இரட்சிப்பு

கட்டளையிடப்பட்ட சுவிசேஷ அறிவிப்பு
ஆசிரியர்: ஆர்தர் பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 15 நிமிடங்கள்

‘தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்’ என்ற உபதேசத்தை சிலர் பின்வருமாறு தவறாகச் சித்தரிக்கிறார்கள்: “இன்றிரவு, நான் என் குடும்பத்துடன் தேநீர் அருந்துவதற்காக என் மேஜையில் அமர்ந்திருக்கிறேன். அது ஒரு குளிரான குளிர்கால இரவு. வெளியே வீதியில் பசியால் வாடும் சில வீடற்ற நாடோடிகளும் குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் என் கதவைத் தட்டி, ‘ஐயா, நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம், குளிரில் நடுங்குகிறோம், நாங்கள் பட்டினியாய் இருக்கிறோம்; உண்பதற்கு ஏதேனும் தருவீர்களா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு நான், ‘உண்பதற்கு ஏதேனும் வேண்டுமா? இல்லை, நீங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, இங்கிருந்து போய்விடுங்கள்’ என்று சொல்வேனா?”

இதேபோலத்தான், தேவன் சுவிசேஷம் என்கிற ஒரு விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறார் என்றும், ஆனால் சில ஏழைப் பாவிகள் தங்கள் ஆழமான தேவையை உணர்ந்து ஆண்டவரிடத்தில் வந்து, "என்மேல் இரக்கமாயிரும்" என்று கெஞ்சும்போது, ஆண்டவர், "இல்லை, நீ நான் தெரிந்துகொண்டவர்களில் ஒருவன் இல்லை" என்று சொல்லுவார் என்றும் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் என் நண்பர்களே, வேதம் போதிப்பது அதுவல்ல; அப்படிப்பட்ட எந்தக் கருத்தும் அதில் இல்லை. அது தேவனுடைய சத்தியத்தை முற்றிலும் தவறாகச் சித்தரிப்பதாகும். என் நண்பர்களே, நான் அத்தகைய எதையும் நம்பவில்லை; ஒவ்வொரு இரவும் நீங்கள் இங்கே வந்து அப்படிப்பட்ட ஒன்றைக் கேட்கும்படிச் சொல்லி நான் உங்களை அவமானப்படுத்தவும் மாட்டேன்.

  1. உள்ளே வரும்படி அவர்களை வற்புறுத்து

உண்மையான காரியம் இதுதான். தேவன் விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறார், ஆனால் உண்மை என்னவென்றால், யாருக்கும் பசியில்லை; யாரும் அந்த விருந்துக்கு வர விரும்பவில்லை. விருந்தைப் புறக்கணிக்க ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சாக்குப்போக்கைக் கூறுகிறார்கள். அவர்கள் அழைக்கப்படும்போது, "இல்லை, எங்களுக்கு வர விருப்பமில்லை" என்றோ அல்லது "நாங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை" என்றோ சொல்கிறார்கள். ஆனால் தேவனுக்கு இது முதலிலிருந்தே தெரியும். ஆகையால், தேவன் விருந்தை ஆயத்தம் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் இருந்திருந்தால், அவருடைய பந்தியில் உள்ள ஒவ்வொரு நாற்காலியும் நித்திய காலத்திற்குக் காலியாகவே இருந்திருக்கும்!

இன்றிரவு இந்த சபையில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும், கிறிஸ்துவிடம் முதன்முதலாக வருவதற்கு முன்பு, மீண்டும் மீண்டும் சாக்குப்போக்குகளையே சொல்லியிருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீங்களும் மற்றவர்களைப் போலத்தான் இருந்தீர்கள். நீங்களும் சாக்குப்போக்கு சொன்னீர்கள், நானும் அப்படியே செய்தேன். தேவன் விருந்தை ஆயத்தம் செய்து மட்டும் இருந்திருந்தால், ஒவ்வொரு நாற்காலியும் காலியாகவே இருந்திருக்கும். ஆகவே, லூக்கா 14-ம் அதிகாரத்திலுள்ள அந்த உவமையில் நீங்கள் வாசிப்பது என்ன?

விருந்துக்கு விருந்தினர்கள் கூடாதபடியால், தேவன் தம்முடைய "ஊழியக்காரர்களை" அனுப்பினார் என்று அங்கே சொல்லப்படவில்லை. உங்கள் கண்ணாடியை அணிந்து நன்றாகப் கவனியுங்கள். அங்கே "ஊழியக்காரர்களை" என்று பன்மையில் சொல்லப்படவில்லை. தேவன் தம்முடைய "ஊழியக்காரனை" அனுப்பி, தம்முடைய விருந்துக்கு விருந்தினர்களைச் சேர்க்கும்படி அவர்கள் உள்ளே வரும்படி அவர்களை "வற்புறுத்தவும்" சொன்னார். இன்றிரவு இந்தச் சபையிலோ அல்லது வேறெந்தச் சபையிலோ உள்ள எந்தவொரு ஆணும் பெண்ணும், தேவனால் வற்புறுத்தப்பட்டு உள்ளே கொண்டுவரப்பட்டாலொழிய, ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாண விருந்தில் அமரப்போவதில்லை.

"வற்புறுத்துதல் என்றால் என்ன?" என்று நீங்கள் கேட்கலாம். தேவன், தமக்கு எதிராக நின்ற உங்கள் சித்தத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது; தேவன் உங்கள் இருதயத்தின் தயக்கத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது; தேவனை நேசிப்பதை விட இன்பங்களை அதிகமாக நேசிப்பதையும், கிறிஸ்துவை நேசிப்பதை விட இந்த உலகத்தின் காரியங்களை அதிகமாக நேசிப்பதையும் தேவன் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தேவன் தம்முடைய வல்லமையைப் புறப்படப்பண்ணி உங்களை இழுத்துக்கொள்ள வேண்டியிருந்தது என்றே நான் சொல்லுகிறேன். உங்களில் யாருக்காவது கிரேக்கம் தெரிந்திருந்தாலோ அல்லது ஸ்ட்ராங்ஸ் அகராதி வைத்திருந்தாலோ, யோவான் 6:44-ல் உள்ள "இழுத்துக்கொள்ளுதல்" (Draw) என்ற வார்த்தைக்கான கிரேக்கச் சொல்லைப் பாருங்கள். "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் எவனும் என்னிடத்தில் வரமாட்டான்". இதற்கு "பலத்தைப் பிரயோகிப்பது" என்று அர்த்தம். அதாவது பலவந்தமாக இழுப்பது. இந்த அர்த்தத்தைச் சவால் செய்து, ஆதாரத்துடன் அதை மறுக்கக்கூடிய கிரேக்க அறிஞர் இந்தப் பூமியில் எவரும் இல்லை. மீன்கள் நிறைந்த வலையைக் கரைக்கு இழுத்ததைக் குறிக்க யோவான் 21-ல் பயன்படுத்தப்பட்ட அதே கிரேக்கச் சொல்தான் இதுவும். வலை மீன்களால் நிறைந்திருந்ததால், அவர்கள் தங்கள் முழு பலத்துடன் அதை இழுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அதை பலவந்தமாக ‘இழுக்க’ வேண்டியிருந்தது.

ஆம், என் நண்பனே, அவ்விதமாகத்தான் நீ கிறிஸ்துவிடம் கொண்டுவரப்பட்டாய். நீ அதை உணராமல் இருந்திருக்கலாம்; உனக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், நம் ஒவ்வொருவரும் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து, கிறிஸ்துவுக்கு விரோதமாகப் போராடி, அவருடைய பரிசுத்த ஆவியானவரை எதிர்த்தோம். ஆகையால், தேவன் சர்வவல்லமையைப் பயன்படுத்தி அந்த எதிர்ப்பை முறியடித்து, நம்மை முழங்கால்படியிட வைக்க வேண்டியிருந்தது. உங்களில் யாராவது இந்த வார்த்தையின் கடுமையை எதிர்த்தால், மனிதனுடைய முழுமையான விழ்ச்சி என்ற உபதேசத்தை குறித்து வேதம் சொல்லும் போதனையை நீங்கள் நம்பவில்லை என்றே நான் சொல்லுவேன்.

மனிதன் கெட்டுப்போனவன், சுபாவத்திலேயே தன் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்திருக்கிறான். கவனியுங்கள், மனிதன் வியாதியஸ்தனாக இருப்பதால் அவனுக்குக் கொஞ்சம் மருந்து தேவை என்றோ; அல்லது அவன் அறியாமையில் இருப்பதால் அவனுக்குக் கொஞ்சம் போதனை தேவை என்றோ; அல்லது அவன் பலவீனமாக இருப்பதால் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தேவை என்றோ அர்த்தமல்ல: மனிதன் மரித்தவன், தன் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவன். பரலோகத்தின் சர்வவல்லமை மட்டுமே அவனை உயிர்ப்பித்து, மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கொண்டுவர முடியும். இதுவே நான் விசுவாசிக்கிற சுவிசேஷம். சுவிசேஷத்திற்குப் பதிலளிக்கும் ஆற்றல் பாவிக்கு அவனுக்குள்ளாகவே இருக்கிறது என்ற காரணத்தினால் நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவில்லை.

"மனிதர்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்களானால், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் என்ன பயன்?" என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பிரசங்கிப்பதனால் என்ன லாபம்? நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கவனியுங்கள்! சூம்பின கையையுடைய, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். கிறிஸ்து அவனிடம், "உன் கையை நீட்டு" என்று சொல்கிறார். அது அவனால் செய்யவே முடியாத ஒரு காரியம்! அவனுக்குச் சாத்தியமில்லாத ஒன்றைச் செய்யும்படியே கிறிஸ்து அவனிடம் கூறினார். அப்படியானால், கிறிஸ்து அவன் கையை நீட்டும்படி ஏன் சொன்னார் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், அவனுக்குக் கட்டளையிட்ட அந்த வார்த்தையுடனேகூட தேவனுடைய வல்லமையும் புறப்பட்டுச் சென்றது! அவன் அப்படிச் செய்வதற்குத் தெய்வீக வல்லமை அவனுக்கு ஆற்றலைக் கொடுத்தது. அந்த மனிதன் தானாகவே அந்தச் செயலைச் செய்திருக்க முடியாது. அவன் தானாகச் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் பைத்தியக்கார விடுதிக்குச் செல்லத் தயாரானவர்களே! இங்கே உள்ள எந்தவொரு ஆணும் பெண்ணும், அந்த மனிதன் தன் சொந்தச் சித்தத்தின் முயற்சியினால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் கையை நீட்டினான் என்று நினைத்தால், அவர்கள் பைத்தியக்கார விடுதிக்குத்தான் செல்ல வேண்டும்!

சரி, நான் உங்களுக்கு அதைவிட வலுவான இன்னொன்றைச் சொல்கிறேன். இன்று உங்களுக்குப் பலமான உணவு தேவை; சத்து நீக்கப்பட்ட மெல்லிய பாலை விடப் பலமான ஒன்று தேவை. நீங்கள் கர்த்தருக்குள் கட்டப்படவும், வளரவும், அவருடைய வல்லமையின் பராக்கிரமத்தில் பலவான்களாக மாறவும் விரும்பினால் உங்களுக்குப் பலமான உணவு தேவை. இதோ மரித்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு மனிதன்; அவன் சரீரம் ஏற்கனவே துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. அங்கே அவன் கல்லறையில் இருந்தான். யாரோ அந்தக் கல்லறையினிடத்தில் வந்து, "லாசருவே, வெளியே வா" என்று அழைத்தார். அந்த நபர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனைக் காட்டிலும் சிறிய ஒருவராக இருந்திருந்தால், அவர் இன்றுவரை அங்கேயே நின்று, "வெளியே வா" என்று அழைத்துக்கொண்டே இருந்திருக்கலாம். மரித்த ஒருவனை வெளியே வரும்படி அழைப்பதில் பூமியில் என்ன பயன் இருக்கிறது? அந்த வார்த்தையைப் பேசினவருக்கு அதை நிறைவேற்றும் வல்லமை இருந்தாலொழிய, அதில் எந்தப் பயனும் இல்லை!

என் நண்பர்களே, நான் பாவிகளுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன்; அது அந்தச் சுவிசேஷத்திற்குப் பதிலளிக்கும் சக்தி பாவிக்கு அவனுக்குள்ளாகவே உண்டு என்ற நம்பிக்கையில் அல்ல. எந்தப் பாவியாக இருந்தாலும், அவனுக்குள் அதற்கான எந்தத் திறனும் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஆனால், "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறார். தேவனுடைய கிருபையினால் நான் இந்த வசனத்தைப் பிரசங்கிக்கப் புறப்படுகிறேன்; ஏனென்றால் இது வல்லமையுள்ள வசனம், ஆவியானவர் அருளும் வசனம், ஜீவனைத் தரும் வசனம். வல்லமை பாவியிடத்தில் இல்லை; பரிசுத்த ஆவியானவர் அதை உபயோகிக்கச் சித்தங்கொள்ளும்போது, அந்த வல்லமை வசனத்தில் இருக்கிறது. என் நண்பர்களே, நான் முழு மரியாதையுடன் இதைச் சொல்கிறேன்; இந்த வேதத்தில் உள்ளபடி மரங்களுக்குப் போய்ப் பிரசங்கிக்க தேவன் எனக்குக் கட்டளையிட்டிருந்தால், நான் போயிருப்பேன்! ஆம் தேவன் ஒருமுறை தம்முடைய ஊழியக்காரர்களில் ஒருவரிடம், போய் எலும்புகளுக்குப் பிரசங்கிக்கும்படிச் சொன்னபோது, அவர் போய் அப்படியே செய்தார். நீங்களாக இருந்தால் போயிருப்பீர்களோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன்! ஆம், அதற்கு எதிர்காலத் தீர்க்கதரிசன விளக்கத்தோடு கூட, உள்ளூர் பொருத்தம் இருக்கிறது.

  1. சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

"இரட்சிக்கப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினரை மட்டுமே தேவன் தெரிந்துகொண்டார் என்றால், நாம் ஏன் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும்?" இந்தக் கேள்வி இப்போது மீண்டும் எழுகிறது. அப்படிச் செய்யும்படி தேவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்பதே அதற்குக் காரணம். "சரி, ஆனால் இது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லையே" என்று நீங்கள் சொல்லலாம். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; தேவனுக்குக் கீழ்ப்படிவதே உங்கள் வேலையே தவிர, அவருடன் தர்க்கம் செய்வது அல்ல. சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி தேவன் நமக்குக் கட்டளையிடுகிறார்; அது சொல்வது அதையேதான் அதாவது சர்வ சிருஷ்டிக்கும் இது ஒரு பயங்கரமான காரியம். இன்றிரவு இந்த அறையில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், அந்தச் சுவிசேஷத்தைச் சர்வ சிருஷ்டிக்கும் கொண்டுசெல்லத் தங்களால் இயன்ற அனைத்தையும் ஏன் செய்யவில்லை என்பதற்கு இன்னும் கிறிஸ்துவுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது!

ஆம், நான் மிஷனரி ஊழியங்களை நம்புகிறேன் அநேகமாக உங்களில் பெரும்பாலானோரை விட வலுவாகவே நம்புகிறேன். நான் மிஷனரி ஊழியங்களைப் பற்றி உங்களுக்குப் பிரசங்கித்தால், இதுவரை நீங்கள் குத்துண்டதை விட அதிக கடினமாக நான் உங்களைக் குத்துவேன். மிஷனரி ஊழியங்களை நம்புவதாகக் கூறிக்கொள்ளும் தேவனுடைய மக்களில் பெரும்பான்மையானவர்கள், அதோடு விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று நமது சுவிசேஷ சபைகள் மிஷனரி ஊழியங்களை வைத்து சும்மா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் துணிந்து சொல்வேன். என் நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள் பயணம் செய்வது இவ்வளவு எளிதாகவும் மலிவாகவும் இருக்கிற இந்த 20-ம் நூற்றாண்டில், வேதாகமம் வானத்தின் கீழுள்ள ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில், இன்றிரவு நாம் இங்கே அமர்ந்திருக்கையில், மனித குலத்தில் ஏறக்குறைய பாதிப்பேர் கிறிஸ்துவைப் பற்றி இன்னும் கேள்விப்படாமலேயே இருக்கிறார்கள்! அதற்காக நாம் இன்னும் கிறிஸ்துவுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்! நீங்களும் நானும் கணக்குக் கொடுக்க வேண்டும்.

ஆம், நான் மனிதனின் பொறுப்பை நம்புகிறேன். நான் மனிதனின் "சுயாதீனத்தை" நம்பவில்லை, கிறிஸ்தவனுடைய பொறுப்பை நான் இருமடங்காக நம்புகிறேன்; இன்றிரவு இங்கிருக்கும் நம்மில் ஒவ்வொருவரும் இன்னும் கிறிஸ்துவை முகமுகமாகச் சந்தித்து, அக்கினி ஜுவாலையைப் போன்ற அந்த இரு கண்களை நோக்க வேண்டும். அப்போது அவர் நம்மிடம், "நான் என் சுவிசேஷத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். அது ஒரு 'பொறுப்பாக' உன்னிடம் கொடுக்கப்பட்டது (1தெசலோனிக்கேயர் 2:4-ஐப் பார்க்கவும்). உக்கிராணக்காரரில் ஒருவன் உண்மையுள்ளவனாய்க் காணப்படுவது அவசியம்" என்று சொல்லப்போகிறார்.

ஓ, என் நண்பர்களே, நாம் காரியங்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம். மார்க்கத்தைக் கருத்தாக எடுத்துக்கொள்ள நம்மில் எவரும் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பதாக நாம் அறிக்கை செய்கிறோம்; அவர் இன்னும் திரும்பி வராததற்குக் காரணம், அவருடைய சரீரமாகிய சபை இன்னும் பூரணப்படவில்லை என்பதை நாம் விசுவாசிப்பதாகக் கூறுகிறோம். அவருடைய சரீரம் பூரணமடையும்போது அவர் திரும்பி வருவார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் என் நண்பர்களே, அவர் தெரிந்துகொண்ட மக்களில் கடைசி நபர் அழைக்கப்படும் வரை, அவருடைய "சரீரம்" ஒருபோதும், என்றைக்கும் பூரணமடையாது; அவர் தெரிந்துகொண்டவர்கள், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதன் மூலமாகவே அழைக்கப்படுகிறார்கள். கிறிஸ்து சீக்கிரம் திரும்பி வர வேண்டும் என்று நீங்கள் உண்மையில் வாஞ்சையுள்ளவர்களானால், புறஜாதிகளுக்குச் சுவிசேஷத்தைக் கொண்டு செல்வதிலோ அல்லது அனுப்புவதிலோ உள்ள உங்கள் பொறுப்பைக் குறித்து நீங்கள் இன்னும் விழிப்பாயிருக்க வேண்டும்!

"நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்பதே கிறிஸ்துவின் வார்த்தை, அது நமக்குக் கொடுக்கப்பட்ட & கட்டளையிடப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தை. அவர் "அனுப்புங்கள்" என்று சொல்லவில்லை, "நீங்கள் செல்லுங்கள்" என்றே சொல்கிறார். நீங்கள் சுவிசேஷத்தை அறிவியாதபடியால் அதற்குகாக கிறிஸ்துவிடம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்! "அப்படியானால், இன்றிரவு இங்கே உள்ள நம்மில் ஒவ்வொருவரும் மிஷனரி களத்திற்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?" என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படிச் சொல்லவில்லை. நான் யாருக்கும் நியாயாதிபதி இல்லை.

இன்றிரவு இங்கே உள்ள உங்களில் அநேகருக்கு, நீங்கள் ஏன் செல்லவில்லை என்பதற்கு கிறிஸ்துவைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு தகுந்த காரணம் இருக்கக்கூடும். இங்கே செய்வதற்கு அவர் உங்களுக்குப் பணியைக் கொடுத்திருக்கலாம். அவர் உங்களை இங்கே ஒரு நிலையில் வைத்திருக்கிறார். இங்கே நிறைவேற்றுவதற்கு அவர் உங்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால், செல்வதற்குச் சுதந்திரம் இருந்தும் செல்லாத ஒவ்வொரு கிறிஸ்தவனும், அதைக் குறித்து கிறிஸ்துவுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். "நீங்கள் உலகமெங்கும் செல்லுங்கள்". "அப்படியானால், நான் எங்கே செல்ல வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். ஓ, அது மிகவும் எளிது. "எளிதா?" என்று நீங்கள் கேட்கலாம். ஆம், நான் உண்மையாகவே சொல்கிறேன்: அது மிகவும் எளிது. மிஷனரி ஊழியத்தை நீங்கள் எங்கே தொடங்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதை விட, இந்த உலகத்தில் எளிதானது வேறொன்றுமில்லை. அப்போஸ்தலர் முதல் அதிகாரத்தின் எட்டாம் வசனத்தில் அதற்கான விடை உள்ளது: "பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும் [அதாவது அவர்கள் இருந்த நகரம்], யூதேயா முழுவதிலும் [அதாவது அவர்களின் நகரம் இருந்த மாநிலம்], சமாரியாவிலும் [அதாவது அருகிலுள்ள மாநிலம்], பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்."

நீங்கள் சுவிசேஷ ஊழியத்தைத் தொடங்க விரும்பினால், நீங்கள் உங்கள் சொந்த ஊரிலேயே தொடங்க வேண்டும்; என் நண்பர்களே, சிட்னியில் உள்ள சீனர்களின் இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையென்றால், சீனாவில் உள்ள சீனர்களின் இரட்சிப்பைக் குறித்தும் உங்களுக்கு உண்மையில் அக்கறை இல்லை என்றுதான் அர்த்தம். அப்படி இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்!

ஓ, இன்றிரவு நான் உள்ளதை உள்ளபடியே பேசுகிறேன் சீனாவில் உள்ள சீனர்களின் ஆத்துமாக்களைக் குறித்து உங்களுக்குக் கவலை இருந்தால், இங்கே சிட்னியில் உள்ள சீனர்களின் ஆத்துமாக்களைக் குறித்தும் நீங்கள் அதே அளவு கவலை கொண்டிருப்பீர்கள்; இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் உள்ளவர்களில் எத்தனை பேர், சிட்னியில் உள்ள சீனர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க உண்மையான முயற்சிகளை எடுத்திருக்கிறீர்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்! நான் ஆச்சரியப்படுகிறேன்! இன்றிரவு இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் சிட்னியில் உள்ள பைபிள் ஹவுஸுக்குச் சென்று, "உங்களிடம் சீன மொழியில் புதிய ஏற்பாடு உள்ளதா, அல்லது சீன மொழியில் யோவான் சுவிசேஷப் பிரதிகள் உள்ளனவா? நூறு பிரதிகள் என்ன விலை? அல்லது ஒரு டஜன் என்ன விலை?" என்று அங்கிருக்கும் மேலாளரிடம் கேட்டிருக்கிறீர்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களில் எத்தனை பேர் ஆயிரம் அல்லது நூறு பிரதிகளை விலைக்கு வாங்கி, சீனர்கள் வசிக்கும் பகுதி வீடுகளுக்குச் சென்று, "என் நண்பனே, இது ஒரு சிறிய பரிசு, இதை நீங்கள் வாசித்தால் உங்கள் ஆத்துமாவுக்கு நன்மை உண்டாகும்" என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஆ, என் நண்பர்களே, நாம் மிஷனரி ஊழியத்தை வைத்து விளையாடுகிறோம், இது வெறும் கேலிக்கூத்து, அவ்வளவுதான்!

"நீங்கள் செல்லுங்கள்" என்பதே முதல் கட்டளை. எங்கே செல்ல வேண்டும்? முதலில் என்னைச் சுற்றி இருப்பவர்களிடம். எதைக் கொண்டு செல்ல வேண்டும்? சுவிசேஷத்தைக் கொண்டு! "நான் ஏன் செல்ல வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்! "அவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே தெரிந்துகொண்டிருந்தால், அப்படிச் செய்வதால் என்ன பயன்?" என்று கேட்டால், "அந்தச் சுவிசேஷமே தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களை அழைப்பதற்குப் பயன்படுத்தும் கருவி!" என்பதே அதற்கான காரணம். யார் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், யார் இல்லை என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, பூமியில் உள்ள யாருக்கும் தெரியாது. அவர்கள் உலகம் முழுவதும் சிதறியிருக்கிறார்கள்; ஆகையால் அந்தச் சிருஷ்டிகளுக்குள்ளே தேவன் குறித்திருப்பவர்களை அது சென்றடையும்படி, நாம் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும்.

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.