உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

கனி தருகிறவர்கள்
ஆசிரியர்: அம்ரேஷ் செமுராத்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16).

'தெரிந்துகொள்ளுதல்' என்கிற பதத்திற்கு, ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது என்று பொருள். கிறிஸ்து தனக்காக நம்மைத் தெரிந்துகொண்டார். இங்கே வரும் வலியுறுத்தலைக் கவனியுங்கள்: “நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நான் உங்களை ஏற்படுத்தினேன்”. அதேபோல, இங்கே வரும் மறுப்பையும் கவனியுங்கள்: “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்”. நாம் அவரைத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாகவே, கிறிஸ்துவின் தெரிந்தெடுப்பு நடைபெறுகிறது என்பதே இதன் முதல் குறிப்பு. இயேசுவுடனான உங்கள் உறவு நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதின் அடிப்படையில் வரவில்லை; மாறாக, அவர் தமது கிருபையால் உங்களைத் தெரிந்தெடுத்ததன் அடிப்படையில் அமைந்துள்ளது.

இரண்டாவதாக, கிறிஸ்து நம்மை எதற்காகத் தெரிந்துகொண்டார்? தேவன் உங்களைத் தெரிந்துகொண்டு, உங்களை நியமித்தது (பிரித்தெடுத்தது) ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே; அதாவது, நீங்கள் போய்க் கனிகொடுக்க வேண்டும் என்பதற்காகவே. அநேகர் மனதில் எழும்பும் மிகப்பெரிய கேள்வி இதுதான்: 'இந்தக் கனி என்பது என்ன?' சிலர் இது கலாத்தியர் 5:22-23-ல் சொல்லப்பட்டுள்ள ஆவிக்குரிய கனியைக் குறிக்கிறது என்கிறார்கள். ஆவியின் கனி ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதே இந்த வாதத்திற்குக் காரணமாகும்.

ஆனால், கனிக்கான அர்த்தத்தை யோவான் 15-ம் அதிகாரத்தின் பின்னணியிலிருந்து கவனிப்பது அவசியம். யோவான் 15-ம் அதிகாரத்தின் சூழலானது சுவிசேஷ அறிவிப்பையும், அருட்பணியையுமே (Mission) மையமாகக் கொண்டுள்ளது என அநேக வேதாகம அறிஞர்கள் கருதுகிறார்கள். நாம் புறப்பட்டுப் போக வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து நம்மைத் தெரிந்தெடுத்தார் (மத்தேயு 28:19, யோவான் 20:21). லெஸ்லி நியூபிகின் இதுகுறித்துக் கூறும்போது, “தேவன் தம் மக்களிடத்தில் வாசம் பண்ணுவதன் நோக்கம், நாம் ஓரிடத்தில் தங்கி முழு உலகத்தையும் மறந்துவிடுவதற்காக அல்ல; மாறாக, அருட்பணி செய்யும்படி அவரால் விடுக்கப்படும் அழைப்பு இது” என்கிறார். “தேவன் நம்மைத் தெரிந்தெடுத்ததன் நோக்கம் நமது இரட்சிப்பிற்காக மட்டுமல்ல, அருட்பணிக்கும் தான்” என்று எழுதிய கிராண்ட் ஆஸ்பார்ன், ஊழியத்தை ஒரு மகிமையான பணியாக வர்ணிக்கிறார். நாம் கொடுக்க வேண்டிய கனி என்பது, கிறிஸ்துவுக்காகப் புதியவர்களை ஆதாயப்படுத்துவதாகும். இந்தக் கனியை அறுவடை செய்யும்படியாக, முதலில் பாவிகளுக்குச் சுவிசேஷத்தை அறிவித்து, பரிசுத்த ஆவியானவர் அவர்களை இரட்சிக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும். சுவிசேஷ அறிவிப்பும், அருட்பணியுமே புதிய ஏற்பாட்டின் மையமாகத் திகழ்கின்றன.

“கிறிஸ்துவுடன் உங்களுக்கு உள்ள உறவு நீங்கள் அவரைத் தெரிந்து கொண்டதால் தீர்மானிக்கப்படவில்லை; மாறாக, அவருடைய கிருபையால் அவர் உங்களைத் தெரிந்தெடுத்ததில் தான் இருக்கிறது.”

இப்போது ஜெபத்திற்கான வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக...”. பலரும் இந்த வசனத்தை அதன் சூழலை விட்டுப் பிரித்தெடுத்து, இந்த வாக்குத்தத்தத்தை வாழ்வின் எல்லாப் பகுதிகளுக்கும் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சுவிசேஷம் அல்லது அருட்பணி வழியாக நாம் கனிதரும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்டோம் என்கிற காரணத்திற்காகவே இந்த வாக்குத்தத்தம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து புரூஸ் மில்னே இவ்வாறு எழுதுகிறார்: “தேவனுடைய மக்களின் பயனுள்ள ஊழியத்திற்கு ஜெபம் இன்றியமையாத ஒன்று. ஆனால் வருத்தத்திற்குரிய காரியம் என்னவென்றால், யாக்கோபு 4:2 கூறுவது போல, ‘நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை’ என்பதே அநேக சபைகளின் நிலையாக உள்ளது”. மேலும் கிராண்ட் ஆஸ்பார்ன் நினைவுகூருவது போல, “உலகத்திற்கான அருட்பணி என்பது மிகவும் கடினமானதும், ஆபத்து நிறைந்ததுமான வேலையாக இருக்கிறது. உலகம் அதைப் பகைக்கவும் எதிர்க்கவும் செய்வதால், அருட்பணி முயற்சிகளை ஜெபத்தால் கழுவி, ஆவியானவரின் பலப்படுத்தும் பிரசன்னத்தைப் பெற்றுக்கொண்டு நாம் புறப்பட்டுப் போக வேண்டும்”.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படியாக, சுவிசேஷம் அறிவிக்கும் பணியில் உங்களை முழுமையான வாஞ்சையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறீர்களா? அறுவடையின் எஜமானர் உங்களுடைய பிரயாசத்தின் பலனை அறுவடை செய்யவும், அந்தப் பலன் நிலைத்திருக்கவும் வேண்டும் என்கிற தாகமுடன், உங்கள் நற்செய்திப் பணியினை ஜெபத்தால் தாங்குகிறீர்களா? நற்செய்தி அறிவிப்பும், ஜெபமும் இணைந்தே பயணிக்கின்றன. தேவன் இணைத்ததை நாம் பிரிக்கக்கூடாது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.