ரூத்: ஓர் அறிமுகம்
தலைப்பு: பழங்காலப் பதிப்புகளும், நவீன கால மொழிபெயர்ப்புகளும் இப்புத்தகத்திற்குத் தொடர்ந்து அளித்துள்ள தலைப்பு 'ரூத்' என்பதாகும். இவள் ஒரு சிறந்த மோவாபியப் பெண். இப்புத்தகத்தில் இவர் பெயர் 12 முறை குறிப்பிடப்பட்டுள்ளது (1:4 – 4:13). ஆகவே, இவள் பெயரே இப்புத்தகத்திற்குத் தலைப்பாகவும் சூட்டப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் இரண்டே இரண்டு பெண்களின் பெயர்கள் மட்டுமே புத்தகத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளன; அவை - ரூத் மற்றும் எஸ்தர். பழைய ஏற்பாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் ரூத்தைப் பற்றிய குறிப்புகள் இல்லை; ஆனால் புதிய ஏற்பாட்டில் ஓரிடத்தில் மட்டும் – அதாவது இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் – ரூத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது (மத்தேயு 1:5; இதை உறுதிப்படுத்தும் பழைய ஏற்பாட்டு வசனம் ரூத் 4:18-22). மோவாபிய அல்லது எபிரேய மொழியில் “ரூத்” என்னும் வார்த்தைக்கு “நட்பு” என்று அர்த்தம். ரூத், பெத்லகேமுக்குப் புறஜாதிப் பெண்ணாக வந்தாள் (2:10), பணிவிடை செய்யும் ஒரு வேலைக்காரியானாள் (2:13), இறுதியில் செல்வந்தரான போவாஸை மணந்தாள் (4:13). இதன் மூலம் கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் இடம்பெறும் பாக்கியத்தைப் பெற்றாள் (மத்தேயு 1:5).
ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி: யூதர்களின் பாரம்பரியம், இதன் ஆசிரியர் சாமுவேலாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறி அவரைக் கௌரவிக்கிறது. தாவீதைத் தேவன் இஸ்ரவேலின் ராஜாவாகத் தெரிந்தெடுத்து அபிஷேகம் செய்த நாள்வரை (1 சாமு. 16:6-13), சாமுவேல் மரிக்கவில்லை (1 சாமு. 25:1) என்பதால் இந்தக் கருத்து நம்பத்தகுந்ததாக உள்ளது. இருப்பினும், நூலின் உள்ளடக்கமோ அல்லது வெளிப்புறச் சான்றுகளோ இவர்தான் ஆசிரியர் என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தவில்லை. இஸ்ரவேலில் தாவீது அரசாட்சி செய்யத் தொடங்கிய காலத்தில் அல்லது அவர் அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் (கி.மு. 1011-971) இந்த நேர்த்தியான வரலாற்றுச் சம்பவம் எழுதப்பட்டிருக்கலாம். ஏனெனில், நூலின் இறுதியில் தாவீது (4:17, 22) குறிப்பிடப்பட்டுள்ளார், ஆனால் சாலமோன் குறிப்பிடப்படவில்லை. கோட்டே (Goethe) என்பவர், பெயர் அறியப்படாத ஆனால் ஈடுஇணையற்ற இந்த இலக்கியப் படைப்பை, “சிறிய அளவில் படைக்கப்பட்ட அழகான, பூரணமான படைப்பு” எனக் குறிப்பிடுகிறார். சிலைக்கு வீனஸ் எப்படியோ, ஓவியத்திற்கு மோனாலிஸா எப்படியோ, அப்படியே இலக்கியத்திற்கு ரூத் புத்தகம் திகழ்கிறது.
பின்னணி மற்றும் அமைப்பு: பெத்லகேமைத் தவிர (1:1), மோவாப் தேசம் மட்டுமே (சாக்கடலுக்குக் கிழக்கே உள்ள, இஸ்ரவேலின் நிரந்தரப் பகைஞராக இருந்தவர்களின் தேசம்) இப்புத்தகத்தில் புவியியல் ரீதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (1:1, 2). லோத்து தன் மூத்த மகள் மூலமாகப் பெற்ற மகனே மோவாபியருக்குத் தகப்பன் ஆனான் (ஆதி. 19:37). பல நூற்றாண்டுகளுக்குப் பின், பிலேயாம் தீர்க்கதரிசியின் மூலம் ஏற்பட்ட மோவாபின் ராஜா பாலாக்கின் எதிர்ப்பை யூதர்கள் சந்திக்க வேண்டியிருந்தது (எண். 22-25). நியாயாதிபதிகளின் காலத்தில், மோவாபியர் இஸ்ரவேலரை 18 ஆண்டுகாலம் ஒடுக்கினர் (நியா. 3:12-30). சவுல் மோவாபியர் மீது வெற்றி சிறந்தான் (1 சாமு. 14:47); அதேவேளையில், தாவீது அவர்களோடு சமாதானமான உறவைக் கொண்டிருந்தான் (1 சாமு. 22:3, 4). பின்னர், மோவாபின் ராஜா இஸ்ரவேல் ராஜாவிற்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான் (2 ராஜா. 3:5-27; எஸ்றா 9:1). மோவாபியர் அருவருப்பாகிய காமோஸ் விக்கிரகத்தை வணங்கினபடியாலும் (1 ராஜா. 11:7, 33; 2 ராஜா. 23:13), அது இஸ்ரவேலுக்கு விரோதமாக இருந்தபடியாலும், தேவன் மோவாபியரைச் சபித்தார் (ஏசாயா 15, 16; எரேமியா 48; எசேக்கியேல் 25:8-11; ஆமோஸ் 2:1-3).
ரூத் சரித்திரத்தின் காலம், “நியாயாதிபதிகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வரும்” (1:1) நாட்களான கி.மு. 1370 முதல் கி.மு. 1041 வரையிலான (நியா. 2:16-19) காலகட்டத்தில் சம்பவித்தது. இதனால், நியாயாதிபதிகளின் காலத்திற்கும் இஸ்ரவேலை ராஜாக்கள் ஆண்ட காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு இது ஒரு பாலமாக அமைந்துள்ளது. “யூதா தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” (1:1) என்னும் நிகழ்வைக் கொண்டு ரூத் புத்தகத்தின் சம்பவங்களை தேவன் தொடங்கி வைக்கிறார். ஆனால், இந்தப் பஞ்சத்தைக் குறித்து நியாயாதிபதிகளின் புத்தகத்தில் எந்தக் குறிப்பும் இல்லாதபடியால், ரூத் சரித்திர சம்பவங்களின் தேதியை அறுதியிட்டுச் சொல்வது கடினமாக இருக்கிறது. தாவீது அரசாண்ட (கி.மு. 1011-971) தேதியிலிருந்து ஆண்டுகளை நாம் பின்னோக்கிக் கணக்கிடுவோமானால், ரூத் புத்தகத்தின் சம்பவங்கள் அதிகபட்சமாக யாவீர் (கி.மு. 1126 - 1105) நியாயம் விசாரித்த நாட்களாக இருந்திருக்கலாம் (நியா. 10:3-5).
ரூத் சரித்திரம் கீழ்க்காணும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது 11 அல்லது 12 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கக்கூடும்:
-
1:1-18: மோவாபில் 10 வருடங்கள் (1:4).
-
1:19 – 2:23: போவாஸின் வயல்வெளியில் அனேக மாதங்கள் (ஏப்ரல் மத்தியிலிருந்து ஜூன் மத்தி வரை) (1:22; 2:23).
-
3:1-18: பெத்லகேமில் வாற்கோதுமை போரடிக்கும் களத்தில் ஓர் இரவு.
-
4:1-22: ஏறக்குறைய ஓராண்டு பெத்லகேமில் வாசம் பண்ணுதல்.
வரலாற்று மற்றும் இறையியல் கருப்பொருட்கள்: ரூத் புத்தகத்தின் மொத்த வசனங்களும் (85) புனித திருமறை நூல்களின் வரிசையில் வருவதாக யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உன்னதப்பாட்டு, எஸ்தர், பிரசங்கி மற்றும் புலம்பல் என்னும் வரிசையில் ரூத் புத்தகமானது ‘மெகிலோத்’ (Megilloth) அல்லது “ஐந்து தோல்சுருள்கள்” என்று அழைக்கப்படும் பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. வருடத்தின் ஐந்து விசேஷ நாட்களில் ரபீக்கள் (யூதப் போதகர்கள்) தேவாலயத்தில் இப்புத்தகங்களை வாசிப்பார்கள். ரூத் புத்தகத்தின் 2 மற்றும் 3-ஆம் அதிகாரங்களில் அறுவடை சம்பவங்கள் வருவதால், இப்புத்தகத்தைப் பெந்தெகோஸ்தே பண்டிகை காலத்தில் வாசிப்பார்கள்.
வம்சவரலாற்றைக் குறித்துப் பார்க்கும்போது, ரூத் புத்தகம் ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முந்தைய யாக்கோபின் காலத்தைக் குறிப்பிடுகிறது. எதிர்காலத்தைக் குறித்துப் பேசும்போது, 100 ஆண்டுகளுக்குப் பின் வரும் தாவீதின் அரசாட்சியைக் குறிப்பிடுகிறது (4:17, 22). யோசுவா மற்றும் நியாயாதிபதிகளின் புத்தகங்கள் தேசத்தின் பரம்பரையை (National Lineage) குறித்துக் கவனம் செலுத்தும் வேளையில், ரூத் புத்தகம் தாவீதின் வம்சவரலாற்றில் கவனம் செலுத்தி, அவனது பரம்பரையின் வேர் முற்பிதாக்களின் காலத்தில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஏறக்குறைய ஏழு முக்கிய இறையியல் கருப்பொருட்கள் ரூத் புத்தகத்தில் வெளிப்படுகின்றன:
-
மோவாபியப் பெண்ணான ரூத்தின் சரித்திரம் குறித்து இப்புத்தகம் பேசுவதால், தேவன் தமது மீட்பின் திட்டத்தில் யூதர்களுக்கும் அப்பால் புறஜாதியாருக்கும் இடமளித்துள்ளார் என்பது வெளிப்படுகிறது (2:12).
-
தேவனின் இரட்சிப்பிற்கும் கிருபைக்கும் பெண்களும் உடன் சுதந்திரவாளிகள் என்பதை இது நிரூபிக்கிறது (கலா. 3:28).
-
நீதிமொழிகள் 31:10 சித்தரித்துக் காட்டும் குணசாலியான ஸ்திரீயை நமக்கு இது படம்பிடித்துக் காட்டுகிறது (3:11).
-
அற்பமான ஜனங்களிடம், முக்கியமற்ற வேளையில் தேவனின் இறையாட்சி (1:6; 4:13) மற்றும் தேவைகளைச் சந்தித்தல் (2:3) நிறைவேறுவதையும், பின்னர் அதுவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியதையும் இது நிரூபிக்கிறது.
-
ரூத் என்பவள் தாமார் (ஆதி. 38), ராகாப் (யோசுவா 2) மற்றும் பத்சேபாள் (2 சாமு. 11, 12) ஆகியோருடன் மேசியாவின் வம்சவரலாற்று வரிசையில் வருகின்றாள் (4:17, 22; மத்தேயு 1:5 உறுதிப்படுத்துகிறது).
-
போவாஸ், ரூத்தின் உறவினனும் மீட்பனுமாகி, கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாகச் சித்திரிக்கப்படுகிறான் (4:1-12).
-
இறுதியாக, இஸ்ரவேலின் சிங்காசனத்திற்குரிய தாவீதின் உரிமை (அதன்வழியாகக் கிறிஸ்துவின் உரிமை) யூதாவின் வழியாக நிலைநாட்டப்படுகிறது (4:18-22; ஆதியாகமம் 49:8-12).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்: ரூத் சரித்திரம் உண்மையில் வரலாற்றில் நடந்த சம்பவம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். நியாயாதிபதிகள் மற்றும் 1, 2 சாமுவேல் புத்தகங்களுடன் இது இணக்கமாக இருப்பதுடன், ரூத் புத்தகத்தில் காணப்படும் நம்பகமான உண்மைகள், இச்சரித்திரம் உண்மையாகவே நிறைவேறிய ஒன்று என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும், சில கடினமான பகுதிகளைப் புரிந்துகொள்ளத் தனிப்பட்ட கவனம் தேவை.
முதலாவது, உபாகமம் 23-ல் மோவாபியர் பத்துத் தலைமுறை வரை கர்த்தருடைய சபைக்குள் பிரவேசிக்கக் கூடாது என வெளிப்படையாகத் தடை செய்திருக்கும்பொழுது, ரூத் சீலோவில் இருந்த (1 சாமு. 4:4) ஆசரிப்புக் கூடாரத்தில் எப்படி ஆராதிக்க முடிந்தது? யூதர்கள் கானான் தேசத்தில் பிரவேசித்தது கி.மு. 1405; ரூத் கி.மு. 1150 வரை பிறந்திருக்கவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, அவள் குறைந்தபட்சம் 11-வது தலைமுறையினரை (அல்லது அதற்குப் பின் உள்ளவர்களை) பிரதிநிதித்துவம் செய்தாள். “பத்து தலைமுறைகள்” என்பது நெகேமியா 13:1 தெரிவிப்பது போல “என்றைக்கும்” என்று அர்த்தப்படுத்துகிறது என்று எடுத்துக்கொண்டால், ஏசாயா 56:1-8-ல் அந்நியப் புத்திரன் ஒருவன் ஆண்டவரிடத்தில் சேர்க்கப்பட்டுக் கொண்டான் என நாம் காண்பது போல், ரூத் அந்நிய தேசத்துப் புத்திரியாகச் சங்கத்திற்குள் பிரவேசிக்க அனுமதி பெற்றிருப்பாள் (தேவனின் கிருபையினால்).
இரண்டாவது, போவாஸும் ரூத்தும் திருமணத்திற்கு முன் இரவு நேரத்தில் ஒன்றாக இருந்தது (3:3-18) நம்மைச் சிந்திக்க வைக்கிறது. யெகோவா தேவன் இஸ்ரவேலின் மீது வஸ்திரத்தை விரித்து எப்படி உடன்படிக்கை செய்து கொண்டாரோ (எசே. 16:8), அவ்வாறே கிழக்கத்திய நாடுகளின் வழக்கத்தின்படி, தான் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் மீது வஸ்திரத்தை விரித்து நிச்சயித்துக் கொள்வது போல், போவாஸ்-ரூத் திருமண நிச்சயம் நடந்தது. இந்த வேதாகமப் பகுதி “விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து (3:14)” என்று விளக்கமளிப்பதிலிருந்து, இதில் எந்த விதத்திலும் ஒழுக்கக்கேடு நிகழவில்லை என அறிகிறோம். இவ்வாறாக, "கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக" எனப் போவாஸ் தாமே வேண்டிக்கொண்டது போல, போவாஸ் ரூத்திற்குத் தேவன் அளித்த பதிலாக இருந்தான்.
மூன்றாவது, உபாகமம் 25:5,6-ல் நாம் காண்பது போல், “சகோதரனின் விதவையை மணக்கும்” (Levirate Marriage) பழக்கம், நெருங்கிய உறவினருக்கு ஏற்கெனவே விவாகம் ஆகியிருந்தால், பலதார மணம் போன்ற ஒழுக்கக் குறைபாடுகளுக்கு வழிநடத்தியதா? மரண தண்டனைக்கு ஏதுவான ஒழுக்கக்கேட்டைத் தேவன் ஒருபோதும் வடிவமைக்க மாட்டார். உபாகமம் 25:5,6-ஐ நன்றாகக் கவனித்தோமானால், நெருங்கிய உறவினர்களுக்குள் விவாகம் என்றாலும், அவர்களுக்கு இடையில் விவாகம் செய்வதற்கான தகுதி மற்றும் ஏனைய பிரமாணங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே மணம் புரிதல் வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
நான்காவது, மோவாபியருடன் விவாகத்தில் இணைக்கப்படுதல் நியாயப்பிரமாணத்தின்படி கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது அல்லவா? இஸ்ரவேல் தேசத்தார் மேற்கொண்டு சுதந்தரிக்கும் கானான் தேசத்து ஜனங்களுடன் தான் விவாகம் செய்யக்கூடாது எனத் தடை செய்யப்பட்டிருந்தது; இதில் மோவாப் தேசம் இல்லை (யாத். 34:16; உபா. 7:1-13; யோசுவா 23:12). மேலும், போவாஸ், “யெகோவா தேவன் என் தேவன்” என ஏற்றுக்கொண்ட (1:16, 17), மோவாபியர் வழிபடும் அருவருப்பான காமோசுக்குப் பின்செல்லாத, ஒரு பெண்ணைத் தான் மணம் முடித்தார். (பின்னர், மோவாபியரின் இந்தப் பிரதான தேவர்கள் இஸ்ரவேலுக்குள் பிரச்சனையாவதை எஸ்றா 9:1-2 மற்றும் நெகேமியா 13:23-25-ல் காண்கிறோம்).
சுருக்கம்: I. எலிமெலேக்கு இறந்துபோனான் மற்றும் நகோமி தனித்தவளானாள் (1:1-5). II. நகோமியும் ரூத்தும் பெத்லகேமிற்குத் திரும்புகிறார்கள் (1:6-22). III. போவாஸ் வயல்வெளியில் ரூத்தைச் சந்திக்கிறான்; அவளுக்குத் தயவு பாராட்டுகிறான் (2:1-23). IV. ரூத்தின் விண்ணப்பமும், போவாஸ் அவளை மணக்கச் சம்மதித்தலும் (3:1-18). V. போவாஸ் ரூத்தை முறைப்படி மீட்டெடுத்தல் (4:1-12). VI. போவாஸ் - ரூத் தம்பதியினருக்குத் தேவன் ஒரு மகனைப் பரிசாக அளிக்கிறார் (4:13-17). VII. இஸ்ரவேலின் அரியணை ஏறும் உரிமையைத் தாவீது பெறுகிறார் (4:18-22).