“அந்தப்படியே, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5:5).
தாழ்மை என்பது நம்முடைய திருச்சபைக்கும், தனிப்பட்ட வாழ்விற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் தாழ்மையில் குறைவுபடும்போது, தேவனே நமக்கு எதிராக இருக்கிறார். (தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்). இந்த வார்த்தையை கிரேக்க மொழியில் ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு இராணுவத் தளபதி தன்னுடைய எதிராளிக்கு விரோதமாகப் போருக்கு அணிவகுத்து நிற்கும் நிலையைக் குறிக்கிறது.
இரட்சிக்கப்படாத ஒரு மனிதனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட பெருமைக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு, அவன் வாழ்நாளின் இறுதிவரை ஒத்திப்போடப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு விசுவாசி தன் தாழ்மையில் குறைவுபடுவதைத் தேவன் காணும்போது, அவர் மிகவும் துக்கமடைந்து, அவனுக்கு எதிராகச் செயல்படுகிறார். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள எடுக்கும் எந்த முயற்சியையும், அதாவது நாம் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், அங்கீகாரம் பெற வேண்டும் அல்லது நம்மைக்குறித்து உயர்வாக எண்ணிக்கொள்ள வேண்டும் என்கிற எந்தவொரு போக்கையும் அவர் தடுக்கிறவராகவும், எதிர்க்கிறவராகவும் இருக்கிறார்.
ஒரு மனிதன் தன்மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்து, தேவனுடைய உதவியை நாடாதவனாகவும், தன் சுயத்தையே சார்ந்திருப்பவனாகவும் இருக்கும்போது, அவன் ஜெபத்தின் வல்லமையை அங்கீகரிக்காததினால், தேவன் அவனுக்கு எதிராக இருக்கிறார். கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களைத் தேவன் வெறுக்கிறார். இதனாலேயே, அநேகர் ஆசீர்வாதங்களை இழக்கின்றனர்.
தாழ்மைக்கு மூல பாஷையான கிரேக்க மொழியில், ‘சிந்தையில் தாழ்மை’ என்று கூறப்படுகிறது. ஊழியர்களும், மூப்பர்களும் ‘சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக’ நியமிக்கப்படாமல், ‘மந்தைக்கு மாதிரிகளாக’ இருக்கும்படியே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இளம் வயதுள்ளவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறவர்களாய் இருப்பதினால்தான், அப்போஸ்தலனாகிய பேதுரு அவர்களையும் குறிப்பிடுகிறார். “நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து” என்ற இந்த வசனம், பெருமைக்கு எதிரான ஒரு வல்லமையான மருந்தாக இருக்கிறது. நாம் அநேக நேரங்களில் பெருமையுள்ளவர்களாய் இருப்பதால், 'நாம் சொல்வது மட்டும்தான் சரி' என்றும், அதில் மற்றவர்கள் மாறுபட்ட கருத்துத் தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கிறோம். மேலும் “நான் சொல்வதுதான் சிறந்தது” என்று நினைக்கிறோம். இது பெருமையின் மிக மோசமான நிலையைக் காட்டுகிறது. அநேக நேரங்களில், நற்குணங்களைக் கொண்ட இளைஞர்கள் கூட, உலகக் கருத்துக்களைத் தங்கள் மனதில் ஆழமாக ஏற்றுக்கொண்டு, அதனால் நிரப்பப்பட்டு, மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்கக்கூடாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது ஒரு வெட்கத்துக்குரிய காரியமாகவும், தாழ்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறதாகவும் இருக்கிறது. ‘தாழ்மையின் சிந்தையை அணிந்துகொள்ளுங்கள்’ என்று பேதுரு சொல்வதற்குக் காரணம், எப்பக்கத்திலும் யார் நம்மை நோக்கினாலும், தாழ்மை என்கிற அந்தக் கிருபையை அவர்கள் காண வேண்டும் என்பதற்காகவே. தாழ்மை என்கிற வஸ்திரத்தை நாம் அனுதினமும் ஒரு ஆடையைப் போல அணிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
இங்கே, ‘பெருமை’ என்ற விஷத்தை முறித்து, தாழ்மையை வளர்த்துகொள்வதற்கான வழிமுறைகளை நாம் பார்க்கலாம்:
-
எக்காரணத்தைக் கொண்டும் மாம்சத்தைப் பிரியப்படுத்தாதே: இதைக் குறித்ததான எடுத்துக்காட்டுகளை, வளர்ந்த நாடாகிய அமெரிக்க தேசங்களில் நாம் பார்க்கலாம். முக்கியமாக, நல்ல வருமானத்துடன், செல்வச் செழிப்பாக வாழும் ஊழியக்காரர்கள் அங்கு உண்டு. அவர்கள் உழைப்புக்கு மேலேயே அதிக வருவாயைச் சம்பாதிக்கும் பழக்கம் கொண்டவர்களாகிவிட்டனர். ஏன், சீர்திருத்தச் சத்தியத்தைப் போதிக்கும் ஊழியர்கள் மத்தியிலும் இதை நாம் பார்க்கலாம். சத்தியத்தை நன்கு போதிப்பதில் பெயர் பெற்றவர்களாய் இருப்பர்; ஆனால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு மரித்துப் போகிறவர்களாய் இருக்கின்றனர். இங்கே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் கற்றுக்கொண்ட அனைத்தும் அவர்கள் அறிவோடு நின்றுவிட்டதே ஒழிய, நடைமுறை வாழ்வில் அதை அப்பியாசப்படுத்தாதபடி, மதியீனமானவைகளைப் பின்பற்றி, தங்களை வளர்த்துக்கொள்வதே ஆகும். மேலும், செல்வம் அவர்களை மிகைப்படுத்திக்கொள்ளக் காரணமாக அமைந்திருக்கிறது. இது சிறப்பான நிலையையும், திறமையும் உனக்கு வந்ததுபோல் உணரச்செய்கிறது. அளவுக்கு அதிகமான சம்பாத்தியம் மற்றும் ஆடம்பரத்தைக் குறித்து நீ மிகுந்த ஜாக்கிரதையாய் இரு.
-
மற்றவர்களுடைய ஆலோசனையைக் கேட்க எப்பொழுதும் ஆயத்தமாயிரு: உண்மைதான், வேதம் மட்டும்தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. நாம் நம்முடைய வேதத்தின் உபதேசங்களிலும், கோட்பாடுகளிலும் உறுதியாய் இருக்கும்படியாகக் கட்டளையிடப்படுகிறோம். ஆனால், மற்றெல்லா காரியங்களிலும், நாம் மற்றவர்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையைக் காத்துக்கொள்வது மிக அவசியம்.
-
எப்பொழுதும் உன்னைக் குறித்துத் தாழ்வாகவே எண்ணிக்கொள்: “நான் எம்மாத்திரம்? நான் ஒரு குறைவுள்ளவனாகவும், தடுமாறி விழுகிறவனாகவும், என் வாழ்வில் பல காரியங்களைப் புரிந்துகொள்வதில் தோற்றுப்போகிறவனாகவும் இருக்கிறேன்” என்றும், “இந்த விலையேறப்பெற்ற சுவிசேஷத்தைச் சுமந்து செல்ல நான் எம்மாத்திரம்?” என்றும் நம்மைக்குறித்து நாமே சொல்லிக்கொள்ள வேண்டும். நான் அதிக ஜாக்கிரதையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். ஏனென்றால், என்னுடைய எதிராளியான பிசாசானவன், என்னைப் பெருமைக்குள் விழவைக்கவும், தேவனுக்காக என்னை உபயோகப்படுத்தாதபடிச் செய்யவும் செயல்படுகிறவனாய் இருக்கிறான்.
-
விவாதத்தைத் தவிர்த்து கற்றுக்கொள்ள விரும்பு: மேலே குறிப்பிட்டதற்கு அடுத்தபடியாக, நீ சொன்னதினால், அது சரி என்று எந்த ஒரு காரியத்தையும் நிரூபிக்க முயலாதே. எந்த ஒரு காரியத்திலும், நீ சொல்வதுதான் சரியான முடிவு என்று எண்ணாதே. அதைச் சோதித்துப் பார்க்கவும், மறுபரிசீலனை செய்யவும் ஆயத்தமாய் இரு. நாம் அறியாத, கற்றுக்கொள்ள வேண்டிய அநேக காரியங்கள் இவ்வுலகத்தில் உண்டு என்பதை ஏற்றுக்கொள்.
-
சுய புகழ்ச்சியை அறுத்துப்போடு: உன்னை உயர்த்திக் காண்பிக்கிற, “நீ செய்ததற்குரிய அங்கீகாரம் உனக்குக் கிடைக்க வேண்டும்”, “நீ பாராட்டப்பட வேண்டியவன்”, “நீ செய்ததற்கு உனக்கென்று தனி அந்தஸ்து கிடைக்க வேண்டும்” என்று உனக்குள் எழும்புகிற சத்தங்களை அடக்கிப்போடு. உன்னை நீயே உயர்த்திக் காண்பிக்கிற எண்ணங்களை வேரோடு அறுத்துப்போடு.
-
கிறிஸ்துவின் தாழ்மையை நோக்கிப்பார்: அவர் உண்மையாகவே, தொடர்ச்சியாகத் தன்னையே தாழ்த்தினவராய்க் காணப்பட்டார். ஆம், பேதுரு, பவுல் மற்றும் அநேகர் மரண பரியந்தம் தங்களைத் தாழ்த்தினார்கள். தற்காலத்தில் காணப்படும் புகழ்பெற்ற போதகர்கள் கூட, இப்பரிசுத்தவான்களைப் பின்பற்றுவதுமில்லை, அவர்களைப்போல வாழ்வதுமில்லை. நாம் எவ்வாறு இருக்கிறோம்?
-
சமூக வலைதளங்களில் ஜாக்கிரதையாயிரு: நான் உனக்கு உறுதியாகக் கூறுகிறேன். சமூக வலைதளங்களில் உங்களுடைய ஞானத்தை வெளிப்படுத்தும்படியாகச் சொந்தக் கருத்துக்களை அதிகமாகப் பதிவிட வேண்டாம். ஏனென்றால், கடந்த பத்து வருடங்களில் எனக்குத் தெரிந்த அநேகர் - அவர்கள் ஒருவேளை ட்விட்டர் (Twitter) கணக்கு வைத்திருப்பவர்களாக இருக்கலாம் அல்லது சொந்தமான வலைப்பதிவு (Blog) வைத்திருக்கலாம் - இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்தக் கருத்துக்களைத்தான் அதிகமாக வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கின்றனர். இதனால் தங்களுக்குக் கிடைக்கும் பாராட்டையும், வரவேற்பையும் வைத்துத் தங்களைத் தாங்களே பெருமைக்குள்ளாகத் தள்ளிக்கொள்கின்றனர். இதில் நாம் எவ்வளவு அதிக ஜாக்கிரதையும், விழிப்பும் கொண்டவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா?
நாம் மேலே கூறியவைகளின் தொகுப்பாக, மற்றவர்கள் நம்மைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இல்லாமல், மற்றவர்களுக்கு உபயோகரமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்க நாம் வாஞ்சிப்போம். தாழ்மையின் சிந்தையை அணிந்துக்கொள்வோம்.