நற்செய்தி

குடிப்பழக்கத்தை விட்டு விட ஒரு உண்மையான அழைப்பு...
ஆசிரியர்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

இருளான பாதையிலிருந்து வெளிச்சத்தை நோக்கி...

அன்பான நண்பரே! இன்று உங்கள் உள்ளத்தில் மன நிம்மதி இருக்கிறதா? "எப்படியாவது இந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும்" என்ற போராட்டத்தில் இருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் இன்று பலர் இந்தக் கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 'குடிப்பழக்கம்' என்பது மட்டும் இல்லையென்றால், நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறியிருப்பீர்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் உயர்வும் மதிப்பும் அதிகமாகத்தான் இருந்திருக்கும்.

உண்மையான சூழ்நிலையைப் பாருங்கள்:

குடிப்பழக்கம் என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு அல்ல; அது நம்மை மெல்ல மெல்ல அழிக்கும் ஒரு கண்ணி. இன்று மதுபானம் நமக்கு எளிதாகக் கிடைக்கும் சூழலில் இருப்பதால், தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தற்போதைய தரவுகளின்படி தமிழ்நாட்டில் சுமார் 25.4% முதல் 29.2% ஆண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர். இது தொடருமானால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்லும். இன்று உங்களைச் சோதனைக்கு உள்ளாக்கும் இதே பிரச்சனை, நாளை உங்கள் பிள்ளைகளையும் சோதிக்கும். இதன் வளர்ச்சியையும் விளைவுகளையும் கற்பனை செய்து பாருங்கள்.

குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள்:

சில முக்கியப் பிரச்சனைகளை இங்கே முன்வைக்கிறேன்:

  • உடல்நலம்: கல்லீரல் பாதிப்பு, கை கால் நடுக்கம், தீராத தலைவலி மற்றும் அதிகப்படியான மருத்துவச் செலவுகள்.

  • குடும்பம்: மனைவியின் கண்ணீர், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம், வீட்டில் சண்டை சச்சரவுகள்.

  • பொருளாதாரம்: வாங்கிய கடனை அடைக்க முடியாமை, உழைத்த பணம் அனைத்தும் மதுக்கடையில் கரைந்து போதல்.

  • நினைவாற்றல் இழப்பு: அதிகப்படியான மது அருந்தும்போது, மூளையில் உள்ள 'ஹிப்போகாம்பஸ்' (Hippocampus) என்ற பகுதி பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதிதான் குறுகியகால நினைவுகளை நீண்டகால நினைவுகளாக மாற்றும் வேலையைச் செய்கிறது. மது போதையில் இருக்கும் ஒருவர், தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசிக்கொண்டிருப்பார்; ஆனால் மறுநாள் காலையில், அவர் செய்ததோ அல்லது பேசியதோ எதுவுமே அவருக்கு நினைவில் இருக்காது.

  • மூளைச் சுருக்கம்: மது அருந்துவதால் மூளையின் செல்கள் சுருங்கி, மூளையின் அளவு குறையத் தொடங்குகிறது. இதனால் எதையும் சிந்தித்துச் செயல்படும் திறன் (Decision making) குறைகிறது.

உதாரணத்திற்கு ஒரு வாழ்க்கை:

பாலுவின் கதையைக் கேளுங்கள். பாலு என்பவர் ஒரு திறமையான தொழிலாளி. தன்னுடைய உழைப்பின் மூலம் சிறு வயதிலேயே பல உயரங்களையும் நன்மதிப்பையும் அடைந்தவர். தொடக்கத்தில் நண்பர்களோடு மகிழ்ச்சிக்காகக் குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் அது ஒரு கட்டாயத் தேவையாக மாறியது. மாலை நேரம் வந்தால் போதும், அவனுடைய கைகால்கள் நடுங்க ஆரம்பிக்கும். கால்கள் தானாக மதுக்கடையை நோக்கிச் செல்லும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டான்.

அவர் சம்பாதித்த பணம் அனைத்தும் மதுவிற்கே கரைந்தது. கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, வீட்டில் தினமும் சண்டை. ஒரு கட்டத்தில், "நான் என் குடும்பத்திற்குப் பாரமாக இருக்கிறேன், தற்கொலை செய்துகொள்வதே மேல்" என்ற முடிவுக்கு வந்தார்.

அந்த இருண்ட நேரத்தில்தான், இயேசு கிறிஸ்துவின் அன்பை அவருடைய நண்பர் ஒருவர் மூலம் அறிந்தார். நம்பிக்கையற்ற நிலையில், "ஆண்டவரே, இந்த நரக வேதனையிலிருந்து என்னை விடுவியும், என்னால் முடியவில்லை" என்று கண்ணீரோடு ஜெபித்தார்.

அவனுடைய வாழ்வில் அதிசயம் நடந்தது! ஒரே நாளில் எல்லாம் மாறவில்லை என்றாலும், இயேசு அவருக்குள் ஒரு புதிய மன உறுதியைக் கொடுத்தார். குடிப்பதற்கான வெறி குறைந்தது. இன்று பாலு குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு, கடன்களை அடைத்து, தன் குடும்பத்தாரோடு சமாதானமாக வாழ்கிறான்.

இந்தப் பாலுவை மாற்றின இயேசுவால், உங்களையும் மாற்ற முடியும்!

இதற்கு என்னதான் தீர்வு?

வேதம் சொல்லுகிறது: "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).

  1. பாவ மன்னிப்பு: இயேசு உங்கள் பாவங்களை மன்னித்து, குற்ற உணர்விலிருந்து உங்களை விடுவிக்கிறார்.

  2. புதிய இருதயம்: இயேசு உங்களுக்குள் வரும்போது, போதையை விரும்பும் சுபாவத்தை மாற்றி, சமாதானத்தை விரும்பும் புதிய இருதயத்தைத் தருகிறார்.

  3. மாறாத அன்பு: உங்கள் சூழல் எதுவாக இருந்தாலும், மெய்யான இரட்சகரால் உங்களுக்கு விடுதலையைத் தரமுடியும். இயேசு கிறிஸ்து உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.

விடுதலைக்கான வழி:

அன்பான நண்பரே, உங்கள் பலவீனத்தை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களைக் குடிக்கு நேராக நடத்தும் சூழ்நிலைகளை உணர்ந்து விழிப்படையுங்கள். இன்றே உங்களை நேசிக்கிற ஆண்டவரிடம் திரும்புங்கள். இந்த ஜெபத்தை விசுவாசத்தோடு சொல்லுங்கள்:

ஜெபம்:

"அன்புள்ள இயேசுவே, நான் ஒரு பாவி. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, என் உடலையும், குடும்பத்தையும், என்னுடைய சமாதானத்தையும் இழந்து தவிக்கிறேன். பாலுவின் வாழ்க்கையை மாற்றினவரே, என்னையும் மாற்றும். என் சுய முயற்சியால் இதிலிருந்து வெளிவர முடியவில்லை. எனக்காகச் சிலுவையில் மரித்தவரே, என்னை மன்னியும். இந்தப் போதைப் பழக்கத்தின் சங்கிலிகளை உடைத்து என்னை விடுவிக்கக் கெஞ்சுகிறேன். என் இருதயத்திற்குள் வந்து என்னோடு வாசம் செய்யும். இன்று முதல் நான் உமக்கே சொந்தம். ஆமென்."

நீங்கள் இந்தப் பொல்லாத பழக்கத்திலிருந்து வெளிவந்து, உங்கள் குடும்பத்திற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்னுதாரணமான தகப்பனாகவும் வாழ நாங்கள் விரும்புகிறோம். எங்களோடு இணைந்து சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் தருகிற, நம்மை உண்டாக்கிய உண்மையான கடவுளைப் பற்றிக்கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கிறோம்.

நாட்களைத் தள்ளிப் போடாதீர்கள். நாளை என்பது நிச்சயம் இல்லாதது. இன்றே வாருங்கள். நாளை என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. எனவே, இன்றே உங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து மனந்திரும்புங்கள்; உன் பாவத்திற்குப் பரிகாரமாக இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்த தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றே விசுவாசி.

"மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளை நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (யாக்கோபு 4:13,14)

"இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." (2 கொரிந்தியர் 6:2).

"கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.