"இது எங்கோ கேள்விப்பட்ட ஒன்றுபோல் தோன்றுகிறதா? இன்று அநேக கிறிஸ்தவர்களின் கைகளில், பரிசுத்த வேதாகமத்திற்கு இணையாகத் தவழ்ந்துகொண்டிருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று! பிற மதத்தினர் பயன்படுத்தும் நாமாவளிப் புத்தகங்களைப் போலவே, பேருந்துப் பயணங்களின்போதோ அல்லது பொது இடங்களில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கும்போதோ, கிறிஸ்தவர்கள் இப்போது இத்தகைய புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நம்முடைய தேவன் துதிக்கப்படத்தக்கவரே; அவரே துதிக்கும், கனத்திற்கும், மகிமைக்கும் பாத்திரர். இதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் அந்தத் துதியானது, வேதாகமத்தைத் தியானிப்பதன் மூலமாகத் தேவனுடைய மகத்துவங்களை அறிந்து, நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிற அன்பின் வெளிப்பாடாகவும், தேவன் நமக்குக் கிருபையாக அருளிய இரட்சிப்பிற்காகச் செலுத்தும் நன்றியாகவும் இருக்க வேண்டும். சங்கீதம் 9:1-ல் சங்கீதக்காரன் கூறுவதுபோல, முழு இருதயத்தோடும் நாம் தேவனைத் துதிக்க வேண்டும். இத்தகைய உண்மையான துதியையே தேவன் விரும்புகிறாரே தவிர, நாமாவளிப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதை அவர் நிச்சயமாக விரும்பமாட்டார்.
"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலிப்பியர் 4:6). இந்த வசனத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, கள்ளத் தீர்க்கதரிசிகள் அர்த்தமில்லாமல் எப்பொழுதும் "ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே இருக்குமாறு போதிக்கிறார்கள். 'ஸ்தோத்திரம்' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கு 'நன்றி' (Thanks) என்பதே பொருள். ஆங்கில வேதாகமத்தில் 'ஸ்தோத்திரம்' வரும் இடங்களிலெல்லாம் 'Thanks' என்ற வார்த்தையைப் பார்க்கலாம். இப்போது சிந்தித்துப் பாருங்கள், யாராவது ஒருவரைப் பார்த்து எப்பொழுதும் அர்த்தமில்லாமல் "நன்றி, நன்றி, நன்றி" என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது எப்படி இருக்கும்? இப்படித்தான் கள்ள ஊழியர்கள், வேதாகம அறிவற்ற விசுவாசிகளையோ அல்லது விசுவாசத்தில் குழந்தைகளாக இருப்பவர்களையோ ஏமாற்றுகிறார்கள். உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்திருக்கும் அதிசயங்களையும், அற்புதங்களையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்லுங்கள், ஸ்தோத்திரியுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், இத்தகைய நாமாவளிப் புத்தகங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
"தேவனைத் துதித்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கொட்டும், பாடுகளும் பிரச்சினைகளும் பறந்தோடும்" என்பன போன்ற தவறான உபதேசங்களின் விளைவே இப்புத்தகங்களின் வருகைக்குக் காரணம். கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகங்களை வாசிப்பதைப் பார்க்கும் மற்றவர்கள், "ஓ! கிறிஸ்தவர்களுக்கும் இதுபோன்ற நாமாவளிப் புத்தகங்கள் இருக்கின்றன போலும்! வேதாகமத்தைத் தவிர நம்மைப்போல இவர்களும் இதுபோன்ற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் போலும்!" என்று எண்ணத் தோன்றும்.
ரோமர் 12:1-ல் உண்மையான ஆராதனை என்றால் என்ன என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டுகிறார்: "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." ஆகவே, நீங்கள் தேவனுக்கு உண்மையாகவே ஆராதனை செய்ய விரும்பினால், உங்கள் வாழ்க்கை சாட்சியுள்ளதாக மாறட்டும்; அனுதின வாழ்க்கையில் பரிசுத்தம் மலரட்டும்!
"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்" (சங்கீதம் 139:23,24) என்று சங்கீதக்காரன் தேவனிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதுபோல, நீங்களும் ஜெபத்தில் மன்றாடுங்கள். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில், "நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்" (2 கொரிந்தியர் 13:5) என்று எச்சரித்ததைப் போல, உங்களையும் நீங்களே சோதித்துப் பாருங்கள்."