மனிதனுடைய இருதயம், இறைவனுடைய வழிகளையும் கற்பனைகளையும் விட்டு விலகி, எப்பொழுதும் அவருடைய திட்டங்களுக்கும் செயல்களுக்கும் எதிராகவே இருக்கிறது. இதைத்தான் வேதம் 'பாவம்' என்று அழைக்கிறது. அப்படியானால், யாரெல்லாம் பாவம் செய்திருக்கிறார்கள்? நான், நீங்கள் மற்றும் உலகத்திலுள்ள அனைவரும்! “எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்” (ரோமர் 3:23) என்று வேதம் கூறுகிறது.
பாவத்தின் சம்பளம் மரணம் என்றும், நாம் அனைவரும் நம்முடைய பாவங்களுக்காகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் வேதம் எச்சரிக்கிறது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவங்களுக்காக நித்திய காலமாக தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.
ஆனால், தேவன் பாவிகளை நேசிக்கிறார். நம்மை அந்தப் பாவத்திலிருந்து மீட்டு, பாதுகாத்து, நமக்குத் தூய்மையான புதிய வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தருகிறார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று ஆண்டவர் தம்முடைய வார்த்தையில் கூறுகிறார். இதைத்தான் 'பாவமீட்பு' அல்லது 'பாவமன்னிப்பு' என்று அழைக்கிறோம்.
மனுக்குலத்திற்கு இந்தப் பாவமீட்பாகிய மன்னிப்பை, தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் இலவசமாய்த் தருகிறார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). பாவம் அறியாத தூயவராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை சிலுவையில் சுமந்து தீர்த்தார்.
இன்றைக்குப் பலர், இந்தப் பாவமன்னிப்பைப் பல நற்செயல்கள் செய்வதால் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். வேறு சிலர், நாம் நல்லவர்களாய் வாழ்வதால் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் எபேசியர் 2:8,9 சொல்கிறது: “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” ஆம், தேவன் தரும் இந்த இலவசமான பாவமன்னிப்பை நாம் நம்முடைய நற்செயல்களால் (கிரியைகளால்) பெற்றுக்கொள்ள முடியாது.
இந்த விலைமதிப்பில்லா மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரே வழி, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை (விசுவாசம்) வைப்பது மட்டுமே! “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9) என்று வேதம் வாக்குறுதி அளிக்கிறது.
உண்மையான விசுவாசம் என்பது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று ஏற்றுக்கொண்டு, அவர் உங்களுடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்தார் என்பதை நம்புவதே. இந்த நம்பிக்கை உங்களை ஒரு புதிய வாழ்க்கைக்கு நேராக வழிநடத்திச் செல்லும். இந்த உலகம் தரக்கூடாத சந்தோஷத்தையும் சமாதானத்தையும் உங்கள் உள்ளம் அனுபவிக்கும்! ஒரு புதிய இலக்கை நோக்கி உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடரும்.
இந்த இயேசு கிறிஸ்துவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், விசுவாசத்தோடு இந்தச் சிறிய ஜெபத்தைச் சொல்லுங்கள்:
“அன்புள்ள ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை அறிக்கையிடுகிறேன். இயேசு கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், எனக்காக நித்திய வாழ்க்கையைக் கொடுக்கப் போகிறார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய பாவங்களை மன்னித்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். எனக்குப் புதிய வாழ்க்கையை அளித்ததற்காக உமக்கு நன்றி. இந்த நாள் முதல் நான் உம்மை முழுமனதோடு பின்பற்றுவேன். அதற்கான வழிகளில் என்னை நடத்தும். இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன் பிதாவே, ஆமென்.”
இந்த ஜெபத்தை நீங்கள் உண்மையாகவே செய்திருப்பீர்கள் என்றால், இயேசு உங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்துவிட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்! இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிய, எங்களைத் தொடர்புகொள்ளவும்...