திருத்தப்பட்ட வடிவம்:

தலைப்பு: நியாயாதிபதிகள்

”நியாயாதிபதிகள்” என்னும் மிகப் பொருத்தமான பெயரை இப்புத்தகம் பெற்றுள்ளது. தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தந்த ஒப்பிடமுடியாத தலைவர்களை இது குறிக்கிறது (2:16-18; 17:9; 19:17). சாமுவேலுக்கு முன் தனித்துவம் வாய்ந்த பன்னிரண்டு நியாயாதிபதிகள் எழும்பினர்; பின்னர் ஏலியும் சாமுவேலும் இந்த எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தினர். உன்னத நியாயாதிபதியாகிய கர்த்தரே இவர்களை எழுப்பினார் (11:27). யோசுவா ஜெயம் பெற்ற ஆண்டிலிருந்து (கி.மு. 1398), ஏலி மற்றும் சாமுவேல் நியாயாதிபதிகளாகப் பொறுப்பு வகித்து ராஜாக்களின் காலத்தை (கி.மு. 1043) நிலைநாட்டியது வரை சுமார் 350 ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி ஆசிரியர் என ஒருவரது பெயரும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் யூதர்களின் நூலான 'தல்மூத்', இச்சம்பவங்கள் நிறைவேறின காலத்தில் வாழ்ந்தவரான சாமுவேல், அக்காலகட்டத்து ராஜாங்கத்தின் முறையைத் தொகுத்துத் தந்திருக்கலாம் எனக் கருதுகிறது (1 சாமுவேல் 10:25). தாவீது எருசலேமைக் கைப்பற்றின (கி.மு. 1004) நாட்களுக்கு முந்தைய காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் (2 சாமு 5:6,7); ஏனென்றால், அந்நாள்வரை எபூசியர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் (நியா. 1:21). ஒரு ராஜா ஏற்படுத்தப்பட்டு தேசத்தை ஆளும் காலம் வருவதற்கு முன்பே இப்புத்தகத்தின் சம்பவங்கள் நிறைவேறின (17:6; 18:1; 21:25). சவுல் தன் ராஜ்யபாரத்தை ஆரம்பித்த (கி.மு. 1043) நாட்களுக்குப் பிறகு நியாயாதிபதிகள் புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பின்னணி மற்றும் அமைப்பு யோசுவாவின் புத்தகத்தைப் பின்தொடர்ந்து வரும் ஒரு துயர்நிறைந்த வரலாற்றுப் பதிவு நியாயாதிபதிகள் புத்தகம். யோசுவாவின் காலத்தில், யுத்தத்தில் ஜெயம்பெற்று தேசத்தைச் சுதந்தரிப்பது வரை ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தனர். ஆனால் நியாயாதிபதிகளின் புத்தகத்திலோ, கீழ்ப்படியாதவர்களாகவும், விக்கிரகாராதனை செய்பவர்களாகவும், அநேக இடங்களில் தோல்வியுற்றவர்களாகவும் ஜனங்களைக் காண்கிறோம். நியா. 1:1 - 3:6 வரையுள்ள வசனங்களில் யோசுவா புத்தக நிறைவில் நடந்த சம்பவங்களைக் குறித்து அதிகமாகப் பார்க்கிறோம். நியா. 2:6-9 பகுதியானது யோசுவாவின் மரணத்தையும் (யோசுவா 24:28-31), அவர் அடக்கம் பண்ணப்பட்டதையும் குறித்துப் பேசுகிறது. யோசுவா மரிக்கும் முன்னரே, இஸ்ரவேலர் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனதையும், அதன்பின் வெளிப்படையாகக் காணப்படும் ஏழு தொடர்நிகழ்வுகளையும் இப்புத்தகம் விவரிக்கிறது. பின்னர் கர்த்தரை விட்டு இஸ்ரவேல் முழுவதும் விலகிப்போனதைக் காண்கிறோம்.

இஸ்ரவேலர் ஒழுக்கத்திலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பின்வாங்கிப் போனதற்கு ஐந்து அடிப்படைக் காரணங்கள் உண்டு:

  1. தேசத்திலிருந்து கானானியரைத் துரத்தத் தவறினது (நியா. 1:19, 21, 35),

  2. விக்கிரகாராதனை (2:12),

  3. பொல்லாத கானானியருடன் கலப்புமணம் செய்தது (3:5, 6),

  4. நியாயாதிபதிகளின் வார்த்தைகளுக்குச் செவி கொடாமல் போனது (2:17), மற்றும்

  5. நியாயாதிபதிகளின் மரணத்திற்குப் பின் தேவனிடமிருந்து விலகிச்சென்றது (2:19).

நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய சுழற்சி முறையிலான தொடர்நிகழ்வுகள் இஸ்ரவேலர் வரலாற்றின் இந்த காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன:

  1. இஸ்ரவேலர் தேவனை விட்டுத் தூர விலகுதல் (பாவம்),

  2. தேவன் இஸ்ரவேலரை யுத்தத்தில் தோற்றுப் போக அனுமதிப்பதன் மூலம் அவர்களைச் சிட்சித்து, பணியச் செய்தல் (அடிமைத்தனம்),

  3. இஸ்ரவேலர் தங்களை விடுவிக்கும்படி ஜெபித்தல் (மன்றாட்டு),

  4. உள்ளூர் வாசிகள் மூலமாகவோ அல்லது யுத்தத்தில் சத்துருக்களைத் தோற்கடிக்கும் ஜெயவீரன் மூலமாகவோ "நியாயாதிபதிகளை" எழுப்பி தேவன் அவர்களை விடுவித்தல் (இரட்சிப்பு).

பதினான்கு நியாயாதிபதிகள் எழும்பினர் – அதில் ஆறு பேர் யுத்தத்தை மேற்கொண்டவர்கள் (ஒத்னியேல், ஏகூத், தெபோராள், கிதியோன், யெப்தா மற்றும் சிம்சோன்); இருவர் (ஏலி, சாமுவேல்) ஆவிக்குரிய தலைமைப் பொறுப்பு வகிப்பதில் விசேஷமான முக்கியத்துவம் பெற்றவர்கள். அதேவேளையில் இவ்விருவரிடமும் வேறுபட்ட பண்புகள் காணப்படுகின்றன. 1) ஏலி: ஒரு நியாயாதிபதி மற்றும் பிரதான ஆசாரியர் (இவர் ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லப்படவில்லை), 2) சாமுவேல்: ஒரு நியாயாதிபதி, ஆசாரியர் மற்றும் தீர்க்கதரிசி (இவர் ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார்).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள் நியாயாதிபதிகள் புத்தகம் காலவரிசைப்படி எழுதப்படாமல், கருப்பொருட்களின் அடிப்படையில் எழுதப்பட்டது; இக்கருப்பொருட்களில் தேவனுடைய வல்லமை முதன்மையானதாக இருக்கிறது. மேலும், இஸ்ரவேலர்கள் பாவ வாழ்க்கையுடன் சமரசம் செய்து தேவனை விட்டு விலகினதால் விளைந்த தீயபலன்களிலிருந்து, தேவனுடைய உடன்படிக்கையின் இரக்கம் அவர்களை விடுவிப்பதே இப்புத்தகத்தின் முக்கிய கருப்பொருள் (2:18, 19; 21:25). பாவத்திலிருந்து இரட்சிப்பிற்குள் கடந்து வந்த குறிப்பிட்ட ஏழு காலகட்டங்களில், யோசுவாவினால் பங்கிடப்பட்ட தேசத்தில் வாழ்ந்த தமது ஜனங்களை தேவன் தம்முடைய மனதுருக்கத்தினால் விடுவித்தார் (யோசுவா 13-22).

தேசம் முழுவதும் இஸ்ரவேல் ஜனங்கள் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து போனார்கள்; ஒவ்வொரு திசையிலும் இருந்த தேசத்தின் பகுதிகளைக் குறித்து நமக்குச் சொல்லப்பட்டுள்ளது: தெற்குப்பகுதி (3:7-31); வடக்குப்பகுதி (4:1 - 5:31); தேசத்தின் மையப்பகுதி (6:1 - 10:5); கிழக்குப்பகுதி (10:6 - 12:15); மேற்குப்பகுதி (13:1 - 16:31). அவர்கள் மாம்சீக சுபாவத்தோடு சமரசம் செய்துகொண்டு, எல்லைமீறிச் செய்த பாவங்களால் விளைந்த அந்தகாரக் கேடுகளிலிருந்து, உறுதியுடன் தேவனுடைய வல்லமை இஸ்ரவேலரை விடுவிப்பதைப் பார்க்கிறோம் (யோசுவா 17-21). "அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்து வந்தான்" (21:25) எனும் வசனம் புத்தகத்தின் சுருக்கத்தை விளக்குகிறது.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள் நமது கவனத்தை ஈர்க்கும் முக்கிய சவால்கள்:

  1. ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு அல்லது தன் தேசத்தவருக்கு இழைத்த கொடுஞ்செயல்கள் தேவனுடைய ஒப்புதலைப் பெற்றதா? இல்லையா?

  2. சிலவேளைகளில் தேவனுடைய சித்தத்தையும், வேறுசில வேளைகளில் தங்கள் சுய பாவ வாழ்க்கையையும் பின்பற்றும் தலைவர்களை தேவன் எடுத்துப் பயன்படுத்துவது ஏன்? (உதா: கிதியோன், ஏலி, யெப்தா, சிம்சோன்).

  3. யெப்தா செய்த பொருத்தனையும், அவன் தன் மகளுக்குச் செய்ததையும் எந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்? (11:30-40).

  4. மனுஷன் பாவத்தில் வீழ்ந்த போதும், அவனது தேவைகளைச் சந்திப்பதில் தேவனுடைய ஆளுகையில் உள்ள அவருடைய சித்தத்தை எப்படித் தீர்மானமாக அறிந்து கொள்வது? (14:4).

யாத்திராகமத்திலிருந்து சாலமோனின் நான்காம் வருட காலம் (கி.மு. 967/966) வரை உள்ள இடைவெளி 480 ஆண்டுகள். இக்காலகட்டத்திற்குள், வெவ்வேறு நியாயாதிபதிகள் தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தபடியால், நியாயாதிபதிகளின் மொத்த ஆண்டுகளை இந்தக் கால இடைவெளிக்குள் அமைத்து கணக்கிடுவது பல கேள்விகளை எழுப்புகிறது. நியாயாதிபதிகள் பலர் தேசத்தின் பல இடங்களில் நியாயம் விசாரித்து விடுதலை பெற்றுத் தந்த காலங்கள் ஒன்றுக்கொன்று இணையாக (overlapping) அமைந்திருக்கலாம்; அவர்கள் நியாயம் விசாரித்த காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகச் செல்லவில்லை என்பதே இதற்கு நியாயமான விளக்கமாகும். அப்போஸ்தலர் 13:20-ல் பவுல் குறிப்பிடும் “ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய்” என்பது ஒரு தோராயமான கால அளவாகும்.

சுருக்கம் I. அறிமுகம் மற்றும் சுருக்கம் – இஸ்ரவேலின் கீழ்ப்படியாமை (1:1 - 3:6) அ. கானானியர் மீது முற்றுப்பெறாத யுத்தத்தை மேற்கொள்ளல் (1:1-36) ஆ. சரிவு மற்றும் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தல் (2:1 - 3:6)

II. தெரிந்தெடுக்கப்பட்ட நியாயாதிபதிகளின் வரலாறு – இஸ்ரவேல் விடுவிக்கப்படுதல் (3:7 - 16:31) அ. முதல் காலகட்டம்: ஒத்னியேல் (எதிர்) மெசபோதாமியர்கள் (3:7-11) ஆ. இரண்டாம் காலகட்டம்: ஏகூத் மற்றும் சம்கார் (எதிர்) மோவாபியர்கள் (3:12-31) இ. மூன்றாம் காலகட்டம்: தெபோராள் (எதிர்) கானானியர்கள் (4:1 - 5:31) ஈ. நான்காம் காலகட்டம்: கிதியோன் (எதிர்) மீதியானியர்கள் (6:1 – 8:32) உ. ஐந்தாம் காலகட்டம்: தோலா மற்றும் யாவீர் (எதிர்) அபிமேலேக்குவின் எதிர்ப்புகள் (8:33 – 10:5) ஊ. ஆறாம் காலகட்டம்: யெப்தா, இப்சான், ஏலோன், அப்தான் (எதிர்) பெலிஸ்தியர் மற்றும் அம்மோனியர்கள் (10:6 – 12:15) எ. ஏழாம் காலகட்டம்: சிம்சோன் (எதிர்) பெலிஸ்தியர்கள் (13:1 – 16:31)

III. பின்குறிப்பு: இஸ்ரவேல் தன் கடமையிலிருந்து தவறுதல் (17:1 – 21:25) அ. மீகா மற்றும் தாண் கோத்திரத்தார் (17:1 - 18:31) ஆ. கிபியாவில் நடந்த குற்றம் மற்றும் பென்யமீனுக்கு விரோதமான யுத்தம் (19:1 - 21:25).

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.