| 1 | தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. | 2இரா 2:3 2இரா 4:1 1இரா 20:35 |
| 2 | நாங்கள் யோர்தான்மட்டும்போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான். | யோவா 21:3 அப் 18:3 அப் 20:34 அப் 20:35 1கொரி 9:6 1தெச 2:9 2தெச 3:8 1தீமோ 6:6 |
| 3 | அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி, | 2இரா 5:23 நியா 19:6 யோபு 6:28 |
| 4 | அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள். | உபா 19:5 உபா 29:11 |
| 5 | ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான். | பிரச 10:10 ஏசா 10:34 |
| 6 | தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, | 2இரா 2:21 2இரா 4:41 யாத் 15:25 மாற் 7:33 மாற் 7:34 மாற் 8:23-25 யோவா 9:6 யோவா 9:7 |
| 7 | அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான். | 2இரா 4:7 2இரா 4:36 லூக் 7:15 அப் 9:41 |
| 8 | அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். | 2இரா 6:24 1இரா 20:1 1இரா 20:34 1இரா 22:31 |
| 9 | ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். | 2இரா 3:17-19 1இரா 20:13 1இரா 20:28 |
| 10 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். | 2இரா 5:14 யாத் 9:20 யாத் 9:21 1இரா 20:15 நீதி 27:12 மத் 24:15-17 |
| 11 | இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். | 1சாமு 28:21 யோபு 18:7-11 சங் 48:4 சங் 48:5 ஏசா 57:20 ஏசா 57:21 மத் 2:3-12 |
| 12 | அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். | 2இரா 5:3 2இரா 5:8 2இரா 5:13-15 ஆமோ 3:7 |
| 13 | அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. | 1சாமு 23:22 1சாமு 23:23 சங் 10:8-10 சங் 37:12-14 சங் 37:32-14 சங் 37:33-14 எரே 36:26 மத் 2:4-8 யோவா 11:47-53 அப் 23:12-27 |
| 14 | அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். | 2இரா 1:9-13 1சாமு 23:26 1சாமு 24:2 மத் 26:47 மத் 26:55 யோவா 18:3-6 |
| 15 | தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். | 2இரா 3:11 2இரா 5:20 2இரா 5:27 யாத் 24:13 1இரா 19:21 மத் 20:26-28 அப் 13:5 |
| 16 | அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். | யாத் 14:13 சங் 3:6 சங் 11:1 சங் 27:3 சங் 118:11 சங் 118:12 ஏசா 8:12 ஏசா 8:13 ஏசா 41:10-14 மாற் 16:6 அப் 18:9 அப் 18:10 பிலிப் 1:28 |
| 17 | அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். | சங் 91:15 யாக் 5:16-18 |
| 18 | அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார். | உபா 28:28 யோபு 5:14 சகரி 12:4 யோவா 9:39 யோவா 12:40 அப் 13:11 ரோம 11:7 |
| 19 | அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். | மத் 16:24 மாற் 8:34 லூக் 9:23 |
| 20 | அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். | 2இரா 6:17 லூக் 24:31 |
| 21 | இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். | 2இரா 2:12 2இரா 5:13 2இரா 8:9 2இரா 13:14 |
| 22 | அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான். | உபா 20:11-16 2நாளா 28:8-13 |
| 23 | அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை. | 1சாமு 24:17 1சாமு 24:18 2நாளா 28:15 நீதி 25:21 நீதி 25:22 மத் 5:47 லூக் 6:35 லூக் 10:29-37 |
| 24 | இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். | 2இரா 17:5 2இரா 18:9 2இரா 25:1 உபா 28:52 1இரா 20:1 1இரா 22:31 பிரச 9:14 |
| 25 | அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள். | 2இரா 6:28 2இரா 6:29 2இரா 7:4 2இரா 25:3 1இரா 18:2 எரே 14:13-15 எரே 14:18-15 எரே 32:24 எரே 52:6 |
| 26 | இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள். | 2சாமு 14:4 ஏசா 10:3 லூக் 18:3 அப் 21:28 |
| 27 | அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, | சங் 60:11 சங் 62:8 சங் 118:8 சங் 118:9 சங் 124:1-3 சங் 127:1 சங் 146:3 ஏசா 2:2 எரே 17:5 |
| 28 | ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள். | ஆதி 21:17 நியா 18:23 1சாமு 1:8 2சாமு 14:5 சங் 114:5 ஏசா 22:1 |
| 29 | அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்து விட்டாள் என்றாள். | 1இரா 3:26 ஏசா 49:15 ஏசா 66:13 |
| 30 | அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள். | 2இரா 5:7 2இரா 19:1 1இரா 21:27 ஏசா 58:5-7 |
| 31 | அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான். | ரூத் 1:17 1சாமு 3:17 1சாமு 14:44 1சாமு 25:22 2சாமு 3:9 2சாமு 3:35 2சாமு 19:13 1இரா 2:23 |
| 32 | எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான். | எசே 8:1 எசே 14:1 எசே 20:1 எசே 33:31 |
| 33 | அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான். | ஆதி 4:13 யாத் 16:6-8 1சாமு 28:6-8 1சாமு 31:4 யோபு 1:11 யோபு 1:21 யோபு 2:5 யோபு 2:9 நீதி 19:3 ஏசா 8:21 எரே 2:25 எசே 33:10 மத் 27:4 மத் 27:5 2கொரி 2:7 2கொரி 2:11 வெளிப் 16:9-11 |