்க வேண்டியதுதான். இங்கே இருக்கிற சுதந்திரம் அங்கே இருக்காது. உண்மையில் அங்கே எந்தச் சுதந்திரமும் இருக்காது. நித்திய காலமும் இரவு பகல் என்ற வித்தியாசமில்லாமல் இளைப்பாறுதல் இல்லாதவர்களாக இருப்பார்கள். லூக்கா 16:24-ன் படி; ஐஸ்வரியவான் அக்கினி ஜுவாலையில் வேதனைப்பட்டுக்கொண்டு, கடுமையான தாகத்தினால் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்குகிறான், ஆனால் அதுகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. நாமானால் தாகமாய் இருக்கும்போது குறைந்தது ஒரு டம்ளர் அல்லது அதற்கும் அதிகமான தண்ணீரைக் கேட்போம். ஆனால் இவனோ இங்கே ஒரு சொட்டுத் தண்ணீர் போதும், எனக்கு நித்திய ஜீவன் வேண்டாம், ஒரு கணம் நிம்மதி போதும், அதிலேயே நான் திருப்தியடைவேன் என்கிறான். இதிலிருந்து நரகம் எவ்வளவு பயங்கரமானது என்பதை ஊகிக்கலாம். அங்கே ஒரு கணம் கூட நிம்மதி கிடைக்காது.
சிலர் இந்த உலகத்தில் படும் துன்பங்கள் தாங்க முடியாமல், மனதளவில் சோர்ந்துபோய், வாழ்க்கையை வெறுத்து விஷம் குடித்தோ, உயரத்திலிருந்து குதித்தோ, தூக்கிலிட்டுக்கொண்டோ அல்லது வேறு வழிகளிலோ தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறார்கள். சாகும் தருணத்தில் வலி ஒரு நொடிதான், செத்த பிறகு இனி ஒன்றும் இருக்காது என்று நினைத்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், அது ஒரு நொடியில் முடிந்துவிடுவதில்லை. அதைவிடப் பன்மடங்கு வேதனையோடும் வலியோடும் நரகத்தில் விழிப்பார்கள். இங்கேயானால் வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகள், மது, போதைப் பொருட்கள் போன்றவை உள்ளன. நரகத்தில் அத்தகைய வசதிகள் எதுவும் இல்லை. அந்த வேதனையிலிருந்து தப்பிக்க சாகலாம் என்றாலும் சாகமுடியாது. இனி நித்திய காலமும் இளைப்பாறுதல் இல்லாமல் அந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்பட வேண்டியதுதான். அங்கே எந்த நம்பிக்கையும் இருக்காது. நரகத்தில் பாவிகள் உதவியற்றவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக, பலவீனர்களாக இருப்பார்கள்.
நரகத்தைப் பற்றிய அந்த விவரிப்புகள் அனைத்தும் வலி, பயம், இழப்பு, கோபம், பிரிவு மற்றும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த வேதனை நிரந்தரமானது.
தண்டனையின் தீவிரம்:
சிறிய பாவமானாலும், பெரிய பாவமானாலும், சிலவற்றைச் செய்தாலும், அதிகமாகச் செய்தாலும், கொஞ்சக் காலம் செய்தாலும், அதிக காலம் செய்தாலும் எல்லோரும் மேலே சொன்னது போல ஒரே நரகத்தில்தான் வேதனை அனுபவிப்பார்கள். எல்லாருக்கும் ஒரே நரகம் என்றாலும், அனைவருக்கும் ஒரே அளவிலான தண்டனை இருக்காது. தண்டனையின் தீவிரம் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோருக்கும் வேதனை இருக்கும், ஆனால் அந்த வேதனையின் தீவிரத்தில் வித்தியாசம் இருக்கும். உதாரணமாக, யாரையும் கொலை செய்யாத ஒரு நபரும், அநேக யூதர்களைக் கொன்ற ஹிட்லரும் ஒரே அளவில் தண்டிக்கப்பட மாட்டார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பு செய்த பாவத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.
ரோமர் 2:6-ன் படி "தேவன் அவனவன் கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்."
வெளிப்படுத்தல் 20:13-ன் படி "...அவர்களில் அவனவன் தன் தன் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தான்."
செய்த கிரியைகளுக்கு ஏற்றபடி தண்டனைகள் இருக்கும் என்றாலும், தண்டனையின் தீவிரத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் ஒரு வகையான பாவத்தைச் செய்தால் மட்டும் தீவிரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். அந்தப் பாவம் என்ன என்பதை இயேசுவின் வார்த்தைகளிலேயே பாருங்கள்.
மத்தேயு 11:23,24 - "வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளில் உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது லேசாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
இங்கே இரண்டு கூட்ட ஜனங்களைப் பார்க்கிறோம். ஒரு கூட்டம் கப்பர்நகூம் மக்கள், இன்னொரு கூட்டம் சோதோம் நாட்டு மக்கள். சோதோம் நாட்டு மக்கள் எவ்வளவு கொடிய பாவங்களில் ஜீவித்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர்களின் பாவத்தினிமித்தம் தேவனே அக்கினி கந்தகங்களைக் பொழியப்பண்ணி அந்தப் பட்டணமே இல்லாமல் செய்தார். ஆனால் கப்பர்நகூம் மக்கள் இவ்வளவு கொடிய பாவங்களைச் செய்யவில்லை. ஆனாலும் கப்பர்நகூம் மக்களைக் காட்டிலும் சோதோம் நாட்டு மக்களே தேவனுடைய நியாயத்தீர்ப்பில் குறைவாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று இயேசு சொல்கிறார். தேவன் நாம் நினைப்பது போல நியாயத்தீர்ப்புச் செய்யமாட்டார் என்பது இங்கே நமக்குத் தெளிவாகப் புரிகிறது. உண்மையில் கப்பர்நகூம் மக்கள் செய்த பாவம் என்ன? இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் ஜீவித்து, அநேக அற்புதங்களைச் செய்து அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்தார். ஆனால் கப்பர்நகூம் ஊரார் அவரைப் புறக்கணித்தார்கள்.
இதிலிருந்து விபச்சாரம், கொலை, வன்முறை, இயற்கைக்கு மாறான பாலியல் பாவங்களைக் காட்டிலும் சுவிசேஷத்தை எதிர்த்தாலே அதிக ஆக்கினைக்குள்ளாவார்கள் என்று புரிகிறது. எனவே சுவிசேஷம் என்பது நம்புகிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும், ஆனால் நம்பாதவர்களுக்கு அது மிகவும் ஆபத்தானது. சுவிசேஷத்தைக் கேட்டும், அறிந்தும் அதை நிராகரித்தால் அது மிகவும் ஆபத்தானது. இவர்கள் நரகத்தில் இன்னும் தீவிரமான நிலையில் தண்டிக்கப்படுவார்கள். அதனால்தான், "தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும், ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த அந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான்" (லூக்கா 12:47,48) என்று எழுதப்பட்டுள்ளது.
நரகத்திற்கு யார் செல்வார்கள்?
யோவான் 9:41-ன் படி "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்."
லூக்கா 13:3-5-ன் படி "நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்."
யாரெல்லாம் தாங்கள் பாவிகள் என்பதை உணராமல், தங்கள் பாவங்களைக் குறித்து மனந்திரும்பாமல், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரே வழியாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்காமல் இருக்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் அப்படியே நிலைத்திருக்கும். ஆகையால் அந்தப் பாவங்களின் நிமித்தம் நித்திய காலமும் அந்த நித்திய நரகத்தில் அவியாத அக்கினியில் வேதனை அனுபவிப்பார்கள்.
தப்பித்துக்கொள்வது எப்படி?
எல்லோரும் நரகத்திற்குப் பாத்திரர்களே என்றாலும், எல்லோரும் நரகத்திற்குச் செல்வதில்லை. ஏனென்றால் நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரே வழியை தேவனே நியமித்தார். தேவன் நீதியுள்ளவர், ஆகையால் பாவத்திற்கு நியாயமான தண்டனையை வழங்காமல் பாவியை மன்னிக்கமாட்டார். அதனால்தான் உலகம் தோன்றும் முன்னே அவர் தான் தெரிந்துகொண்ட ஜனங்களின் இரட்சிப்புக்காகத் திட்டம் வகுத்தார். அதனால்தான் பாவம் செய்த மனிதன் தேவனை அணுகுவதற்காகத் தற்காலிகமாக மிருக பலிகளை ஏற்படுத்தினார். அந்தப் பலிகள் அனைத்தும் வரப்போகிற மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாட்டமாக இருந்தன. மனிதனுக்குப் பதிலாக மனிதனே தண்டிக்கப்படுவான் என்றும், மரிப்பான் என்றும் தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவரைக் குறித்து முன்பே தீர்க்கதரிசனம் உரைத்தார்.
ஏசாயா 53:5-11-ன் படி "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பி, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்... அவர் தமது ஆத்துமவருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களை அவரே சுமந்துகொள்வார்."
தேவன் பழைய ஏற்பாட்டில் வாக்குப்பண்ணினபடியே, இயேசு கன்னியாகிய மரியாள் மூலமாக இந்த உலகத்திற்கு வந்தார். தேவனுடைய எல்லாப் பண்புகளையும் பரிபூரணமாக வெளிப்படுத்தினார். எந்தப் பாவமும் இல்லாமல் வாழ்ந்தார். என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் நிரூபிக்கக்கூடும் என்று சவால் விட்டார். எத்தனையோ அற்புதங்களைச் செய்தார், மரித்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பினார். கிருபையினாலும் சத்தியத்தினாலும் மட்டுமே பாவத்திற்குப் பரிகாரம் உண்டாகும். எனவே அவ்விதமாக வாழ்ந்து, வேதத்தில் எழுதப்பட்டபடியே தான் தெரிந்துகொண்ட ஜனங்களின் ஒவ்வொரு பாவத்திற்கும், ஒவ்வொரு கீழ்ப்படியாமைக்கும் உரிய தண்டனையைத் தானே சுமந்தார். சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இது வரலாற்றில் நடந்த உண்மை (யோவான் 1:14, 1:17, 1:29, நீதிமொழிகள் 16:6). அவர் மரித்து உயிர்த்தெழுந்த பின்பு 40 நாட்கள் வரை தம்முடைய சீஷர்களுக்குத் தரிசனமானார். கடைசியாகப் பரமேறிச்செல்லும்போது, "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்" என்று கூறினார்.
ஆகவே, யாரெல்லாம் தாங்கள் பாவிகள் என்று உணர்ந்து, மனந்திரும்பி, தங்களுக்குப் பதிலாக இயேசு கிறிஸ்து தண்டனையைச் சுமந்தார் என்றும், தங்கள் ஸ்தானத்தில் அவர் மரித்தார் என்றும் விசுவாசிக்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்கள் வரப்போகிற தேவ கோபத்திலிருந்தும், நித்திய நரகத்திலிருந்தும் இரட்சிக்கப்படுவார்கள் (அப்போஸ்தலர் 16:31, ரோமர் 3:24).