| 1 | கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, | எசே 1:3 எசே 3:14 எசே 3:22 எசே 33:22 எசே 40:1 வெளிப் 1:10 |
| 2 | என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. | உபா 11:30 |
| 3 | அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். | யோவா 6:5 யோவா 6:6 |
| 4 | அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். | எசே 37:11 எசே 37:15 எசே 37:16 எண் 20:8 1இரா 13:2 மத் 21:21 யோவா 2:5 |
| 5 | கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். | எசே 37:9 எசே 37:10 எசே 37:14 ஆதி 2:7 சங் 104:29 சங் 104:30 யோவா 20:22 ரோம 8:2 எபே 2:5 |
| 6 | நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 37:14 எசே 6:7 எசே 6:13 எசே 7:4 எசே 7:9 எசே 11:10 எசே 11:12 எசே 20:38 எசே 28:22-26 எசே 32:15 எசே 34:27 எசே 35:9 எசே 35:12 எசே 35:15 எசே 38:23 எசே 39:6 எசே 39:22 எசே 39:28 உபா 29:6 1இரா 20:28 ஏசா 49:23 யோவே 2:27 யோவே 3:17 |
| 7 | எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது. | எரே 13:5-7 எரே 26:8 அப் 4:19 அப் 5:20-29 |
| 8 | நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. |
| 9 | அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். | எசே 37:5 எசே 37:14 உன்ன 4:16 யோவா 3:8 |
| 10 | எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். | சங் 104:30 வெளிப் 11:11 வெளிப் 20:4 வெளிப் 20:5 |
| 11 | அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். | எசே 37:16 எசே 37:19 எசே 36:10 எசே 39:25 எரே 31:1 எரே 33:24-26 ஓசி 1:11 ரோம 11:26 2கொரி 5:14 எபே 2:1 |
| 12 | ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும் பண்ணுவேன். | யோபு 35:14 யோபு 35:15 |
| 13 | என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். | எசே 37:6 எசே 16:62 சங் 126:2 சங் 126:3 |
| 14 | என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். | எசே 37:9 எசே 11:19 எசே 36:27 எசே 39:29 ஏசா 32:15 யோவே 2:28 யோவே 2:29 சகரி 12:10 அப் 2:16 அப் 2:17 ரோம 8:2 ரோம 8:11 1கொரி 15:45 தீத் 3:5 தீத் 3:6 |
| 15 | பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 16 | மனுபுத்திரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின் கோலென்று எழுதி, | எண் 17:2 எண் 17:3 |
| 17 | அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும். | எசே 37:22-24 ஏசா 11:13 எரே 50:4 ஓசி 1:11 செப் 3:9 |
| 18 | இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால், | எசே 12:9 எசே 17:12 எசே 20:49 எசே 24:19 |
| 19 | நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல். | எசே 37:16 எசே 37:17 1நாளா 9:1-3 சகரி 10:6 எபே 2:13 எபே 2:14 கொலோ 3:11 |
| 20 | சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன் கையில் இருக்கவேண்டும். | எசே 12:3 எண் 17:6-9 ஓசி 12:10 |
| 21 | நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி, | எசே 34:13 எசே 36:24 எசே 39:25 உபா 30:3 உபா 30:4 ஏசா 11:11-16 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 43:6 ஏசா 49:12 எரே 16:15 எரே 23:3 எரே 23:8 எரே 29:14 எரே 30:3 எரே 30:10 எரே 30:18 எரே 31:8-10 எரே 32:37 எரே 33:7 எரே 33:11 எரே 50:19 ஆமோ 9:14 ஆமோ 9:15 ஒபதி 1:17-21 மீகா 7:11 மீகா 7:12 |
| 22 | அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை. | ஏசா 11:12 ஏசா 11:13 எரே 3:18 எரே 32:39 எரே 50:4 ஓசி 1:11 எபே 2:19-22 |
| 23 | அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். | எசே 20:43 எசே 36:25 எசே 36:29 எசே 36:31 எசே 43:7 எசே 43:8 ஏசா 2:18 ஓசி 14:8 சகரி 13:1 சகரி 13:2 சகரி 14:21 |
| 24 | என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, | எசே 37:25 ஏசா 55:3 ஏசா 55:4 எரே 23:5 எரே 30:9 ஓசி 3:5 லூக் 1:32 |
| 25 | நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார். | எசே 37:21 எசே 28:25 எசே 36:28 எசே 37:26 எரே 30:3 எரே 31:24 எரே 32:41 |
| 26 | நான் அவர்களோடே சமாதானஉடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன். | எசே 34:25 ஆதி 17:7 2சாமு 23:5 சங் 89:3 சங் 89:4 ஏசா 55:3 ஏசா 59:20 ஏசா 59:21 எரே 32:40 ஓசி 2:18-23 யோவா 14:27 எபிரெ 13:20 எபிரெ 13:21 |
| 27 | என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். | யோவா 1:14 கொலோ 2:9 கொலோ 2:10 வெளிப் 21:3 வெளிப் 21:22 |
| 28 | அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். | எசே 36:23 எசே 36:36 எசே 38:23 எசே 39:7 எசே 39:23 சங் 79:10 சங் 102:15 சங் 126:2 ரோம 11:15 |