நற்செய்தி

தேவன் யார்? அவரை ஏன் நம்ப வேண்டும்?
ஆசிரியர்: K. நரசிம்முடு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 10 நிமிடங்கள்

ரமேஷ் - சுரேஷ் உரையாடல்

ரமேஷ் என்பவன், தான் சந்தித்த பலவிதமான இன்னல்களால், தனக்குத் தெரிந்த தெய்வங்களை வணங்கியும் துன்பங்கள் தன்னை விட்டு நீங்காத காரணத்தினால், மிகுந்த மனவருத்தத்தோடு தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்துச் செல்கையில், வழியில் அவனது நண்பனான சுரேஷ் என்பவன் அவனைச் சந்தித்தான். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கவனியுங்கள்.

சுரேஷ்: என்ன ஆச்சு மாமா?

ரமேஷ்: எனக்கு வாழவே மனமில்லை மாமா. என் பிரச்சினையெல்லாம் தீர்ந்துபோக வேண்டுமென்று எல்லாக் கடவுள்களிடமும் வேண்டிக்கொண்டேன். ஆனால், என் அழுகையை எந்தக் கடவுளும் கேட்கவில்லை. அதனால் நான் வாழ விரும்பவில்லை மாமா!

சுரேஷ்: மாமா, கடவுளைப் பற்றியும், அவர் உன்னை என்ன நோக்கத்திற்காகப் படைத்தார் என்பதையும் தெரிந்துகொள்ளாமல் அப்படிப் பேசாதே.

ரமேஷ்: நான் தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது?

சுரேஷ்: தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது. நம் பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதற்கு மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறாயா? நாம் இந்த உலகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் அவர் இருக்கிறார் என்று நினைக்கிறாயா?

ரமேஷ்: எனக்குத் தெரிந்தவரை அப்படித்தான் என்று நினைக்கிறேன் மாமா. கோவிலில் பூசாரியும் அப்படித்தான் சொன்னார்; சபைக்குப் (சர்ச்) போனால் அங்குள்ள போதகரும் (Pastor) அப்படித்தான் சொல்கிறார்; இஸ்லாமியரிடம் போனால் அவரும் அப்படித்தான் சொல்கிறார். "கடவுளை நம்பினால் நமக்கு எந்தவித நோயும் வராது, எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்" என்று சொன்னார்கள். உன் வீட்டில் ஏதோ பில்லி சூனியம் இருப்பதாக ஒருவர் சொல்லி, அது விலக இந்த மந்திரத் தகட்டை வாங்கி வீட்டில் வைக்கச் சொன்னார், அதையும் வாங்கினேன். ஒரு சபை போதகர் என்னிடம் ஜெபம் செய்த எண்ணெய் வாங்கச் சொன்னார், நானும் வாங்கினேன். இஸ்லாமியர் தாயத்து வாங்கச் சொன்னார், அதையும் வாங்கினேன். ஆனால், அதில் எந்தவித பலனும் இல்லை. தேவன் இருப்பது நமக்காக இல்லையென்றால், கடவுள் ஏன் இருக்கிறார்? கடவுளை நம்புவதில் என்ன பயன்?

சுரேஷ்: ஒரு காரியத்தை நீ சிந்திக்க வேண்டும். கடவுள் நமக்காக மட்டுமே இருக்கிறார் என்றால், இவ்வுலகில் தேவபக்தியுள்ளவர்கள் மட்டுமே அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும், இல்லையா? ஆனால், கூகுளில் தேடினால் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் ஏழு பேர் நாத்திகர்களாகவே இருக்கிறார்கள்.

ரமேஷ்: அப்படியா! நான் இப்படி எப்போதும் சிந்தித்ததில்லை. (கூகுள் தேடலுக்குப் பிறகு) ஆம் மாமா, நீ சொல்வது சரிதான். முதல் பத்து பேரில் ஏழு பேர் (ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பஃபெட், லாரி பேஜ், எலான் மஸ்க், செர்ஜி பிரின் - 7 ஆகஸ்ட் 2020 நிலவரப்படி) நாத்திகர்களாகவே உள்ளனர். ஆனால், நாம் ஏன் கடவுளை நம்ப வேண்டும்? நம்புவதால் என்ன பயன்?

சுரேஷ்: இந்த உலகில் கிட்டத்தட்ட 90% மக்கள் ஏதோ ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய எல்லா மதங்களும் மரணத்திற்குப் பிறகு பரலோகம் (சொர்க்கம்) மற்றும் நரகம் உள்ளது என்று சொல்லுகின்றன. கடவுள் நம் செயல்களுக்கு ஏற்ப நம்மை நியாயந்தீர்க்கிறார் என்றும், அவருடைய பார்வையில் நீதியுள்ளவர்களுக்கு இரட்சிப்பை, அதாவது பரலோகத்தைத் தருகிறார் என்றும் அவை சொல்கின்றன.

ரமேஷ்: அப்படியானால் கடவுள் பரலோகத்தைக் கொடுப்பதற்கு மட்டும்தானா? இந்த வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் அவரால் தீர்க்க முடியாதா?

சுரேஷ்: இந்தக் கஷ்டங்களை அவரால் தீர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை. தேவனுக்கு முன்பாக நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம். அதற்கு நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்:

  1. நாம் யாரை நம்புகிறோமோ, அவர் உண்மையான கடவுளாகவும், நம்பகமானவராகவும் இருக்க வேண்டும்.

  2. நாம் அவரை உத்தம இருதயத்தோடே விசுவாசிக்க வேண்டும்.

ரமேஷ்: உண்மையான கடவுள் என்றால் என்ன? எல்லாக் கடவுளும் கடவுள்தானே? எனக்குப் பிடிக்காததே இதுதான். இவ்வளவு பேர் கடவுள்களாக இருக்கும்போது, ஒருவரே உண்மையான கடவுள் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

சுரேஷ்: மாமா! என்னை இரண்டு நிமிடம் பேச விடு.

ரமேஷ்: இரண்டு நிமிடம் தானே? சரி பேசு.

சுரேஷ்: உண்மையான கடவுளுக்கு அன்பு, சத்தியம் (நீதி) ஆகிய குணங்கள் உண்டு. இதை நீ ஒப்புக்கொள்கிறாயா?

ரமேஷ்: ஆமாம்! அந்தக் குணங்கள் இல்லாவிட்டால் கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை எல்லாக் கடவுளிடமும் உள்ளனவே.

சுரேஷ்: அந்தக் குணங்கள் எல்லாக் கடவுளிடமும் இருக்காது, உண்மையான கடவுளிடம் மட்டுமே உள்ளது.

ரமேஷ்: அது எப்படி என்று கொஞ்சம் விவரமாகச் சொல்.

சுரேஷ்: ஒரு பள்ளி ஆசிரியருக்கு ஒரு பிரச்சினை வந்தது. ஒரு மாணவனின் விடைத்தாளைத் திருத்தும்போது அவன் பெற்ற மதிப்பெண் 34. தேர்ச்சி மதிப்பெண் 35 தானே?

ரமேஷ்: ஆமாம், 100-க்கு 35 வேண்டும், அப்போதுதான் தேர்வில் வெற்றிபெற முடியும். இதில் என்ன பிரச்சினை? '1' மதிப்பெண் சேர்த்து அவனைத் தேர்ச்சி பெறச் செய்ய முடியும் தானே?

சுரேஷ்: ஆமாம் மாமா, நீ சொன்ன மாதிரி '1' மதிப்பெண் சேர்த்துத் தேர்ச்சி பெறச் செய்ய முடியும். ஆனால், அவ்வாறு செய்தால் அந்த ஆசிரியரிடம் 'உண்மை' (சத்தியம்) இருக்காது. அன்பு காட்டி '1' மதிப்பெண் சேர்த்தால் அவரிடம் 'சத்தியம்' இருக்காது. எனவே, அவர் சத்தியத்தைப் பின்பற்றிச் சரியாகத் திருத்தினால், அவனுக்கு 34 மதிப்பெண்களே கிடைக்கும். அப்போது அந்த மாணவன் தோல்வி அடைவான். அந்த ஆசிரியர் இரக்கமும், அன்பும் இல்லாதவராகக் காணப்படுவார். அன்பைக் காட்டினால் சத்தியத்தைப் பின்பற்ற முடியாது; சத்தியத்தைப் பின்பற்றினால் அன்பைக் காட்ட முடியாது மாமா.

ரமேஷ்: ஆமாம்! நான் எப்போதும் இப்படி யோசித்ததில்லை! பின்பு இப்போது என்ன செய்வது?

சுரேஷ்: மாணவன் தேர்ச்சி பெற வேண்டும், அதே நேரத்தில் சத்தியத்தையும் பின்பற்ற வேண்டும். இது சாத்தியமா?

ரமேஷ்: எனக்குத் தெரிந்தவரை இது சாத்தியமில்லை. நீ சொன்னதுபோல் அந்த ஆசிரியர் பெரும் சிக்கலில்தான் இருக்கிறார்.

சுரேஷ்: இப்போது உனக்குக் கொஞ்சமாவது புரிந்திருக்க வேண்டும். ஒரு நபர் ஒரே நேரத்தில் சத்தியம் மற்றும் அன்பு போன்ற குணங்களைக் கொண்டிருப்பது எளிதான காரியம் அல்ல.

ரமேஷ்: சரி, இதற்கு என்னதான் தீர்வு?

சுரேஷ்: இந்த ஆசிரியருக்கு வந்த அதே பிரச்சினை ஒரு அரசருக்கும் வந்தது. அந்த அரசன் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தார்.

ரமேஷ்: அப்படியா! அது எப்படி?

சுரேஷ்: ஒரு நாட்டை ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தார். அந்த நாட்டில் அவர் அன்பானவர், நியாயமானவர், நீதியுள்ளவர் என்று நல்ல பெயரெடுத்திருந்தார். அரசனை நேசித்த நண்பர் ஒருவர் அரசவையில் பணிபுரிந்து வந்தார். அந்த நண்பருக்கும் அரசன் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவரும் மிகவும் விசுவாசமானவராகவும், நேர்மையானவராகவும் உத்தமத்தோடு பணிசெய்து வந்தார். ஒருமுறை நடந்தது என்னவென்றால், அரசனுடைய நண்பர் பணக்கஷ்டத்தால் மிகவும் சிரமப்பட்டார். அரசனுக்குத் தெரியாமல் அதே ஊரில் உள்ள பல பணக்காரர்களிடம் பெரும் தொகையைக் கடனாக வாங்கியிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் பணத்தைத் திருப்பித் தர அவரால் முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவரை அரசனிடம் அழைத்து வந்து, தண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது அரசன் மிகவும் வருத்தப்பட்டார். இப்போது அந்த அரசன் நியாயாசனத்தில் (சிம்மாசனத்தில்) அமர்ந்திருக்கிறார். குற்றவாளிக்கூண்டில் அரசனுடைய நண்பன் நிற்கிறான். இப்போது அந்த அரசன் என்ன தீர்ப்பளிக்க முடியும்? தன் நண்பனை மன்னித்தால், "அரசனுடைய நண்பனுக்கு ஒரு நியாயம், நாட்டு மக்களுக்கு ஒரு நியாயமா?" என்று அந்த ஊர் மக்கள் பேசுவார்கள். மேலும், அந்த அரசனிடம் சத்தியம் இல்லை என்று ஆகிவிடும். அவர் நீதியின்படி தண்டித்தால், அவரைத் தன் நண்பன் என்று கூடப் பார்க்காமல் தண்டித்துவிட்டார் என்று மக்கள் நினைப்பார்கள். "நண்பனையே தண்டித்தவர், மக்களாகிய நம்மை எப்படி நேசிப்பார்?" என்று எண்ணுவார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசன் அன்பு காட்டினால் நியாயம் செய்ய முடியாது; நியாயம் காட்டினால் அவனால் அன்பைக் காட்ட முடியாது. இப்போது அரசன் தன் நண்பனை மன்னிக்கவும் வேண்டும், அதே சமயம் நியாயமும் செய்ய வேண்டும். இது சாத்தியமா?

ரமேஷ்: அது சாத்தியமில்லை, இப்போது அந்த அரசரும் பெரும் சிக்கலில்தான் இருக்கிறார்.

சுரேஷ்: அந்த அரசன் எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் என்று தெரிந்துகொள்வதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி.

ரமேஷ்: ம்..! கேள்.

சுரேஷ்: ஒரு தவறும் செய்யாத பரிபூரணமான நபர் யாராவது இந்த உலகத்தில் உண்டா?

ரமேஷ்: இல்லை, அப்படிப்பட்டவர் யாரும் இல்லை.

சுரேஷ்: கடவுள் நீதியுள்ளவர் என்பது உனக்குத் தெரியும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நீதியாகத் தண்டிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

ரமேஷ்: எல்லோரும் நரகத்துக்குப் போக வேண்டியதுதான். ஐயோ! கற்பனை செய்து பார்க்கவே மிகவும் பயமாக இருக்கிறது. இப்போது நரகத்திலிருந்து இரட்சிப்பைப் பெறுவது எப்படி?

சுரேஷ்: இப்போது அந்தக் கதையில் வரும் அரசனுக்குப் பதிலாக, நீ 'கடவுள்' என்று அழைக்கும் எந்தக் கடவுளையும் வைத்துக்கொள். நீ அந்தக் குற்றவாளியின் இடத்தில் நில். உன்னை அந்த நரகத்திலிருந்து அவர்களால் காப்பாற்ற முடியுமா என்று கற்பனை செய்து பார்.

ரமேஷ்: இப்படிப் பார்த்தால் நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால், கடவுள் என்னை நியாயமாகத் தண்டிக்காமல் மன்னித்தால், அவர் அநியாயமாகத் தீர்ப்பளிப்பதாக இருக்கும். கடவுள் எப்போதும் நீதியுள்ளவர் என்பதை நான் அறிவேன். அப்படியானால் என் பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும்? என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றுவது எப்படி? அந்த அரசனுக்குப் பதிலாக நான் கற்பனை செய்த தெய்வங்களை எல்லாம் வைத்துப் பார்த்தேன். இந்த இரண்டு குணங்களும் (அன்பு மற்றும் சத்தியம்) யாரிடமும் இருப்பது சாத்தியமாகத் தெரியவில்லை. அன்பினால் நான் காப்பாற்றப்பட்டால், அது அநீதியாகும்; எனக்கு நியாயமான தண்டனை கிடைத்தால் அன்பு எங்கே காணப்படும்?

சுரேஷ்: கடவுள் நம்மை நியாயமாக நியாயந்தீர்க்கவும் வேண்டும், மன்னிக்கவும் வேண்டும். கடவுள் அல்லாத பொய்யான தெய்வங்களுக்கு இது சாத்தியமற்றதுதான். ஆனால், நம்மைப் படைத்த உண்மையான கடவுளால் எல்லாம் சாத்தியம். உனக்குத் தெளிவாகப் புரிய வேண்டுமானால், நான் முன்பு சொன்ன கதைக்கு வருவோம். பின்பு அந்த அரசன் என்ன செய்தார் என்பதை விளக்குகிறேன். அவர் தனது நண்பனை நியாயமாகத் தீர்ப்பளித்து, அவனது குற்றத்திற்காக ஒரு பெரிய தொகையை அபராதமாக விதித்தார். பின்னர் அவர் தனது ராஜ வஸ்திரங்களை (அங்கிகளை) கழற்றி வைத்துவிட்டு, சிம்மாசனத்தில் இருந்து இறங்கி, குற்றம் சாட்டப்பட்டவரின் இடத்தில் நின்று, அந்த அபராதத்தை அவரே செலுத்தினார். அதாவது, அரசனுடைய நண்பனின் குற்றத்திற்காக நியாயமாகத் தீர்ப்பளித்தார். அதே நேரத்தில், தன் நண்பனுக்காக அன்புடன் அந்த அபராதத்தைச் செலுத்தினார். இதனால் அவர் தனது நண்பரைத் தண்டனையிலிருந்து நியாயமாகக் காப்பாற்றினார். அவ்வாறே, நம்முடைய கடவுளும் தான் நேசித்த மக்களுக்காக மனிதனாகி, கல்வாரி சிலுவையில் மனிதர்கள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும், கீழ்ப்படியாமைக்கும் உரிய நியாயமான தண்டனையை அவரே ஏற்றுக்கொண்டார். அவரில் பாவம் இல்லை, ஆனால் அவர் உலக மக்களின் பாவத்தைச் சுமந்தார். அவர் தம் மக்களின் பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். சுருக்கமாகச் சொன்னால், கடவுள் உண்மையாக இருப்பதால், மனிதனாக வந்து பாவத்திற்குரிய நியாயமான தண்டனையை ஏற்காமல், மக்களின் பாவங்களை மன்னிக்க முடியாது. அதனால்தான் ஆண்டவர் இயேசுவிடம் மட்டுமே சத்தியமும் அன்பும் இருக்கிறது.

ரமேஷ்: நீ ஆரம்பத்தில் சொன்னது உண்மைதான். உண்மையான கடவுள் யார் என்று இப்போது தெரிந்துகொண்டேன். என் பாவங்களை மன்னிக்கத் தம்முடைய உயிரையே ஈவாகக் கொடுத்த கடவுளின் உண்மையையும் அன்பையும் அறியாமல், 'கடவுள் என் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை' என்று இருந்தேன். ஆனால், இப்போது என் உண்மையான தேவையை நான் அறிந்துகொண்டேன். நான் மரிக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இயேசு எனக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக மரித்தார். எனது பிரச்சினைகள் அனைத்தும் இப்போது மிகவும் சிறியதாகத் தெரிகின்றன. அவர் எனது பெரிய பிரச்சினையிலிருந்து (நித்திய நரகத்தில் இருந்து) என்னைக் காப்பாற்றினார்.

சுரேஷ்: இந்தச் சத்தியத்தை அனைவருக்கும் அறிவிக்க முயலும்போது, ​​மதமாற்றம் என்றும், நீங்கள் மதவெறியை உண்டாக்குகிறீர்கள் என்றும் பலரும் எங்களை விமர்சிக்கிறார்கள். எல்லோரும் உன்னைப் போல் நேர்மையான உள்ளத்துடன் சிந்தித்தால் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இதில் வரும் காட்சிகள் கற்பனையானவை. ஆனால் சொல்லப்பட்ட ஆன்மீக விஷயங்கள் அனைத்தும் உண்மையே.

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." (அப்போஸ்தலர் 4:12)

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.