இரட்சிப்பு

இரட்சிப்பில் தேவனுடைய மற்றும் மனிதனுடைய பங்களிப்பு
ஆசிரியர்: ஜான் ஜி. ரீசிங்கர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 15 நிமிடங்கள்

இரட்சிப்பிலே மனிதனுடைய செயல்பாட்டின் அவசியத்தை ‘ஹைப்பர் கால்வினிசம்’ (Hyper-Calvinism) ஒருபுறம் நிராகரிக்கிறது; மறுபுறமோ, அதில் தெய்வீகச் செயல்பாட்டின் உண்மையான இயல்பை ‘ஆர்மீனியனிசம்’ (Arminianism) நிராகரிக்கிறது. தொடர்ந்து வாசிக்க...

 

ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக, தேவனும் மனிதனும் கண்டிப்பாகச் செய்யவேண்டிய சில காரியங்கள் உள்ளன. இரட்சிப்பிலே மனிதனுடைய செயல்பாட்டின் அவசியத்தை ‘ஹைப்பர் கால்வினிசம்’ (Hyper-Calvinism) ஒருபுறம் நிராகரிக்கிறது; மறுபுறமோ, அதில் தெய்வீகச் செயல்பாட்டின் உண்மையான இயல்பை ‘ஆர்மீனியனிசம்’ (Arminianism) நிராகரிக்கிறது. ஆனால், இரட்சிப்பிற்கான தேவனுடைய திட்டத்தில் தெய்வீகச் செயல் மற்றும் மனிதச் செயல் ஆகிய இரண்டுமே அவசியமானவை என்பதை வேதாகமம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அப்படியென்றால், ஆர்மீனியனிசம் போதிப்பதைப்போல, "எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை இலவசமாக வழங்குவது தேவனுடைய பங்கு என்றும், அதைத் தன் சுய விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வது மனிதனுடைய பங்கு என்றும் நாம் கூறுகிறோம்" என்று அர்த்தமல்ல. நாம் அப்படிச் சொல்லவும் இல்லை; வேதமும் அப்படிப் போதிக்கவில்லை. உண்மையில் தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், பயனற்ற வீண் தர்க்கங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், இதன் அம்சங்களை நாம் ஒவ்வொன்றாக நிறுவப்போகிறோம்.

ஒன்று: இரட்சிக்கப்படுவதற்கு ஒருவன் கட்டாயம் மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டும். பாவத்திலிருந்து மனப்பூர்வமாகத் திரும்பி, கிறிஸ்துவிடம் வராத எவரும் இதுவரை மன்னிக்கப்பட்டதுமில்லை, தேவனுடைய பிள்ளையாக மாற்றப்பட்டதுமில்லை. மனந்திரும்புதலும் விசுவாசமும் இல்லாமல் மனிதர்கள் இரட்சிக்கப்பட முடியும் என்று ஒரு சிறிய குறிப்புகூட வேதாகமத்தில் எங்கும் இல்லை. மாறாக, ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு முன் இவை இரண்டும் அவசியமானவை என்றே வேதம் எப்போதும் வலியுறுத்துகிறது. “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்ற கேள்விக்கான ஒரே வேதாகமப் பதில்: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31) என்பதேயாகும்.

இரண்டு: மனந்திரும்பிச் சுவிசேஷத்தை விசுவாசிக்கிற எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். கிறிஸ்துவிடம் வரும்படிக்கான சுவிசேஷக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு ஆத்துமாவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் பிதாவுமானவரால் எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டு மன்னிக்கப்படும். இந்தச் சத்தியத்தைத்தான் பிலிப் பிளிஸ் (Philip Bliss) தன்னுடைய பாடலில், “எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்” என்று இசையாக்குகிறார். நாம் முற்றிலும் நிச்சயமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் உண்டென்றால், அது ‘தம்மிடம் வரும் எவரையும் நான் ஏற்றுக்கொள்வேன்’ என்ற தமது வாக்குறுதியைக் கிறிஸ்து ஒருபோதும் மாற்றிக்கொள்ளமாட்டார் என்பதே. ஜான் பன்யன் (John Bunyan) கூறியதைப்போல, “வாருங்கள்; அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்” என்பதுதான் அனைத்துப் பாவிகளுக்கும் இரட்சகர் அருளும் நித்திய வார்த்தை.

மூன்று: மனந்திரும்புதலும் விசுவாசமும் மனிதனே செய்ய வேண்டிய தனிப்பட்ட செயல்கள். இவை ஒருவர் சார்பாக மற்றொருவரால் செய்யப்படும் செயல்கள் அல்ல. மனிதர்கள் தங்கள் சொந்த மனம், இருதயம் மற்றும் விருப்பத்துடன் பாவத்தை வெறுத்துவிட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்காகத் தேவன் மனந்திரும்பி விசுவாசிக்கமாட்டார்; நாம்தான் மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டும். பாவத்திலிருந்து திரும்பி, விசுவாசத்துடன் கிறிஸ்துவண்டை வருவது மனிதனுடைய பொறுப்பாகும். அத்தகைய சுவிசேஷ அழைப்புக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும், தன் இருதயத்தில் அதை உண்மையாக விரும்புவதினால்தான் அப்படிச் செய்கிறான். அவன் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான்; மேலும், மனந்திரும்பி விசுவாசிப்பதினால் மட்டுமே அவன் மன்னிக்கப்படவும் முடியும். தேவன் உட்பட, யாரும் நமக்காகப் பாவத்திலிருந்து திரும்ப முடியாது; நாம்தான் அதைச் செய்தாக வேண்டும். நம் சார்பில் நின்று வேறு யாரும் கிறிஸ்துவை நம்ப முடியாது. இரட்சிக்கப்படும்படிக்கு நாம் தனிப்பட்ட ரீதியில், சுய அறிவுடனும் மன விருப்பத்துடனும் அவரை விசுவாசிக்க வேண்டும்.

“ஆர்மீனியனிசம் இதைத்தானே போதிக்கிறது?” என்று ஒருவர் நினைக்கலாம். நண்பரே, வேதம் இதைத்தான் போதிக்கிறது; மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் போதிக்கிறது. “ஆனால் கால்வினிசத்தைப் பேசுபவர்கள் இந்த மூன்று காரியங்களையும் மறுக்கிறார்கள் இல்லையா?” என்று நீங்கள் கேட்கலாம். நான் அவர்களைப் பற்றிப் பேசவோ, அவர்களை ஆதரிக்கவோ முயற்சிக்கவில்லை (ஏனெனில் அவர்களுக்குள் நூறு வித்தியாசங்கள் உண்டு). ஆனால், மேலே சொல்லப்பட்டுள்ள உண்மைகளை யாராவது நிராகரித்தால், அவர் தன்னை யாரென்று அழைத்துக்கொண்டாலும் சரி, வேதத்தின் தெளிவான உபதேசத்தை அவர் மறுதலிக்கிறார் என்றே அர்த்தம். நான் எனக்காக மட்டுமே பேச முடியும்; தேவனுடைய வார்த்தை தெளிவாகப் போதிக்கும் ஒன்றை நான் ஒருபோதும் மறுக்கமாட்டேன்.

“அப்படியென்றால், மனிதன் கண்டிப்பாக மனந்திரும்பி விசுவாசிக்க வேண்டும் என்றும், அது அவனுடைய சொந்தச் செயல் என்றும் நீங்கள் ஒப்புக்கொண்டால், மனிதனுக்குச் ‘சுய சித்தம்’ (Free Will) இருக்கிறது என்ற உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு, ‘தெரிந்துகொள்ளுதலின்’ (Election) உபதேசத்தை விலக்கியிருக்கிறீர்கள் இல்லையா?” என்று கேட்கலாம். இல்லை! நாம் சுயாதீனச் சித்தம் உண்மை என்றும் நிரூபிக்கவில்லை; தெரிந்துகொள்ளுதல் பொய் என்றும் நிரூபிக்கவில்லை. இரட்சிக்கப்படுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது என்பதை மட்டுமே நாம் தெளிவாகக் கூறியுள்ளோம். இப்போது, பாவியாகிய ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும் என்பதையும், என்ன செய்ய முடியாது என்பதையும் நாம் பார்ப்போம்.

நான்கு: மனிதனின் முழுமையான இயலாமை. ஒருவன் மனந்திரும்பி விசுவாசித்தால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும் என்று கூறுகிற அதே வேதம்தான், மனிதன் அவனுடைய பாவ சுபாவத்தின் காரணமாக மனந்திரும்பி விசுவாசிப்பதற்கு முற்றிலும் இயலாதவனாக இருக்கிறான் என்றும் கூறுகிறது. சுவிசேஷத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையான அறிவு, இருதயம், சித்தம் ஆகிய மனிதனின் ஆற்றல்களுக்கு, அந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் திறனும் இல்லை; அதற்கான ஆசையும்கூட இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இதற்கு நேர்மாறான நிலைதான் நிஜமாக இருக்கிறது. மனிதனுடைய முழு இயல்பும் கிறிஸ்துவிடம் வர முடியாமலும், வர விருப்பமில்லாமலும் இருப்பது மட்டுமல்லாமல்; அவனுடைய சுபாவத்தின் ஒவ்வொரு பகுதியும் கிறிஸ்துவையும், அவருடைய சத்தியத்தையும் தீவிரமாக எதிர்க்கிறது.

இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்று விசுவாசிக்காமல் இருப்பது, வெறுமனே ஒரு “செயலற்ற மனநிலை” (passive state) அல்ல. மாறாக, அது ஒரு தீர்மானத்துடன் எடுக்கப்பட்ட தெரிவு ஆகும். கிறிஸ்துவை “இல்லை” என்று மறுத்து, பாவத்தையும் சுயத்தையும் “ஆம்” என்று தேர்ந்தெடுப்பதற்கான திட்டமிட்ட தீர்மானமே அது. தேவனையும் அவருடைய அதிகாரத்தையும் பொறுத்தவரையில், யாருக்கும் “நடுநிலை” என்று ஒன்று கிடையாது. அவிசுவாசமும், விசுவாசத்தைப் போலவே அறிவு, இருதயம் மற்றும் சித்தம் ஆகியவற்றின் திட்டமிட்ட செயல்பாடாகவே இருக்கிறது. இதைத்தான், “என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (அதாவது, வராமலிருக்க நீங்கள் திட்டமிட்டு ஒரு முடிவெடுக்கிறீர்கள்) என்று யோவான் 5:40-ல் இயேசு கூறுகிறார். ஆம், அவிசுவாசம் என்பது மனிதச் சித்தத்தின் ஒரு செயலாகும். உண்மையில், அவிசுவாசமும் ஒரு செயல்படுகிற விசுவாசம்தான்; ஆனால் வருந்தத்தக்க விதத்தில், அது ‘என் சுயத்தின்’ மீதே விசுவாசத்தை வைக்கிறது.

நான்காவது குறிப்பை விட்டுவிட்டு, முதல் மூன்று குறிப்புகளை மட்டும் விசுவாசிப்பதும் பிரசங்கிப்பதும் தேவகிருபையின் சுவிசேஷத்தை மிகவும் தவறாகச் சித்தரிப்பதாகும். இது பாவியாகிய மனிதனையும், அவனுடைய உண்மையான தேவையையும் தவறாகக் காட்டுகிறது. இழந்துபோன மனிதனுடைய பாவ இயல்பையும், அதை வெல்ல அவனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதையும் இது புரிந்துகொள்ளத் தவறுகிறது. இந்தக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் எந்தச் “சுவிசேஷமும்” அரைச் சுவிசேஷமாகவே இருக்க முடியும். நவீன காலச் சுவிசேஷ ஊழியங்கள் இந்த இடத்தில்தான் பரிதாபமாகத் தோல்வியடைகின்றன. ஏனென்றால், இது மனிதனுடைய பொறுப்பையும், அவனுடைய இயலாமையையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறது. மேலும், தேவன் கட்டளையிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான ஆற்றல் பாவியான மனிதனுக்கு உண்டு என்று அது பொய்யாகக் கருதுகிறது. வேதாகமத்திலுள்ள “முடியாது” என்று சொல்லும் வசனங்களையும், தேவனுடைய இரட்சிக்கும் கிருபையின் மெய்யான சுவிசேஷத்தையும், இந்தத் திரிக்கப்பட்ட உபதேசம் முற்றிலும் புறக்கணித்து விடுகிறது அல்லது கடுமையாகத் திரித்துப் பேசுகிறது.

இழந்துபோன மனிதன் செய்ய முடியாத விஷயங்களை வேதாகமம் எவ்வளவு உறுதியாகப் போதிக்கிறது என்பதைக் கவனியுங்கள்:

  • மனிதன் மறுபடியும் பிறக்காதவரை, அவனால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமுடியாது (யோவான் 3:3).

  • மனிதனுக்குப் புதிய சுபாவம் கொடுக்கப்படாதவரை, அவனால் ஆவிக்குரியவைகளைப் புரிந்துகொள்ள முடியாது (1 கொரிந்தியர் 2:14).

  • பரிசுத்த ஆவியானவர் மனிதனைத் திட்ப உறுதியாக அழைக்காதவரை, அவனால் என்னிடத்தில் வரமுடியாது (யோவான் 6:44-45).

பாவியாகிய மனிதனுடைய சுபாவத்தில் தேவன் முதலாவது ஒன்றைச் செய்யாதவரை, அவனால் கிறிஸ்துவிடம் நிச்சயமாக வர முடியாது (வர மாட்டான் என்று சொல்லவில்லை, வர இயலாது) என்பதை நமக்குக் காட்ட, மேற்சொல்லிய வசனங்களே போதுமானவை. அந்த “ஒன்றைத்தான்” வேதாகமம் “மறுபிறப்பு” அல்லது “புதுப்பிறப்பு” என்று அழைக்கிறது. அது முழுவதும் பரிசுத்த ஆவியானவருடைய பணியாகும். அதில் மனிதனுடைய பங்கு ஒன்றுமில்லை.

ஐந்து: மறுபிறப்பு - தேவனுடைய செயல். புதிய பிறப்பு அல்லது மறுபிறப்பு என்பது, நாம் செய்ய வேண்டிய, ஆனால் பாவத்தின் அடிமைத்தனத்தால் நம்மால் செய்ய இயலாத ஒன்றை நாம் செய்யும்படி, தேவன் நமக்கு ஆவிக்குரிய ஜீவனை அளிக்கும் செயலாகும். மனிதன் பாவத்தில் மரித்துப்போயிருக்கிறான் என்று வேதம் கூறும்போது, அது அவனுடைய மனதும், இருதயமும், சித்தமும் ஆவிக்குரிய ரீதியில் பாவத்தில் மரித்துப்போயிருக்கின்றன என்பதைக் குறிக்கிறது. நாம் “பாவத்தின் அடிமைத்தனத்திற்குள்ளாக” இருக்கிறோம் என்று வேதம் கூறும்போது, நமது சித்தம் உட்பட, நமது இருத்தலின் முழுமையும் பாவத்தின் வல்லமையின் கீழ் உள்ளது என்பதைக் குறிக்கிறது.

நமது பாவத்தின் விலையைச் செலுத்த கிறிஸ்துவின் மரணம் நமக்கு அவசியம்; அதே அளவுக்குத் தீவிரமாக, நமக்கு புதிய சுபாவத்தை அருளுவதற்குப் பரிசுத்த ஆவியானவரும் அவசியம். பாவத்தின் சட்ட ரீதியான தண்டனையிலிருந்து தேவனுடைய குமாரன் நம்மை விடுவிக்கிறார்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே பாவத்திலுள்ள நமது வீழ்ச்சியின் மரணம் மற்றும் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்க முடியும். இரட்சிப்படைவதற்கு நமக்கு மன்னிப்பு அவசியம். கிறிஸ்து தம்முடைய மரணத்தில் நமக்கு முழுமையான மன்னிப்பையும், நீதியையும் வழங்குகிறார். இருப்பினும், நமக்கு ஆவிக்குரிய ஜீவனும், செயலாற்றலும் அவசியம். பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு மறுபிறப்பின் மூலம் அளிக்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய மறுபிறப்பின் கிரியையே, கிறிஸ்துவின் பரிகார மரணத்தை உண்மையான இரட்சிக்கும் விசுவாசத்துடன் நாம் ஏற்றுக்கொள்ளும்படிக்கு நமக்கு ஆற்றல் அளிக்கிறது.

தேவன் திரித்துவமாக இருக்கிறார். இரட்சிப்பில் தேவத்துவத்தின் ஒவ்வொரு நபரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) எவ்வாறு தனித்துவமானதும், அவசியமானதுமான பங்கை வகிக்கிறார்கள் என்பதை ஒருவன் காணும்வரை, “இவ்வளவு பெரிதான இரட்சிப்பை” அவனால் விளங்கிக்கொள்ள முடியாது. பாவிகளை இரட்சிப்பதில் பிதாவானவருடைய இறையாண்மையுள்ள தெரிந்துகொள்ளுதலின் அன்பும், பரிசுத்த ஆவியானவருடைய மறுபிறப்படையச் செய்யும் வல்லமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் கூறாமல் விலக்கிவிட்டு, “கிருபையின் மகிமையான சுவிசேஷத்தை” யாராலும் அறிவிக்க முடியாது. இரட்சிப்பில் தேவனுடைய பங்களிப்பை, வெறுமனே பாவ மன்னிப்பை வழங்குவதாகவும், மனிதனுடைய பங்களிப்பை அதை ஏற்றுக்கொள்ள முன்வருவதாகவும் மட்டுமே பேசுவது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின் செயலையும், பரிசுத்த ஆவியானவருடைய மறுபிறப்பாக்கும் கிரியையையும் நிராகரிப்பதாகும். இது இரட்சிப்பின் கிரியையில் மனிதனை தேவனுக்குச் சமமான “பங்காளியாக” மாற்றுவதோடு மட்டுமல்லாமல், இரட்சிப்பின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியப் பங்கை மனிதனுக்கே வழங்குகிறது.

சிலுவையில் கிறிஸ்து செய்த கிரியைக்காக அவருக்கு மகிமை செலுத்திவிட்டு, அதேநேரத்தில் நித்தியத்தில் பிதா செய்த கிரியைக்கும் (தெரிந்துகொள்ளுதல்), பரிசுத்த ஆவியானவர் நமது இருதயத்தில் நடப்பிக்கிற கிரியைக்கும் (மறுபிறப்பு) பாவியாகிய மனிதனுக்குப் பாராட்டைச் செலுத்துவது எவ்வளவு பயங்கரமானதும், அபத்தமானதுமான காரியம்! “நீங்கள் ஒப்புதல் அளித்தவுடன் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய உயிர்ப்பிக்கும் அற்புதக் கிரியையை உங்களுக்குள் செய்வார்” என்று கூறுவது, இறையாண்மையுள்ள ஆவியானவரை மிகவும் அவமதிப்பதாகும். இது, ஒரு கல்லறையில் நின்றுகொண்டு, இறந்தவர்களிடம்: “நீங்கள் முதலில் விசுவாசத்தின் ஒரு அடியை எடுத்துவைத்து, என்னிடம் கேட்பீர்களானால், நான் உங்களுக்கு உயிரளித்து, கல்லறையிலிருந்து மீண்டும் எழுப்புவேன்” என்று சொல்வதுபோல் இருக்கிறது. பாவியாகிய மனிதனின் முழுமையான ஆவிக்குரிய இயலாமையை இவ்வாறு மறுப்பது எவ்வளவு வியப்பிற்குரியது!

மனிதனுடைய பங்களிப்பாகிய மனந்திரும்புதலும் விசுவாசமும், தேவனுடைய கிரியையின் கனிகளும் விளைவுகளுமேதானே தவிர, இரட்சிப்பில் மனிதன் தன்னுடைய பங்காக வழங்கும் மூலக் காரணிகள் அல்ல என்பதை ‘சுய சித்தம்’ பேசும் ஆர்மீனியர்கள் காணத் தவறுகிறார்கள். கிறிஸ்துவிடம் திரும்புகிற ஒவ்வொரு மனிதனும் தனது சுய விருப்பத்தோடுதான் திரும்புகிறான்; ஆனால் அந்த விருப்பம், பிதாவின் தெரிந்துகொள்ளுதலின் நேரடி விளைவும், பரிசுத்த ஆவியானவருடைய உறுதியான அழைப்பின் விளைவுமாகும்.

ஆறு: விசுவாசமும் மனந்திரும்புதலும் மறுபிறப்பின் அடையாளங்களே. ஒருவன் இறந்து 20 ஆண்டுகள் கழித்து, ஒருநாள் திடீரென்று தெருவில் உங்களைச் சந்தித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ‘உயிரற்றுக் கிடப்பதில் அவன் சலிப்படைந்து, பெரிய அற்புதம் ஒன்றை நிகழ்த்தி, தன்னை உயிர்ப்பிக்குமாறு ஒரு மருத்துவரிடம் கேட்கலாம் என அவன் தீர்மானித்தான்’ என்று நீங்கள் முடிவுசெய்வீர்களா? நிச்சயம் இல்லை. மாறாக, நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோய், “உனக்கு என்ன நடந்தது? யார் உனக்கு உயிரளித்தது?" என்று வியப்புடன் கேட்பீர்கள். அவன் நடப்பதையும் சுவாசிப்பதையும் பார்த்து, அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனாலும், அவை அவனுடைய சொந்த ஆற்றலாலும் சித்தத்தாலும் நடந்தவை அல்ல; மாறாக, வெளிப்புறத்திலிருந்து அவனுக்குச் செய்யப்பட்ட ஒரு அதிசயத்தின் சான்றுகளே என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோல, ஆவிக்குரிய ரீதியில் மரித்திருந்த ஒருவன் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசம் போன்ற ஆவிக்குரிய கிரியைகளைச் செய்யத் துவங்கும்போது, அந்த ஆவிக்குரிய கனிகள் மறுபிறப்பின் அதிசயம் அவனுக்குள் நிகழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

இதை ஒரு வேதாகம நிகழ்வின் மூலம் நான் விளக்குகிறேன். அப்போஸ்தலர் 16:14 இதற்குத் தெளிவான ஆதாரமாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டில், “இருதயத்தைத் திறந்தருளினார்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் ஒரே இடம் இது மட்டும்தான். அந்தத் திறப்பிற்கான முழுக்காரணத்தையும் வேதாகமம் தேவனுடைய வல்லமைக்கே வழங்குகிறது; மனிதனுடைய சித்தத்திற்கு அல்ல.

“அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” (அப்போஸ்தலர் 16:14).

இதில் நாம் கவனிக்கிற முதல் விஷயம், லீதியாள் உண்மையாகவே பவுலின் வார்த்தைகளைக் கேட்டாள். நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, சுவிசேஷத்திலிருந்து பயன்பெறவும் இரட்சிக்கப்படவும் அவள் இவ்வாறு செய்வது அவசியமாக இருந்தது. இது, "தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சுவிசேஷத்தைக் கேட்காவிட்டாலும் எப்படியாவது இரட்சிக்கப்படுவார்கள்" என்று கூறும் ஹைப்பர் கால்வினிசப் போதனையை மறுக்கிறது. லீதியாள் விசுவாசிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள் என்பது உண்மை. அவள் விருப்பமின்றி அவ்வாறு செய்யவில்லை; தேவனும் அவளுக்குப் பதிலாக விசுவாசிக்கவில்லை. அது அவளுடைய சொந்தச் செயல்.

அடுத்தபடியாக, தேவன் என்ன செய்தார் என்பதை நாம் கவனிக்கிறோம். லீதியாள் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, தேவன் செய்த காரியங்களை இங்கே காண்கிறோம்:

  1. இரட்சிப்பை ஏற்படுத்தினார்: பவுல் பிரசங்கித்த கிறிஸ்துவே தேவனுடைய கிருபையுள்ள ஏற்பாடு.

  2. செய்தியைக் கொண்டுவந்தார்: அந்தச் செய்தியை அறிவிக்கப் பவுலைப் போன்ற ஒரு பிரசங்கியை தேவன் அனுப்பினார்.

  3. இருதயத்தைத் திறந்தார்: இதுவே மிக முக்கியமானது. அவளுடைய சுபாவ இருதயம் தேவனுக்கு விரோதமானது. இத்தகைய ஆவிக்குரிய கல்லறையிலிருந்து அவளை விடுவிக்க தேவனுடைய வல்லமையைத் தவிர வேறு எதுவும் உதவ முடியாது.

லீதியாளின் இருதயம் திறக்கப்பட்டதற்கான முழுப் புகழையும் வேதாகமம் தெளிவாக தேவனுக்கே வழங்குகிறது. “அவள் இருதயத்தைத் திறந்தருளினார்” என்ற வார்த்தைகளை கவனமாகப் பாருங்கள். தேவனே லீதியாளின் இருதயத்தைத் திறந்தார் - அதுதான் காரணம் (Cause). பவுல் பிரசங்கித்த சத்தியத்திற்கு அவள் செவிகொடுத்து, அதை ஏற்றுக்கொண்டாள் - அதுவே விளைவு (Effect).

லீதியாள் சுவிசேஷத்தைப் புரிந்துகொண்டு விசுவாசித்ததற்கான ஒரே காரணம், தேவன் அவளுடைய இருதயத்தை ஒரு நோக்கத்துடன் திறந்து, அவள் விசுவாசிக்கும்படி செய்ததுதான். இந்த வசனத்தில் மனிதனுடைய சுயாதீனச் சித்தத்தையே விசுவாசிப்பதைத் தீர்மானிக்கும் ஒரே காரணியாக நீங்கள் சேர்க்க முயன்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்தே கெடுக்கப் பார்க்கிறீர்கள். தேவனுடைய கிருபை நமக்கு இரட்சிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதை ஏற்றுக்கொள்ளத் தேவையான திறனையும் நமக்கு அளிக்கிறது. அவரே நமக்குள்ளாக “விருப்பத்தையும் செய்கையையும்” உண்டாக்குகிறார்.

பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் அவசியம் இறையியல் ரீதியாக மறுக்கப்படுவது, விரைவில் நடைமுறை வாழ்க்கையிலும் புறக்கணிக்கப்படும். இதுவே இன்றைய நவீன காலச் சுவிசேஷப் பிரச்சாரத்தின் அவல நிலை. மறுபிறப்பு மனிதனுடைய சித்தத்தின் வல்லமையிலும் திறனிலும் உள்ளது என்று சுவிசேஷத்தை அறிவிப்பவர்கள் நம்புவதால், மனிதச் சிந்தனையில் உருவான சுயத்தை மையப்படுத்திய போதனைகள், வேதாகம இறையியலை விட முக்கியமானவையாக மாறிவிட்டன. அதன் காரணமாக, அமைப்புகளும், திட்டமிடல்களும், விளம்பரங்களும் வெற்றிக்கான காரணிகளாக உயர்த்தப்படுகின்றன; ஆனால் உண்மையில் அவசியமான பரிசுத்த ஆவியானவரின் கிரியை மறக்கப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்காக ஜெபிக்க வேண்டியதின் அவசியத்தை அவர்கள் வாய்மொழியாக ஒப்புக்கொள்வது உண்மைதான். பெரிய கூட்டங்களுக்கு முன்பு, "ஜெபிப்பதாக வாக்குறுதி அளியுங்கள்" என்று கேட்கும் அட்டைகள் அனுப்பப்படுவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? ஜெபிப்போம் என்ற வாக்குறுதிக்கா? அல்லது அதோடு எப்போதும் சேர்க்கப்படும் மற்றொரு வாக்குறுதியான "பணம் கொடுப்போம்" என்பதற்கா? ‘உங்கள் கொடைகளால்தான் இந்த மகத்தான ஊழியம் சாத்தியமாகும்’ என்று கூறும்போது, சுவிசேஷத்தின் வெற்றிக்கு எது மிக முக்கியம் என்பதில் அவர்களுக்குக் குழப்பம் உள்ளது என்றே தோன்றுகிறது. ஆனால், அது இன்னொரு நாள் பேசுவதற்கான விஷயம்.

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.