| 1 | சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பதிரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது. | 1இரா 15:18 1இரா 15:20 2இரா 8:7-10 2நாளா 16:2-4 எரே 49:27 ஆமோ 1:4 |
| 2 | அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: | 2இரா 19:9 ஏசா 36:2-22 ஏசா 37:9 ஏசா 37:10 |
| 3 | உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். | யாத் 15:9 ஏசா 10:13 ஏசா 10:14 |
| 4 | இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான். | லேவி 26:36 உபா 28:48 நியா 15:11-13 1சாமு 13:6 1சாமு 13:7 2இரா 18:14-16 |
| 5 | அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே. |
| 6 | ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள். | 1சாமு 13:19-21 2சாமு 24:14 2இரா 18:31 2இரா 18:32 |
| 7 | அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் கேட்க, இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான். | 1இரா 8:1 2இரா 5:7 1நாளா 13:1 1நாளா 28:1 நீதி 11:14 |
| 8 | அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள். |
| 9 | அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள். |
| 10 | அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான். | 1இரா 19:2 அப் 23:12 |
| 11 | அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக; ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான். | 1சாமு 14:6 1சாமு 14:12 1சாமு 14:13 1சாமு 17:44-47 நீதி 27:1 பிரச 9:11 ஏசா 10:15 ஏசா 10:16 மத் 26:33-35 மத் 26:75-35 |
| 12 | பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம்பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம்பண்ணினார்கள். | 1இரா 20:16 1இரா 16:9 1சாமு 25:36 2சாமு 13:28 நீதி 31:4 நீதி 31:5 தானி 5:2 தானி 5:30 லூக் 21:34 எபே 5:18 |
| 13 | அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | 2இரா 6:8-12 2இரா 7:1 2இரா 13:23 ஏசா 7:1-9 எசே 20:14 எசே 20:22 |
| 14 | யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான். | ஆதி 14:14-16 நியா 7:16-20 1சாமு 17:50 1கொரி 1:27-29 |
| 15 | அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பதிரண்டுபேர்; அவர்களுப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான். | நியா 7:7 நியா 7:16 1சாமு 14:6 2நாளா 14:11 |
| 16 | அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறி கொண்டிருந்தார்கள். | 1இரா 20:11 1இரா 20:12 1இரா 16:7 நீதி 23:29-32 பிரச 10:16 பிரச 10:17 ஓசி 4:11 |
| 17 | மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள். | 1இரா 20:14 1இரா 20:15 1இரா 20:19 |
| 18 | அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான். | 1சாமு 2:3 1சாமு 2:4 1சாமு 14:11 1சாமு 14:12 1சாமு 17:44 2இரா 14:8-12 நீதி 18:12 |
| 19 | மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது, |
| 20 | அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடி போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான். | 2சாமு 2:16 பிரச 9:11 |
| 21 | இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும், இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான். | நியா 3:28 நியா 7:23-25 1சாமு 14:20-22 1சாமு 17:52 2இரா 3:18 2இரா 3:24 |
| 22 | பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான். | 1இரா 20:13 1இரா 20:38 1இரா 19:10 1இரா 22:8 2இரா 6:12 |
| 23 | சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம். | 1இரா 20:28 1இரா 14:23 1சாமு 4:8 2இரா 19:12 2நாளா 32:13-19 சங் 50:21 சங் 50:22 சங் 121:1 சங் 121:2 ஏசா 42:8 |
| 24 | அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி; | 1இரா 20:1 1இரா 20:16 1இரா 22:31 நீதி 21:30 |
| 25 | நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான். | சங் 10:3 |
| 26 | மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான். | 1இரா 20:30 யோசு 13:4 யோசு 19:30 நியா 1:31 |
| 27 | இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப்புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக் கிடைகளைப்போலப் பாளயமிறங்கினார்கள்; தேசம் சீரியரால் நிறைந்திருந்தது. | யோசு 1:11 நியா 7:8 |
| 28 | அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | 1இரா 20:13 1இரா 20:22 1இரா 13:1 1இரா 17:18 2நாளா 20:14-20 |
| 29 | ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரே நாளிலே சீரியரில் இலட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள். | யோசு 6:15 1சாமு 17:16 சங் 10:16 |
| 30 | மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான். | சங் 18:25 |
| 31 | அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி, | 1இரா 20:23 2இரா 5:13 |
| 32 | இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான். | 1இரா 20:3-6 யோபு 12:17 யோபு 12:18 யோபு 40:11 யோபு 40:12 ஏசா 2:11 ஏசா 2:12 ஏசா 10:12 தானி 5:20-23 ஒபதி 1:3 ஒபதி 1:4 |
| 33 | அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான். | நீதி 25:13 லூக் 16:8 |
| 34 | அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைபண்ணி அவனை அனுப்பிவிட்டான். | 1இரா 15:20 2நாளா 16:4 |
| 35 | அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான். | 1இரா 20:38 1சாமு 10:12 2இரா 2:3 2இரா 2:5 2இரா 2:7 2இரா 2:15 2இரா 4:1 2இரா 4:38 ஆமோ 7:14 |
| 36 | அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற் போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனைவிட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது. | 1இரா 13:21-24 1இரா 13:26-24 1சாமு 15:22 1சாமு 15:23 |
| 37 | அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான். | 1இரா 20:35 யாத் 21:12 |
| 38 | அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான். | 1இரா 14:2 1இரா 22:30 2சாமு 14:2 மத் 6:16 |
| 39 | ராஜா அவ்வழியாய் வருகிறபோது, இவன் ராஜாவைப் பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு; இவன் தப்பிப்போனால் உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான். | நியா 9:7-20 2சாமு 12:1-7 2சாமு 14:5-7 மாற் 12:1-12 |
| 40 | ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான். | 2சாமு 12:5-7 யோபு 15:6 மத் 21:41-43 மத் 25:24-27 லூக் 19:22 |
| 41 | அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான். | 1இரா 20:38 2சாமு 13:19 யோபு 2:8 எரே 6:26 |
| 42 | அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | 1இரா 20:34 1இரா 22:31-37 1சாமு 15:9-11 |
| 43 | அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப்புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான். | 1இரா 21:4 1இரா 22:8 எஸ்தர் 5:13 எஸ்தர் 6:12 எஸ்தர் 6:13 யோபு 5:2 நீதி 19:3 |