2006 ஆம் ஆண்டு ஜூன் 3 முதல் 6 வரை ‘அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ என்கிற கருப்பொருளில் நடைபெற்ற எழுப்புதல் முகாமில் கொடுக்கப்பட்ட செய்தி...
முகவுரை
முகவுரை
ஒரு சாதாரணமான பிரசங்க பீடத்தில் நின்று, "இன்றைய செய்தியின் தலைப்பு கிறிஸ்துவுக்காகப் பாடுசகிப்பதைப் பற்றியது" என்று சொன்னால், "இதைவிடச் சிறப்பான வேறொரு தலைப்பில் பேச வாய்ப்பு இல்லையா?" என்று அநேகர் நினைக்கும் நிலையே இன்று காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் சபைக்கு அதிக ஊக்கமும் நற்புத்திமதியும் தந்த இந்தச் செய்தி, இன்று புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய காரியமாக இருக்கிறது. இன்றைய நமது காலத்தில் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் என்று தங்களை உரிமை பாராட்டிக்கொள்ளும் நபர்களே, சுவிசேஷத்தின் முக்கியமான பகுதிகளை ஒதுக்கிவிடும் நடைமுறையை நாம் காண முடிகிறது.
சமீபகாலமாக எடுத்துச் சொல்லப்படும் செய்திகளும், எழுதப்படும் புத்தகங்களும் அதை நமக்கு வெளிப்படையாகக் காண்பிக்கின்றன. இதை மிகவும் ஆச்சரியமான ஒன்றாகக் கருத வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், காணக்கூடிய கண்களையும், கேட்கக்கூடிய காதுகளையும், உணரக்கூடிய மனநிலையையும் உடையவர்கள், நவீன காலக் கிறிஸ்தவம் அனுபவ ரீதியாக 'பாடுசகித்தல்' என்பதை அறியவில்லை என்பதை ஒத்துக்கொள்வார்கள். தங்கள் அனுபவங்களில் இன்று தேவைப்படாத ஒரு காரியத்தைக் குறித்த உபதேச ரீதியான விளக்கத்திற்கு என்ன தேவை வந்தது?
ஆனால், இந்தக் குறைபாடுதான் நவீன காலக் கிறிஸ்தவத்திற்கு எதிராகச் சாட்சியிடுகிறது. ஏனெனில், இந்த நவீன கிறிஸ்தவம், மாசற்ற, சமரசத்திற்கு இடம்தராத, வேதம் காண்பிக்கும் தேவனைக் கனம்பண்ணும் கிறிஸ்தவத்திற்கு நேர்மாறாக இருக்கிறது. வேதத்தில் காணப்படும் அனுபவங்களுக்கு எதிர்மாறாக நிற்கும் இந்தக் கண்ணோட்டத்தை நாம் வேறு எந்த வகையில் நிதானிப்பது?
வேதத்தின் மனிதர்கள் கடுமையான நிந்தையையும் சாட்டையடிகளையும் எதிர்கொள்ளும் வகையில் சோதிக்கப்பட்டார்கள். ஆம், அவர்கள் கட்டுகளையும் சிறையிருப்பையும் அனுபவித்தனர். கல்லெறியுண்டார்கள்; வாளால் இரண்டாக அறுக்கப்பட்டார்கள்; பரீட்சை பார்க்கப்பட்டார்கள்; பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள். செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குத் தகுதியற்றதாக இருந்தது. அவர்கள் வனாந்தரங்களிலேயும், மலைகளிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள் என்று வாசிக்கிறோமே (எபிரெயர் 11:36–38).
உலகத்தில் சபைக்கு எதிரான உபத்திரவங்கள் இல்லாமல் இருப்பதற்கு இரண்டு சாத்தியங்களே உள்ளன. ஒன்று, உலகம் முழுவதும் கிறிஸ்துவுடன் ஒப்புரவாக்கப்பட்டுவிட்டதால், அது இப்போது தேவஜனங்களுக்கு எதிராளியாக இல்லை என்றிருக்க வேண்டும். அல்லது, கிறிஸ்துவுக்கு எதிரான விரோதத்தில் சபையானது உலகத்துடன் நண்பனாக மாறியிருக்க வேண்டும். உலகம் எப்போதுமே கிறிஸ்துவை இழிவுபடுத்துவதில் விருப்பமாய்ச் செயல்படுவதால், அது கிறிஸ்துவின் நண்பனாக மாறிவிட்டது என்கிற முடிவுக்கு நாம் வர முடியாது. 'யூதாஸின் சுவிசேஷம்', 'டாவின்சி கோட்' (Da Vinci Code) போன்ற கிறிஸ்துவின் நற்பெயரைக் குலைக்கும் வடிவங்கள் இந்த உலகில் உள்ளனவே!
அப்படி உலகம் கிறிஸ்துவுடன் சிநேகம் பாராட்டும் நிலைக்கு வரவில்லை என்றால், நம்மை நாமே சோதித்தறிய வேண்டிய தேவை இருக்கிறது. நாம் தேவனை விட்டு விலகிச் சோரம் போகிறவர்களாய், உலகத்துடன் விபச்சார இசைவில் காணப்படுகிறோமா என்று கேட்க வேண்டும். ஏனெனில் ஆவியானவர் சபையைப் பார்த்துத்தான் கீழ்க்காணும் எச்சரிப்பை விடுக்கிறார்: "விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா? ஆகையால், உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைவனாகிறான்" (யாக்கோபு 4:4). தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் நாம் செய்யும் இந்தத் தியானம், நம்மை நாமே அலசி ஆராயும்படியாகத் தேவன் தமது அனுக்கிரகத்தை அருளுவாராக.
வார்த்தை விளக்கம்
நமது பொருளைக் குறித்த சுருக்கமான அறிமுகத்தை நாம் செய்துவிட்டோம். இப்போது, நமது கருப்பொருளின் அர்த்தத்தை விளக்க முயலுவோம். நமது உரையாடலில் அடிக்கடி நாம் பயன்படுத்தும் 'உபத்திரவம்' என்கிற பதத்தைக் கிறிஸ்தவச் சூழலில் வரையறை செய்வது முதலில் அவசியம்.
உபத்திரவம் என்பது, கிறிஸ்துவுக்கு விரோதமான உலகத்தின் வெறுப்பின் வெளிப்பாடு எனலாம். இது கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்கிற நிலையில் கிறிஸ்தவர்கள் மீதும் பிரதிபலிக்கப்படுகிறது. இதுபோன்ற வெறுப்புகள் சில நேரங்களில் வன்முறையாகவும், சில வேளைகளில் அவ்வளவு வன்மையாக இல்லாமலும், சில நேரங்களில் தீவிரமானதாகவும், இன்னும் சில வேளைகளில் மிதமானதாகவும் இருக்கின்றன. ஆனால், இந்த வெறுப்புகளின் அளவு எத்தன்மையாக இருந்தாலும், உண்மையான கிறிஸ்தவத்திற்கு எதிராக உலகம் இன்னமும் தன் பகையை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், அவர்கள் கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதுதான்.
ஒரு கிறிஸ்தவன் தான் செய்த தவறுக்காகப் பாடுபடுகிறான் என்றால், அதை உபத்திரவம் என்கிற அடைமொழிக்குள் கொண்டுவர முடியாது. ஆனால், கிறிஸ்துவுக்காகவும் சுவிசேஷத்திற்காகவும் ஒருவர் அனுபவிக்கும் வெறுப்பையே நாம் பாடுசகித்தலுடன் இணைத்துப் பார்க்க முடியும் (1 பேதுரு 2:19–24). "ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்" (1 பேதுரு 4:16). எனவே, கிறிஸ்தவனாய் இருப்பதினால் வராத எந்தப் பாடுகளும் நமது உரையாடலுக்குள் வரப்போவதில்லை.
சில முக்கிய அம்சங்கள்
மேன்மையானதும், பன்முகத்தன்மை கொண்டதுமான இந்தக் கருப்பொருளின் மீது கவனத்தைக் குவிக்கும் விதமாக, நான்கு முக்கிய காரியங்களை நாம் இங்கே ஆய்வு செய்யலாம்:
1. உபத்திரவம் என்பது உண்மையான கிறிஸ்தவ அனுபவத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்று
இயேசு சொன்னார்: "நீதியின்நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" (மத்தேயு 5:10–12).
இந்த வேதப்பகுதி நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவெனில், உபத்திரவம் என்பது மெய்யான கிறிஸ்தவ அனுபவத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்று என்பதாகும். இதை இந்த வேதப்பகுதியிலிருந்தும், அதன் சூழமைவிலிருந்தும், இதற்கு ஒத்த மற்ற வேதப்பகுதிகளிலிருந்தும் நாம் கற்க முடிகிறது. இது உபதேச ரீதியாக நிரூபணம் செய்ய வல்லது என்பது மட்டுமல்லாமல், நமக்கு முன்சென்ற பரிசுத்தவான்களின் வாழ்வு வழியாகவும் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதே. எல்லாவற்றிற்கும் மேலாக, நமது பிரதான மூலைக்கல்லாகிய கர்த்தரிடமிருந்தும் இதை நாம் கற்றுக்கொள்கிறோம். இவைகளை நாம் ஆராயும் இத்தருணத்தில், இந்த வேதப்பகுதிகளைக் கவனமாய்ச் சிந்தித்துப் பாருங்கள்.
(அ) வேத வசன உறுதி மத்தேயு 5:11-ல் நாம் மனிதர்களால் உபத்திரவப்படுத்தப்படும்போது பாக்கியவான்கள் என்று வாசிக்கிறோம். ஒருவேளை மனிதர்கள் உங்களை உபத்திரவப்படுத்தினால் என்று அல்ல. ஆகவே, கிறிஸ்தவ வாழ்வில் உபத்திரவம் வரும் என்கிற உண்மை வெறும் சாத்தியம் என்கிற அனுமானம் அல்ல; அது தவிர்க்க இயலாத வாஸ்தவ நிலை.
(ஆ) சூழமைவு சார்ந்த அனுமானம் நமது வேதப்பகுதி, 'யார் பாக்கியவான்கள்?' என்று இயேசு மலைப்பிரசங்கத்தில் கொடுத்த மேன்மையான வசனங்கள் அடங்கிய பகுதியிலிருந்து வருகிறது. இங்கு வரும் பாக்கியவான்களின் பட்டியல், தேவனுடைய மக்கள்மீது வரும் மேன்மையான ஆசீர்வாதங்களை மட்டும் எடுத்துச் சொல்வதில்லை. இதில் வரும் அதிமுக்கியமான குணாதிசயங்கள் மற்றும் அனுபவங்கள் இல்லாத நபர் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இப்பகுதியில் வரும் நற்பண்புகளுக்கு ஏற்ற குணாதிசயம் உடையவனாகவே உண்மையான கிறிஸ்தவன் இருக்கிறான்.
அவன் ஆவியில் எளிமையுள்ளவன் (மத்தேயு 5:3). ஏனென்றால், அவன் தன் பெலத்தால் தேவனுடைய இரட்சிப்பைச் சம்பாதிக்க இயலாதவர் என்று உணருகிறான். தன் முழுமையான இயலாமையை அவன் கண்டு, தேவனுடைய தயவைப் பெறத் தன்னிடம் எந்தவித நற்செயலும் இல்லாத காரணத்தால், மனமுடைந்து தேவனை நோக்கி, "ஐயோ, நான் அதமானேன்!" என்று அபயமிடுகிறான். அவன் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு, "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று கூப்பிடுகிறான் (லூக்கா 18:13).
இதுபோன்ற உணர்வு அவனை தேவனிடம் புலம்பும்படி நடத்துகிறது (மத்தேயு 5:4). அது இரட்சிப்பிற்கு ஏதுவான மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தும் தேவனுக்கேற்ற துக்கமாகும் (2 கொரிந்தியர் 7:10). நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தைத் தேவன் புறக்கணிப்பதில்லை (சங்கீதம் 51:17). கிறிஸ்துவில் உள்ள மகிமையான இரட்சணியத்திற்குப் பங்காளியாக மாற்றப்பட்ட பின்னர், இரட்சிப்பின் துவக்கமாயிருக்கிற தேவனுடைய சுபாவங்களை அவ்விசுவாசி வெளிப்படுத்தத் துவங்குகிறார். ஆகவே, அவர் சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ளவராகிய கிறிஸ்துவினிடத்திலிருந்து கற்றுக்கொண்டதன் விளைவாக (மத்தேயு 11:29), சாந்தகுணமுள்ளவராக மாறுகிறார் (மத்தேயு 5:5).
மேலும் அவர், கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் நடக்கும்படியாக (சங்கீதம் 23:3), நீதியின்மேல் பசிதாகம் உடையவராகிறார் (மத்தேயு 5:6). கிறிஸ்துவின் இரக்கத்தை அவர் பெற்றதன் விளைவாக, அவர் இரக்கமுள்ளவராகிறார் (மத்தேயு 5:7). கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பானவராகத் தக்கதாக (எபிரெயர் 7:26), அவர் இருதயத்தில் சுத்தமுள்ளவராகிறார் (மத்தேயு 5:8). மேலும் அவர், கிறிஸ்துவின் உன்னதமான பணியாகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதால், மனிதருக்கும் தேவனுக்கும் இடையே சமாதானம்பண்ணுகிறவராகிறார் (மத்தேயு 5:9).
இத்தகைய பண்புகள் இல்லாதவர் உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது. உபத்திரவம் சகிப்பது குறித்த செய்தி இந்த நற்பண்புகளின் வரிசையில் வருவதால் (மத்தேயு 5:10–12), மெய்யான கிறிஸ்தவத்திற்கு அடிப்படையாகத் தேவையான பண்புகளின் வரிசையில் பாடுசகிப்பதும் வருகிறது என்று இந்த வசனங்களின் சூழலிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம். எனவே, உண்மைக் கிறிஸ்தவ அனுபவமாக உபத்திரவத்தையும் சொல்வது தவிர்க்க இயலாத பண்பாக இந்த வசனத்தின் சூழலில் பொருந்திப்போகிறது. கிறிஸ்தவர் கிறிஸ்துவின் சுபாவத்தில் பங்குபெறுவதுபோல, அவருடைய ஊழியத்தில் நிகழ்ந்ததுபோல, அவருடைய பாடுகளிலும் அவர் பங்கேற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகம் அவரை வெறுத்ததின் விளைவாக, கிறிஸ்துவுக்கு எதிராக வந்த அனைத்துவிதமான கசப்புகளையும் அவர் சகிக்க வேண்டியதாயிருந்தது. எனவே, உபத்திரவம் என்பது மெய்யான கிறிஸ்தவ அனுபவத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. உபத்திரவம் காணப்படாத நிலை என்பது நிச்சயமாக அபாயத்தின் அடையாளமே ஆகும்.
(இ) ஒத்த வசனங்களின் தொடர்ச்சியான பயன்பாடு உபத்திரவம் என்பது மெய்யான கிறிஸ்தவ அனுபவத்தில் தவிர்க்க இயலாத ஒன்று என்பதை உணர்த்தும் பல்வேறு வசனங்களை நாம் வேதத்தில் காணமுடிகிறது. இரண்டு அல்லது மூன்று உதாரணங்களை இங்கே தருவது போதுமானது:
-
"ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்" (யோவான் 15:20).
-
"நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22).
-
"அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்" (2 தீமோத்தேயு 3:12).
-
"ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" (பிலிப்பியர் 1:29).
இங்கே நாம் பார்க்கும் வசனங்கள் அனைத்தும், சுயமாக விளக்கம் சொல்லும் அளவில், உபத்திரவம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் அடிப்படைப் பங்கு என அறியமுடிகிறது. அப்படியிருந்தும், கிறிஸ்துவைத் தங்கள் உதடுகளில் உச்சரிக்கும் திரள் கூட்டத்தார் இந்த அனுபவங்களுக்கு அந்நியராகவே இருக்கிறார்கள்; ஏனெனில், இவர்கள் அவருடைய நுகத்தைத் தங்கள்மேல் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டனர்.
(ஈ) முன்சென்ற பரிசுத்தவான்களின் அனுபவங்கள் தரும் அத்தாட்சி உபத்திரவம் தவிர்க்க இயலாதது என்பதை உணர்த்தும் விதத்தில், இயேசு கடந்தகாலப் பரிசுத்தவான்களின் அனுபவத்தை மேற்கோள் காண்பிக்கிறார்: "உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" (மத்தேயு 5:12).
நடைமுறையில் பார்ப்போமானால், பழைய ஏற்பாட்டில் தேவனுடைய எதிரிகளால் பகைக்கப்பட்டதில் விதிவிலக்காக எந்தப் பரிசுத்தவானையும் நாம் சொல்லிவிட முடியாது. அவர்களில் சிலரைச் சிலுவையில் அறைந்தார்கள். சிலரைத் தங்கள் ஜெப ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்தினார்கள் (மத்தேயு 23:34). ஒருவரையும் அவர்கள் வரவேற்று ஏற்றுக்கொள்ளவில்லை. இதே அனுபவங்கள்தான் தம்முடைய சீஷருக்கும் உண்டாகும் என்று இயேசு முன்னறிவித்தார். கர்த்தருடைய வார்த்தையின்படியே, கடந்த பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த பரிசுத்தவான்கள் அநேகருடைய சரிதைகளை வாசிக்கும் பட்சத்தில், அதையே நாம் அறியமுடிகிறது.
யோவானைத் தவிர மற்ற அனைத்து அப்போஸ்தலரும் இரத்தசாட்சிகளாய் மரித்தனர். யோவான் அப்போஸ்தலரும் கர்த்தருடைய சாட்சியினிமித்தமாகவும், தேவனுடைய வார்த்தைக்காகவும் பத்மு தீவிற்கு நாடுகடத்தப்பட்டார். ஜான் ஃபாக்ஸ் (John Foxe) எழுதிய பிரபலமான புத்தகமாகிய 'இரத்தசாட்சிகளின் சரிதை'யை வாசித்துப் பாருங்கள். ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்தவ சபை வரலாற்றின் துவக்கத்திலும், சபையின் இருண்ட காலங்களிலும், சீர்திருத்த சபை வரலாறுகளிலும் மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்டனர். முதலில் புறஜாதி ரோம அரசாலும், பிற்பாடு போப்பின் ரோமாலும் கட்டவிழ்க்கப்பட்ட மிக மோசமான சித்திரவதைகளையும், உலகம் கண்டிராத பல்வேறு கொடூரங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
மனிதர்களின் தோல்களை அவர்களின் உடம்பிலிருந்து உரித்தனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். சிறுபிள்ளைகள்கூடப் பட்டயத்திற்குத் தப்பும்படியான இரக்கம் பெறவில்லை. கைக்குழந்தைகள் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டனர். கர்ப்ப ஸ்திரீகளின் வயிற்றை வாளால் கிழித்துத் துன்புறுத்தினர். இவையெல்லாம் ஒருசில கொடூரப் பாடுகளின் வர்ணனையே. சில நேரங்களில் அவர்கள் காயப்படுத்தப்பட்டு, இரத்தம் சொட்டச் சொட்ட மரித்துப்போகும்படி விடப்பட்டார்கள். அவர்களின் எதிராளிகள் இந்த அப்பாவிகளின் வலியால் துடிக்கும் வேதனையை ரசித்தனர்.
இவைபோன்ற கொடுமையான மரண உபத்திரவங்களுக்கு முன்னதாக, இந்தக் கொடுமைக்குத் தப்ப அவர்களுக்கு வாய்ப்புத் தரப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவை மறுதலித்தால் தண்டனை நிறுத்தப்படும் என்று வாக்களிக்கப்பட்டனர். ஆனால் இவர்களோ, கடைசிவரையும் நிலைத்திருந்து, தங்கள் விசுவாசத்தைத் தங்கள் இரத்தம் சிந்துதல் வழியாக முத்திரைத்துக்கொள்ளவும் தயங்கவில்லை. மாறாக, சந்தோஷத்துடன் கிறிஸ்துவுக்காகப் பாடுகளைச் சகித்து, அவர்களுக்காக மரித்தவருக்காகத் தங்கள் உயிரைத் தந்தார்கள். பரலோகத்தில் அவர்களுக்குப் பொக்கிஷம் வைக்கப்பட்டிருக்கிறது என்கிற நம்பிக்கையுடன், தங்கள் ஆஸ்திகளைக் கொள்ளையிடப்பட மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுத்தனர்.
இன்னும் சிலர் சற்று இலகுவான வகையில் பாடுபட்டனர். தங்கள் உறவுகளால் வெறுத்துப் பரிகசிக்கப்பட்டார்கள். அவர்களுடைய எதிராளிகள் அவர்களை மட்டந்தட்டிப் பரியாசம் செய்தனர். அவர்களுடைய உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர்கள்மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டது. அவருடைய நாமத்திற்காக எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை அவர்களுக்கு வந்தது. ஆனால் உபத்திரவத்தின் அளவுகள் எவ்வளவு வித்தியாசமானதாக இருந்தாலும், அவர்களுடைய இரட்சகர் பருகிய பாத்திரத்தில் ஏதோ ஒரு வகையில் சிறிதாகிலும் இவர்களும் பானம்பண்ணினார்கள்.
ஆனால் இன்றோ, அதற்கு நேரெதிர் நிலை இருப்பதுதான் கொடுமை! அநேகருடைய அன்பு தணிந்துபோனது. விசுவாசம் என்பது பக்தியின் வெறும் வெளிவேடமாகிப்போனது. அது மாம்சீக அனுமானத்திற்கும், தங்கள் துன்மார்க்கத்தனத்தை மூடிக்கொள்ளும் போர்வையாகவும் மாறிப்போனது. விசுவாச வீட்டார் என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள், அற்பகாலத்துப் பாவ இன்பத்திற்காகத் தங்கள் வீட்டு எஜமானருக்கு எதிராகச் சோரம்போனார்கள். நவீன கிறிஸ்தவத்திலிருந்து காணாமற்போன உபத்திரவம் சகிக்கும் அனுபவம் என்பது, அநேகருடைய விழுகையை உணர்த்தும் உறுதியான அத்தாட்சி. இது நமது உரையாடலின் அடுத்த பகுதிக்கு நம்மை அழைத்து வருகிறது.
2. உபத்திரவம் இல்லாத வாழ்வு - சீர்கேடான கிறிஸ்தவ வாழ்விற்கான அறிகுறி
இன்று நாம் அறிந்த கிறிஸ்தவம் என்பது ரோஜாப்பூக்களால் நிரப்பப்பட்ட மெத்தை போன்றது. அவர்கள் அதை எவ்வளவு மறுக்க முயற்சித்தாலும் அதுவே உண்மை. கிறிஸ்தவர்களுக்கு இன்றைய சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. கிறிஸ்துவை வலிமையாக எதிர்க்கும் சத்துருக்கள்கூட அவர்களை வெறுக்கிறதில்லை. பழைய காலத்தில் ஒரு சுயபரிசோதனைக் கேள்வி கேட்கப்பட்டது: "இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?" (ஆமோஸ் 3:3).
வெளிப்படையாக, சபைக்கும் உலகத்திற்கும் ஒர் இணக்கமான பொதுவான வழிமுறைகள் கண்டறியப்பட்டாயிற்று. ஆனால் நாம் ஏற்கனவே அறிவித்தபடி, உலகம் கர்த்தரையும், கர்த்தருடையவர்களையும் வெறுப்பதை விட்டுவிடும் அளவிற்குத் தீமையிலிருந்து மாறிவிடவில்லை. மாறாக, எழுதப்பட்டபடியே, உலகம் முன்னெப்போதையும்விட அதிகம் சீர்கெட்டுப்போனது. "பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்" (2 தீமோத்தேயு 3:13).
அப்படியானால், உலகத்திற்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்குமான இந்த நூதனமான நெருக்கத்தை என்னவென்று நாம் விளக்குவது? இந்தப் புதிய வளர்ச்சியைக் குறித்து நமது எஜமானர் அறிவித்ததைவிடச் சிறந்த வார்த்தைகள் ஒன்றும் இல்லை. தமது சீஷரைப் பார்த்து இயேசு சொன்னார்: "நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்" (யோவான் 15:19).
யோவான் 15:19-ல் இயேசு வெளிப்படையாகச் சொன்னதுபோல, ஒரு வேலைக்காரன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. அவர்கள் எஜமானனின் சத்தத்திற்குச் செவிகொடுத்தால், அவருடைய வேலைக்காரருக்கும் செவிமடுப்பார்கள். நமது எஜமானரின் வார்த்தைகள் உலகத்தால் வெறுக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். ஏனென்றால், உலகத்தின் செயல்கள் தீமையானவை என்று உலகத்திற்கு எதிராக ஆண்டவரின் வார்த்தைகள் சாட்சியிடுகின்றன. ஆனால், நவீன காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை வெறுக்கும் இந்த உலகத்தால் நல்வரவேற்பைப் பெறுகிறார்கள். அப்படியென்றால், உலகத்தைக் குறித்த வேதத்தின் குற்றச்சாட்டு சரியானதே: "அவர்கள் உலகத்துக்குரியவர்கள்; ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்" (1 யோவான் 4:5).
கிறிஸ்தவர்கள் நல்வரவேற்பைப் பெறுவது மட்டுமல்ல, அவர்கள் நல்ல பெயரும் பெறுகிறார்கள். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, உலகத்திலும் நல்நிலையை நாட்டிக்கொண்டிருக்கிறவர்கள், நமது ஆண்டவரின் வார்த்தைகளைக் கவனமாய் உற்றுநோக்குவது நலமாயிருக்கும்: "எல்லா மனுஷரும் உங்களைப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ! அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்" (லூக்கா 6:26). அவர்கள் ஒருவரால் ஒருவர் பெறும் மதிப்பை விரும்பி, தேவனிடமிருந்து வரும் கனத்தைப் புறந்தள்ளினார்கள். அப்படிப்பட்டவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொல்வார்: "நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது" (லூக்கா 16:15).
உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்பதைப்போலவே, தேவனுடன் இருக்கிற சிநேகம் உலகத்திற்கு விரோதமான பகையே. சங்கீதக்காரன் அதையே பறைசாற்றுகிறான்: "கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராய் எண்ணுகிறேன்" (சங்கீதம் 139:21-22). தேவனுக்காக வைராக்கியம் பாராட்டும் வரையில் எந்த ஒரு நபரும் உண்மைக் கிறிஸ்தவர் என்று அழைக்கப்பட முடியாது. உண்மையான கிறிஸ்தவத்திற்கு மாறான அனைத்தும் உலகில் வரவேற்பைப் பெறும். வாசகரே, உங்களுடைய வாழ்வு எப்படி இருக்கிறது? ஆகவே, பாடுகள் இல்லாத நிலைமை சீர்கேடான கிறிஸ்தவ வாழ்வுக்கான அறிகுறி என்பதை நாம் வேதத்தின் வசனங்களின் வாயிலாக இங்கே நிரூபித்திருக்கிறோம்.
3. கிறிஸ்துவுக்கும் அவருடைய சுவிசேஷத்திற்கும் உண்மையாயிருப்பதன் விளைவாகவே உபத்திரவம் வருகிறது
நாம் இதுவரை நிரூபிக்க முயன்ற வாதங்கள் வழியாக, 'கிறிஸ்தவர்கள் எப்போதும் சண்டை பண்ணிக்கொண்டிருக்கிறவர்கள், பிறரைச் சண்டைக்கு அழைக்கிறவர்கள்' என்கிற யோசனையை நாம் ஏற்படுத்தவில்லை; அது நமக்குத் தூரமாயிருப்பதாக! அவர்களுடைய எஜமானர் மாம்சத்தில் வெளிப்பட்ட அன்பர். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் நடந்த வழியில் நடக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எல்லாரிடமும் சமாதானமாயிருக்க அழைக்கப்பட்டவர்கள். ஆகவே, உலகத்தின் வெறுப்பைச் சம்பாதிக்கும் காரியம் என்பது கிறிஸ்தவர்களின் கடினமான மற்றும் அன்பில்லாத அணுகுமுறையின் விளைவாக வருவதில்லை.
கிறிஸ்தவன் ஜீவன் தரும் நற்செய்தியைத் தன் வாழ்விலும் வாயிலும் சுமக்கிறான். இந்த நற்செய்திதான் உலகத்தின் வெறுப்பிற்குக் காரணமாகவும் அமைகிறது. நற்செய்தியானது, உலகம் அதிகமான இடறலை அடையும் விதத்திலான சத்தியத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வேதப்புரட்டு இந்த இடறலைக் களைந்துவிடுகிறது. இந்தச் செயலின் வழியாகவே நமது நவீன காலக் கிறிஸ்தவர்கள் உலகத்தில் அத்தகைய இன்பமான நிலையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவன் மெய்யாய்ச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், உடனடியாக எதிரிகளைக் கண்டுபிடித்து விடுவான்.
கிறிஸ்தவன் நவீன சுகம், ஐசுவரியம் மற்றும் செழிப்பின் சுவிசேஷத்திலிருந்து தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு, அழியாத சத்திய வார்த்தையைப் போதித்து, உண்மையான சீஷத்துவத்தின் விலைக்கிரயத்தை விளக்கி, உலகத்தின் பாவங்களைக் கடிந்துகொண்டு, தன்னால் இயன்றமட்டும் உலகத்தை அன்போடும் சமாதானத்தோடும் தன் பாவத்தை விட்டுவிலகி, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் கிறிஸ்துவைப் பின்பற்ற ஊக்கம் தர வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவனுக்கு உலகத்தில் உபத்திரவம் வருமா என்று அவன் பார்க்கக்கடவன்.
4. உபத்திரவம் - சீஷத்துவத்திற்கான விலைக்கிரயம்
சீஷத்துவத்தின் கிரயம் என்பது, ஒருவர் கிறிஸ்துவின் சீஷராயிருப்பதன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட இழப்புகளைக் குறிக்கிறது. இயேசுவே, ஒருவன் சீஷனாகிறதற்கு முன்னதாக அமர்ந்து செல்லும் செலவைக் கணக்கிட்டுப் பார்க்கக்கடவன் என்று அறிவுறுத்துகிறார். சீஷனாக இருப்பதற்காக அவன் கிரயம் செலுத்த ஆயத்தமாயிருக்கிறானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் (லூக்கா 14:25–33).
நீங்கள் அடையப்போகும் ஒரு நிச்சயமான இழப்பு என்னவென்றால், நீங்கள் உலகத்தோடு கொண்டிருந்த நட்பை இழக்க வேண்டிவரும். இந்த வெறுப்பு நீங்கள் அறியாத இடத்திலிருந்து வருவதில்லை. கிறிஸ்தவனின் முதல் சத்துருக்கள் அவனுடைய வீட்டாரே. இயேசு சொல்கிறார்: "பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்கவந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவனுடைய வீட்டாரே" (மத்தேயு 10:34–36).
கிறிஸ்தவனுக்கு இருக்கும் அடுத்த சத்துருக்கள் 'பக்தியுள்ள உலகத்தில்' இருந்து வருவார்கள். ஆம், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களிடமிருந்தே உபத்திரவம் வரும். இயேசு சொன்னார்: "உலகம் உங்களைப் பகைத்தால், அதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்" (யோவான் 15:18). எந்த உலகம் கிறிஸ்துவைப் பகைத்து, அவரை மரணத்திற்குள்ளாக்கியது? தேவமகிமைக்காக வாழ்கிறதாக நடிக்கிற மதரீதியான உலகம்தான் அவரைச் சிலுவையில் அறைந்தது. அது இன்றும் பொருந்தும். கிறிஸ்துவை அவமதிக்கிற கிறிஸ்தவத்தைவிட்டு மெய்க் கிறிஸ்தவன் திரும்ப வேண்டும். அவனுடைய மூர்க்கமான, இரக்கமற்ற மற்றும் நேர்மையற்ற எதிரிகள், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று தம்பட்டம் அடிக்கிறவர்களிலிருந்தே வருவார்கள் (ஆர்தர் பிங்க்).
தேவனற்ற உலகம் கிறிஸ்தவனில் ரசிக்கத்தக்க காரியம் எதையும் கண்டுபிடிக்காது. ஏனெனில், அவன் அந்த உலகத்தின் போக்கில் நடக்க மறுப்பது மட்டுமல்லாமல், அதன் தீய செயல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான சான்று பகிர்ந்துகொண்டே இருக்கிறான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கிறிஸ்துவின் சீஷனாக மாற விரும்புகிற எந்த நபரும் முதலில் அமர்ந்து, கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் நடைமுறை வாழ்வில் வரப்போகும் கிரயத்தைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறானா என்பதை ஆலோசனை செய்து பார்க்க வேண்டும். "என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; ஆகிலும் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்" (மத்தேயு 10:22).
தேவன்தாமே இந்தக் கட்டுரையின் ஆசிரியரும், இதை வாசிக்கிறவர்களும் தங்களைத் தாங்களே தேவனுடைய சமூகத்தில் பரிசோதனை செய்து பார்க்க உதவி செய்வாராக. இங்கே எடுத்துரைக்கப்பட்ட சில சிந்தனைகளைக் கொண்டு, "உண்மையில் நாம் கிறிஸ்துவின் சீஷர்கள்தானா?" என்கிற கேள்வியைக் கேட்கத் தேவன் நமக்கு உதவி செய்வாராக!