திருச்சபை

ஆசிரியர்: P. சுரேஷ் பாபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 13 நிமிடங்கள்

இயேசு கிறிஸ்துவைப் அறிந்துக் கொள்வது

கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராகப் புதிதாக ஏற்றுக்கொண்ட ஒரு விசுவாசி, வேதத்தில் புதைந்துள்ள ஆழமான சத்தியங்களைப் படிக்கவும், சிந்திக்கவும், ஆராயவும் நேரம் ஒதுக்குவது வழக்கம். சுவிசேஷக் கூட்டங்களுக்குச் செல்வதன் மூலமும், பிரசங்கங்களைக் கேட்பதன் மூலமும் ஆத்மீக ரீதியில் பலப்பட அவர் விரும்புவார். பல நல்ல ஆவிக்குரிய புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், வேதாகமக் கருத்தரங்குகளில் கலந்துகொள்வதன் மூலமும் வேதத்தின் பல காரியங்களைக் கற்றுக்கொள்ள அவர் ஆசைப்படுவார். இது மிகவும் போற்றத்தக்கதே; ஆனால், ஒரு விசுவாசி மிக முக்கியமான ஒரு காரியத்தைத் தவறவிடக்கூடாது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சரியான வேதப்பூர்வமான புரிதலோடு இருப்பதாகும்.

கடைசி நாட்களாகிய இக்காலத்தில், பொய்யான கிறிஸ்துவைப் போதிக்கும் குழப்பமான பிரிவுகள் காளான்களாக வளர்ந்து வருவதால், உண்மையான இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதத்தின் அடிப்படையில் தெளிவான அறிவுடையவராக இருப்பது விசுவாசிக்கு மிகவும் அவசியம். இதுவே கிறிஸ்தவ வாழ்விற்கு முதல் படியாகும். இன்று பல விசுவாசிகள் வேதத்தில் மறைந்திருக்கும் மர்மங்களையும், இரகசியங்களையும் வெளிக்கொண்டுவர மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்; ஆனால் கிறிஸ்துவைப் பற்றிய வேதப்பூர்வமான அடிப்படைப் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் தவறான உபதேசங்களால் எளிதில் பாதிக்கப்பட்டு குழப்பமடைகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஏற்காத ஒவ்வொரு கருத்தும் பிசாசின் தந்திரமே. ஒவ்வொரு விசுவாசியும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவருடைய மகத்துவத்தைக் குறித்தும் பேசப்படும்போது, அது வேத வசனத்தின்படி முன்வைக்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பகுத்தறியும் அறிவைப் பெற்றிருக்க வேண்டும். வேதத்தில் உள்ள மற்ற மர்மங்களையும், இரகசியங்களையும் அறியாமல் போவதைக் காட்டிலும், வேதத்தின்படி கிறிஸ்துவை அறியாமல் இருக்கும் நிலையே மாபெரும் இழப்பாகும்.

அன்றைய யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் மற்றும் சங்கீதங்களில் உள்ள பல இரகசியங்களையும், மர்மங்களையும் அறிந்திருந்தனர். ஆனால், மேசியா பிறந்துவிட்டார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வந்து அதை அவர்களுக்கு நினைவூட்டும் வரை, கிறிஸ்துவின் பிறப்பை உணர முடியாத ஆத்மீகக் குருட்டுத்தனத்தில் அவர்கள் இருந்தார்கள். கிறிஸ்துவைப் பற்றித் தெரியாமல் வேதத்தின் பல மர்மங்களையும், இரகசியங்களையும் அறிந்து என்ன பயன்? வேதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது; கிறிஸ்துவைப் பற்றிய வேத அறிவு வேண்டும். இல்லையெனில், வேதத்தை மட்டும் தெரிந்துகொண்டு கிறிஸ்துவைக் கொன்ற மற்றும் அவரை இழந்த யூதர்களைப் போல நாமும் ஆகிவிடுவோம்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எந்த ஒரு விசுவாசி சாட்சி சொன்னாலும் சரி, போதகர் வேதத்திலிருந்து எந்தப் பகுதியை பிரசங்கித்தாலும் சரி, அது இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்ற சத்தியத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அவர் வழங்கிய இலவசப் இரட்சிப்பைக் குறிப்பிட வேண்டும். ஒருவனுடைய வாழ்க்கையில் செயல்படும் வல்லமை கிறிஸ்துவுக்கு மட்டுமே உண்டு. இரட்சிப்பு என்பது அவருடைய நாமத்திலேயன்றி வேறொருவரிடத்திலும் இல்லை (அப்போஸ்தலர் 4:12). “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” இந்த இரட்சிப்பின் நற்செய்தி பிரசங்கத்திலும், சாட்சியிலும் இணைக்கப்படாவிட்டால், அந்தப் பிரசங்கம் அல்லது சாட்சி எவ்வளவு புனிதமானதாகத் தோன்றினாலும், அது உயிரற்றதாகவே இருக்கும். ஆதியாகமம் முதல் மல்கியா வரை எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில், ஒவ்வொரு அடியிலும் கிறிஸ்து மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். அவர் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிசிகள் அவரைப் பற்றித் தங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நாம் அவர் பிறந்து, வாழ்ந்து, மரித்து, உயிர்த்தெழுந்த பிற்காலத்தில் வாழும் விசுவாசிகள். எனவே, நம்முடைய முன்னோடிகளாகிய தீர்க்கதரிசிகளை விட கிறிஸ்துவைப் பற்றி அதிகம் அறிவிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. முதலாவதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அளித்த மீட்பைப் பற்றியும் ஒருவன் புரிந்து நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு விசுவாசி நியாயப்படுத்தப்படுவான்.

2. ஞானஸ்நானம் பற்றிய புரிதல்

பரலோகம் செல்வதற்கு ஞானஸ்நானம் முற்றிலும் அவசியமா என்பதை வேதப்பூர்வமாகப் பார்ப்போம். ஒரு நபர் தனது பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் இரத்தத்தில் சுத்திகரிக்கப்பட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதே இரட்சிப்பு ஆகும். ஒருவன் தன்னுடைய எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டு, முழுமையாக மனந்திரும்பி, தேவனைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவனுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது. இதற்கு அடையாளமே நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதாகும். அதாவது, ஞானஸ்நானம் என்பது இரட்சிப்பின் அடையாளமே தவிர, ஞானஸ்நானத்தினால் இரட்சிப்பு உண்டாவதில்லை. இரட்சிப்பு என்பது கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது. அவருடைய சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் நமது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து நம்மை மீட்டுள்ளது. அவருடைய பரிசுத்த இரத்தத்தில் நம்முடைய பாவங்கள் கழுவப்படுவதன் மூலமே நாம் நீதிமான்களாக அவரால் அங்கீகரிக்கப்படுகிறோம். இதுதான் இரட்சிப்பு.

“தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (ரோமர் 6:23).

ஞானஸ்நானத்தின் மூலமாகத்தான் நாம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும் என்றால், கிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தேவனுக்குக் கீழ்ப்படிவதில் ஞானஸ்நானம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் ஞானஸ்நானம் எடுக்காததினால் பரலோகம் செல்ல முடியாது என்று நினைப்பது வேதத்திற்கு முரணானது.

ஒருவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணத் தருவாயில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், ஒரு சுவிசேஷகர் மூலம் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து, தன் பாவ வாழ்க்கையைப் பற்றி முழுவதுமாக மனந்திரும்பி, கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு மரித்தால், அவர் நிச்சயமாகப் பரலோகம் செல்வார். அவர் படுக்கையிலிருந்து எழுந்து ஞானஸ்நானம் பெற இயலவில்லை என்றாலும், கிறிஸ்துவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதன் காரணமாக அவர் பரலோகம் செல்வது உறுதி. வெளிப்புற ஞானஸ்நானம் இல்லாவிட்டாலும், உள்புற மனமாற்றம் (ஆவியின் ஞானஸ்நானம்) இவ்விடத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது. மரணத் தருவாயில் சிலுவையிலிருந்த கள்ளன் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தை இதோடு ஒப்பிடலாம் (லூக்கா 23:39-43).

ஆனால் “எத்தியோப்பிய மந்திரியின்” விஷயத்தில் அவ்வாறு தோன்றவில்லை. அவர் ஞானஸ்நானம் பெறுவதற்குச் சாதகமான நிலையில் இருந்ததால், தயக்கமின்றி பிலிப்பால் ஞானஸ்நானம் பெற்றார். இங்கே அவர் வெளிப்புறக் கட்டளைக்கும், உள்ளான விசுவாசத்திற்கும் அடிபணிந்தார் (அப்போஸ்தலர் 8:36). எத்தியோப்பிய மந்திரியின் விஷயத்தில் நாம் தெளிவாகக் காண்பது என்னவென்றால், ஒரு நபர் தனது பாவங்களுக்கு மனந்திரும்பினார் என்பதை வெளிப்படுத்தத் தண்ணீர் ஞானஸ்நானம் மூலம் ஒரு பொதுவான சாட்சியைப் பெறுகிறார். தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வாய்ப்பு இருந்தும் ஒருவன் ஞானஸ்நானம் பெற மறுத்தால், அவன் கிறிஸ்துவை உடையவன் என்று கூறிக்கொள்ளும் தார்மீக உரிமையை இழக்கிறான்.

தண்ணீர் ஞானஸ்நானத்தை நிராகரித்து, தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத ஒருவன், கிறிஸ்துவைத் தனது சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னாலும், அவர் தேவனால் நீதியுள்ளவராக அங்கீகரிக்கப்படுவார் என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே தண்ணீர் ஞானஸ்நானம் இரட்சிப்பின் அடையாளமாக இன்றியமையாதது என்பதைக் கிறிஸ்துவே தெளிவுபடுத்தினார். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து...” (மத்தேயு 28:19). சிலுவையில் இருந்த கள்ளன் எதிர்கொண்டது போன்ற இக்கட்டான சூழ்நிலையைத் தவிர, மற்றபடி ஞானஸ்நானம் ஒவ்வொரு விசுவாசிக்கும் அவசியம்.

3. வேதத்தைக் குறித்த அறிவு

தேவனுடைய வார்த்தையைப் பலர் பல்வேறு காரணங்களுக்காக வாசிக்கலாம். சிலர் இலக்கிய தாகத்தைத் திருப்திப்படுத்திக்கொள்ள வாசிக்கிறார்கள். மற்றவர்கள் தங்களுடன் உடன்படாதவர்களுடன் திறம்பட விவாதம் செய்வதற்காகப் படிப்பார்கள். வேறு சிலர் வேத காரியங்களில் தேர்ச்சி பெறுவது மரியாதைக்குரியது என்றும், அவ்வாறு இல்லாதது கனவீனமானது என்றும் கருதி வாசிப்பார்கள். தயவுசெய்து கவனிக்கவும், இதுபோன்ற காரணங்களுக்காக வேதத்தை வாசிப்பது சபைகள் மற்றும் விசுவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம்; ஆனால் அது ஆத்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்காது, ஆத்மாவைப் பலப்படுத்தாது. தினமும் சரியான நேரத்தில் உணவை உட்கொண்டாலும், அதில் ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால் உடல் பலவீனமடையும். அதுபோலவே, வேதத்தைத் தவறாமல் வாசித்தாலும், அதை வாசிக்கும் நோக்கம் மற்றும் முறை சரியில்லாமல் போனால் நம் ஆத்மா செழிப்படையாது.

வேதியியல் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறிவைப் பெறுவது போல, வேதத்தைப் படிப்பதன் மூலம் மட்டும் அறிவைப் பெற்றுவிட முடியும் என்று பல விசுவாசிகள் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட முயற்சியினால் ஒருவர் அறிவார்ந்த ஞானத்தைப் பெறலாம்; ஆனால் ஆத்மீக அறிவைப் பெற முடியாது. அண்ட சராசரங்களுக்கு அப்பாற்பட்ட தேவனை, மனித அறிவுக்கு எட்டாத வகையில் தான் அறிய முடியும். அதற்கு வேத வாசிப்புடன் ஜெபமும் மிக அவசியம். வேதத்தைப் பற்றிய நமது அறிவார்ந்த ஞானத்தின் அடிப்படையில் நாம் மற்றவர்களால் அறிவாளிகளாக அங்கீகரிக்கப்பட விரும்பினால், தேவனுடனான நமது தனிப்பட்ட ஆவிக்குரிய உறவை நாம் இழக்க நேரிடும்.

புறமதப் பிரசங்கிகள் கூட தங்கள் பிரசங்கங்களில் வேத வசனங்களை மேற்கோள் காட்டி, "இயேசு இவ்விதமாகச் சொன்னார், அவ்விதமாகச் சொன்னார்" என்று சொல்வார்கள். வேத வசனங்களை வெளிப்படையாகக் காட்டுவதால் அவர்களுக்குத் தேவனைப் பற்றிய புரிதலும் ஆத்மீக முதிர்ச்சியும் இருப்பதாக நாம் சொல்லிவிட முடியாது. வேதபாரகர்களும் பரிசேயர்களும் வேதவாக்கியங்களை உன்னிப்பாக ஆராய்ந்தார்கள். ஆயினும் அவர்கள் கிறிஸ்துவைக் குறித்து அறியவில்லை. “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான் 5:39). இறுதியில், தேவனைப் பற்றிய புரிதல் கூட அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. (யோவான் 8:13). அவர்கள் வேதத்தின் மேலோட்டமான காரியங்களை மட்டுமே பார்த்து, வேதத்தின் சாரத்தை அறிய முடியாமல் போனதே இதற்குக் காரணம்.

கோட்பாட்டு அறிவு (Doctrinal knowledge) மட்டுமல்ல, நடைமுறை அறிவும் (Practical knowledge) மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. அதுபோலவே, தத்துவார்த்த அறிவை மட்டுமின்றி, வேத வசனங்களைப் பற்றிய அனுபவ அறிவையும் பெறும் நிலைக்கு நாம் வளர வேண்டும்.

4. ஜெபத்தைப் பற்றிய விழிப்புணர்வு

ஒரு விசுவாசி ஜெபத்தை தேவனிடமிருந்து தேவையான வரங்களைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக மட்டுமே பார்க்கிறான். ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்ற விசுவாசம் இருப்பது தவறல்ல; ஆனால் மிகவும் மதிப்புமிக்க கருவியான ஜெபத்தை அதே கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது தவறானது.

தேவனுக்கும் விசுவாசிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த ஜெபம் ஒரு அற்புதமான கருவி என்பதை அங்கீகரிக்க வேண்டும். தேவனுடன் தனிப்பட்ட தொடர்பை வளர்த்துக்கொள்ள இது ஒரு சிறந்த ஆத்மீகப் பரிசாகக் கருதப்பட வேண்டும். ஜெபத்தை வெறும் நம்முடைய சுயதேவைகளுக்காகப் பயன்படுத்தாமல், தன்னலமின்றி தேவனுடன் தொடர்புகொள்வதற்கான ஆத்மீக ஊடகமாகப் பார்க்க வேண்டும். தேவனுடனான தனிப்பட்ட தொடர்பைப் பழக்கமாக வலுப்படுத்திக் கொள்ளும்போது, தேவன் இயல்பாகவே விசுவாசிகளின் தேவைகளை அறிந்திருக்கிறார் என்பதை உணர்வோம். தேவனுடைய சித்தத்தின்படியான தேவைகளை அறிந்திருக்கும்போது, விசுவாசி கேட்காமலே அவற்றை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறான். நாம் தேவனிடம் கேட்கும் ஒவ்வொரு தேவையிலும் தேவன் மகிமைப்படுகிறாரா இல்லையா என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தாத எந்தவொரு தேவையும் நம்மிடம் இருக்கக்கூடாது. அவருக்கு மகிமை தராத உலகக் காரியங்களைப் பற்றி நாம் ஜெபித்து முறையிட்டாலும், அதன் முடிவு வெறுமையாகவே இருக்கும். “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” (யாக்கோபு 4:3). அவருடைய சித்தத்தின்படி அவரை மகிமைப்படுத்த நாம் எதைக் கேட்டாலும், தேவன் கொடுக்கிறவராக இருக்கிறார் (1 யோவான் 5:14).

நாம் தேவனிடம் கேட்டுப் பெறுவதில் உரிமையும் அதிகாரமும் உள்ளவர்கள் அல்ல, மாறாகத் தேவனின் கிருபையைச் சார்ந்தே இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்த இரட்சிப்பையே கிருபையின் மூலமாகப் பெற்றிருக்கும்போது, ​​​​மீதமுள்ள ஈவுகளை நாம் எவ்வாறு அதிகாரத்தோடும் உரிமையோடும் பெற முடியும்? எனவே, விசுவாசிகள் ஜெபத்தில் தேவனுடன் போராடாமலும், வற்புறுத்தாமலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். "உமக்குச் சித்தமானால், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்குமேயானால், இவற்றை எனக்காகச் செய்யும் பிதாவே!" என்ற பணிவோடும், தாழ்மையோடும் ஜெபம் செய்ய வேண்டும்.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விசுவாசி ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஜெபத்திற்கு ஒதுக்குவது முக்கிய கடமையாகும். நாம் ஜெபத்தை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். ஆண்டவர் இரவு நேரத்தில் ஒலிவ மலைக்குச் சென்று ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஜெபத்தை இவ்வாறு செய்வதன் மூலம், நம் விசுவாச வாழ்வில் ஒவ்வொரு நாளும் வலுப்பெறுவோம். மேலும், தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கவும், நாம் அந்த நேரத்தை ஜெபத்தில் பொறுப்புடன் செலவிடவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

5. சோதனைகள் பற்றிய விழிப்புணர்வு

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் சோதனைகளும் கண்ணீரும் நீங்கிப்போம் என்ற கருத்து பல விசுவாசிகளிடம் உறுதியாக வேரூன்றியிருக்கிறது. சில சுவிசேஷக் கூட்டங்களிலும் இவைகளையே பிரசங்கிக்கிறார்கள். ஆனால் இந்தக் காரியத்தில் வேதப்பூர்வமான ஆய்வைக் கொண்டு திருத்தம் பெற வேண்டும். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33).

கிறிஸ்து சொன்ன இந்த வார்த்தைகளைப் பார்த்தால், விசுவாசிகள் துன்பங்களையும், உபத்திரவங்களையும் சந்திக்க வேண்டியது அவசியம் என்பது புரிகிறது. ஆனால் அந்தத் துன்பங்களிலும், உபத்திரவங்களிலும் கிறிஸ்துவானவர் கொடுக்கும் தைரியமும், ஆறுதலும் விசுவாசியை ஆத்மீக வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கச் செய்யும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.

மனிதன் செய்யும் பாவங்கள்தான் அவனுடைய துன்பங்களுக்கும் கண்ணீருக்கும் காரணம் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வேதத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும், எல்லா துன்பங்களும் அவன் செய்த பாவங்களின் விளைவு என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. யோபு நீதியுள்ளவராக இருந்தும், சோதனைகளையும் இன்னல்களையும் சந்தித்தார். இருப்பினும், தேவன் மீதான விசுவாசமே அவருக்குத் துன்பங்களையும், இன்னல்களையும் சகித்துக்கொள்ள உதவியது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனின் சிறந்த ஊழியராக இருந்தும், பல துன்பங்களையும் இக்கட்டான சூழ்நிலைகளையும் அனுபவித்தார். ஆனாலும் அவர் கர்த்தரால் பலப்படுத்தப்பட்டார்.

அரச குடும்பத்தில் வளர்ந்த மோசே, கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் துன்பப்படுவதே சிறந்தது என்று நினைத்தார் (எபிரேயர் 11:24). இவ்வாறு சொல்லிக்கொண்டே போனால், துன்பங்களைச் சுவைக்காத தேவ மனிதர்களை வேதத்தில் பார்க்க முடியாது. அவர்கள் அனைவரும் இக்கட்டிலும், துன்பங்களிலும் சோர்ந்து போகாமலும், பின்வாங்காமலும் கிறிஸ்துவால் பலப்படுத்தப்பட்டு, விசுவாச வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.

துன்பங்களும் கண்ணீரும் ஏன் நிகழ்கின்றன என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது; ஆனால் அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவன் தகுந்த வழியை ஏற்படுத்துவார் என்று நம்மால் சந்தேகமில்லாமல் சொல்ல முடியும் (1 கொரிந்தியர் 10:13). ஒரு விசுவாசி தனது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்கொள்ளும் விதத்தை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும். ஒரு கொல்லன் இரும்பை உலையில் வைத்துச் சுத்தியலால் பலமாக அடித்தால்தான் அந்த இரும்பு வளைகிறது; ஆனால் பொற்கொல்லன் தங்கத்தை உலையில் வைத்துச் சுத்தியலால் மென்மையாக அடித்தால் அது வளைந்து கொடுக்கிறது. அதுபோலவே, விசுவாசியும் தேவனின் கைகளில் இருக்கும்போது சிறிய அடிகளுக்கு வளைந்து கொடுக்கும் மென்மையான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் தேவனும் கொல்லனைப் போலக் கடினமாகச் செயல்பட நேரிடும். கண்ணீர் இல்லாத வாழ்க்கை உண்மையான வாழ்க்கை அல்ல. இன்பங்களும், துன்பங்களும் இணைந்தால்தான் அது முழுமையான வாழ்க்கை. எனவே, நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால் துன்பங்களும் கண்ணீரும் வராது என்று நினைப்பதை விட, அவற்றைக் கடந்து செல்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அர்த்தமுள்ள பயணம் என்று எண்ண வேண்டும்.

"கிறிஸ்துவும் துன்பப்பட வேண்டியிருந்தது, இப்படியிருக்க நாம் மட்டும் இதற்கு விதிவிலக்கா?" என்ற சரியான புரிதல் நமக்கு வேண்டும். நாம் முன்னர் குறிப்பிட்ட தீர்க்கதரிசிகளும் பக்தர்களும் அழிந்து வரும் மனிதகுலத்திற்காகத் துன்பப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் கிறிஸ்து மட்டுமே மனித குலத்திற்காகத் துன்பப்பட்டார் (எபிரெயர் 2:18).

ஒரு அடிமை எஜமானனை விடப் பெரியவனாக இருக்க முடியாது. அவர் அனுபவிக்காத துன்பங்களிலிருந்து தப்பிக்க நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை விட நாம் சிறந்தவர்கள் அல்லவே! நமக்குப் பதிலாக அவர் துன்பங்களை அனுபவித்தாரே தவிர, அவர் துன்பங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் விடுபடவில்லை. துன்பங்களும் கண்ணீரும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானது என்பதை விசுவாசிகள் அறிந்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றை மேற்கொள்ளும் வல்லமை கிறிஸ்துவின் மூலம் பெறப்படும்.

6. புறஜாதிகள் பின்பற்றும் சடங்குகளிலிருந்து விடுதலை

விசுவாசிகளைத் தவறாக வழிநடத்தச் சாத்தான் பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். அதில் ஜோதிடம், நல்ல நேரம் பார்த்தல், வாஸ்து சாஸ்திரம், சிலைகளுக்குப் படைத்த பிரசாதம், தாயத்து அணிவது போன்ற மூடநம்பிக்கைகள் அடங்கும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றும் புறஜாதிகள் அந்தச் சத்தியத்தைப் பற்றி அறியாதவர்கள் என்று வாதிடலாம். ஆனால் விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளும் சில கிறிஸ்தவர்கள் இவற்றைப் பின்பற்றினால், அவற்றை எப்படி நியாயப்படுத்த முடியும்? இவை புறஜாதியினரின் மூடநம்பிக்கை நடைமுறைகள் என்பது இன்றைய விசுவாசிகளுக்கு நிச்சயமாகத் தெரியும். இருப்பினும், அவற்றிலிருந்து விடுபடாத நிலையிலேயே பலர் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள முறைகள் நமக்கு உலகப்பார்வையில் பலனளிப்பதாகத் தோன்றினாலும், வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, ​​அவை அனைத்தும் ஆபத்தான சாத்தானிய நம்பிக்கைகள் என்பது தெளிவாகும்.

ஜோதிடரின் கணிப்பு நொடிப்பொழுதில் நிறைவேறுவது போலத் தோன்றலாம்; ராகு காலத்தில் (கேட்ட நேரத்தில்) நினைத்த காரியம் பாதியில் நிற்கலாம்; ஜாதகம் பொருந்தாவிட்டால், சில நாட்களிலேயே திருமணத் தம்பதிகள் பிரியும் நிலை வரலாம்; வாஸ்துப்படி வீடு கட்டாவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். வெளிப்படையாக, இவற்றில் பெரும்பாலானவை உண்மைகளாகத் தோன்றலாம், சிலவற்றை நாம் மறுக்கவும் முடியாது. ஆனால் இவை ஏன் நடக்கின்றன?

நாம் குறிப்பிடும் இந்த முறைகள் மற்றும் நம்பிக்கைகள் சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாலேயே மனிதனை ஈர்க்கின்றன. அவற்றுக்குச் சிறிதளவு திறன் இல்லையென்றால், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் இறுதியாகக் கிறிஸ்தவர்களும் ஏன் அந்தத் தீய வட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்? ஆம், இது மிக முக்கியமான கேள்வி. இதற்கான வேதப்பூர்வமான பதிலைப் பார்ப்போம்.

அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப் (லூசிபர்) தனது ஞானம் மற்றும் அழகு குறித்துப் பெருமிதம் கொண்டான். அவன் தன்னைத் தேவனாக வணங்கப்பட வேண்டுமென்று எதிர்பார்த்தான். அவன் தேவதூதர்களில் ஒரு கூட்டத்தாரைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டு, இறுதியில் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து தோற்கடிக்கப்பட்டான். தேவனைக் கட்டுப்படுத்தும் சக்தி அவனிடம் இல்லாததால், தேவனின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனை அழிக்க ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வகுத்து, பல தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் பயன்படுத்தினான். அந்தத் திட்டத்தில் உள்ள விஷங்கள்தான் நாம் மேலே சொன்ன நம்பிக்கைகளும் நடைமுறைகளும். சாத்தான் மனிதர்களை விட வலிமையானவன்; ஆனால் தேவனை விடப் பலவீனமானவன். அதனால்தான் அவனுடைய தந்திரங்களை முறியடிக்கக் கிறிஸ்துவின் வல்லமை நமக்குத் தேவை (எபேசியர் 6:10-16).

மக்களை ஏமாற்றவும், குழப்பவும், சாத்தான் சில மாயத் தந்திரங்களைச் செய்கிறான். எகிப்தில் மோசே அற்புதங்களைச் செய்தபோது, ​​எகிப்திய மந்திரவாதிகளும் அதேபோன்று சிலவற்றைச் செய்தனர் (யாத்திராகமம் 8:18). தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தியது போல, சாத்தானும் மந்திரவாதிகளைப் பயன்படுத்தினான். அங்கு நடக்கவிருக்கும் தேவனுடைய பணியைச் சீர்குலைக்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. சாத்தான் தனது மட்டுப்படுத்தப்பட்ட சக்தியால் சில அற்புதங்களைச் செய்ய முடியும்; ஆனால் அவனால் தேவனின் சக்திக்கு முன் நிற்க முடியாது.

ஜோதிடர்கள் கையைப் பார்த்து ஜாதகம் சொல்லலாம். எது நல்ல நேரம், எது கெட்ட நேரம் என்று அவர்களால் சொல்ல முடியும். ஆனால், அவர்கள் அப்படிப்பட்ட அறிவை எப்படிப் பெறுகிறார்கள் என்ற கேள்விக்கு 1 சாமுவேல் 28-ஆம் அதிகாரத்தில் பதிலைக் காண்கிறோம். சவுல் தனது நிலைமை என்ன என்பதை அறிய அஞ்சனம் பார்க்கிறவளிடத்தில் சென்றான். அதாவது, தீர்க்கதரிசிகள் தேவ ஆவியினால் எதிர்காலத்தைச் சொல்வது போல், சாத்தானும் தன்னை பின்பற்றுபவர்களைத் தனது சக்தியால் எதிர்காலத்தைச் சொல்லப் பயன்படுத்துகிறான். அவர்கள் சொன்ன எதிர்காலம் நடந்தால், அதைக் குறித்து நாம் திகைக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், மக்களைக் குழப்புவதற்காக அவன் ஏமாற்று வித்தையைக் காண்பிக்கிறான். தேவன் இதைப் பற்றி இஸ்ரவேலர்களை எச்சரித்தார் (உபாகமம் 13:1-4).

நேபுகாத்நேச்சரின் காலத்திலும் சாத்தானைப் பின்பற்றியவர்கள் இருந்தனர். அரசன் தான் கண்ட கனவை மறந்தபோது, ​​சாஸ்திரிகளையும் கல்தேயரையும் வரவழைத்து, தன் கனவை நினைவுபடுத்தி, அதன் அர்த்தத்தைச் சொல்லும்படிக் கட்டளையிட்டான். ஆனால் அவர்களால் அந்த கனவை விவரிக்க முடியவில்லை. இதிலிருந்து சாத்தானுடைய வல்லமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது (தானியேல் 2:10-11).

இன்றைய காலகட்டத்திலும், இத்தகைய சாத்தானியக் கிரியைகள் பரவலாக உள்ளன. அமானுஷ்ய ஆவிகள் மூலம் எதிர்காலத்தைச் சொல்வதும், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதும் பொல்லாத ஆவியின் செயல்களே. இப்படிச் செய்வதால் மனிதர்களுக்கு எது தேவனின் அற்புதம், எது சாத்தானின் மாயம் என்று அறிய முடியாமல் குழப்பம் ஏற்படுகிறது. இறுதியில் அவர்கள் தேவனிடமிருந்து அந்நியப்படுகிறார்கள். தேவனின் பிள்ளைகளை தேவனிடமிருந்து பிரிப்பதற்கான சாத்தானின் சதி இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சாத்தானின் தந்திரங்களில் வாஸ்து சாஸ்திரமும் ஒன்று. பல விசுவாசிகள் அதன் மாயையில் விழுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களிடம் சென்று ஏன் என்று கேட்டால், "வேதத்தில் வாஸ்து குறிப்பிடப்பட்டுள்ளதே!" என்று சொல்லி நோவாவின் பேழை, சாலொமோன் தேவாலயம் போன்றவற்றை மேற்கோள் காட்டுவார்கள். அதாவது, வாஸ்து சாஸ்திரத்தை நியாயப்படுத்துவதற்காக வேதத்தையே திரித்துக்காட்ட முயற்சிக்கிறார்கள்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தை ஆதரிக்கும் எந்தவொரு வேத ஆதாரமும் பைபிளில் இல்லை. இது மனிதர்கள் மீது செல்வாக்கு செலுத்தச் சாத்தான் ஏற்படுத்திய ஒரு முறையாகும். சொல்லப்போனால் வாஸ்து சாஸ்திரம் புறஜாதி தெய்வங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதால், அது வேதத்துடன் எவ்வாறு தொடர்புடையதாக இருக்க முடியும்?

எனவே, விசுவாசியே! சாத்தானின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில் விழிப்பாயிருங்கள். வேதத்தில் தேறினவர்களாய் இருங்கள். தேவனின் அறிவுறுத்தல் எது, சாத்தானின் தந்திரங்கள் எது என்பதை அறியப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுங்கள்.

ஒரு கிறிஸ்தவனாக, இது போன்ற சாத்தானின் செயல்களில் ஆர்வம் காட்டியோ, அல்லது "இது சிறிய விஷயம்தானே" என்று சமாதானம் சொல்லியோ கிறிஸ்துவை விட்டு விலகாதீர்கள். இந்த உலக ரீதியான நடைமுறைகளில் நீங்கள் ஈடுபட்டால், அது படுக்கையின் அடியில் பாம்பை மறைத்து வைப்பதைப் போன்றது. பாம்பின் நிழல் கூட ஆபத்தானது. எச்சரிக்கையாயிருங்கள்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.