கள்ள உபதேசத்திற்கு பதில்

சாம்பல் புதன் மற்றும் தவக்காலம்: ஒரு வேதப்பூர்வமான பார்வை
ஆசிரியர்: யஸ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 7 நிமிடங்கள்

 யார் இதை அனுசரிக்கிறார்கள்?

தமிழ் கிறிஸ்தவ திருச்சபைகளான ரோமன் கத்தோலிக்கம், லூத்தரன், மெதடிஸ்டு, சி.எஸ்.ஐ (CSI) மற்றும் இன்னும் பல பிரதான திருச்சபை பிரிவினரும் 'தவக்காலத்தை' (Lent Days) அனுசரிக்கிறார்கள். இந்தத் தவக்காலத்தின் ஆரம்ப நாளையே 'சாம்பல் புதன்' (Ash Wednesday) என்கிறார்கள்.

​எப்போது அனுசரிக்கப்படுகிறது?

ஈஸ்டர் பண்டிகை எனப்படுகிற இயேசுவின் உயிர்த்தெழுக்கு 40 நாட்களுக்கு முன்பாக இந்தத் தவக்காலம் ஆரம்பமாகும். இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளை கணக்கிடப்படாது.

​இது எப்போது தொடங்கியது?

ஆதித் திருச்சபை காலத்தில் இந்தத் தவக்காலத்தை அனுசரிக்கும் வழக்கம் இருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவோ அல்லது அப்போஸ்தலர்களோ இந்த வழக்கத்தை அனுசரிக்கவில்லை. திருச்சபை வரலாற்றில் பிற்காலத்தில் ரோமன் கத்தோலிக்கர்களே இதை கிறிஸ்தவ திருச்சபைக்குள் புகுத்தினார்கள். சிலர் இது 4-ம் நூற்றாண்டில் தொடங்கியது என்றும், இன்னும் சிலர் 11-ம் நூற்றாண்டில் தொடங்கியது என்றும் சொல்கிறார்கள்.

​இதற்கு ஏன் 'சாம்பல் புதன்' என்று பெயர் வந்தது?

தவக்காலத்தின் முதல் நாள் எப்போதும் புதன்கிழமையிலேயே வருவதால், அந்நாளை 'சாம்பல் புதன்' என்று அழைக்கிறார்கள். ஒருவேளை அது வியாழக்கிழமை வந்திருந்தால், 'சாம்பல் வியாழன்' என்று அழைத்திருப்பார்களோ என்னவோ!

அந்நாளில் ​என்ன செய்வார்கள்? எப்படிச் செய்வார்கள்?

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை 'குருத்து ஞாயிறு' (Palm Sunday) என்று ஆசரிக்கிறார்கள். இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு "ஓசன்னா, ஜெயமே" என்று அவரை வரவேற்ற அந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக இது செய்யப்படுகிறது. நம் பகுதிகளில் பேரீச்சம் மரத்தின் மட்டை கிடைக்காவிட்டால், ஈச்ச மரம் அல்லது பனை ஓலைகளைப் பிடித்துக்கொண்டு, ஊர்வலமாகச் சென்று பாடுவார்கள்.

​பின்னர் அந்த ஓலைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அது ஆசீர்வாதம் என்று கருதி பாதுகாப்பார்கள். சிலர் அவற்றைச் சிலுவை வடிவில் செய்வார்கள். சில நாட்களில் அவை காய்ந்துவிடும். அந்தக் காய்ந்த ஓலைகளை எரித்துச் சாம்பலாக்குவார்கள். இப்படிச் சாம்பலாக்குவதை சிலர் ஈஸ்டருக்கு அடுத்த நாளோ, அல்லது பெந்தேகோஸ்தே நாளிலோ, அல்லது சாம்பல் புதனுக்கு முந்தைய நாளிலோ செய்வார்கள். அப்படிச் சேகரிக்கப்பட்ட சாம்பலை அடுத்த ஆண்டில் வரும் சாம்பல் புதன் அன்று அதை பயன்படுத்துவார்கள்.

​பாஸ்டர் அல்லது பிஷப் அந்தச் சாம்பலை விசுவாசிகளின் நெற்றியில் சிலுவையின் அடையாளமாகப் பூசுவார்கள். அப்படிப் பூசும்போது, "மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்; ஆதலால் உன் பாவங்களை நினைத்து மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி இரட்சிக்கப்படு" என்று கூறுவார்கள். சில இடங்களில் விசுவாசிகள் தாங்களாகவே பூசிக்கொள்வார்கள். சிலர் அந்தச் சாம்பலில் புனித நீர் அல்லது ஒலிவ எண்ணெயைக் கலந்தும் பூசுவார்கள்.

​ஏன் சாம்பலால் இப்படிச் செய்கிறார்கள்?

பழைய ஏற்பாட்டு காலத்தில் சிலர் விசேஷித்த சந்தர்ப்பங்களில் துக்கத்தையும் மனவருத்தத்தையும் வெளிப்படுத்த கோணிகளை (இரட்டு) உடுத்திக்கொண்டு, சாம்பலில் உட்கார்ந்து அழுததாக வாசிக்கிறோம். அந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்தச் சடங்கைச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

​வேதத்தின் வெளிச்சத்தில் ஒரு ஆய்வு

​இந்தச் சடங்கைக் குறித்து எழும் சில கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வேதப்பூர்வமான பதில்களை இங்கே தருகிறேன். இவற்றை நீங்களும் நிதானித்து அறியும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

​வேதத்தில் எங்குமே தவக்காலத்தை அனுசரிக்கும்படி கட்டளையிடப்படவில்லை. விசுவாசிகளாகிய நாம் சபையாக எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, மற்றும் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதை தேவன் தமது பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். அதில் உள்ளதைச் செய்தால் போதுமானது; புதிதாக எதையும் கடைபிடிக்க தேவையில்லை. அப்படிச் செய்யும் அதிகாரத்தையும் தேவன் யாருக்கும் கொடுக்கவில்லை.

​இது எப்போது, யாரால் தொடங்கப்பட்டது என்று பார்த்தாலே, இந்த சடங்கு முறைக்கோ இயேசுவுக்கோ அல்லது அப்போஸ்தலர்களுக்கோ எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது விளங்கும். இது மனிதர்கள் ஏற்படுத்திய ஒரு சடங்கு. இப்படிப்பட்ட மனிதக் கற்பனைகளைக் குறித்து இயேசு மத்தேயு 15:6-9 -ல் இவ்வாறு எச்சரிக்கிறார்:

"உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள். மாயக்காரரே... ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் இருக்கிறது. மனுஷர் கற்பித்த கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்."

​ஆகவே, மனிதன் ஏற்படுத்திய இந்தத் தவக்கால அனுசரிப்பின் மூலம் தேவனை நெருங்க முடியும் என்று போதிப்பது முற்றிலும் தவறு. அது "வீணான ஆராதனை" என்றே வேதம் கூறுகிறது.

மனந்திரும்புதலுக்கு ஒரு நாளா?

சாம்பல் பூசுவது மனந்திரும்புதலுக்கும், மனம்மாறுதலுக்கும் அடையாளம் என்று கூறுகிறார்கள். ஆனால், மனந்திரும்புவதற்கு என்று ஒரு நாளை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? எப்போது ஒருவன் தன் பாவத்தைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்படுகிறானோ, அப்போதே அவன் மனந்திரும்புவான். நெற்றியில் சிலுவை குறி இடுவதால் மட்டும் ஒருவன் உள்ளான மனந்திரும்புதலைப் பெற்றுவிடுவானா? நிச்சயமாக இல்லை. ஒரு விசுவாசி அனுதினமும் செய்ய வேண்டிய காரியம் மனந்திரும்புதல். அதை விட்டுவிட்டு "இந்த 40 நாட்களில் மட்டும் பக்தி வைராக்கியமாக இருந்தால் போதும்" என்று எண்ணுவது விபரீதமானது.

​2தெசலோனிக்கேயர் 2:15-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்: "ஆகையால் சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது எங்களுக்குப் போதிக்கப்பட்ட முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்."

அப்போஸ்தலர் போதித்த உபதேசமே நமக்கு அளவுகோல். அதற்குப் புறம்பாக மனிதர்கள் உண்டாக்கும் புதிய சடங்குகளை திருச்சபை புறக்கணிக்க வேண்டும்.

​பழைய ஏற்பாட்டுப் பக்தர்கள் செய்தது என்ன?

"பழைய ஏற்பாட்டு காலத்தில் பக்தர்கள் சாம்பலில் உட்கார்ந்தார்கள், ஆகையால் நாங்களும் செய்கிறோம்" என்கிறவர்களே உண்மையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்:

​எஸ்தர் 4:1,3: மொர்தெகாய் நடந்ததை அறிந்தபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டு உடுத்தி, சாம்பலைப் போட்டுக்கொண்டு அலறினான்.

​யோபு 42:6: "ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்."

​தானியேல் 9:3: "நான் உபவாசம் பண்ணி, இரட்டு உடுத்திக்கொண்டு, சாம்பலில் உட்கார்ந்து..."

​யோனா 3:5-6: நினிவே மக்கள் மற்றும் ராஜா இரட்டு உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்தார்கள்.

​இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நாளில் கூடிவந்து சடங்காக இதைச் செய்யவில்லை. மிகுந்த துக்கத்திலும், வேதனையிலும், தனிப்பட்ட விதத்திலோ அல்லது ஒரு நெருக்கடியிலோ தாங்களாகவே சாம்பலில் உட்கார்ந்து அழுதார்கள். "இன்று சாம்பல் புதன், எல்லோரும் வாருங்கள், நெற்றியில் பூசுவோம்" என்று அவர்கள் செய்யவில்லை.

சமகாலத்தில் இந்த சடங்கை அனுசரிக்க நினைப்பவர்கள் ​உண்மையிலேயே பழைய ஏற்பாட்டுப் பக்தர்களைப் போலவே முழுமையாகச் சாம்பலில் உட்கார வேண்டியதுதானே? வெறுமனே நெற்றியில் ஒரு பொட்டு வைப்பது போல சிலுவையை போட்டுக் கொள்வது ஏன்? இது வேதத்திற்குப் புறம்பான, மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு சடங்கு மட்டுமே.

​இயேசுவின் 40 நாள் உபவாசம்:

இயேசு 40 நாள் உபவாசம் இருந்ததை வைத்துத் தவக்காலம் அனுசரிப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். இயேசு ஊழியம் ஆரம்பிக்கும் முன்பே 40 நாள் உபவாசம் இருந்தார்; சிலுவை மரணத்திற்கு முன் அல்ல. அவருடைய உபவாசத்திற்கும் இந்தத் தவக்காலத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒருபோதும் இப்படிப்பட்ட சடங்கைச் செய்யவில்லை.

​ஆகவே, வேத வசனங்களுக்குத் தங்களுக்கு ஏற்றவாறு புதிய அர்த்தத்தையும் புதிய விளக்கங்களைக் கொடுத்து, மனிதக் கற்பனைகளை ஆராதனையாக மாற்றுவது தேவனுக்குப் பிரியமானது அல்ல. வருடத்தில் 365 நாட்களுக்கும் மனிதன் புதிது புதிதாக ஒரு சடங்கை உருவாக்கிக்கொண்டே போகலாம். ஆனால், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதே உண்மையான பக்தி. வேத வசனங்களைச் சரியான விதத்தில் புரிந்துகொள்ளும் ஞானத்தைத் தரும்படி நாம் அனுதினமும் தேவனை நோக்கி மன்றாடுவோம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.