உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்தவத் தொலைக்காட்சிகள்!கிறிஸ்தவத் தொலைக்காட்சிகள்!
ஆசிரியர்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு காலத்தில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது, அநேகர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். "இனி நாம் தேவனுடைய வார்த்தைகளை நம் வீட்டிலிருந்தே கேட்கப்போகிறோம்," என்பதே அதற்குக் காரணம். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், இன்று பல கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கள்ளத் தீர்க்கதரிசிகளின் புகழிடமாகவும், வேத வசனத்திற்குச் சற்றும் ஒவ்வாத போதனைகளின் பிறப்பிடமாகவும் மாறியிருக்கின்றன. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவிட்டாலே, அது முற்றிலும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டம் இருப்பதால், இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புபவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பஞ்சமில்லை!

சில மாதங்களுக்கு முன்னர், ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் செய்தி கொடுத்தவர், "இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், ஒரு தேவதூதன் ஒரு தங்கச் சுருளை வைத்துக்கொண்டு வந்து நிற்பதை நான் காண்கிறேன்," என்றார். அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் வீட்டிற்கு மட்டும் தேவதூதன் வருவதற்கு, அந்த நிகழ்ச்சி என்ன பரலோகத்திலிருந்து ஒளிபரப்பாகிறதா?

இப்படிப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசனங்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்" (மத்தேயு 24:11) என்று முன்னறிவித்திருக்கிறார். மேலும், "தேவன் எங்களுக்குப் பரலோகத் தரிசனம் கொடுத்திருக்கிறார், பரலோகத்தில் ஒரு ஆலோசனைக் குழு (Committee) இருக்கிறது, அந்த குழுவில் நாங்களும் உறுப்பினர்கள்," என்பது போன்ற, இயேசு கிறிஸ்துவே முன்னறிவிக்காத பல காரியங்களை இவர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது.

மத்தேயு 20-ஆம் அதிகாரத்தில், செபதேயுவின் குமாரருடைய தாய் இயேசுவிடம் வந்து, "உமது ராஜ்யத்தில், என் இரண்டு குமாரரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார அருள் செய்ய வேண்டும்," என்று கேட்டுக்கொள்வதையும், அதற்கு இயேசு, "நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னதென்று உங்களுக்குத் தெரியவில்லை," என்று அவளுடைய அறியாமையைச் சுட்டிக்காட்டுவதையும் நாம் காண்கிறோம். இவர்களும் தங்கள் அறியாமையினாலோ அல்லது பொய்த் தீர்க்கதரிசனமாகவோ இவைகளைச் சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் சில முன்னணித் தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் இணைந்து, "கர்த்தர் எங்களைப் புதிதாக ஒரு ஆலயம் கட்டச் சொன்னார்; அதற்கான மாதிரிகளைத் தேவனே எங்களுக்குப் பரலோகத்திலிருந்து காண்பித்தார். அதை மாதிரியாக வைத்து இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறோம்," என்றனர். மேலும், அந்த ஆலயப் பிரதிஷ்டையில் கலந்து கொள்ள (சுவாமி தரிசனத்திற்குக் கட்டணம் நிர்ணயிப்பது போல) குறைந்தபட்சக் கட்டணம் 1000 ரூபாய் என நிர்ணயித்து, கிறிஸ்தவ உலகில் முன்னெப்போதும் கண்டிராத அளவு பெரும் வசூல் செய்தார்கள்.

அதுமட்டுமின்றி, பல்வேறு புதிய பெயர்களில் பண வசூல் செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்தி, தனியார் நிதி நிறுவனங்களைப் போல, "இந்தத் திட்டத்தில் பணம் போடுபவர்களைத் தேவன் நூறத்தனையாக ஆசீர்வதிப்பார்," என்று சொல்லி மக்களை வஞ்சிக்கும் திட்டங்களுக்கும் பஞ்சமில்லை. "கெட்ட சிந்தையுள்ளவர்களும், சத்தியமில்லாதவர்களும், தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் மாறுபாடான தர்க்கங்களும் உண்டாகும்," என்று அப்போஸ்தலனாகிய பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் நிருபம் 6-ஆம் அதிகாரம் 5-ஆம் வசனத்தில் எச்சரிப்பதை நாம் வாசிக்கிறோம்.

சென்ற ஆண்டு தமிழகத்திலுள்ள சில (கள்ளத்) தீர்க்கதரிசிகள் இணைந்து, "ஜப்பானிலும், கொரியாவிலும் கடுமையான நிலநடுக்கங்களைத் தேவன் கட்டளையிடப்போகிறார். அந்த நாட்டு மக்களின் கொடிய பாவங்களினால் தேவன் அவர்களை நியாயந்தீர்க்கப்போகிறார்," என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஜப்பானையோ, கொரியாவையோ பற்றித் தமிழகத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பதால் யாருக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்ட இரு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இவர்கள் பேசிய மொழி புரியப்போவதில்லை. மேலும், இந்த இரு நாடுகளிலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது!

இவர்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது? "உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1 யோவான் 4:1) என்று வேதம் எச்சரிக்கிறது.

தேவனுடைய பிள்ளைகள் வேத வசனத்தைத் தெளிவாகப் படிக்கும்போது, இப்படிப்பட்ட கள்ள உபதேசங்களை எளிதாக இனம் கண்டுகொள்ள முடியும். கிறிஸ்துவை முன்னிறுத்தாத எந்தவொரு உபதேசமும் கள்ள உபதேசமே. கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தைச் சொல்லாத எந்தவொரு செய்தியும், வேதாகமம் சொல்லும் செய்தி அல்ல. தேவனை அறியாமல் அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவை கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷமேயல்லாமல், தீர்க்கதரிசனங்கள் அல்ல!

வேதாகமம் முழுமையாகக் கொடுக்கப்பட்டிராத காலங்களில், தேவன் தரிசனங்கள் மூலமோ அல்லது தீர்க்கதரிசிகள் மூலமோ பேசினார். ஆனால் இன்றைக்குத் தேவன் அப்படிப் பேசவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மனிதனிடம் தேவன் எதைப் பேச வேண்டும் என்று நினைத்தாரோ, அதை முழுவதுமாக வேதாகமத்தின் மூலம் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கள்ள உபதேசங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நான் சிறுவனாக இருந்தபோது ஞாயிறு பள்ளியில் பாடிய பாடல் என் நினைவுக்கு வருகிறது:

"ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி உயர்ந்திருப்பது எப்படி? கர்த்தருக்குப் பயந்தோரெல்லாம் உயர்ந்திருப்பார் அப்படி! யானைக்குட்டி யானைக்குட்டி பானை வயிறு எதற்கு? வசன பஞ்சம் வந்துவிட்டால் என்ன செய்வேன் அதற்கு!"

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.