லேவியராகமம்

லேவியராகமம்: மோசேயின் மூன்றாம் ஆகமம்

நியாயப்பிரமாணத்தின் மூன்றாம் புத்தகமான இது, "மோசேயைக் கூப்பிட்டு" என்னும் இதன் முதல் எபிரேய வார்த்தையிலிருந்து தனது மூலத் தலைப்பைப் பெறுகிறது. அநேக பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் இவ்வண்ணமே அவற்றின் எபிரேயத் தலைப்பினைப் பெறுகின்றன (உதாரணமாக: ஆதியாகமம் - "ஆதியிலே"; யாத்திராகமம் – "பெயர்களாவன" என்பதிலிருந்து பெறப்பட்டது).

கிரேக்க பழைய ஏற்பாட்டின் (LXX) லத்தீன் வல்கேட் (Vulgate) மொழிபெயர்ப்பான 'லூட்டிகோன்' (Leviticon) என்பதிலிருந்து 'லேவியராகமம்' (Leviticus) என்னும் தலைப்பு வந்தது. இதன் அர்த்தம் "லேவியர்களைப் பற்றியச் செய்திகள்" என்பதாகும் (25:32, 33). இப்புத்தகம் லேவியர்களின் பொறுப்புகளில் காணப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. முக்கியமாக, ஆராதனையின்போது ஜனங்களுக்கு எவ்விதத்தில் உதவி செய்ய வேண்டும், ஜனங்கள் பரிசுத்தமாக எப்படி வாழ வேண்டும், அவர்களுக்கு எதைக் கற்றுத் தர வேண்டும் ஆகிய கட்டளைகளை ஆசாரியர்களுக்கு இது வழங்குகிறது. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் லேவியராகமப் புத்தகத்தை 15 முறை மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் காலம் "இஸ்ரவேல் புத்திரருக்காகச் சீனாய் மலையில் கர்த்தர் மோசேக்கு விதித்த கற்பனைகள் இவைகளே" (27:34) (cf 7:38; 25:1; 26:46) என்ற லேவியராகமத்தின் கடைசி வசனத்தின் அடிப்படையில், இப்புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம் குறித்த ஐயங்கள் தீர்க்கப்படுகின்றன. இந்த நியாயப்பிரமாணங்களை "கர்த்தர் மோசேக்குச் சொன்னார்" (1:1) என்பது லேவியராகமத்தில் 56 முறை காணப்படுகிறது. இது விரிவான பிரமாணத் தொகுப்பைத் தருவது மட்டுமல்லாமல், நியாயப்பிரமாணத்தின் வரலாற்றைக் காலவரிசைப்படியும் தந்துள்ளது (அதிகாரம் 8-10; 24:10-23 பார்க்கவும்). யாத்திராகமத்தின் வெளியேற்றம் கி.மு. 1445-ல் நிகழ்ந்தது. ஆசரிப்புக் கூடாரம் அச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் கழித்து அமைக்கப்பட்டது (யாத். 40:17). லேவியராகமம் எகிப்திலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்தில் (ஆபிப்/நிசான்) அருளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இதற்கு அடுத்து வரும் எண்ணாகமப் புத்தகம் இரண்டாம் மாதத்திலிருந்து தொடங்குகிறது (சீப் மாதம்; எண்ணாகமம் 1:1 இதை உறுதிப்படுத்துகிறது).

பின்னணி மற்றும் அமைப்பு சீனாய் மலையில் இஸ்ரவேலர் கூடாரமிட்டுத் தங்கியிருந்த ஆண்டிற்கு முன்பு:

  1. தேவனுடைய மகிமை இஸ்ரவேலர்களின் மத்தியில் இதற்கு முன் முறைப்படி தங்கியிருந்ததில்லை.

  2. ஆசரிப்புக் கூடாரம் போன்ற ஆராதனை மையம் முன்பு இருந்ததில்லை.

  3. முறையான பலி செலுத்தும் முறைகள் மற்றும் பண்டிகை கால ஆசரிப்புகள் இதற்கு முன் கொடுக்கப்படவில்லை.

  4. பிரதான ஆசாரியர், முறையான ஆசாரியத்துவம் மற்றும் ஆசரிப்புக் கூடாரப் பணியாளர்கள் இதற்கு முன் நியமிக்கப்பட்டதில்லை.

எகிப்திலிருந்து வெளியேறிய பின்பு, மேற்கூறிய முதல் இரண்டு அம்சங்களும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டபடியால், அடுத்த இரண்டு அம்சங்களின் அவசியம் ஏற்பட்டது. இவ்விடத்தில்தான் லேவியராகமத்தின் தேவை உருவாகிறது. யாத்திராகமம் 19:6-ல், தேவன் இஸ்ரவேல் புத்திரரிடம், "நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்" என்றார். எனவே, லேவியராகமம் அவரால் புதிதாக மீட்கப்பட்ட ஜனத்திற்கு, அவரை எப்படி ஆராதிக்க வேண்டும் மற்றும் அவருக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்றுத் தரும் தேவக் கட்டளைகளின் புத்தகமாக அமைந்தது.

அன்றைய தினம் வரை, இஸ்ரவேலர் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்ற குறிப்புகளின் மூலமாகவே தேவனுக்கு முன்பாக எப்படி வாழ்வது, அவரை எப்படி ஆராதிப்பது என்பதை அறிந்திருந்தனர். எகிப்தில் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்ததினாலும், அதேசம் எண்ணற்ற தேவர்களால் நிறைந்திருந்ததினாலும், அவர்களின் ஆராதனை முறை மற்றும் தேவபக்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. பல தெய்வ வழிபாடு மற்றும் அந்நியத் தேவர்களின் சடங்காச்சாரங்களில் ஈடுபடுவது அவர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது அதிகமாகக் காணப்பட்டது (பொன் கன்றுக்குட்டியை வணங்குதல் இதற்குச் சான்றாகும் - யாத். 32). இஸ்ரவேலர் தங்கள் அண்டை தேசத்தாராகிய எகிப்தியரைப் போல் தம்மை ஆராதிக்கத் தேவன் அனுமதிக்கவில்லை. மேலும், ஒழுக்கநெறி மற்றும் பாவத்தைக் குறித்த எகிப்தியர்களின் நிலைப்பாட்டை அவர் சகித்துக் கொள்ளவும் இல்லை. லேவியராகமப் புத்தகத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, கர்த்தருக்கு ஏற்ற முறையின்படி இஸ்ரவேல் தேசத்தாரை ஆராதனையில் ஆசாரியர்களால் வழிநடத்த முடிந்தது.

நியாயப்பிரமாணங்களைக் குறித்தே இப்புத்தகம் அதிகமாகப் பேசினாலும், இது ஒரு வரலாற்றுப் புத்தக வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. மோசேயின் மேற்பார்வையில் ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்ட உடனே, தேவன் தம் மகிமையோடு அதில் வந்து வாசம் செய்யும்படி இறங்கினார் என்று கூறி யாத்திராகமப் புத்தகம் நிறைவடைகிறது (40:34-38). "கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு" என்று ஆரம்பித்து, "இஸ்ரவேல் புத்திரருக்காகச் சீனாய் மலையில் கர்த்தர் மோசேக்கு விதித்த கற்பனைகள் இவைகளே" என லேவியராகமம் முடிவடைகிறது. இஸ்ரவேலின் ராஜா தமது அரண்மனையில் (ஆசரிப்புக் கூடாரம்) தங்கி, தமது பிரமாணங்களை நிலைப்படுத்தி, ஓர் உடன்படிக்கையின் கர்த்தராகத் தம்மைத் தாமே தமது ஜனத்திற்கு வெளிப்படுத்துகிறார்.

பூகோள ரீதியான எந்தவொரு நகர்வும் இந்தப் புத்தகத்தில் இல்லை. இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் தமது கட்டளைகளைத் தரும்படி இறங்கிவந்த சீனாய் மலை அடிவாரத்திலேயே தங்கியிருக்கின்றனர் (25:1; 26:46; 27:34). அவர்கள் அங்கே ஒரு மாத காலம் தங்கியிருந்தனர்; அதற்குப் பின், எண்ணாகமப் புத்தகம் தனது பதிவைத் தொடங்குகிறது (எண்ணாகமம் 1:1).

வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள் தேவனுடைய பரிசுத்தமும், இஸ்ரவேலின் பரிசுத்தத்தைக் குறித்த தேவனுடைய சித்தமும் ஆகிய இரண்டு அடிப்படைக் கருத்துகளின் மேலேயே லேவியராகமப் புத்தகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய பரிசுத்தம், மனுக்குலத்தின் பாவ சுபாவம், பலி செலுத்துதல் மற்றும் பரிசுத்த ஸ்தலத்திலே தேவனுடைய பிரசன்னம் ஆகியவையே இப்புத்தகத்தில் அதிகமாகக் காணப்படும் கருப்பொருட்கள் ஆகும். இப்புத்தகம் தெளிவாகவும் அதிகாரத்துடனும், தனிநபர் பரிசுத்தத்திற்கான கட்டளைகளைத் தேவனுடைய ஏவுதலின்படித் தருகிறது (11:44, 45; 19:2; 20:7, 26; இதை 1 பேதுரு 1:14-16 உறுதிப்படுத்துகிறது).

சடங்காச்சார சுத்தத்திற்கு, இஸ்ரவேலரின் தனிநபர் பரிசுத்தத்தைக் காட்டிலும் மேலான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. உண்மையில், தேவனுடைய பரிசுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாகவே தனிநபரின் பரிசுத்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது (இதை லேவியராகமம் 17 முதல் 27 வரையிலான அதிகாரங்களில் காணலாம்). மனுக்குலத்தின் பரிசுத்தமற்ற தன்மையைச் சுத்திகரிப்பது எப்படி என்பதற்கான கட்டளைகளை 125-க்கும் மேலான குறிப்புகளில் இப்புத்தகம் தருகிறது. பரிசுத்தத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இரண்டு வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக இது கற்பிக்கிறது. அவை: "நானே கர்த்தர்" மற்றும் "நான் பரிசுத்தர்". இந்த வாக்கியங்கள் 50 முறைக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன (பார்க்க 11:44, 45).

நிபந்தனைக்குட்பட்ட மோசேயின் உடன்படிக்கையின் கருப்பொருள் இப்புத்தகம் முழுவதும், குறிப்பாக 26-ஆம் அதிகாரத்தில் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இது உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் கீழ்ப்படியாமையினால் விளையும் விளைவுகளைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல், இஸ்ரவேலின் எதிர்கால வரலாற்றை முன்னறிவிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையின் விபரம் எவ்வளவு தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் காணலாம். மோசே லேவியராகமத்தை எழுதிய காலத்திற்கு (கி.மு. 1445 ஒட்டி) ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்குப் பின் சம்பவிக்கவிருந்த பாபிலோனியச் சிறையிருப்பு மற்றும் தேசத்திற்குத் திரும்புதல் போன்ற சம்பவங்களை இது குறிக்கிறது. மேசியா தமது ராஜ்யத்தை ஸ்தாபிக்க வருவது வரையிலும், லேவியராகமம் 26 மற்றும் உபாகமம் 28-ல் (சகரியா 14:11 உறுதிப்படுத்துகிறது) சொல்லப்பட்டுள்ள சாபங்களின் முடிவு உண்டாகும் வரை இஸ்ரவேலின் கீழ்ப்படியாமை, கடைக்கால சம்பவங்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்.

மனஸ்தாபத்துடனும் நன்றியறிதலுடனும் ஆராதிப்பவர்கள் இந்தச் சடங்குகளை ஆசரிப்பதன் மூலம், "நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம், அவரில் அன்புகூருகிறோம்" என்பதை வெளிப்படுத்தினர். ஆனால், இருதயம் விசுவாசத்தோடோ அன்புடனோ இல்லாத வேளையில் அவர்கள் சடங்குகளை ஆசரிப்பதில் தேவன் பிரியமாயிருக்கவில்லை (ஆமோஸ் 5:21-27). பலிகள் தகனிக்கப்படுவது, தங்கள் பாவம் கழுவப்பட வேண்டும் என்ற ஆராதிப்பவரின் விருப்பத்தையும், அவர்கள் தேவனுக்கு முன் ஏறெடுக்கும் மெய் ஆராதனையின் சுகந்த வாசனை மேலே எழும்புவதையும் குறிக்கிறது. அவர்கள் ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய பிரமாணங்களுக்கு எவ்வளவு துல்லியமாகக் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கவும், அவருடைய வார்த்தையின் ஒவ்வொரு நுணுக்கத்திற்கும் அவர்கள் மதிப்பளிக்க வழிவகுக்கவுமே, சடங்கு முறைகளில் இத்தனை விரிவான விபரங்கள் துல்லியமாகத் தரப்பட்டுள்ளன.

விளக்கமளிப்பதில் உள்ள சவால்கள் இஸ்ரவேலர் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதற்கான பாடப்புத்தகமாகவும், பழைய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகளை விளக்கும் இறையியல் புத்தகமாகவும் லேவியராகமம் திகழ்கிறது. மோசே இப்புத்தகத்தை எழுதியபோது, அக்கால வரலாற்றுப் பின்னணிகள் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கருதி எழுதியதால், இன்று இதில் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் நியாயப்பிரமாணங்களுக்கான முழுமையான விளக்கத்தைப் புரிந்துகொள்வது நமக்குச் சற்று கடினமாக இருக்கலாம்.

விரிவான விளக்கத்தை நாம் புரிந்துகொண்ட பின்பும், "புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் இதற்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும்?" என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், சடங்காச்சாரப் பிரமாணம் (அப். 10:1-16; கொலோ. 2:16, 17), லேவியர்களின் ஆசாரியத்துவம் (1 பேதுரு 2:9; வெளி. 1:6; 5:10; 20:6), பரிசுத்த ஸ்தலம் (மத்தேயு 27:51) போன்றவற்றை புதிய ஏற்பாடு முடிவுக்குக் கொண்டுவருகிறது; அதே வேளையில், புதிய உடன்படிக்கையை நிறுவுகிறது (மத். 26:28; 2 கொரி. 3:6-8; எபிரேயர் 7-10). பழைய சடங்குகளை அப்படியே கடைப்பிடிக்கவோ, அல்லது அதற்குள் ஏதோ மறைபொருள் இருப்பதாகத் தேடவோ முயற்சிக்காமல், அவற்றில் வெளிப்படும் பரிசுத்த மற்றும் தெய்வீகப் பண்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால்தான், தேவனுடைய அடிப்படை நோக்கம் "பரிசுத்தமே" தவிர, வெறும் சடங்குகளை ஆசரிப்பது அல்ல என்பதை மோசே பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். சடங்குகளில் வேரூன்றியிருக்கும் நியதிகள் காலத்தைக் கடந்தவை – ஏனென்றால் அவை தேவனுடைய சுபாவத்தோடு இணைந்துள்ளன. பெந்தெகோஸ்தே நாளுக்குப் பிந்தைய (அப். 2) திருச்சபையானது புதிய உடன்படிக்கையின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறதேயன்றி, பழைய உடன்படிக்கையின் கீழ் அல்ல என்பதைப் புதிய ஏற்பாடு தெளிவாகக் கூறுகிறது.

ஆசரிப்புக் கூடாரம் மற்றும் அதன் சடங்கு சம்பிரதாயங்களின் முன்னடையாளங்களையும் (Typology), ஒப்புமைகளையும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். இவற்றைப் பயன்படுத்தி கிறிஸ்துவைக் குறித்த பயனுள்ள பாடங்களையும், புதிய ஏற்பாட்டு சத்தியங்களையும் அறிவதே விளக்கவுரையாளருக்கு முன் உள்ள சவாலாகும். சடங்குமுறைப் பிரமாணங்கள் கிறிஸ்துவிற்கும் அவரது மீட்பின் செயலுக்கும் நிழலாட்டமாக (எபி. 10:1) இருந்தவையே தவிர, அளவுக்கு அதிகமான கற்பனையான ஆராய்ச்சியை (Allegory) இதில் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எவற்றை கிறிஸ்துவிற்குப் பொருந்துகின்றன என்று கூறியிருக்கிறார்களோ, அவற்றை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உதாரணமாக: 1 கொரி. 5:7 - "நமது பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே").

லேவியராகமத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மிகப் பயனுள்ள பாடம் என்னவெனில்: பாவம், குற்ற உணர்வு, பதிலீட்டு மரணம் மற்றும் பரிகாரம் போன்றவற்றைக் குறித்த சத்தியத்தைப் புரிந்துகொள்வதாகும். பழைய ஏற்பாட்டின் வேறு எந்தப் புத்தகமும் இவ்வளவு அழகாக, உதாரணத்துடன் இச்சத்தியத்தை விளக்குவதில்லை. பிற்கால பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும், விசேஷமாகப் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும், லேவியராகமம் அமைத்த அஸ்திவாரத்தைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையிலேயே சத்தியத்தைக் கட்டியெழுப்பியுள்ளார்கள். லேவியராகமத்தின் கண்ணோட்டத்திலிருந்து பலிசெலுத்துதலின் சிறப்பைப் புரிந்துகொண்டு, இயேசு கிறிஸ்து ஒரே தரம் மனுக்குலத்திற்காகத் தம்மைப் பதிலீடாக ஒப்புக்கொடுத்து அதை நிறைவேற்றினார் என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுருக்கம் லேவியராகமம் 1-16 அதிகாரங்கள், தேவனுக்கு ஏற்ற ஆராதனையின் மூலமாகத் தனிப்பட்ட விதத்தில் தேவனை எப்படி அணுக முடியும் என்பதை விளக்குகின்றன. லேவியராகமம் 17-27 அதிகாரங்கள், தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய மற்றும் கீழ்ப்படிதலான வாழ்க்கையை எப்படி வாழ முடியும் என்பதை விளக்குகின்றன.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.