ஜனாதன் எட்வர்ட்ஸ் அவர்களின் பிரசித்தி பெற்ற பிரசங்கம் (ஜூலை 8, 1741, மாசசூசெட்ஸ்)
உபாகமம் 32:35 "அவர்கள் கால் சறுக்கும் காலத்தில்" அவிசுவாசமும் துன்மார்க்கமும் கொண்ட இஸ்ரவேலர்கள் மீது தேவனுடைய உக்கிரம் வரும் என்று இந்த வசனத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய உடன்படிக்கையின் மக்களாக, அவருடைய கிருபையின் எல்லாக் காரியங்களையும் பெற்றுக்கொண்டு வாழ்ந்தபோதிலும், தேவன் அவர்களுக்குச் செய்த எத்தனையோ அற்புதங்களைக் கண்டும், இவர்கள் "ஆலோசனையற்ற ஜாதியாய்" (உபாகமம் 32:28), பகுத்தறிவற்ற மக்களாகவே இருக்கிறார்கள்.
இந்த வேதப்பகுதிக்கு முந்தைய இரண்டு வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி, அவர்கள் தேவனுடைய பராமரிப்பின் கீழ் இருந்தும், கசப்பான, நச்சுத்தன்மையான திராட்சைகளையே பலனாகக் கொடுத்தனர்; இந்த துன்மார்க்க இஸ்ரவேலர்களுக்கு வரப்போகும் தண்டனை மற்றும் அழிவைக் குறித்து, நான் எடுத்துக்கொண்ட "அவர்கள் கால் சறுக்கும் காலத்தில்" என்ற வார்த்தை கீழ்க்கண்ட அர்த்தங்களைத் தருகிறது.
- வழுக்கும் இடத்தில் நிற்பவரோ அல்லது நடப்பவரோ போல, அவர்கள் எப்போதுமே அழிவுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீது வரப்போகும் அழிவை கால் சறுக்குதலோடு ஒப்பிடுவதன் மூலம் இது சுட்டிக்காட்டப்படுகிறது. இதே சிந்தனை சங்கீதம் 73:18-லும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது "நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி...".
- வழுக்கும் இடத்தில் நடக்கும் ஒருவர் எந்த நேரத்திலும் விழும் ஆபத்தில் இருப்பதுபோல; அவர்கள் எப்போதுமே எதிர்பாராத திடீர் அழிவுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. அடுத்த கணத்தில் அவர் நிற்பாரா அல்லது விழுவாரா என்பதைச் சற்றும் கணிக்க முடியாத நிலையில் உள்ளார்; அவர் விழும்போது எந்த எச்சரிக்கையும் இன்றி திடீரென்று விழுவார். இதே சிந்தனை சங்கீதம் 73:18-லும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது "நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான நிலைமையிலே விழப்பண்ணுகிறீர்".
- வேறொருவருடைய தூண்டுதல் இல்லாமல், தாங்களாகவே அவர்கள் வீழ்ச்சிக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதே இங்குள்ள மற்றொரு சிந்தனை; ஏனென்றால் வழுக்கும் இடத்தில் நிற்பவர் அல்லது நடப்பவர் கீழே விழுவதற்கு அவருடைய சொந்த பாரத்தைத் தவிர வேறெதுவும் தேவையில்லை.
- "அவர்கள் கால் சறுக்கும் காலத்தில்" என்று சொல்லப்பட்டிருப்பதால், அவர்களுக்கான நியமிக்கப்பட்ட காலம் இன்னும் வரவில்லை என்பதே அவர்கள் இன்னும் விழாமல் இருப்பதற்குக் காரணம்; ஆனால் அந்தக் காலம் வரும்போது அவர்கள் தங்கள் சொந்த பாரத்தினாலேயே விழுவார்கள். அப்போது தேவன் அவர்களை வழுக்கும் இடத்தில் விழாமல் பிடித்துக்கொள்ள மாட்டார்; அவர்களைக் கைவிடுவார். ஒரு குழியின் விளிம்பில் வழுக்கும் நிலத்தில் நிற்கும் நபர் எப்படித் தானாகவே நிற்க முடியாதோ, கைவிடப்பட்டவுடன் எப்படி விழுந்து அழிவாரோ, அதுபோலவே நியமிக்கப்பட்ட காலம் வந்த அந்த மறுகணமே அவர்கள் அழிவில் விழுவார்கள்.
இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நான் வலியுறுத்துவது என்னவென்றால், துன்மார்க்கர்களை எந்த நேரத்திலும் நரகத்தில் விழாமல் தடுப்பது தேவனுடைய சித்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. தேவனுடைய சித்தம் என்று நான் சொல்லும்போது, எதனாலும் பாதிக்கப்படாத, எதன் மீதும் சார்ந்திருக்காத அவருடைய இறையாண்மையுள்ள சித்தத்தையே நான் கருதுகிறேன். அதாவது, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் எந்தவொரு கணத்திலும், அவர்களை நரகத்தில் தள்ளுவதைத் தடுக்கும் விதமாக எந்தத் தடைகளும் அவருடைய சித்தத்தைப் பாதிக்கவில்லை; அது முற்றிலும் அவருடைய சித்தம் மட்டுமே என்பது என் கருத்து. இந்த வார்த்தைகள் உண்மை என்பதைப் பின்வரும் காரியங்களின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
- துன்மார்க்கர்களை நரகத்தில் தள்ளுவதற்கு தேவனுக்கு வல்லமையில் எந்தக் குறையும் இல்லை. தேவன் எழும்போது மனிதர்களின் கைகள் எவ்விதப் 'பலத்தையும்' பிரயோகிக்க முடியாது. மிகப்பலம் வாய்ந்தவர்களிடம் கூட அவரை எதிர்க்கும் சக்தி இல்லை; அவருடைய கைகளிலிருந்து விடுவிக்கக்கூடியவர்கள் யாருமில்லை. அவர் துன்மார்க்கர்களைத் தள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அதை மிக எளிதாகவும் செய்ய முடியும். ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு தன் தொண்டர்களுடன் பலத்தைப் பெருக்கிக்கொண்ட ஒரு கலகக்காரனை ஒழிப்பதற்கு, இந்த உலகத்தின் அதிபதிகள் சில சமயங்களில் பல சிரமங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் தேவனுக்கு அப்படி எதுவும் இல்லை. அவருடைய வல்லமையிலிருந்து காப்பாற்றக்கூடிய கோட்டை எதுவுமில்லை. எத்தனை கைகள் ஒன்றிணைந்தாலும், பெருங்கூட்டம் ஒன்றுகூடினாலும் அவர்கள் எளிதாக முறியடிக்கப்படுவார்கள். அவர்கள் சூறாவளிக்கு முன் குவியலாகக் கிடக்கும் பதரைப்போல அல்லது பட்சிக்கிற அக்கினிக்கு முன் அதிகமாக அடுக்கப்பட்டுள்ள காய்ந்த புல்லைப் போன்றவர்கள். பூமியில் ஊர்ந்து செல்லும் ஒரு புழுவை காலடியில் நசுக்குவது நமக்கு எவ்வளவு எளிதோ, ஒரு மெல்லிய நூலை எவ்வளவு எளிதாக அறுக்கிறோமோ, தேவன் தம்முடைய சித்தத்தின்படி தம் சத்துருக்களை நரகத்தில் அதே எளிதாகத் தள்ளிவிடுவார். அவர் அதட்டினால் பூமி அதிருமோ, அவர் முன்னால் மலைகள் நடுங்குமோ, அந்த தேவனின் முன் நிற்க நாம் எம்மாத்திரம்!
- அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவதற்குத் தகுதியானவர்கள். எனவே, தேவனுடைய நீதி அதற்குத் தடையாக இருக்காது; தேவன் தம் வல்லமையைப் பயன்படுத்தி அவர்களை அழிப்பதற்கு தேவனுடைய நீதி குறுக்கிடாது. அதற்கு மாறாக, தேவனுடைய நீதி அவர்களுடைய பாவங்களுக்கு நித்திய தண்டனை கிடைக்க வேண்டும் என்று முழங்குகிறது. சோதோம் திராட்சை பலனைத் தரும் மரத்தைக் குறித்து, "இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்க வேண்டும்" (லூக்கா 13:7) என்று தேவனுடைய நீதி கூறுகிறது. அவர்களுக்குத் தண்டனை வராமல் தேவனுடைய இரக்கமும் அவருடைய சித்தமும் தாமதப்படுத்திக் கொண்டிருந்தாலும், அவருடைய நீதியின் பட்டயம் ஒவ்வொரு கணமும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறது.
- அவர்களுக்கு ஏற்கெனவே நரகத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. அதில் தள்ளப்படுவது அவர்களுக்கு நீதியாக வர வேண்டிய தண்டனை மட்டுமல்ல, அது தேவனுடைய சட்டபூர்வமான தீர்ப்பும் ஆகும். அதாவது, தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே நித்தியத்திலிருந்து மாற்ற முடியாதபடி ஸ்தாபிக்கப்பட்ட நீதிப்பிரமாணம் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு, அவர்களுக்கு விரோதமாக நிற்கிறது. எனவே அவர்கள் ஏற்கெனவே நரகத்திற்கு உரியவர்கள். "விசுவாசியாதவனோ... ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று" (யோவான் 3:18). ஆகையால் மனந்திரும்பாத ஒவ்வொரு நபரும் நீதியாக நரகத்திற்கே உரியவன். "நீங்கள் கீழானவர்கள்" (யோவான் 8:23) என்று சொல்லப்பட்டபடி, அவர்கள் அதற்கே உரியவர்கள். அது அவர்கள் மீது தேவனுடைய நீதியும், தேவனுடைய வார்த்தையும், மாறாத தேவனுடைய நியாயப்பிரமாணத் தீர்ப்பும் அவர்களுக்காக நியமித்த இடமாகும்.
- நரக வேதனையில் வெளிப்படும் தேவனுடைய கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் அவர்கள் பாத்திரவான்கள். அவர்கள் நரகத்திற்குப் போகாத ஒவ்வொரு கணமும், ஏற்கெனவே நரகத்திற்குச் சென்று வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பலரைவிட தேவன் இவர்கள் மீது குறைந்த உக்கிரத்தைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமல்ல. ஆம், தேவன் இந்த பூமியில் உள்ள அநேகர் மீது அதைவிட அதிக கோபத்தைக் கொண்டிருக்கிறார். இப்போது என் வார்த்தைகளை நிம்மதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களில் சிலர் மீதும், இப்போது நரகத்தில் இருப்பவர்களைவிட அவர் அதிக கோபமாக இருக்கலாம். அவர் கைவிட்டவர்களை அழிக்காமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் செய்யும் தீமைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்பதோ, அதைக் குறித்து கோபப்படவில்லை என்பதோ அல்ல. அவர்கள் நினைப்பது போல தேவன் அவர்களைப் போன்றவர் அல்ல. தேவனுடைய உக்கிரம் அவர்கள் மீது பற்றியெரிகிறது, அவர்களுடைய அழிவு உறங்குவதில்லை. பாதாளம் அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. அக்கினி ஆயத்தமாக்கப்பட்டு, சூளை எரிக்கப்பட்டு அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது; இப்போது அக்கினிஜ்வாலைகள் எழும்பியெரிகின்றன. பளபளப்பாக்கப்பட்ட பட்டயம் தீட்டப்பட்டு அவர்கள் மீது நீட்டப்பட்டுள்ளது, அவர்களுக்குக் கீழே பாதாளம் தன் வாயைத் திறந்துள்ளது.
- சாத்தான் அவர்கள் மீது பாய்ந்து அவர்களை ஆக்கிரமிக்கத் தயாராக இருக்கிறான். தேவன் அனுமதிக்கும் கணத்தில் அவர்கள் அவனுக்கு வசமாகிவிடுவார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் அவனுடைய கட்டுப்பாட்டில், அவனுடைய சொத்தாக உள்ளன. அவர்கள் அவனுடைய சொத்து என்று வேதம் கூறுகிறது (லூக்கா 11:21). அவர்களுக்குப் பக்கத்திலேயே, அவர்களுடைய வலப்பக்கத்திலேயே நின்று, பசியோடு தங்கள் இரையைக் கிழித்துத் தின்னத் தயாராகக் காத்திருக்கும் சிங்கங்களைப்போல, பிசாசுகள் அவர்களைக் குறிவைத்துக் காத்திருக்கின்றன. ஆனால் தற்போதைக்கு அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கும் தம்முடைய கரத்தை தேவன் விலக்கினால், அவை கண்மூடித்திறக்கும் நேரத்திற்குள் அவர்களுடைய ஆத்துமாக்கள் மீது பாய்ந்துவிடும். அந்தப் பழைய பாம்பானவன் அவர்களுக்காகப் பசியோடு காத்துக்கொண்டிருக்கிறான். அவர்களை விழுங்குவதற்கு நரகம் தன் வாயைப் பெரிதாகத் திறந்துள்ளது. தேவன் அனுமதித்தால், அவர்கள் உடனடியாக விழுங்கப்பட்டு அழிந்துபோவார்கள்.
- தேவனே தடுத்து நிறுத்தாவிட்டால், துன்மார்க்கர்களுடைய இருதயத்தில் உள்ள நரகத்தின் கொள்கைகள் பற்றியெரியும் நரக அக்கினியாக மாறும். மாம்சத்தின் சுபாவத்திலேயே நரக வேதனைகளுக்குத் தகுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது. அந்த நரக அக்கினியின் விதைகள் அவர்களை ஆளும் ஊழலின் கொள்கைகளாக அவர்களுக்குள் இருந்து அவர்களைக் கைப்பற்றியுள்ளன. தேவனே தடுத்து நிறுத்தாவிட்டால், அழிந்துபோனவர்களின் இருதயத்தில் உள்ள வன்முறைச் சுபாவம் கொண்ட அந்தத் தீவிரமான, வல்லமையான கொள்கைகள், அவர்களுக்குள் எரியும் வேதனையின் அளவிலேயே, அதே சத்துருத்துவத்துடனும், அதே ஊழலுடனும் விரைவில் கிளர்ந்தெழும். வேதத்தில் பக்தியற்றவர்கள் கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். எழும்பும் அந்தக் கடல் அலைகளை, "இதுவரைக்கும் வா, மிஞ்சி வராதே" (யோபு 38:11) என்று கட்டளையிட்டுக் கட்டுப்படுத்துவது போல, தேவன் தம்முடைய வல்லமையின் மூலம் தற்போது அவர்களுடைய துன்மார்க்கத்தைக் கட்டுப்படுத்துகிறார். தேவன் தம்முடைய கட்டுப்படுத்தும் கரத்தை எடுத்துவிட்டால் கடலுக்கு முன் அனைத்தும் அடித்துச் செல்லப்படும். ஆத்துமாவை அழிவிற்கும், வேதனைக்கும் உள்ளாக்குவது பாவமே. அதன் சுபாவமே அழிவை ஏற்படுத்துவது. மேலும் தேவன் அதைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், ஆத்துமாவை அவலநிலைக்குத் தள்ளுவதற்கு வேறு எதுவுமே தேவையில்லை. மனித இருதயத்தில் உள்ள சீர்கேடு அதன் ஆவேசத்தில் எல்லையற்றதும் முடிவற்றதுமாகும். துன்மார்க்கர்கள் பூமியில் வாழும்போது அவர்களுக்குள் உள்ள பாவம், இயற்கையால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நெருப்பைப் போன்றது. இருதயம் இப்போது பாவத்தில் மூழ்கியிருப்பதால், பாவம் தடுக்கப்படாவிட்டால், அது உடனே ஆத்துமாவை எரியும் அடுப்பாக அல்லது அக்கினியும் கந்தகமுமான சூளையாக மாற்றும்.
- மரணம் அருகில் தென்படாததால் மட்டுமே துன்மார்க்கர்கள் எந்த நேரத்திலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இப்போது ஆரோக்கியமாக இருப்பதாலும், ஏதேனும் விபத்தினால் இந்த உலகத்தை விட்டு உடனே செல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததாலும், கண்களுக்குப் புலப்படும் ஆபத்து எதுவும் இல்லாததாலும், அவருடைய தற்போதைய நிலைமைகள் அவருக்கு எந்தப் பாதுகாப்பையும் தந்துவிடாது. மனிதர்களின் பொதுவான அனுபவங்களைப் பார்க்கும்போது, தற்போதைய ஆரோக்கியமும் பாதுகாப்பும் அடுத்த கணமே அவர்கள் நரகத்தில் நுழைவதைத் தடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாம் காண முடியாத, கணிக்க முடியாத பல வழிகளில் திடீரென இந்த உலகத்தை விட்டுச் செல்வோம். இரட்சிக்கப்படாத நபர்கள், நரகத்தின் மீது போர்த்தப்பட்டுள்ள ஒரு அழுகிய உறையின் மீது நடக்கிறார்கள். இந்த உறையில் எண்ணற்ற இடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன; அவை மனிதனின் எடையைத் தாங்க முடியாது, எவரும் அவற்றைப் பார்க்கவும் முடியாது. பகல் நேரத்தில் மரணத்தைத் தரும் அம்புகள் கண்ணுக்குத் தெரியாமல் பறக்கின்றன. கூர்மையான பார்வைகூட அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது; துன்மார்க்கர்களை உலகத்திலிருந்து வெளியேற்றி நரகத்திற்கு அனுப்புவதற்கு, நாம் ஆராய்ந்து அறிய முடியாத பல வழிகள் தேவனுக்கு உள்ளன. அந்தச் செயலைச் செய்வதற்கு தேவன் ஓர் அற்புதத்தைச் செய்யவோ, அல்லது அவருடைய சாதாரண ஏற்பாட்டைவிட வித்தியாசமாக எதையாவது செய்யவோ அவசியமில்லை. இந்த உலகத்திலிருந்து பாவிகளை வெளியேற்றும் அனைத்துச் சாதனங்களும் தேவனுடைய கரங்களில் உள்ளன; அவை முற்றிலும் அவருடைய வல்லமைக்கும் சித்தத்திற்கும் கீழ்ப்பட்டவை.
- மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் காட்டும் விவேகமும் கவனமும், அல்லது அவர்களைப் பாதுகாப்பதற்காகப் பிறர் அவர்கள் மீது காட்டும் அக்கறையும் அவர்களை ஒரு கணம் கூட காப்பாற்ற முடியாது. இதற்கு, தேவனுடைய ஏற்பாடும் உலகளாவிய அனுபவமும் சாட்சியளிக்கின்றன. மனிதர்களின் சொந்த ஞானம் அவர்களுக்கு மரணத்திலிருந்து பாதுகாப்பை அளிக்காது என்பதற்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. அப்படி இல்லையென்றால், திடீர், அகால மரணத்திலிருந்து தப்பிப்பதில் ஞானமுள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், "புத்தியீனன் சாகிறதுபோலவே ஞானியும் சாகிறான்" (பிரசங்கி 2:16). இது எப்படிச் சாத்தியம்?
- நரகத்திலிருந்து தப்பிக்க துன்மார்க்க மனிதர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எத்தனை தந்திரங்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் கிறிஸ்துவைப் புறக்கணிப்பதன் காரணமாகத் துன்மார்க்க மனிதர்களாகவே இருப்பார்கள் என்பதால், அவையெதுவும் அவர்களை ஒரு கணம் கூட நரகத்திலிருந்து தப்புவிக்க முடியாது. நரகத்தைக் குறித்துக் கேட்கும் சுபாவ மனிதன் ஒவ்வொருவனும் தான் நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று தனக்குத்தானே நம்பிக்கையூட்டிக்கொள்கிறான். தான் செய்த, செய்கிற, செய்யப்போகிற காரியங்களைக் குறித்துப் பெருமைபேசி, தன் பாதுகாப்பிற்காக அவற்றையே ஆதாரமாக்கிக் கொள்கிறான். அழிவிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று ஒவ்வொருவரும் தங்கள் மனங்களில் கணக்கிட்டு, தங்கள் தந்திரங்களும் திட்டங்களும் தோல்வியடையாது என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். சிலர் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என்றும், இதற்கு முன்பு மரித்தவர்களில் பெரும்பான்மையானோர் நரகத்திற்கே சென்றார்கள் என்றும் அவர்கள் கேள்விப்படுகிறார்கள். ஆனால் தன்னைப் பொறுத்தவரை, மற்றவர்கள் செய்ததைவிடச் சிறப்பாகத் தன் திட்டங்களைச் செயல்படுத்தித் தப்பித்துக்கொள்ள முடியும் என்று ஒவ்வொருவனும் நினைக்கிறான். அந்த வேதனை நிறைந்த இடத்திற்குச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. எல்லா முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக்கொண்டு, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரிசெய்து, தோல்வியடையாதபடி கவனம் செலுத்துவதாக நினைக்கிறான். ஆனால் மூட மனிதர்கள் தங்கள் சொந்தத் திட்டங்களாலும், சுய ஞானத்தாலும், சுய பலத்தின் மீது சார்ந்திருப்பதாலும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் நம்புவது நிழலை மட்டுமே தவிர வேறெதுவுமில்லை. தற்போது மரித்தவர்களில் அநேகர் நமக்குக் கிடைத்துள்ள கிருபையின் சாதனங்களைக் கொண்டிருந்தும் நரகத்திற்கே சென்றனர். அவர்கள் நம்மைவிடக் குறைந்த ஞானமுள்ளவர்கள் அல்ல; அவர்கள் தப்பிப்பதற்காக எல்லா விஷயங்களிலும் தகுந்த முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லை என்பதும் அல்ல. அவர்களுடன் பேசுவதற்கு நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து, "நீங்கள் உயிரோடிருந்த காலத்தில் நரகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, அத்தகைய வேதனைகளுக்கு நீங்கள் எப்போதாவது ஆளாவீர்கள் என்று நினைத்தீர்களா?" என்று அவர்களில் ஒவ்வொருவரையும் கேட்டால், "இல்லை, இல்லை, நான் இங்கே வருவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை; என் மனதில் எல்லாவற்றையும் வேறுவிதமாகவே கற்பனை செய்திருந்தேன். நான் மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றும், நான் போட்ட திட்டங்கள் நல்லவை என்றும், தகுந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கிறேன் என்றும் நினைத்தேன். ஆனால் அது என் மீது திடீரென்று வந்தது; அந்த நேரத்தில் அது அப்படி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது திருடனைப்போல வந்தது; மரணம் என்னையும் என் எதிர்பார்ப்புகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது. ஐயோ! என் அறிவீனமே! தேவனுடைய உக்கிரம் என் மேல் வந்துவிட்டதே. இந்த வாழ்க்கைக்குப் பிறகு நான் அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன் என்று வீணான கனவுகளைக் கண்டு என்னையே நான் ஏமாற்றிக்கொண்டேன். சமாதானமும் சௌக்கியமுமாய் இருக்கிறோம், பயமேதுமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று எனக்கு அழிவு நேரிட்டது" என்று அவர்கள் அனைவரும் புலம்புவார்கள்.
- சுபாவ மனிதனை ஒரு கணம் கூட நரகத்திலிருந்து விலக்கி வைப்பதற்குத் தேவன் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்ட வாக்குத்தத்தம் எதுவுமில்லை. யாரிடத்தில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென் என்று இருக்கிறதோ, அந்தக் கிறிஸ்துவுக்குள் செய்யப்பட்ட கிருபையின் உடன்படிக்கையில் உள்ள வாக்குத்தத்தங்களைத் தவிர, நித்திய ஜீவனைக் கொடுப்பதாகவோ, அல்லது நித்திய மரணத்திலிருந்து தப்புவிப்பதாகவோ, அல்லது பாதுகாப்பதாகவோ தேவன் யாருக்கும் எங்கும் வாக்குத்தத்தம் செய்யவில்லை. அந்தக் கிருபையின் உடன்படிக்கையில் உள்ள எந்த வாக்குத்தத்தங்களையும் நம்பாமல், அந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தரை மதிக்காமல், அந்த உடன்படிக்கைக்குப் பாத்திரவான்களாக இல்லாத எவருக்கும் அந்த வாக்குத்தத்தங்களினால் எந்தப் பயனும் இல்லை. சிலர் கற்பனை செய்வதுபோல, சுபாவ மனிதனும் உண்மையோடு தேடுவதன் மூலமும் தட்டுவதன் மூலமும் அந்த வாக்குத்தத்தங்கள் அவனுக்கும் உரியதாகும் என்று எவ்வளவுதான் வலியுறுத்தப்பட்டாலும், அவன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை, தேவபக்தியில் அவன் எவ்வளவு பிரயாசப்பட்டாலும், எவ்வளவு ஜெபம் செய்தாலும், அவனை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை தேவனுக்கு இல்லை. சுபாவ மனிதனை நரகக் குழியின் மீது தேவன் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் அந்த நரக அக்கினிக்குப் பாத்திரவான்கள்; அவர்கள் ஏற்கெனவே அந்தத் தீர்ப்பைப் பெற்றுவிட்டார்கள். தேவனுடைய உக்கிரம் அவர்கள் மீது பயங்கரமாகப் பற்றியெரிகிறது. ஏற்கெனவே நரகத்தில் அவருடைய உக்கிரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களிடத்தில் காட்டப்படும் அதே உக்கிரத்தை தேவன் இவர்களிடத்திலும் கொண்டிருக்கிறார். அவர்கள் அந்தக் கோபத்தைத் தணிக்கவோ அல்லது குறைப்பதற்கோ எதுவும் செய்யவில்லை. அவர்களை ஒரு கணம் கூடக் காப்பாற்றத் தேவன் தம்மைக் கடமைப்படுத்திக்கொள்ளும் வாக்குத்தத்தம் எதையும் செய்யவில்லை. சாத்தான் அவர்களுக்காகக் காத்திருக்கிறான். நரகம் அவர்களுக்காக வாயைத் திறந்து கொண்டிருக்கிறது. அக்கினி ஜ்வாலைகள் அவர்கள் மீது எழும்புகின்றன; சந்தோஷமாக அவர்களைப் பிடித்து விழுங்குவதற்குத் தயாராக உள்ளன. அவர்களுடைய இருதயங்களில் அடக்கிவைக்கப்பட்ட தீப்பிழம்புகள் வெளியே வரப் போராடுகின்றன. அவர்களைக் காப்பாற்றக்கூடிய வழியெதுவுமில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், அவர்களுக்கு அடைக்கலம் எதுவுமில்லை, பிடித்துக்கொள்ள எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் அவர்களைக் காப்பது, எந்த உடன்படிக்கைக்கும் வாக்குத்தத்தத்திற்கும் கட்டுப்படாத, தம்முடைய இலவசமான சித்தத்தின் மீது மட்டுமே சார்ந்திருக்கின்ற கோபங்கொண்ட தேவனுடைய நீடிய பொறுமை மட்டுமே.
பயன்பாடு:
இந்தத் துயரமான தலைப்பு, மனந்திரும்பாத மனிதர்களின் விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை நீங்கள் கேட்டதே, கிறிஸ்துவுக்கு வெளியே உள்ள ஒவ்வொருவருடைய நிலைமையுமாகும். அந்த வேதனையின் உலகம், கந்தகத்தால் எரியும் அந்த அக்கினிக்கடல் உங்களுக்குக் கீழேயே விரிந்து கிடக்கிறது. அது தேவனுடைய உக்கிரத்தின் எரியும் ஜூவாலைகளின் குழி. அந்த நரகம் அகலமாக வாயைத் திறந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு நிற்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்களுக்கும் நரகத்திற்கும் இடையே காற்றைத் தவிர வேறெதுவும் இல்லை. உங்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது தேவனுடைய வல்லமையும் அவருடைய சித்தமும் மட்டுமே.
இதைக் குறித்து ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நீங்கள் இப்போது நரகத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அதில் தேவனுடைய கரத்தை நீங்கள் பார்க்கவில்லை; மாறாக உங்கள் ஆரோக்கியத்தையும், உங்களுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கைகளையும், உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் பயன்படுத்தும் வழிகள் என்ற மற்ற காரியங்களையும் பார்க்கிறீர்கள். ஆனால் இவையெல்லாம் எம்மாத்திரம்? காற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைக் காற்று தாங்கிப் பிடிக்க முடியாததுபோல, தேவன் தம் கரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் அவையெதுவும் நீங்கள் கீழே விழாமல் தடுக்க முடியாது.
உங்கள் துன்மார்க்கம் உங்களை ஈயம்போல கனமாக்குகிறது. அந்தப் பெரும் பாரமும் அழுத்தமும் உங்களை நரகத்திற்குள் பலவந்தமாகத் தள்ளிவிடும். தேவன் தீர்மானிக்கும்போது நீங்கள் உடனடியாக வேகமாக இறங்கி அடிமட்டத்தில் உள்ள பாதாளத்தில் மூழ்குவீர்கள். சிலந்தி வலை ஒரு பெரிய பாறாங்கல்லைத் தடுத்து நிறுத்த முடியாததுபோல, உங்கள் ஆரோக்கியம், முன்னெச்சரிக்கைகள், கவனம், திட்டங்கள், உங்கள் சுயநீதி ஆகியவையெதுவும் உங்களை நரகத்தில் விழாமல் சிறிதும் காப்பாற்ற முடியாது. தேவனுடைய இறையாண்மையுள்ள சித்தம் இல்லையென்றால் பூமி உங்களை ஒரு நிமிடம் கூடச் சுமக்காது. நீங்கள் பூமிக்குப் பாரம். சிருஷ்டி உங்களுடன் சேர்ந்து தவிக்கிறது. படைப்பு முழுவதும் விருப்பமில்லாமலேயே உங்கள் சீர்கேட்டிற்கு உட்பட்டுள்ளது. உங்கள் பாவத்திற்கும் சாத்தானுக்கும் வெளிச்சம் தந்து சேவை செய்ய சூரியனுக்கு விருப்பமில்லை. உங்கள் இச்சைகளைத் தீர்க்கத் தன் பலனைக் கொடுக்க பூமிக்கு விருப்பமில்லை. உங்கள் துன்மார்க்கச் செயல்களைத் தன் மீது நடத்த பூமிக்கு விருப்பமில்லை. நீங்கள் தேவனுடைய சத்துருக்களின் சேவையில் இருக்கும்போது உங்களை உயிரோடு வைத்திருக்கவும், உங்களுக்கு சுவாசம் கொடுக்கவும் காற்றுக்குக்கூட விருப்பமில்லை. தேவனுடைய படைப்பு மிகவும் நல்லது. அவற்றைப் பயன்படுத்தி மனிதன் தேவனைச் சேவிக்க வேண்டும் என்பதற்காகவே அவை படைக்கப்பட்டுள்ளன; இது தவிர வேறொரு நோக்கத்தை அவற்றின் சுபாவத்திற்கு விரோதமாக அவை நிறைவேற்றாது. தேவனுடைய இறையாண்மையுள்ள கரம் மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் உங்களை வெளியே உமிழ்ந்திருக்கும். தேவனுடைய உக்கிரத்தின் கருமையான மேகங்கள் இடிமுழக்கத்தோடு பயங்கரமான புயலாக நேராக உங்கள் தலைக்கு மேல் சூழ்ந்துள்ளன. அவற்றை தேவனுடைய கரம் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் அவை உடனே உங்கள் மீது சீறிப்பாய்ந்திருக்கும். தற்போது தேவனுடைய இறையாண்மையுள்ள சித்தம் தம்முடைய கடுமையான காற்றைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால் அது சீற்றத்தோடு உங்கள் மீது வரும். அழிவு உங்கள் மீது சூறாவளியைப்போல வரும். அதன் முன் நீங்கள் களத்திலிருந்து காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல இருப்பீர்கள்.
தேவனுடைய கோபம் தற்போதைக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பெரும் ஜலத்தைப்போன்றது. வெளியேற வழியில்லாதவரை அதன் அழுத்தமும், அதன் மட்டமும் உயர்ந்துகொண்டே இருக்கும். எவ்வளவு நேரம் தடுத்து நிறுத்தப்படுகிறதோ, அவ்வளவு வேகமாகவும் வல்லமையுடனும் அது வெளியேறும். இதுவரை உங்கள் துன்மார்க்கத்தின் மீது தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான். தேவனுடைய தண்டனையின் பிரவாகம் தற்போதைக்குத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் உங்கள் அக்கிரமம் அப்படிப் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உக்கிரத்தைச் சேர்த்து வைக்கிறீர்கள். அந்த உக்கிர ஜலங்கள் தொடர்ந்து பெருகி மேலும் வலிமையடைகின்றன. நிற்க விரும்பாத, முன்னோக்கி மட்டுமே செல்லும் அந்த உக்கிர ஜலங்களை தேவனுடைய சித்தம் மட்டுமே தடுத்து நிறுத்துகிறது. தேவன் அந்த வெள்ளத்தைத் தடுக்கும் மதகுகளிலிருந்து தம் கரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டால், அது உடனே திறக்கப்பட்டு, தேவனுடைய கோபம், உக்கிரம் ஆகியவற்றின் பயங்கரமான வெள்ளம் கற்பனை செய்ய முடியாத தீவிரத்துடன் முன்னோக்கிச் செல்லும்; சர்வ வல்லமையோடு உங்கள் மீது சீறிப்பாய்ந்து வரும். ஒருவேளை உங்கள் பலம் நரகத்தில் உள்ள கொழுத்த, பலமிக்க பிசாசைவிடப் பத்தாயிரம் மடங்கு அதிகமாக இருந்தாலும் சரி, அது அந்த உக்கிர வெள்ளத்தைத் தடுக்கவும், தாங்கவும் சிறிதும் பயன்படாது.
தேவனுடைய உக்கிரத்தின் வில் நாணேற்றப்பட்டுள்ளது; அம்பு குறிவைக்கப்பட்டுள்ளது. நீதி அதை நேராக உங்கள் இருதயத்திற்குக் குறிவைத்துள்ளது. எந்த வாக்குத்தத்தமும் செய்யாத, எதற்கும் கட்டுப்படாத அந்தக் கோபங்கொண்ட தேவனுடைய சித்தம் மட்டுமே அந்த அம்பு தற்போது உங்கள் இரத்தத்தைக் குடிக்காமல் தடுக்கிறது. தேவனுடைய வல்லமையுள்ள ஆவியானவர் ஏற்படுத்தும் பெரிய இருதய மாற்றத்தை ஒருபோதும் அனுபவிக்காத நீங்களனைவரும், ஒருபோதும் மறுபடியும் பிறந்து புதிய சிருஷ்டியாக மாற்றப்படாத நீங்களனைவரும், பாவத்தில் மரித்து உயிர்த்தெழாமல், புதிய நிலைக்கு வராமல், இன்னும் புதிய ஜீவனையும் வெளிச்சத்தையும் அனுபவிக்காமல் இருக்கும் நீங்களனைவரும் இவ்வாறு கோபங்கொண்ட தேவனுடைய கையிலேயே இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பல காரியங்களில் சரிசெய்திருக்கலாம்; விசுவாச சம்பந்தமான பல விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். வெளியரங்கமாக தேவபக்தியுள்ளவனைப்போல உங்கள் குடும்பத்திலும், உங்கள் வீட்டிலும், தேவனுடைய வீட்டிலும் நடமாடிக் கொண்டிருக்கலாம். ஆனாலும் தற்போது நீங்கள் நித்திய அழிவிற்கு ஆளாகாமல் தேவனுடைய சித்தத்தைத் தவிர வேறெதுவும் உங்களைத் தப்புவிக்கவில்லை. இது குறித்து நீங்கள் தற்போது உணர்த்தப்படாவிட்டாலும் போகப்போக உங்களுக்கே தெரியும். ஒருகாலத்தில் உங்களைப்போலவே சிந்தித்த அநேகர் இப்போது இந்தக் காரியங்களை உணருகிறார்கள். ஏனென்றால் அழிவு அவர்கள் மீது வராது, சமாதானமாக இருக்கிறோம் என்று அவர்கள் நினைத்தபோதே அழிவு அவர்கள் மீது திடீரென்று வந்தது. அவர்கள் சார்ந்திருந்த காரியங்களெல்லாம் காற்று, வெறுமையான நிழலைப் போன்றவை என்பது அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.
ஒருவன் ஒரு சிலந்தியையோ அல்லது அருவருப்பான ஒரு பூச்சியையோ நெருப்பின் மீது பிடித்துக்கொண்டிருப்பதுபோல, நரகக் குழியின் மீது உங்களைப் பிடித்துக்கொண்டிருக்கும் தேவன் உங்களை அருவருக்கிறார்; உங்கள் மீது பயங்கரமான உக்கிரத்தோடு கோபமாக இருக்கிறார். உங்கள் மீதான அவருடைய உக்கிரம் அக்கினியாகப் பற்றியெரிகிறது. உங்களை நரகத்தில் தள்ளுவதற்குத் தவிர நீங்கள் வேறெதற்கும் தகுதியானவன் அல்ல என்று அவர் பார்க்கிறார். அவருடைய கண்கள் உங்கள் துன்மார்க்கத்தைப் பார்க்க முடியாத அளவுக்குப் பரிசுத்தமானவை.
நம் பார்வைக்கு மிகவும் வெறுக்கத்தக்க, நச்சுத்தன்மையுள்ள பாம்பைவிட நீங்கள் அவருடைய பார்வையில் பத்தாயிரம் மடங்கு அதிக அருவருப்பாக இருக்கிறீர்கள். ஒரு ராஜாவை மிகவும் கடுமையாக எதிர்க்கும் கலகக்காரனைவிடப் பல மடங்கு அதிகமாக நீங்கள் அவரைப் பலமுறை துக்கப்படுத்தியுள்ளீர்கள். இருந்தபோதிலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்த அக்கினியில் விழாமல் தடுப்பது தேவனுடைய கரம் மட்டுமே. நேற்றிரவு நீங்கள் நரகத்தில் விழாமல் இருப்பதற்கும், தூங்கிய பிறகு நரகத்தில் விழாமல் இருப்பதற்கும், தூங்கி எழுந்த பிறகும் இதுவரை நரகத்தில் விழாமல் இருப்பதற்கும் காரணம் உங்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் தேவனுடைய கரம் மட்டுமே. அவருடைய கிருபையைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. இந்த கணத்தில் நீங்கள் இன்னும் நரகத்தில் விழாமல் இருப்பதற்குக் காரணம் அவருடைய கிருபை மட்டுமே.
ஓ பாவியே, நீங்கள் இருக்கும் பயங்கரமான ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள். இது உக்கிரத்தின் பெரிய சூளை. இது ஒரு அகலமான, அடிமட்டமே இல்லாத பாதாளம். இப்போது நரகத்தில் எரிந்துகொண்டிருப்பவர்கள் மீது தேவன் எவ்வளவு கோபத்தோடு இருக்கிறாரோ, அந்த அக்கினி ஜூவாலையின் மீதே உங்களைப் பிடித்துக்கொண்டு உங்கள் மீதும் அதே கோபத்தோடு இருக்கிறார். நீங்கள் ஒரு மெல்லிய நூலின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்; அதை அறுத்து எரிக்க தேவனுடைய உக்கிர ஜ்வாலைகள் ஒவ்வொரு கணமும் அதைச் சுற்றி எழும்புகின்றன. யாரும் உங்களுக்கு மத்தியஸ்தராக இருக்கத் தகுதியில்லை. எதைப் பிடித்துக்கொண்டாலும் உங்களை நீங்கள் இரட்சித்துக்கொள்ள முடியாது. எதுவுமே உங்களை அந்த அக்கினி ஜ்வாலைகளிலிருந்து தப்புவிக்காது. உங்களுக்கு உள்ள எதுவும், நீங்கள் செய்துகொண்ட எதுவும், நீங்கள் செய்யக்கூடிய எதுவும் உங்களை தேவனிடமிருந்து காப்பாற்ற முடியாது; குறிப்பாக இவற்றைக் கவனியுங்கள்:
- இது யாருடைய உக்கிரம்? இது அனந்தமான தேவனுடைய உக்கிரம். இது வெறும் ஒரு மனிதனுடைய கோபமாக இருந்தால், மிகவும் வல்லமைபொருந்திய ராஜாவின் கோபமாக இருந்தாலும்கூட, அதைக் தேவனுடைய கோபத்தோடு ஒப்பிட முடியாது. ராஜாக்களின் கோபம், அதிலும் குறிப்பாகத் தன் மக்களின் பிராணனைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டு தன் விருப்பப்படி அதை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட சர்வாதிகாரியின் கோபம் மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும். "ராஜாவின் பயமுறுத்தல் சிங்கம் கெர்ச்சிப்பது போலிருக்கும்; அவனுக்குக் கோபமூட்டுகிறவன் தன் சொந்தப் பிராணனுக்கு மோசம் வருவிக்கிறான்" (நீதிமொழிகள் 20:2). சர்வாதிகாரியான ராஜாவின் கோபத்தைத் தூண்டும் ஒருவன், மனிதர்கள் கற்பனை செய்து விதிக்கக்கூடிய மிகக் கொடூரமான தண்டனைகளுக்குத் தன்னைத் தானே பாத்திரவானாக்கிக் கொள்கிறான். மிகவும் வல்லமை வாய்ந்த பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மிக உயர்ந்த மகிமையிலும், பலத்திலும், மிகக் கொடூரமான சுபாவத்தைக் கொண்டிருந்தாலும், மகா உன்னதமான சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரோடும், பரலோகத்திற்கும் பூமிக்கும் ராஜாவாயிருக்கிறவரோடும் ஒப்பிடும்போது அவர்கள் பலவீனமானவர்கள், அற்பமான மண்புழுக்களைப் போன்றவர்களே. அவர்கள் மிகவும் கோபமாக இருக்கும்போதும், தங்கள் சீற்றத்தை அதிகபட்சமாகக் காட்டும்போதும் அவர்கள் செய்யக்கூடியது மிகச் சொற்பமே. பூமியின் ராஜாக்கள் அனைவரும் தேவனுடைய சமூகத்தில் வெட்டுக்கிளிகளைப் போலிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லாததைவிடக் கீழானவர்கள்; அவர்களுடைய அன்பிற்கும், பகைக்கும் எந்த மதிப்பும் இல்லை. ராஜாதி ராஜாவின் மகிமை அவர்களுடைய மகிமையைவிட எப்படி உயர்ந்ததோ, அதேபோல அவர்களுடைய உக்கிரத்தைவிட அவருடைய உக்கிரம் மிகவும் உயர்ந்தது. "என் சிநேகிதராகிய உங்களுடனே நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, பின்பு அதிகமாய் ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 12:4,5).
- அவருடைய கடுமையான கோபத்திற்கு நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள்; அந்தக் கடுமையைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கிறோம் - "அவர்களுடைய கிரியைகளுக்குத்தக்கதாகப் பலனளிப்பார்; தம்முடைய சத்துருக்களுக்கு உக்கிரத்தையும், தம்முடைய பகைஞருக்குத் தக்க பலனையும் சரிக்கட்டுவார்" (ஏசாயா 59:18). "இதோ, யெகோவா அக்கினியோடும், அவருடைய இரதங்கள் சுழல்காற்றோடும் வரும்; அவர் தம்முடைய கோபத்தை உக்கிரத்தோடும், தம்முடைய கண்டிதத்தை அக்கினி ஜ்வாலையோடும் செலுத்துவார்" (ஏசாயா 66:15). "அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுக்காலையை மிதிக்கிறார்" (வெளிப்படுத்தல் 19:15). இவை மிகவும் பயங்கரமான வார்த்தைகள். "உக்கிரம்" என்று சொன்னாலே பயங்கரமாக இருக்கும்; ஆனால் அது போதாது என்பதுபோல, இங்கு கூறப்பட்டுள்ள கடுமையான உக்கிர கோபம் யெகோவாவுடைய கோபம் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்! இந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தங்களை யார் விவரிக்க முடியும், யார் கற்பனை செய்ய முடியும்! ஆனால் இங்கு கடுமை, உக்கிரம் என்ற வார்த்தைகள் மட்டும் பயன்படுத்தப்படவில்லை; சர்வவல்லமையுள்ளவரின் கடுமையான உக்கிரம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்கள் தங்கள் கோபத்தில் தங்கள் பலத்தை எப்படிப் பிரயோகிக்கிறார்களோ, அதுபோலவே சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய உக்கிரத்தில் சர்வ வல்லமையையும் வெளிப்படுத்துவார். அதன் விளைவு எப்படி இருக்கும்? உதவியற்ற புழுக்களைப் போன்ற மனிதர்கள் அதை எப்படித் தாங்குவார்கள்? யாருடைய கைகள் பலமாக இதைத் தடுக்க முடியும்? யாருடைய இருதயம் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? பயங்கரமான, கற்பனைக்கெட்டாத, விவரிக்க முடியாத இந்த வேதனையை பலவீனமான படைப்புகள் எப்படித் தாங்க முடியும்? இன்னும் மறுபடியும் பிறவாத நிலையில் இருக்கும் நீங்கள் இதைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். தேவன் தம்முடைய கடுமையான உக்கிரத்தைச் சிறிதும் இரக்கமில்லாமல் வெளிப்படுத்துவார். உங்கள் உதவியற்ற நிலைமையை தேவன் காணும்போது, உங்கள் வேதனை உங்களால் தாங்கக்கூடிய சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டது என்று காணும்போது, உங்களது திக்கற்ற ஆத்துமா எப்படி நசுக்கப்படும், அளவற்ற துக்கத்தில் அது எப்படி மூழ்கும் என்பதைக் காணும்போது, தேவன் தம் உக்கிரத்தை வெளிப்படுத்துவதைச் சிறிதும் நிறுத்த மாட்டார்; தம்முடைய பாரமான கரத்தைச் சற்றும் திரும்பப் பெற மாட்டார். எந்த ஆறுதலோ, எந்த இரக்கமோ அருளப்படாது. தம்முடைய கடுமையான உக்கிரப் புயலை அவர் சற்றும் நிறுத்த மாட்டார். உங்கள் பாதுகாப்பைக் குறித்து அவர் சிறிதும் கவலைப்பட மாட்டார். வேறு எந்த வகையிலாவது நீங்கள் துன்பப்படுவீர்கள் என்று தம் உக்கிரத்தைக் காட்டும் விஷயத்தில் அவர் சிறிதும் கவனமாக இருக்க மாட்டார். நீதி கோருவதையெல்லாம் நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே தவிர, உங்களால் தாங்க முடியாது என்ற காரணத்திற்காகத் தீவிரம் சிறிதும் குறைக்கப்படாது.
"ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடப்பிப்பேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் காதுகள் கேட்கக் கூப்பிட்டாலும் நான் அவர்களுக்குச் செவிகொடுப்பதில்லை" (எசேக்கியேல் 8:18). இப்போது தேவன் உங்களுக்கு இரக்கம் காட்டத் தயாராக இருக்கிறார். இதுவே கிருபையின் காலம்; அவர் இரங்குவார் என்ற நம்பிக்கையோடு இப்போது நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிட முடியும். இந்தக் கிருபையின் காலம் முடிந்துபோன பிறகு நீங்கள் எவ்வளவு அழுதாலும், புலம்பினாலும் எல்லாம் வீணே. தேவன் உங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து அழிப்பார்; உங்கள் பாதுகாப்பைச் சிறிதும் கண்டுகொள்ள மாட்டார். அவராலே நீங்கள் வேதனை அனுபவிப்பதற்குத் தவிர வேறெதற்கும் பயன்பட மாட்டீர்கள். உங்களை நிலைத்திருக்க வைப்பதற்கு அது தவிர வேறு எந்தக் காரணமும் இருக்காது. நீங்கள் அழிவிற்கென்றே நியமிக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரமாகவே இருப்பீர்கள். இந்தப் பாத்திரம் அவருடைய உக்கிரத்தை வெளிப்படுத்துவதற்குத் தவிர வேறு எதற்கும் பயன்படாது. நீங்கள் அழுது புலம்பும்போது அவர் இரக்கம் காட்டாமல், சிரித்துப் பரிகாசம் செய்வார். "நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்றீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனுமில்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளிவிட்டீர்கள், என் கடிந்துகொள்ளுதலை நீங்கள் விரும்பவில்லை. ஆகையால் நீங்கள் ஆபத்தில் அகப்படும்போது நானும் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது பரிகாசம்பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புயலைப்போல் வரும்போதும், ஆபத்து சுழல்காற்றைப்போல் உங்களைப் பிடிக்கும்போதும், உங்களுக்கு நெருக்கமும் இடுக்கமும் வரும்போதும், நான் பரிகாசம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் ஆலோசனைகளினால் திருப்தியடைவார்கள். பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்; மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்" (நீதிமொழிகள் 1:24-32). அந்த மகா தேவனின் இந்த வார்த்தைகள் எவ்வளவு பயங்கரமானவை! "நான் ஒருவனாய் ஆலை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கினேன்; அவர்களுடைய இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். நீதியைச் சரிக்கட்டும் நாள் என் சிந்தையிலிருந்தது..." (ஏசாயா 63:3-4). வெறுப்பு, பகை, கோபாக்கினை ஆகிய இந்த வார்த்தைகளின் தீவிரத்தை வெளிப்படுத்தும் சொற்களைக் கண்டுபிடிப்பது நம்முடைய வரம்பிற்குள் சாத்தியமில்லை. ஒருவேளை நீங்கள் இரக்கத்திற்காக தேவனிடம் மன்றாடினால், உங்கள் வேதனையில் அவர் உங்களுக்கு இரங்குவதற்குப் பதிலாக, உங்கள் மீது பரிதாபப்படுவதற்குப் பதிலாக, அவர் தமது காலடியில் உங்களை மிதிப்பார். சர்வவல்லமையுள்ளவர் உங்களைத் தமது பாதங்களின் கீழ் மிதிக்கும் பாரத்தை உங்களால் தாங்க முடியாது என்று தெரிந்தாலும், எந்த இரக்கமும் இல்லாமல் உங்களை நசுக்கிப் போடுவார். அவர் உங்கள் இரத்தம் மேலே தெறிக்கும்படி உங்களை நசுக்கி, அதைக் கொண்டு தம் வஸ்திரத்தைக் கறைப்படுத்திக் கொள்வார். உங்களை வெறுப்பது மட்டுமின்றி, உங்களை மிகவும் அருவருப்பார். வீதியில் உள்ள சேற்றைப் போல உங்களைத் தமது பாதங்களின் கீழ் மிதிப்பதைத் தவிர வேறு எந்த இடமும் உங்களுக்குத் தகுதியானதாகக் கருதப்படாது.
- நீங்கள் படும் வேதனைக்கு உங்களை ஆளாக்குவது தேவனே; அப்படிச் செய்வதன் மூலம் தேவன் யெகோவாவுடைய உக்கிரம் என்னவென்பதைக் காண்பிப்பார். தேவன் தம்முடைய அன்பு எவ்வளவு உன்னதமானது என்பதையும், தம்முடைய உக்கிரம் எவ்வளவு பயங்கரமானது என்பதையும் மனிதர்களுக்கும் தம் தூதர்களுக்கும் காண்பிக்க விரும்பினார். சில நேரங்களில் பூமியின் ராஜாக்கள் தங்கள் கோபம் எவ்வளவு பயங்கரமானது என்பதைக் காண்பிக்க விரும்புவார்கள்; கடுமையான தண்டனைகளின் மூலம் தங்களைத் தூண்டுபவர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். கல்தேயப் பேரரசின் வல்லமைமிக்க, அகந்தையுள்ள சக்கரவர்த்தியான நேபுகாத்நேச்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் மீது கோபங்கொண்டு தன் கோபத்தைக் காண்பிக்க விரும்பி, அந்த எரிகிற சூளையை ஏழு மடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான்; மனிதர்கள் அதிகரிக்கக்கூடிய அதிகபட்ச அளவுக்கு அது உயர்த்தப்பட்டது. ஆனால் மகா தேவன் தம்முடைய சத்துருக்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனையின் மூலம் தம் உக்கிரத்தைக் காண்பித்து, தம்முடைய உன்னதத்தையும், தம் வல்லமையின் மகிமையையும் வெளிப்படுத்த விரும்புகிறார். "தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையை வெளிப்படுத்தவும் சித்தமாயிருந்து, அழிவுக்கு ஏதுவாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?" (ரோமர் 9:22). நீர்த்துப்போகாத, அடர்த்தியான, கட்டுப்படுத்தப்படாத யெகோவாவின் உக்கிரத்தைக் காண்பிப்பதே தேவனுடைய நோக்கம் என்பதால், அவர் தீர்மானித்தபடியே செய்வார். அங்கு நடப்பதைப் பார்ப்பதே பயங்கரமாக இருக்கும். அந்த மகா தேவன் கோபத்தோடு பாவியின் மீது தம் பயங்கரமான நீதியைச் சரிக்கட்ட எழும்போது, அந்தப் பாக்கியமற்றவன் அந்தக் கோபத்தின் அளவற்ற வல்லமையையும் பாரத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, தேவன் தம்முடைய உன்னதத்தையும் வல்லமையையும் பார்க்கும்படி அகிலத்தையே அழைப்பார்.
"இப்பொழுது எழுந்திருப்பேன், இப்பொழுது மேன்மைப்படுவேன், இப்பொழுது உயருவேன் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் பதரைக் கர்ப்பந்தரித்து, தாளடியைப் பெறுவீர்கள்; உங்கள் சுவாசம் அக்கினியாய் உங்களைப்பட்சிக்கும். ஜனங்கள் சுண்ணாம்புக் காளவாய்களைப்போலவும், வெட்டி அக்கினியில் எரிக்கப்படும் முள்ளுகளைப்போலவுமிருப்பார்கள். தூரத்திலிருக்கிறவர்களே, நான் செய்ததைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் வல்லமையை அறிந்துகொள்ளுங்கள். சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கிற அக்கினியோடு நம்மில் தரிக்கத்தக்கவன் யார்? நித்திய ஜுவாலைகளோடே நம்மில் தரிக்கத்தக்கவன் யார்? என்கிறார்கள்" (ஏசாயா 33:10-14). நீங்கள் மனந்திரும்பாத நிலையிலேயே தொடர்ந்தால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய அளவற்ற மகிமையும் வல்லமையும் பலவீனமான உங்கள் மீது பலவந்தமாகக் காண்பிக்கப்படும். நீங்கள் இந்த வேதனையைத் தேவதூதர்கள் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் முன்னிலையில் அனுபவிப்பீர்கள். நீங்கள் இப்படி வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக, பரலோகத்தில் உள்ள பரிசுத்தவான்கள் அனைவரும் வெளியே வந்து அந்தப் பயங்கரமான காட்சியைக் காண்பார்கள். அந்த மகிமையின் வல்லமைக்கு முன்பாக விழுந்து ஆராதிப்பார்கள்.
"அப்பொழுது, அமாவாசைதோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் என் சந்நிதியில் தொழுதுகொள்வார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். அவர்கள் வெளியேபோய், எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின மனுஷர்களுடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய புழு சாவதில்லை, அவர்களுடைய அக்கினி அவிந்துபோவதுமில்லை; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்" (ஏசாயா 66:23-24).
அது நித்தியமான உக்கிரம். சர்வவல்லமையுள்ளவரின் உக்கிரத்தை ஒரு கணம் அனுபவிப்பதே கற்பனை செய்ய முடியாத அளவு பயங்கரமானது. ஆனால் அதை நீங்கள் நித்தியமாக அனுபவிக்க வேண்டும். இந்தப் பயங்கரமான வேதனைக்கு முடிவே இருக்காது. நீங்கள் முன்னோக்கிப் பார்க்கும்போது, அது நிரந்தரமாக இருக்கும் என்பதையும், நித்திய காலமாய் இருக்கும் என்பதையும் காணும்போது, அது உங்கள் எண்ணங்களை விழுங்கிவிடும், உங்கள் ஆத்துமாவைத் திகைக்கச் செய்யும். விடுதலை, முடிவு, ஆறுதல் அல்லது ஓய்வு வரும் என்ற நம்பிக்கையே இருக்காது. சர்வவல்லமையுள்ள, இரக்கமற்ற நீதியின் சரிக்கட்டுதலை நீங்கள் எதிர்கொண்டு, நீண்ட யுகங்களையும், கோடிக்கணக்கான யுகங்களையும் கழிக்க வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இதையெல்லாம் அனுபவித்த பிறகும், எத்தனையோ யுகங்கள் இந்த முறையில் கடந்து சென்ற பிறகும், இதுவரை நீங்கள் அனுபவித்தது இன்னும் மீதமிருப்பவற்றில் ஒரு துளி மட்டுமே என்பதை அறிந்துகொள்வீர்கள். இவ்விதமாக உங்கள் தண்டனை உண்மையாகவே நித்தியமான தண்டனை. அத்தகைய சூழ்நிலைகளில் ஒரு நபரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யார் விவரிக்க முடியும்? நாமெல்லாம் அதைக் குறித்து வெளிப்படுத்தக்கூடியது வெறும் பலவீனமான, மந்தமான வர்ணனை மட்டுமே. இது விவரிக்க முடியாதது, கற்பனைக்கு எட்டாதது. தேவனுடைய உக்கிரத்தின் வல்லமையை யார் அறிந்துகொள்ள முடியும்? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் முடிவில்லாத இந்த உக்கிரத்தையும் வேதனையையும் அனுபவிப்பவர்களின் நிலைமை என்ன என்பதை யார் விவரிக்க முடியும்? எவ்வளவு நீதியாகவும், பக்தியாகவும், நற்குணத்துடனும், ஞானத்துடனும் நடந்துகொள்பவர்களாக இருந்தாலும் சரி, மறுபடியும் பிறக்காவிட்டால் ஒவ்வொருவருடைய பரிதாபமான நிலைமையும் இதுதான்!
இளைஞர்களோ, முதியவர்களோ இதைக் குறித்துச் சிந்திப்பார்கள் என்று மன்றாடுகிறேன். இந்த மகிமையான சுவிசேஷத்தைக் கேட்டும், உங்களில் சிலர் இந்தப் பயங்கரமான உக்கிரத்திற்கு ஆளாவார்கள் என்று பயப்படுகிறேன். அவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது; இப்போது அவர்களுக்கு என்ன எண்ணங்கள் உள்ளன என்பதும் தெரியாது; பெரிதாகக் கலக்கமில்லாமல், சாதாரணமாக அவர்கள் இந்தக் காரியங்களைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அது நாமில்லை என்றும், நாம் தப்பித்துக்கொள்வோம் என்றும் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வேதனைக்கு இன்னார் ஆளாவார் என்று எந்த ஒரு குறிப்பிட்ட நபரைக் குறித்தும் நமக்குத் தெரிந்தால், அதை நினைப்பதே எவ்வளவு பயங்கரமாக இருக்கும்! அந்த நபர் யார் என்று தெரிந்தால், அவரைப் பார்ப்பதே எவ்வளவு கலக்கமளிக்கும் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுக்காக எவ்வளவு புலம்பி அழுவான்! ஆனால், ஐயோ! ஒருவர் அல்ல, நரகத்தில் இங்கே கேட்ட சிந்தனைகளை நினைவுகூருபவர்கள் எத்தனை பேர் இருக்கப் போகிறார்கள்! மிகக் குறுகிய காலத்தில், அதாவது இந்த வருடம் முடிவதற்குள்ளாகவே சிலர் நரகத்தில் இருக்கலாம்; இங்கு கேட்பவர்களில் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக உள்ள சிலர்கூட நாளை காலையிலேயே நரகத்தில் இருக்கலாம். நீங்கள் இன்னும் அந்த நரகத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால், மிக விரைவில் நீங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. "உங்கள் அழிவு உறங்காது" என்பது உங்களில் அநேகர் மீது திடீரென வரும். நீங்கள் இன்னும் நரகத்தில் விழவில்லையே என்று ஆச்சரியப்படலாம். ஏனென்றால், உங்களுக்குத் தெரிந்தவர்களில் நரகத்திற்கு உங்களைவிடக் குறைந்த தகுதியுள்ளவர்கள், இன்றைக்கும் உயிரோடிருக்க வேண்டியவர்கள், உங்களுக்கு முன்பாகவே நித்திய நரகத்திற்குச் சென்று எந்த நம்பிக்கையுமற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தீவிரமான துக்கத்திலும், தீவிரமான விரக்தியிலும் அழுதுகொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ இன்னும் வேதாகமங்கள், கர்த்தருடைய நாள்கள், போதகர்கள் போன்ற இரட்சிப்புக்கு நடத்தும் சாதனங்கள் கிடைக்கும் ஜீவனுள்ளோரின் தேசத்திலேயே இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது கிடைத்துள்ள வாய்ப்புகளை ஒரு நாளாவது அனுபவிப்பதற்கு, அந்த அழிந்துபோன, பரிதாபத்திற்குரியவர்கள் எதைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். எனவே, இன்று உங்களுக்குள்ள வாய்ப்பு மிகவும் அசாதாரணமானது; இது தன் இரக்கத்தின் வாசல்களை அகலமாகத் திறந்து பாவிகளை வரும்படி கிறிஸ்து சத்தமிட்டு அழைக்கும் நாளாகும். அநேகர் அவரிடம் திரண்டு வந்து தேவனுடைய ராஜ்யத்திற்குள் பலவந்தமாக நுழையும் நாள். ஒவ்வொரு நாளும் அநேகர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளிலிருந்து வருகிறார்கள். நேற்று வரை உங்களைப்போன்ற பரிதாப நிலையிலேயே இருந்த அநேகர், இப்போது மிகவும் சந்தோஷமாக தங்களை நேசித்துத் தங்கள் பாவங்களைத் தம் சொந்த இரத்தத்தில் கழுவியவரை முழு இருதயத்தோடு நேசித்து, தேவனுடைய மகிமையைக் குறித்த நம்பிக்கையை எண்ணிப் பெருமையடைகிறார்கள். அவர்கள் சந்தோஷமாக விருந்தில் இருக்கும்போது, நீங்கள் பின் தங்கி அழிந்துபோவது எவ்வளவு வேதனையானது! அவர்கள் இருதய ஆனந்தத்தினால் சத்தமிட்டுப் பாடும்போது, நீங்கள் மனவேதனையினால் அழுது, ஆவியின் முறிவினால் அலறுவது ஏன்? (ஏசாயா 65:14). அத்தகைய சூழ்நிலையில் உங்களால் ஒரு கணம் கூட எப்படி இருக்க முடியும்? நாளுக்கு நாள் கிறிஸ்துவைச் சேரும் ஆத்துமாக்களைப் போல உங்கள் ஆத்துமாக்களும் விலையேறப்பெற்றவை அல்லவா? இந்த உலகத்தில் நீண்ட காலம் வாழ்ந்தும், மறுபடியும் பிறந்து இஸ்ரவேலர்களுடன் சக குடிமக்களாக மாறாமல், தங்கள் வாழ்நாளெல்லாம் தேவனுடைய உக்கிரத்தைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்யாதவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகத்தில் இல்லையா?
ஐயாமார்களே! உங்கள் நிலைமை மிகவும் ஆபத்தானது; உங்கள் அக்கிரமமும் இருதயக் கடினமும் மிகவும் பெரியவை. உங்களைப்போலவே தேவனுடைய இரக்கத்தைப் பெறாமல் உங்கள் வயதுடையவர்கள் எத்தனையோ பேர் கைவிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து உங்களைக் குறித்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அனந்தமான தேவனுடைய கடுமையான உக்கிரத்தை உங்களால் தாங்க முடியாது. ஓ வாலிபனே, வாலிபப் பெண்ணே, உங்கள் வயதிலேயே உள்ள எத்தனையோ பேர் வீணான வாலிப இச்சைகளையெல்லாம் விட்டுவிட்டுக் கிறிஸ்துவிடம் திரும்பும்போது, நீங்கள் மட்டும் இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடுவீர்களா? இப்போது உங்களுக்குச் சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது; ஆனால் அதைப் புறக்கணித்தால், உங்கள் இளமைப்பருவத்தையெல்லாம் பாவத்திலேயே கழித்து, இப்போது பயங்கரமாகக் குருட்டாட்டம் மற்றும் இருதயக் கடினத்திற்கு ஆளாகியுள்ளவர்களைப் போலவே உங்கள் முடிவும் இருக்கும். மனந்திரும்பாத சிறு பிள்ளைகளே, இரவும் பகலும் உங்கள் மீது கோபமாக இருக்கும் தேவனுடைய உக்கிரத்திற்கு ஆளாவதற்காக நீங்கள் நரகத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? எத்தனையோ பிள்ளைகள் ராஜாதி ராஜாவின் மகிழ்ச்சியால் நிறைந்த பரிசுத்த பிள்ளைகளாக மாறும்போது, நீங்கள் மட்டும் இன்னும் சாத்தானின் பிள்ளைகளாகவே தங்கிவிடுவீர்களா? நீங்கள் முதியவர்களானாலும், வாலிபர்களானாலும், பிள்ளைகளானாலும், ஆண்களானாலும், பெண்களானாலும் யாராக இருந்தாலும் சரி; கிறிஸ்துவுக்கு வெளியே நரகக் குழியின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் நீங்களனைவரும், தேவனுடைய வார்த்தை மற்றும் அவருடைய ஏற்பாடுகள் சத்தமிட்டுக் கூப்பிடும் குரலைக் கேளுங்கள். அநேகருக்கு இரக்கம் காட்டி கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை அறிவிக்கும் இந்த நாள், மற்றவர்களுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனுடைய நீதியைச் சரிக்கட்டும் நாளாக மாறும். இப்படிப்பட்ட ஒரு நாளில் தங்கள் ஆத்துமாக்களின் நிலைமையைப் புறக்கணிப்பவர்களின் இருதயங்கள் கடினப்படுத்தப்பட்டு, அவர்களுடைய அக்கிரமம் இரட்டிப்பாகும். இரட்சிப்பைப் பெறுவதற்கு எந்தக் காலத்திலும் இத்தனை வழிமுறைகள் கிடைத்ததில்லை. ஒருவேளை இவற்றைப் புறக்கணித்தால், நீங்கள் பிறந்த நாளை என்றென்றைக்கும் சபிப்பீர்கள். சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நாளும் யோவான் ஸ்நானகனின் நாள்களைப்போலவே, "இப்பொழுதே கோடரி மரங்களின் வேரருகே வைக்கப்பட்டிருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" (மத்தேயு 3:10) என்று எச்சரிக்கிறது. எனவே கிறிஸ்து இயேசுவுக்குள் இல்லாத அனைவரும் இப்போதே தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, வரப்போகும் உக்கிரத்திற்குத் தப்பித்துக்கொள்ளுங்கள். சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரம் மனந்திரும்பாத ஒவ்வொரு பாவியின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கிறது; அனைவரும் சோதோமை விட்டு ஓடிப் போங்கள். உங்கள் பிராணனைக் காக்க ஓடிப்போங்கள். பின்னிட்டுப் பார்க்க வேண்டாம். அழிந்துபோகாதபடி அந்த மலைக்கு ஓடிப்போங்கள்!