உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

தனிப்பட்ட பரிசுத்தம்
ஆசிரியர்: ஆர்தர் W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3:30 நிமிடங்கள்

"யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." — எபிரெயர் 12:14

"ஒரு விசுவாசியின் இறுதியான மகிமைப்படுத்தலுக்குத் தனிப்பட்ட பரிசுத்தம் தேவையில்லை என்ற கருத்து, வேதாகமத்தின் ஒவ்வொரு நீதியுள்ள கட்டளைகளுக்கும், ஒவ்வொரு கருத்துக்களுக்கும் நேரடியாக எதிரானது." — அகஸ்டஸ் டோப்லாடி

ஆதாமின் வீழ்ச்சியின் மூலம் மனிதகுலம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது சுபாவத்தின் தூய்மையையும் இழந்தது. எனவே, நாம் தேவனுடன் சமாதானம் பெறுவதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளான மனிதனும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில், தனிப்பட்ட பரிசுத்தம் இல்லாமல், "ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்க முடியாது" (எபிரெயர் 12:14). "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே" (1 பேதுரு 1:15-16). நாம் பரிசுத்தமடையாவிட்டால் தேவனின் தன்மையோடு இணைய முடியாது; அவருக்கும் நமக்கும் இடையே எந்தவொரு ஐக்கியமும் இருக்க முடியாது.

ஆனால், ஒரே நேரத்தில் ஒருவர் பாவமுள்ளவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்க முடியுமா? உண்மையான கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் அதிகமான மாம்ச இச்சையும், அசுத்தமும், தீமையும் இருப்பதைக் கண்டு, தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது கடினம் என்று கருதுகிறார்கள். 'நீதிமானாக்கப்படுதல்' என்ற சத்தியமானது, நாம் நம்மில் பரிசுத்தம் இல்லாதவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவின் நீதியினால் நாம் நீதிமானக்கப்படுகிறோம் என்று போதிக்கிறது. இருப்பினும், வேதம் தெளிவாகச் சொல்வது என்னவென்றால், தேவனால் நீதிமானாக்கப்பட்டவர்கள் பரிசுத்தமாய் வாழ்வார்கள். அவர்களுக்குள் இருக்கும் பாவ சுபாவம் முழுமையாக நீக்கப்படவில்லை என்றாலும் (விசுவாசி பாவத்தோடு தொடர்ந்து போராடினாலும்), அவர்கள் பரிசுத்தமாய் வாழவே வாஞ்சிப்பார்கள்.

"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8). நமது ஆவியின் மறுபிறப்பானது, நமது எண்ணங்களையும், ஆசைகளையும், சித்தத்தையும் தேவனுடைய சித்தத்திற்கு இசைவானதாக மாற்ற வேண்டும். இது வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் இணக்கமானதாகவும், பாவத்திலிருந்து விலகியும் இருக்க வேண்டும். இந்தச் செயல் விசுவாசத்திலிருந்தும் அன்பிலிருந்தும் வருகிறது. நமது எல்லாச் செயல்களும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, கர்த்தரின் மகிமைக்காகவும், நற்செய்தியின் அடிப்படையிலும் அமைந்திருக்க வேண்டும். விசுவாசியின் இருதயத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவர், அவர்களின் வெளிப்புறச் செயல்களைப் பரிசுத்தப்படுத்தி, பாவ இருள் இல்லாத பிதாவிடம் அவர்களுடைய கிரியைகளை ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் மாற்றுகிறார்.

ஒரு விசுவாசிக்கு முழுமையான பூரணப் பரிசுத்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இருப்பது உண்மைதான்; அதேநேரம் அவரிடமிருந்து பெறப்பட்ட பரிசுத்த சுபாவமும் அந்த விசுவாசியிடம் காணப்பட வேண்டும். சிலர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முழுமையான கீழ்ப்படிதலைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்; ஆனால் தங்களின் தனிப்பட்ட பரிசுத்தத்தைப் பற்றிய கவலையோ அக்கறையோ இல்லாமல் இருக்கிறார்கள். "இரட்சிப்பின் வஸ்திரங்களை அணிந்துகொண்டு நீதியின் சால்வையால் மூடப்பட்டிருப்பதைப்" பற்றி அவர்கள் அதிகம் பேசுகிறார்கள் (ஏசாயா 61:10). ஆனால், "மனத்தாழ்மையையும்" (1 பேதுரு 5:5), "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (கொலோசெயர் 3:12,13) போன்ற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கோ எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள்.

இன்று அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட பரிசுத்தம் இல்லையென்றாலும், இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதும், இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஒளியின் வேஷத்தைத் தரித்துக்கொள்ளும் சாத்தான், உன்னதமான விசுவாசப் சத்தியங்களின் ஒரு பக்கத்தை மட்டும் காண்பித்து அநேக ஆத்மாக்களை ஏமாற்றுகிறான். ஆனால் அவர்களின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்படும் போது அதன் மதிப்பு என்ன? பரலோகத்தில் நுழைவதற்கு அவர்களுடைய விசுவாசம் தகுதியற்றதாய், வல்லமையற்றதாய், உயிரற்றதாய், பயனற்றதாய் இருக்கிறது.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விசுவாசமானது, “தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவு” (தீத்து 1:1). இது இருதயத்தைத் தூய்மைப்படுத்தும் விசுவாசம் (அப்போஸ்தலர் 15:9); நம்மில் இருக்கும் பாவத்திற்காகத் துக்கப்படுகிற விசுவாசம்; மறுபேச்சில்லாமல் தேவனுக்குக் கீழ்ப்படிதலை உண்டாக்குகிற விசுவாசம் (எபிரெயர் 11:8). எனவே, நரகத்திற்கு வழிவகுக்கும் பாதைகளைப் பின்பற்றிக்கொண்டே, தாங்கள் தினமும் பரலோகத்தை நெருங்குகிறோம் என்று நினைப்பவர்கள், தங்களைத்தாங்களே ஏமாற்றுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தமில்லாமல் தன்னைத் தேவனின் பிள்ளை என்று அறிக்கையிடுகிறவன், அவரை ஒரு பரிசுத்தமற்ற தேவனாக உலகத்தாருக்குக் காட்டி, அவருக்கு மிகுந்த கனவீனத்தைக் கொண்டுவருகிறான். இரட்சிக்கும் விசுவாசத்தின் உண்மையான தன்மை, சோதனையின் மத்தியிலும் நம்மில் தேவபக்தியான ஆவிக்குரிய மலர்களையும், கனிகளையும் உற்பத்தி செய்யும்போதே நிரூபிக்கப்படுகிறது.

கிறிஸ்துவில், தேவன் தமது மக்கள் எதை நோக்கிப் பிரயாசப்பட வேண்டும் என்ற நீதியின் தரத்தை வைத்துள்ளார். அதையே அவர்கள் லட்சியமாக வைத்துப் பின்பற்றும்படி தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய வாழ்க்கையில் முழுமையான கீழ்ப்படிதல் மூலமாக, நம்மில் இயேசுகிறிஸ்துவை மகிமையாகப் பிரதிபலிக்கும்படியாக தேவன் எதிர்பார்க்கிறார். மகிமையான கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக்கொண்டு, இந்த உலகத்தில் மனிதனாக வந்து, நமக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அப்படியிருக்க, நாம் கீழ்ப்படிதல் மூலமாகவும், பரிசுத்தமாகுதல் மூலமாகவும் நாமே அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பது எவ்வளவு நியாயமானது!

"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலிப்பியர் 2:5). அவர் நமக்கு முடிந்தவரை நெருக்கமாக வந்தார், எனவே நாமும் முடிந்தவரை அவரிடம் நெருக்கமாகச் செல்ல முயற்சிப்பது எவ்வளவு நியாயமானது! "என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" (மத்தேயு 11:29). "கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்" (ரோமர் 15:3) இருந்ததுபோல, நாமும் நம்மை வெறுத்து, நமது சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்றுவது எவ்வளவு அவசியம் (மத்தேயு 16:24). ஏனெனில் அவ்வாறு செய்யாமல் நாம் அவருடைய சீஷர்களாக இருக்க முடியாது (லூக்கா 14:27). நாம் கிறிஸ்துவுடன் மகிமையில் ஒத்திருக்க வேண்டுமென்றால், முதலில் பரிசுத்தத்தில் அவரோடு ஒத்திருக்க வேண்டியது அவசியம்! "அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்" (1 யோவான் 2:6). "கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநீதியை விட்டு விலகக்கடவன்" (2 தீமோத்தேயு 2:19). கிறிஸ்துவின் ஜீவனைத் தரித்துக்கொள்ளுங்கள், அல்லது கிறிஸ்துவின் நாமத்தை விட்டுவிடுங்கள்!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.