“விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.” (எபிரெயர் 11:24-27)
மோசே புறக்கணித்தவை:
-
மோசே, பதவியையும் மேன்மையையும் விட்டுக்கொடுத்தான்.
-
மோசே, பாவ சந்தோஷங்களைப் புறக்கணித்தான்.
-
மோசே, எகிப்தின் பொக்கிஷங்களைப் புறக்கணித்தான்.
மோசே ஏற்றுக்கொண்டவை:
-
மோசே, உபத்திரவத்தையும் பாடுகளையும் ஏற்றுக்கொண்டான்.
-
மோசே, நிந்திக்கப்பட்ட தேவனுடைய ஜனங்களின் நட்பை ஏற்றுக்கொண்டான்.
-
மோசே, அவமானத்தையும் அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டான்.
இவையெல்லாம் மோசேயால் எப்படிச் செய்ய முடிந்தது?
மோசேக்கு விசுவாசம் இருந்தது. அவனது அற்புதமான நடத்தைக்கு விசுவாசமே முக்கிய ஆதாரமாக இருந்தது. விசுவாசம் அவன் செய்ததைச் செய்யவும், அவன் தேர்ந்தெடுத்ததைத் தேர்வு செய்யவும், அவன் வெறுத்ததை வெறுக்கவும் செய்தது. அவன் விசுவாசித்ததாலேயே எல்லாவற்றையும் செய்தான்.
தேவன் தமது சொந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் மோசேயின் கண்களுக்கு முன்பாக வைத்தார். இஸ்ரவேலின் வம்சத்திலிருந்து ஒரு மீட்பர் பிறப்பார் என்று தேவன் மோசேக்கு வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் பிள்ளைகளாகிய இஸ்ரவேல் சந்ததியினரிடத்தில் அந்த வாக்குத்தத்தம் இருந்ததென்றும், ஏற்ற நாளில் கர்த்தர் அதை நிறைவேற்றுவார் என்றும் அவன் விசுவாசித்தான். அவனது அற்புதமான வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும், அவனது பயணத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த வாக்குத்தத்தத்தை அவன் முழுவதுமாக விசுவாசித்ததினால்தான் முன்னெடுக்கப்பட்டது. பார்வோனின் அரண்மனையில் இருந்த நன்மையைவிட தீமையையே (பாடுகளையே) அவனால் காண முடிந்தது. தேவன் அவனோடு பேசினபடியால், மோசே தேவனுடைய வார்த்தையை முழுமையாய் விசுவாசித்தான்.
1. தேவன் உண்மையானவர்: மோசே, தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று விசுவாசித்தான். அதாவது, தேவன் என்ன சொன்னாரோ அதைச் செய்வார் என்றும், அவர் என்ன உடன்படிக்கை செய்தாரோ அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் விசுவாசித்தான்.
2. தேவன் சர்வ வல்லவர்: மோசே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று விசுவாசித்தான். இஸ்ரவேலர்களுக்கு உண்டான விடுதலை ஒரு கேள்விக்குறியானது என்று சூழ்நிலையும் மன உணர்வும் கூறின. தடைகளும் இக்கட்டுகளும் பல இருந்தன. ஆனால், தேவன் போதுமானவர் என்றும், தேவன் தம் பணியைச் செய்ய ஆரம்பித்துவிட்டால் அதைச் செய்து முடிப்பார் என்றும் விசுவாசம் மோசேயிடம் சொன்னது.
3. தேவன் சர்வ ஞானமுள்ளவர்: மோசே, தேவன் சர்வ ஞானமுள்ளவர் என்று விசுவாசித்தான். சூழ்நிலையும் மன உணர்வும், "அவனுடைய செயல் அபத்தமானது, கிடைத்த சந்தர்ப்பத்தைத் தூக்கிப்போடுகிறான், பார்வோனுடைய மகளுடன் கொண்ட நட்பை முறிப்பதின் மூலம் தம்முடைய ஜனங்களுக்குண்டான நன்மையை உதாசீனப்படுத்துகிறான்" என்று கூறின. ஆனால், தேவன் “இந்த வழியாகப் போ” என்று சொல்வாரென்றால், அதுவே சிறந்ததாக இருக்கும் என்று விசுவாசம் மோசேயிடம் சொன்னது.
4. தேவன் மகா இரக்கமுள்ளவர்: மோசே, தேவன் இரக்கமுள்ளவர் என்று விசுவாசித்தான். சூழ்நிலையும் மன உணர்வும், "ஒருவேளை இலகுவான விடுதலை உண்டாகலாம், சமரசம் செய்துகொள்ளலாம், அநேக சிரமங்களைத் தவிர்க்கலாம்" என்று கூறின. ஆனால் தேவன் அன்பானவர், தேவையின்றி தம்முடைய மக்களுக்கு ஒரு துளி கசப்பையும் அனுமதிக்க மாட்டார் என்று விசுவாசம் மோசேயிடம் சொன்னது.
விசுவாசம் என்பது மோசேக்கு ஒரு தொலைநோக்கிக் கருவியாக (Telescope) இருந்தது. அது அவனைத் தூரத்திலுள்ள அமைதி, சமாதானம், இளைப்பாறுதல், வெற்றி ஆகியவற்றைப் பார்க்க வைத்தது. அதே சமயத்தில், மங்கலான பார்வை (அவிசுவாசம்) சோதனை, வெறுமை, சஞ்சலம் மற்றும் நிம்மதியின்மையைப் பார்க்க வைத்தது.
மோசேக்கு விசுவாசம் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்தது. தேவனிடத்திலிருந்து வரும் கடுமையான எதிர்பார்ப்புகளின் மொழிகளை மொழிபெயர்த்து, புரிந்துகொள்ளும் வசதியான அர்த்தத்தைக் கொடுத்தது. அதே சமயம், அவிசுவாசமானது முட்டாள்தனமான காரியத்தையும் குழப்பத்தையும் தவிர வேறு எதையும் பார்க்க வைக்கவில்லை.
இவ்வுலகத்திற்குரிய மதிப்பு, பட்டம், மரியாதை, புகழ் அனைத்தும் பூமிக்குரியவை; அவை அனைத்தும் வெறுமையானவை, வீணானவை, ஒன்றுமில்லாதவை, நிலையில்லாதவை என்று விசுவாசம் மோசேயிடம் கூறியது. அதே சமயத்தில், "நம் தேவனுக்குப் பணியாற்றுவது போன்ற மகத்துவம் வேறு எங்கும் இல்லை; அவரே ராஜா; தேவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவனே உண்மையான பிரபு; ஆம், நரகத்தில் முதல் இடத்தில் இருப்பதைவிட, பரலோகத்தில் கடைசியாக இருப்பது நல்லது" என்றும் சொன்னது.
உலக இன்பமானது பாவத்தின் இன்பங்கள் என்று விசுவாசம் மோசேயிடம் சொன்னது. ஆம், அவைகள் பாவத்துடன் கலந்தவை, பாவத்தன்மை கொண்டவை, பாவத்திற்கு நடத்தக்கூடியவை, ஆத்மாவிற்கு அழிவைக் கொடுக்கக்கூடியவை; மேலும் அது தேவனுக்குப் பிரியமில்லாதது. பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், தேவனுக்குக் கீழ்ப்படிந்து பாடுபடுவதே மேல் என்றும் சொன்னது.
உலக இன்பங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே என்றும், அவைகள் நிலையற்றதாயும், விரைவில் மறையக்கூடியதாயும் இருக்கின்றன; சில வருடங்களில் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்றும் விசுவாசம் மோசேயிடம் சொன்னது.
எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட, விசுவாசிக்குப் பரலோகத்தில் மிகுந்த பலன் உண்டு என்று விசுவாசம் சொன்னது. "அங்கு நிலையான செல்வங்கள் உண்டு; அங்கு துரு பிடிக்காது, அல்லது திருடர்கள் உடைத்துத் திருட முடியாது; அங்குள்ள கிரீடம் அழியாததாக இருக்கும்; பரலோகத்தின் மேன்மை அதிகமாகவும் நித்தியமானதாகவும் காணப்படும்" என்று விசுவாசம் சொன்னது. மேலும், அவனது விசுவாசக் கண்கள் எகிப்தின் பொக்கிஷங்களைத் தாண்டி, பரலோகத்தின் மேன்மையைப் பார்க்க வைத்தன.
பாடுகள் மற்றும் உபத்திரவங்கள் உண்மையான தீமைக்குரியவைகள் அல்ல. அவைகள் தேவனுடைய பள்ளிக்கூடம். அதில் அவர் கிருபையின் குழந்தைகளை மகிமைக்காகப் பயிற்றுவிக்கிறார். ஆம், நம்முடைய அழுக்கு நிறைந்த விருப்பங்களைச் சுத்திகரிக்க மருந்துகள் அவசியமாயிருக்கின்றன. நம்மிடத்தில் உள்ள கசடுகளை நீக்க உபத்திரவத்தின் சூளை தேவைப்படுகிறது. உலகத்தைப் பிணைக்கும் உறவுகள் துண்டிக்கப்படக் கத்தி தேவைப்படுகிறது என்று விசுவாசம் மோசேயிடம் சொன்னது.
"இந்த அடிமைத்தனத்திற்கு உள்ளாகப் பாடுபடும் இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய பிள்ளைகள். தத்தெடுப்பு, உடன்படிக்கை, வாக்குத்தத்தங்கள் மற்றும் மகிமை அவர்களுக்குச் சொந்தமானது. தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஸ்திரீயின் வித்து அவர்களிடமிருந்து ஒரு நாளில் பிறக்கும்; அவர் பிசாசின் தலையை நசுக்குவார்; அதினால் தேவனுடைய விசேஷமான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். தேவனுடைய பார்வையில் அவர்கள் அற்புதமானவர்களாயும் அழகுள்ளவர்களாயும் இருப்பார்கள். துன்மார்க்கம் நிறைந்த அரண்மனையில் ஆட்சி செய்வதைவிட, தேவனுடைய பிள்ளைகளின் மத்தியில் ஒரு அரண்மனையின் நுழைவாயில் காவலராக இருப்பது நல்லது" என்றும் விசுவாசம் மோசேயிடம் சொன்னது.
மோசேயுடைய அனைத்துவிதமான நிந்தனையும் அவமதிப்பும் கிறிஸ்துவினுடையது என்றும்; கிறிஸ்துவினிமித்தமாகக் கேலி செய்யப்படுவதும் அவமதிக்கப்படுவதும் கௌரவமானது என்றும்; எவரெல்லாம் கிறிஸ்துவின் மக்களைத் துன்பப்படுத்துகிறார்களோ, அவர்கள் கிறிஸ்துவைத் துன்பப்படுத்துகிறவர்கள் என்றும்; ஒரு நாள் உண்டு, அந்நாளில் அவரது எதிரிகள் அவர் முன் குனிந்து, தூசியை நக்கும் நாள் வரும் என்றும் மோசேயிடம் விசுவாசம் சொன்னது.
அவன் புகழ், மேன்மை, செல்வம், இன்பத்தை மறுத்ததில் ஆச்சரியமில்லை. அவன் வெகு முன்னோக்கிப் பார்த்தான். அவன் தன் விசுவாசக் கண்களால், ராஜ்யங்கள் தூசியாகச் சிதறுவதையும், செல்வங்கள் தங்களுக்கு இறக்கைகள் செய்து தப்பி ஓடுவதையும், இன்பங்கள் மரணத்திற்கும் நியாயத்தீர்ப்புக்கும் செல்வதையும், கிறிஸ்து மற்றும் அவரது சிறிய மந்தை மட்டுமே என்றென்றும் நிலைத்திருப்பதையும் கண்டான்.
மோசே துன்பத்தையும், அடிமைத்தனத்தில் உள்ள மக்களையும், நிந்தையையும் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. அவன் விசுவாசத்தின் கண்களால், பாடுகள் சிறிது காலம் மட்டுமே என்றும்; அவமானங்கள் கடந்து, பாடுகள் அனுபவித்த மக்களுக்கு நித்திய கௌரவத்துடன் முடிவடையும் நாள் உண்டு என்றும்; அப்படியாகப் புறக்கணிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள், நித்திய நித்தியமாய்க் கிறிஸ்துவோடு மகிமையில் ராஜாக்களாய் ஆட்சி செய்வர் என்றும் கண்டான்.
இதை வாசிக்கும் எனக்கு அருமையானவர்களே! மோசே செய்தது சரியானது இல்லையா? இந்த நாளில் மோசே நம்முடன் பேசவில்லையா? பார்வோனின் மகளின் பெயர் அழிந்துவிட்டது. பார்வோன் ஆட்சி செய்த நகரம் நமக்கு என்னவானது என்று தெரியவில்லை. எகிப்தில் உள்ள பொக்கிஷங்கள் அழிந்துவிட்டன. ஆனால் எங்கெல்லாம் வேதம் போதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் மோசேயின் பெயர் அறியப்படுகிறது. மேலும் எவரெல்லாம் விசுவாசத்தினால் வாழ்கிறார்களோ, அவர்கள் பாக்கியவான்கள் என்று இந்தச் சத்தியம் நமக்கு ஒரு நிலையான சாட்சியாய் இருக்கிறது.
இவ்வுலகத்திற்கு முன்னால் தேவனைத் தேர்ந்தெடுப்பதற்கு விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் உதவி செய்யாது.
உன்னுடைய அறிவோ, உன்னுடைய உணர்ச்சிகளோ, தொடர்ச்சியாய்ச் செய்யும் வெளிப்புறமான செயல்களோ, அல்லது நல்ல நட்போ எதுவும் உதவி செய்யாது. அனைத்தும் சிறிது காலம் பலன் கொடுக்கலாம்; ஆனால் முடிவில் அவையெல்லாம் வற்றிப்போய்விடும்.
கிறிஸ்தவ பக்திக்குரிய வாழ்வின் அஸ்திபாரம் ஆணித்தரமாக, உறுதியாக நிற்பதற்கு விசுவாசம் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இதை வாசிக்கும் வாசகரே! இந்த விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியான விசுவாசம் உங்களுக்கு இருக்குமென்றால், எது உங்களுக்குக் கவர்ச்சியாய்த் தோன்றுகிறதோ அதை இழக்கக்கூடியவர்களாயும், நித்தியத்திற்குரிய லாபங்களை நம்பி, இன்றைய இழப்புகளைக் குறித்துக் கவலையற்றவர்களாயும் இருப்பீர்கள். இக்கட்டான வேளையிலும் கூட, கிறிஸ்துவையே பின்பற்றி, அவரண்டை அண்டிக்கொண்டு, கடைசிவரையும் நிலைத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இல்லையென்றால், நான் உங்களுக்கு எச்சரித்துச் சொல்லுகிறேன்: நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதான நல்ல விசுவாச ஓட்டத்தை ஓட முடியாதவர்களாய், நீங்கள் சீக்கிரம் சோர்ந்துபோய், உலகத்தின் பின் போகிறவர்களாய் இருப்பீர்கள்.
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவைகளும், சார்ந்துக்கொள்ளக் கூடியவைகளுமாய் இருக்கின்றன என்ற ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும். வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையானது, அதற்கு எதிரான அனைத்தும் பொய்யானது என்ற ஆழமான விசுவாசம் நமக்கு இருக்க வேண்டும். நம்முடைய மாம்சமும் இரத்தமும் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருப்பினும், கர்த்தருடைய வார்த்தை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆழமான விசுவாசம் நமக்கு இருக்க வேண்டும். அவருடைய வழி ஒன்றே சரியானது என்ற ஆழமான விசுவாசம் நாம் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல், இந்த உலகத்திலிருந்து நீ ஒருபோதும் வெளியே வர முடியாது; சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது.
நீ சம்பாதித்திருக்கிற சம்பாத்தியங்களைவிட, கர்த்தர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டியது மேலானது. உன் கண்ணுக்கு எதிராக இருக்கும் உலகக் காரியங்களைவிட, காணாத பரலோகப் பொக்கிஷங்களை விசுவாசிப்பது மேலானது. உலக மனுஷனுடைய பாராட்டைப் பார்க்கிலும், காணாத தேவனுடைய பாராட்டைப் பெறுவது மேலானது. அப்பொழுதுதான் நீயும் மோசேயைப் போல, இவ்வுலகத்தில் தேவனுக்குரிய காரியத்தை முன்வைத்துச் செயல்படுவாய்.
இந்த விசுவாசத்தைக் கொண்டுதான் நமக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள் நற்சாட்சி பெற்றனர். இவ்விசுவாசம் என்ற ஆயுதத்தைக் கொண்டுதான் இவ்வுலகத்தை ஜெயித்தனர்.
ஆம், இந்த விசுவாசம் மட்டும்தான் இவ்வுலகத்தின் ஏளனமான பார்வை, கேலி, கிண்டல்கள் மத்தியில் கர்த்தர் சொன்ன பெரிய பேழையை நோவாவைக் கொண்டு கட்ட வைத்தது. இந்த விசுவாசம் மட்டும்தான் ஆபிரகாம், லோத்திற்கு அவன் ஆசைப்படி விட்டுக்கொடுக்கவும், தன் கூடாரத்தில் சமாதானத்தோடு வாழவும் செய்தது. இந்த விசுவாசம் மட்டும்தான் ரூத் தன்னுடைய எல்லாச் சொந்த, பந்தம், இனமக்கள் அனைத்தையும் விட்டு, தன் மாமியைப் பற்றிக்கொள்ள உதவி செய்தது. இந்த விசுவாசம் மட்டும்தான் சிங்கம் ஆயத்தத்தோடு கெபியில் இருக்கிறது என்று அறிந்தும், தானியேல் தன் வழக்கப்படி தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருக்க உதவிசெய்தது. இந்த விசுவாசம் மட்டும்தான் நெருப்புச் சூளை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதை அறிந்திருந்தும், அந்த மூன்று குமாரர்கள் பொற்சிலையை வணங்குவதற்கு மறுக்க உதவி செய்தது. அவர்கள் விசுவாசித்ததினால் மட்டுமே இவை அனைத்தும் சாதிக்க முடிந்தன. இதுவே அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்ன “அருமையான விசுவாசம்” (2 பேதுரு 1:1).
இதை வாசிக்கும் எனக்கு அருமையானவர்களே! நீங்கள் கர்த்தருடைய கிருபையிலும், கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவிலும் வளருவீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்களா? நீங்கள் மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பீர்களா? மோசேயைப் போல உலகத்தைத் தேர்ந்தெடுக்காமல், தேவனை முதலாவது வைத்துத் தேர்ந்தெடுப்பீர்களா? நான் நிச்சயம் அறிவேன், ஒவ்வொரு விசுவாசியின் பதில் இதுவாகத்தான் இருக்கும்: “ஆம்! ஆம்! ஆம்! இதுவே எங்கள் வாஞ்சையும் ஏக்கமாயும் இருக்கிறது.”
அப்படியென்றால், இந்த நாளில் நான் கொடுக்கும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்: “ஆண்டவரே, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்” என்று அந்தச் சீடர்களைப் போல கிறிஸ்து இயேசுவை நோக்கிச் சென்று கதறுங்கள். ஆம், உண்மையான கிறிஸ்தவனுடைய குணத்தின் வேர் விசுவாசமாய் இருக்கிறது. உங்களுடைய வேர் சரியானதாய் இருக்கட்டும்; அப்பொழுது உங்களுடைய கனிகள் மிகுதியாய்க் காணப்படும். உங்களுடைய விசுவாச அளவின்படிதான் உங்களுடைய ஆவிக்குரிய செழுமை காணப்படும். எவன் விசுவாசிக்கிறானோ, அவன் இரட்சிக்கப்படுவது மாத்திரமல்ல, அவன் தாகமடையான்; அவன் ஜெயம் கொள்ளுகிறவனாய் இருப்பான்; இந்த உலகத்தின் தண்ணீர் மேல் நடந்து, பெரிதான காரியங்களைச் செய்கிறவனாய் இருப்பான்.
“விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:4)