உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?
ஆசிரியர்: J.C. ரைல் (1816 - 1900)
தமிழாக்கம்: லூக்கா கண்ணன்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

இது மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. இயேசு கிறிஸ்து சொன்னார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்" (யோவா 3:3). “நான் இந்தத் திருச்சபையைச் சார்ந்தவன், ஆகவே நான் ஒரு கிறிஸ்தவன்” என்ற பதில் போதுமானதல்ல. யோவானுடைய முதலாம் நிருபத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் மறுபடியும் பிறந்திருப்பதற்கான அடையாளங்கள், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடத்தில் காணப்படுவதில்லை.

1. பாவப் பழக்கவழக்கங்களை ஒழித்தல்

முதலாவதாக, யோவான் எழுதுகிறார்: “தேவனால் பிறந்தவன் பாவம் செய்யான்” (1 யோவா 3:9, 5:18).

மறுபடியும் பிறந்த ஒரு மனிதன் அல்லது மறுபிறப்படைந்தவன், பாவத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் வழக்கமாகக் கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னுடைய முழு இருதயத்தோடும், முழுச் சித்தத்தோடும், முழுச் சம்மதத்தோடும் பாவம் செய்வதில்லை. அவனது கடந்த கால வாழ்க்கையில், தன்னுடைய செய்கைகள் பாவமா இல்லையா என்று சிந்தித்திராத நாட்கள் இருந்திருக்கலாம்; பாவம் செய்தபிறகு அதற்காகத் துக்கப்படாமல் இருந்திருக்கலாம். அவனுக்கும் பாவத்திற்கும் இடையில் எந்த ஒரு போராட்டமும் இருந்ததில்லை; அவர்கள் நண்பர்களாயிருந்தார்கள்.

ஆனால், உண்மையான கிறிஸ்தவன் பாவத்தை வெறுக்கிறான், அதற்கு விலகி ஓடுகிறான், அதற்கு எதிராகப் போரிடுகிறான். அதைத் தன்னுடைய மகா பெரிய வியாதியாகக் கருதுகிறான். பாவத்தின் பாரம் அவனை அழுத்தும்பொழுது அவன் வேதனையடைகிறான்; அதன் தாக்கத்திற்குட்பட்டு விழுந்துபோகும்பொழுது அதற்காக மனஸ்தாபப்படுகிறான். மேலும் அதிலிருந்து முழுவதுமாக விடுதலையாக ஏங்குகிறான். பாவம் அவனை இனி மகிழ்விப்பதில்லை; அவன் மிக அதிகமாக வெறுக்கும் ஒரு மோசமான காரியமாக அது இருக்கிறது. ஆனாலும், பாவம் அவனுக்குள் இருப்பதை அவனால் தவிர்க்க இயலாது.

நமக்குள் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் (1 யோவா 1:8). ஆனால், "நான் பாவத்தை வெறுக்கிறேன், பாவம் செய்யாமல் இருப்பதே என் ஆத்துமாவின் மிகப்பெரிய விருப்பம்" என்று அவனால் சொல்ல முடியும். ஆனாலும், தவறான எண்ணங்கள் அவன் மனதுக்குள் நுழைவதையோ, அவனது சொல்லிலும் செயலிலும் ஏற்படும் குறைவுகளையோ அவனால் முற்றிலும் தடுக்க இயலாது. "நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்" (யாக் 3:2) என்பதை அவன் அறிந்திருக்கிறான். இருப்பினும் தேவனுடைய பார்வையில், இந்தக் காரியங்கள் அவனை மனஸ்தாபப்படுத்தித் துக்கப்பட வைக்கின்றனவே ஒழிய, அவன் முழு சம்மதத்துடன் அதைச் செய்யவில்லை என்பதை அவனால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த அப்போஸ்தலன் உங்களைக் குறித்து என்ன சொல்லுவான்? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

2. இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசித்தல்

இரண்டாவதாக, யோவான் எழுதுகிறார்: "இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கின்ற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்" (1 யோவா 5:1).

மறுபடியும் பிறந்த ஒரு மனிதன், தன்னுடைய ஆத்துமாவை இரட்சிக்க வல்ல இயேசு கிறிஸ்துவே ஒரே இரட்சகர் என்றும், பிதாவாகிய தேவனால் நியமிக்கப்பட்டிருக்கும் தெய்வீக நபர் இவரே என்றும், இவரைத் தவிர வேறு இரட்சகர் எவருமில்லை என்றும் விசுவாசிக்கிறான். அவன் இரட்சிப்பிற்குத் தகுதியற்ற அபாத்திரன் என்பதைத் தவிர, தன்னிடத்திலே மேன்மையாகச் சொல்லிக்கொள்ள வேறு ஒன்றையும் காணான். அவனுக்குக் கிறிஸ்துவின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது; தன்னுடைய பாவங்களெல்லாம் அவரில் மன்னிக்கப்பட்டுவிட்டன என்பதை அவன் விசுவாசிக்கிறான். சிலுவையில் கிறிஸ்து செய்து முடித்த மீட்பின் பணியினிமித்தமும், அவருடைய மரணத்தினிமித்தமும், தேவனுடைய பார்வையிலே கிறிஸ்துவின் நீதி தன்மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்றும், தான் மரணத்தையும் நியாயத்தீர்ப்பையும் எந்தப் பயமும் இல்லாமல் எதிர்நோக்கலாம் என்றும் அவன் விசுவாசிக்கிறான் (ரோமர் 4:20-5:1; 8:1).

அவனுக்குப் பயங்களும் சந்தேகங்களும் இருக்கலாம். சில நேரங்களில் தனக்கு விசுவாசமே இல்லாததுபோலத் தோன்றுவதாக அவன் சொல்லலாம். ஆனால் கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் நம்ப அவன் தயாராயிருக்கிறானா என்று அவனிடத்தில் கேட்டுப்பாருங்கள்; அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம். நித்திய ஜீவனுக்கான அவனது நம்பிக்கையைத் தன்னுடைய சொந்த நற்குணத்தின் மீதோ, நற்செயல்கள் மீதோ, தன்னுடைய ஜெபத்தின் மீதோ அல்லது தன்னுடைய திருச்சபையின் மீதோ வைப்பானா என்று கேட்டுப்பாருங்கள்; அவனுடைய பதிலை நீங்களே கவனியுங்கள்!

இந்த அப்போஸ்தலன் உங்களைக் குறித்து என்ன சொல்லுவான்? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

3. நீதியை நடப்பித்தல்

மூன்றாவதாக, யோவான் எழுதுகிறார்: “நீதியைச் செய்கிற எவனும் அவராலே (தேவனால்) பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்” (1 யோவா 2:29).

மறுபடியும் பிறந்த ஒரு மனிதன், ஒரு பரிசுத்தவான். தேவனுடைய சித்தப்படி வாழவும், தேவனைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்யவும், தேவன் வெறுக்கும் காரியங்களைச் செய்யாதிருக்கவும் அவன் மிகவும் பிரயாசப்படுகிறான். அவன் தொடர்ச்சியாகக் கிறிஸ்துவையே தன்னுடைய முன்மாதிரியாகவும் இரட்சகராகவும் பார்க்கிறான்; அவர் கட்டளையிட்டிருக்கிற எல்லாவற்றையும் கைக்கொள்வதன் மூலம் தான் கிறிஸ்துவின் சிநேகிதன் என்று நிரூபிக்க விரும்புகிறான்.

அவன் தான் பரிபூரணமானவன் அல்ல என்பதை அறிந்திருக்கிறான். அவனுக்குள் இருக்கும் பலவீனம் நிறைந்த தவறுகளை அவன் உணர்ந்திருக்கிறான். அவனுக்குள்ளாகவே இருக்கிற ஒரு தீமை (பாவ சுபாவம்), தேவனுடைய கிருபைக்கெதிராகத் தொடர்ச்சியாகப் போரிட்டு, அவனைத் தேவனைவிட்டுத் தூரமாக இழுத்துச்செல்வதை அவன் காண்கிறான். அது அவனில் இருப்பதை அவனால் தவிர்க்க முடியாவிட்டாலும், அதற்கு அவன் ஒருபோதும் சம்மதிப்பதில்லை.

சில நேரங்களில் அவன் மிகவும் சோர்ந்துபோய், "நான் ஒரு கிறிஸ்தவன்தானா?" என்கிற கேள்வி அவன் மனதுக்குள் எழலாம். இருப்பினும் ஜான் நியூட்டனுடன் சேர்ந்து அவனும் இப்படியாகச் சொல்ல முடியும்: “நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை; பரலோகத்தில் நான் எப்படி இருப்பேன் என்று நம்புகிறேனோ, அப்படியும் இல்லை – ஆனால் நான் முன்னர் எப்படி இருந்தேனோ அப்படி இப்போது இல்லை; இப்பொழுது நான் இருப்பது தேவனுடைய கிருபையினாலேயே”.

இந்த அப்போஸ்தலன் உங்களைக் குறித்து என்ன சொல்லுவான்? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

4. சகோதரர்களை நேசித்தல்

நான்காவதாக, யோவான் எழுதுகிறார்: “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவா 3:14).

மறுபடியும் பிறந்த ஒருவன், கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களின் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருக்கிறான். பரலோகத்திலிருக்கிற அவனுடைய பிதாவைப் போல, ஒரு பொதுவான அன்பினால் எல்லார்மேலும் அன்புகூருகிறான். ஆனால், தன்னைப் போலவே கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மீது அவன் தனிப்பட்ட சிறந்த அன்பைக் கொண்டிருக்கிறான். அவனுடைய ஆண்டவராகிய இரட்சகரைப் போல, மோசமான பாவிகளையும் அவன் நேசிக்கிறான், அவர்களுக்காகப் பரிதபிக்கிறான்; ஆனால் விசுவாசிகளின் மீது ஒரு வித்தியாசமான அன்பைக் கொண்டிருக்கிறான்.

அவர்களெல்லாரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்பதை அவன் உணர்கிறான். ஒரே எதிரிக்கு எதிராகப் போர்செய்யும் அவர்கள், அவனது சக போர்வீரர்கள். ஒரே பாதையில் பயணம் செய்யும் அவர்கள், அவனது சக பிரயாணிகள். அவன் அவர்களைப் புரிந்துகொள்கிறான், அவர்கள் அவனைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் இவனைக் காட்டிலும் தகுதியிலும், செல்வத்திலும், இடத்திலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இவனது பிதாவின் குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறார்கள்; எனவே அவர்களை நேசிக்காமல் இவனால் இருக்க முடியாது.

இந்த அப்போஸ்தலன் உங்களைக் குறித்து என்ன சொல்லுவான்? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

5. உலகத்தை ஜெயித்தல்

ஐந்தாவதாக, யோவான் எழுதுகிறார்: “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்” (1 யோவா 5:4).

மறுபடியும் பிறந்த ஒருவன், "எது சரி, எது தவறு" என்ற தன்னுடைய நிலைப்பாட்டை உலகத்தின் கருத்தை வைத்து மதிப்பிடமாட்டான். உலகத்தின் வழிகளுக்கும், யோசனைகளுக்கும், வழக்கங்களுக்கும் எதிராகச் செல்வதற்கு அவன் தயங்கமாட்டான். மற்ற மனிதர்கள் என்ன நினைப்பார்கள், என்ன சொல்லுவார்கள் என்பதைக் குறித்து அவனுக்குக் கவலையில்லை. அவன் இந்த உலகத்தின் மீதான ஆசையை மேற்கொண்டு வெற்றிபெறுகிறான். பலருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதுபோல் தோன்றும் காரியங்கள் அவனை மகிழ்விப்பதில்லை. நித்திய ஜீவனை உடையவனாக இருக்கும் அவனுக்கு, அவைகள் மதிப்பில்லாதவைகளாகவும், பயனற்றவைகளாகவும் தோன்றும்.

மனிதரால் வரும் புகழ்ச்சியைவிட, தேவனால் வரும் புகழ்ச்சியையே அவன் விரும்புகிறான். மனிதனைத் துக்கப்படுத்துவதைவிட, தேவனைத் துக்கப்படுத்துவதற்கே அவன் பயப்படுகிறான். அவன் புகழப்படுகிறானா அல்லது தூற்றப்படுகிறானா என்பது அவனுக்கு முக்கியமல்ல; அவனது பிரதான நோக்கம் தேவனைப் பிரியப்படுத்துவதே.

இந்த அப்போஸ்தலன் உங்களைக் குறித்து என்ன சொல்லுவான்? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

6. தன்னைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ளுதல்

ஆறாவதாக, யோவான் எழுதுகிறார்: “தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்” (1 யோவா 5:18).

மறுபடியும் பிறந்த ஒருவன், தன்னுடைய ஆத்துமாவைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருக்கிறான். அவன் பாவத்தைத் தவிர்க்க முயற்சி செய்வதுமட்டுமல்லாமல், பாவத்திற்கு அவனைத் தூண்டுபவைகளையும் தவிர்க்கிறான். அவனுடன் தொடர்பில் இருப்பவர்களைக் குறித்தும் அவன் விழிப்பாயிருக்கிறான். தீய சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் என்பதையும், ஆரோக்கியமான உடலிலும் நோய் தொற்றிக்கொள்வதைப்போல, நன்மையை விட தீமைக்கே ஈர்ப்பு சக்தி அதிகம் என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். தன்னுடைய நேரத்தை செலவழிப்பதைக் குறித்து அவன் கவனமாயிருக்கிறான்; அதைப் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டுமென்பதே அவனது பிரதான நோக்கம்.

சோதனையை எதிர்கொள்ள ஆயத்தமாக, தன்னுடைய சர்வாயுதவர்க்கத்தை எப்பொழுதும் தரித்துக்கொண்டவனாக, எதிரி நாட்டில் வாழும் ஒரு போர்வீரனைப்போல அவன் வாழ விரும்புகிறான். விழித்திருந்து, தாழ்மையுடன், ஜெபத்தில் தரித்திருப்பதே அவனது மகிழ்ச்சி.

இந்த அப்போஸ்தலன் உங்களைக் குறித்து என்ன சொல்லுவான்? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

முடிவுரை

இவைகளே மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவனின் ஆறு முக்கியக் குணாதிசயங்கள்.

இந்தக் குணாதிசயங்களின் ஆழத்திலும், வெளிப்பாட்டிலும், பலதரப்பட்ட மக்களிடையே வித்தியாசங்கள் காணப்படலாம். சிலரில் இவைகள் மங்கிப்போய்க் காணப்படுகின்றன. மற்றவர்களில் இவைகள் தெளிவாக, மறுக்க முடியாத விதத்தில், எவராலும் எளிமையாக வாசிக்கப்படக் கூடியவைகளாக உள்ளன. ஒவ்வொரு தனி நபரிலும், சில குணாதிசயங்கள் மற்றவைகளைவிட அதிகமாகக் காணப்படலாம். மிக அரிதாகவே எல்லாக் குணாதிசயங்களும் சம அளவில் ஒரு நபரில் காணப்படுகின்றன.

ஆனாலும், எல்லாச் சலுகைகளுக்கும் பிறகும், தேவனால் பிறந்திருப்பதற்கான அடையாளமாக இந்த ஆறு குணாதிசயங்களையும் வேதம் நமக்குத் தெளிவாக வரைகிறது.

இந்தக் காரியங்களுக்கு நாம் எப்படிப் பதிலளிக்கப் போகிறோம்? நாம் தர்க்கரீதியாக ஒரே ஒரு முடிவுக்குத்தான் வர முடியும் – மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே இந்த ஆறு குணாதிசயங்களையும் கொண்டிருக்க முடியும்; இந்தக் குணாதிசயங்களைக் கொண்டிராதவர்கள் மறுபடியும் பிறந்தவர்களல்ல. இது போன்ற ஒரு முடிவுக்குத்தான் நாம் வரவேண்டுமென்று யோவான் அப்போஸ்தலன் விரும்புகிறார்.

உங்களிடத்தில் இந்தக் குணாதிசயங்கள் காணப்படுகின்றனவா? நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?

 

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.