திருச்சபையைப்பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது?
கிறிஸ்தவக் குழுக்களிடம் திருச்சபையைக் குறித்த கேள்வியை எழுப்பும்போது நீங்கள் மாறுபட்ட பதில்களைப் பெறுவீர்கள். சிலர், "நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம்; ஆனால் திருச்சபையை நேசிப்பதில்லை" என்பார்கள். வேறு சிலர், "நாங்கள் கண்டிப்பாக திருச்சபையை நேசிக்கிறோம்" எனப் பதிலளிப்பார்கள்.
திருச்சபை தேவனால் ஏற்படுத்தப்பட்டது. அது குறைவுள்ள மனிதர்களின் ஐக்கியமாக இருக்கிறது. அவர்கள் தேவனுடைய நோக்கத்தையும் திட்டத்தையும் பூமியில் நிறைவேற்றுபவர்கள். திருமறை திருச்சபையைப் பற்றிப் போதிக்கும்போது, அது ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவில் வளர்வதற்கு இன்றியமையாதது என்னும் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுகிறோம். ஒரு கிளை மரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வளர்வதுபோல, நாமும் திருச்சபையுடன் இணைக்கப்பட்டு இருக்கும்போதுதான் வளர்ச்சியைக் காணமுடியும்.
வேதத்தில் திருச்சபை:
பழைய ஏற்பாட்டு வாழ்க்கையிலும் ஆராதனையிலும் புதிய ஏற்பாடு திருச்சபையைக்குறித்து என்ன போதிக்கிறது என்பதை நாம் பார்க்கும்முன், முதலில் பழைய ஏற்பாடு திருச்சபையைக்குறித்து என்ன போதிக்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாக இருக்கிறது.
தேவன் மோசேயை ஒரு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டச் சொன்னார். தேவனுடைய பிரசன்னம் தமது மக்கள் நடுவே இருப்பதைப் பிரதிபலிக்கும் விதமாக அது அமைந்தது. அந்த ஆசரிப்புக் கூடாரமும், பின்பு கட்டப்பட்ட தேவாலயமும், தேவன் ஏற்படுத்தின பலிமுறைமைகளையும் பண்டிகைகளையும் ஆசரிக்கும் இடங்களாக இருந்தன. ஆசரிப்புக் கூடாரமும் தேவாலயமும், தேவனைப்பற்றியும் அவருடைய சித்தத்தைப்பற்றியும் உபதேசிக்கவும் போதிக்கவுமான இடமாக இருந்து வந்தன. ஆசரிப்புக் கூடாரத்திலும், தேவாலயத்திலுமிருந்து இஸ்ரவேல் மக்கள் தேவனை மிகுந்த சத்தத்தோடும் மகிழ்ச்சியோடும் சங்கீதங்களால் போற்றிப் பாடியும், ஆராதித்தும் வந்தனர்.
இஸ்ரவேல் மக்கள் வசிக்கும் பாளையத்தின் நடுவில் ஆசரிப்புக் கூடாரம் இருக்கவேண்டும் என்பது தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் ஒன்று. பின், எருசலேமில் தேவாலயம் இருந்த இடமும் இஸ்ரவேல் தேசத்தின் மையமாகவே கருதப்பட்டது. ஆசரிப்புக் கூடாரமும் தேவாலயமும் புவியியல் அடிப்படையில் இஸ்ரவேல் தேசத்தின் மையமாக மட்டுமல்லாது, அவர்களின் ஆன்மிக மையமாகவும் கருதப்பட்டது. ஒரு சக்கரத்தின் மையத்திலிருந்து பரந்துவிரியும் ஆரக்கால்கள் போல, இந்த ஆராதனை மையங்களில் நடந்த அனைத்தும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கவேண்டும்.
கிறிஸ்துவிலும் சுவிசேஷங்களிலும்:
இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்து, பின் பெந்தேகோஸ்தே நாள் வரும்வரை திருச்சபை அதிகாரப்பூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை. இருப்பினும், சுவிசேஷங்களிலிருந்து திருச்சபையைப் பற்றிய அநேக காரியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். அதிலிருந்து மூன்று காரியங்களைக் கவனிப்போம்.
முதலாவதாக, "இந்தக்கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" (மத்தேயு 16:18) என்று இயேசு அறிவிப்பதைப் பார்க்கிறோம். இங்கே "வாசல்கள்" என்பது நரகத்தின் வல்லமையைக் குறிப்பதாக இருக்கலாம். அந்த "வாசல்கள்" என்பதை இயேசுவோடு எந்தவகையிலும் ஒப்பிட முடியாது.
இரண்டாவதாக, இயேசு தம் சீஷர்களுக்கு மத்தேயு 28:16-20 வசனங்களில் மாபெரும் பொறுப்பை ஒப்புக்கொடுக்கும்போது, திருச்சபையின் ஊழியப்பணி என்ன? அதன் இருத்தலின் நோக்கம் என்ன? போன்றவற்றையும் கையளிக்கிறார். திருச்சபை உலகினுள் செல்லும்போது, அது சீஷர்களை உருவாக்க அழைக்கப்பட்டிருக்கிறது. புதிய சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதும், கிறிஸ்து கட்டளையிட்ட யாவையும் அவர்களுக்குப் போதிக்கவும் திருச்சபையின் வேலையாக இருக்கிறது. மேற்கூறிய இந்தப் பணிகளே ஒவ்வொரு ஸ்தல சபையின் செயல்பாடுகளையும், வாழ்க்கையையும் பிரதிபலிக்க வேண்டும்.
மூன்றாவதாக, யோவான் 17-ம் அதிகாரத்தில் இயேசு ஏறெடுக்கும் பிரதான ஆசாரியத்துவ ஜெபத்திலிருந்து திருச்சபையைக் குறித்துக் கற்றுக்கொள்கிறோம். அந்த ஜெபத்தின் முடிவில், இயேசு தம் பிதாவிடம் "உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்" (யோவான் 17:26) என்று கூறுகிறார். புதிய ஏற்பாடு திருச்சபையை கிறிஸ்துவின் சரீரம் என்று அடிக்கடி குறிப்பிடுகிறது. நாம் உண்மையில் பூமியில் கிறிஸ்துவின் பிரசன்னமாக இருக்கிறோம். மேலும், திருச்சபையின் பணியும் கிறிஸ்துவின் பணியும் ஒன்றே; அது தேவனின் நாமத்தை அறிவிப்பதாகும்.
கிறிஸ்துவின் சரீரமான உலகளாவிய திருச்சபையானது ஒவ்வொரு உள்ளூர் திருச்சபைகளிலும் வெளிப்படுகிறதும், காணக்கூடியதுமாக இருக்கிறது. இந்த உள்ளூர் திருச்சபைகள் கிறிஸ்துவின் அவதாரத்தை வெளிப்படுத்துவனவாக இருக்கவேண்டும். மனிதனாக அவதரித்து நம்மிடையே நடந்த இயேசுவின் பிரதிநிதியாகத் திருச்சபை இருக்கவேண்டும். 'திருச்சபையின் அவதார மாதிரி' என்பதன் அர்த்தம், நாம் கிறிஸ்துவை உலகிற்கும் ஒருவர் மற்றொருவரிடமும் காட்டுகிறோம் என்பதை முழுமையாக அறிந்து அதன்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில்:
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் 2-ம் அதிகாரத்தில் பெந்தேகோஸ்தே நாளில் தொடங்கி, 28-ம் அதிகாரத்தில் ரோம் நகரில் அப்போஸ்தலனாகிய பவுல் இருந்தது வரை திருச்சபையின் வரலாற்றைப் பற்றிப் பேசுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் திருச்சபை பல துன்பங்களையும் வெற்றிகளையும், சோகங்களையும் சந்தோஷங்களையும் அனுபவித்தது. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் இளம் திருச்சபையின் வரலாற்றையும், அது துன்புறுத்தப்பட்டாலும் எப்படித் துணிச்சலுடன் இருந்தது என்பதையும் சொல்லுகிறது.
ஆதித்திருச்சபையின் சரித்திரத்தில் இரண்டு காரியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒன்று, பரிசுத்த ஆவியின் வல்லமை. சுவிசேஷங்களின் முடிவில் பயந்திருந்த அப்போஸ்தலர்கள் மறைவாக ஓர் இடத்தில் கூடி இருந்தார்கள். பின் அப்போஸ்தலர் நடபடிகளின் ஆரம்ப அதிகாரங்களில் இதே அப்போஸ்தலர்கள் துணிவோடு உலகையே புரட்டினார்கள்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய திறவுகோல் வசனத்தை அப்போஸ்தலர் 1:8-ல் (கிறிஸ்துவின் வாக்குத்தத்தம்) பார்க்கிறோம். பின் அப்போஸ்தலர் 2-ல் அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலைப் பார்க்கிறோம். அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியையும் வல்லமையையும் பெற்றனர். இன்று இதே ஆவியானவர் விசுவாசிகளை ஒருங்கிணைத்து தேவனின் குடும்பத்தில் இணைக்கிறார் (எபேசியர் 4:1-7).
ரோமர் 12:3-8 மற்றும் 1 கொரிந்தியர் 12:4-11 வசனங்களின் படி, பரிசுத்த ஆவியானவர் நமக்கு விசேஷித்த ஆவிக்குரிய வரங்களை அருளுகிறார். இந்த வரங்கள் கண்டறியப்பட்டு, பேணி வளர்க்கப்பட்டு, கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையைக் கட்டியெழுப்பி முதிர்ச்சி அடைவதற்காக தேவனால் கொடுக்கப்பட்டன. மிக முக்கியமாக, இந்த வரங்கள் தேவனுக்கே மகிமையைக் கொண்டு வரவேண்டும் (1 கொரிந்தியர் 14). ஆதித்திருச்சபையில் வல்லமையாய் செயல்பட்ட அதே ஆவியானவர் இன்றும் திருச்சபையின் உள்ளும், அதன் மூலமாகவும் வல்லமையாய் செயல்படுகிறார்.
இரண்டாவதாக, அப்போஸ்தலர் புத்தகம் திருச்சபை எப்படிச் செயல்பட்டது, மற்றும் அது என்ன செய்தது என்பதையும் காட்டுகிறது. ஆதித்திருச்சபை அங்கத்தினர்கள் "அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள்" (அப்போஸ்தலர் 2:42). இந்த நடவடிக்கைகள் யாவும் கிறிஸ்துவில் வளர்வதற்கு இன்றியமையாதவைகள். மேலும் மேற்கூறிய யாவும் உள்ளூர் திருச்சபைக்குள் நடக்கவேண்டும்.
நிருபங்களில்:
பழைய ஏற்பாட்டு ஆசரிப்புக் கூடாரத்தையும், தேவாலயத்தையும், சுவிசேஷங்களிலும் அப்போஸ்தலர் நடபடிகளிலும் திருச்சபையைப் பார்த்தபின், இப்போது புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களிடம் வந்து நிற்கிறோம். சிலவற்றைத்தவிர, இந்தப் புத்தகங்கள் திருச்சபைகளுக்கே எழுதப்பட்டன. அவைகள் தேவன் ஏற்படுத்திய திருச்சபையின் முக்கியத்துவங்களைப் பேசுகிறது. புதிய ஏற்பாட்டின் நிருபங்களில், குறிப்பாக அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கும் தீமோத்தேயுக்கும் எழுதிய நிருபங்களில், திருச்சபையிலிருந்து தனியே ஒருவனும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியாது என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.
பவுலும் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் வசனங்களில் திருச்சபையை வேத வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பவுல் திருச்சபையை 'தேவனுடைய வீடு' (1 தீமோத்தேயு 3:15) என்று அழைக்கிறார். திருச்சபை ஒரு குடும்பம் (கலாத்தியர் 3:28, எபிரெயர் 13:1, 1 பேதுரு 1:22). திருச்சபை ஒரு மாளிகை (எபேசியர் 2:20-22, 1 பேதுரு 2:4-5). திருச்சபை ஒரு ஆடுகளின் மந்தையாகக் காணப்படுகிறது (1 பேதுரு 5:1-4). மேலும் பவுலின் பிரியமான உவமை, திருச்சபையை கிறிஸ்துவின் சரீரமாகக் காண்பித்தல் (எபேசியர் 4:11-16, 1 கொரிந்தியர் 12:12-27). இந்த உவமைகள் அனைத்துமே திருச்சபையின் ஒரு பகுதியாகக் கிறிஸ்தவ வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான முழுமையான புரிதலைத் தருகின்றன.
திருச்சபை ஒரு மணவாட்டியாகக் காண்பிக்கப்படுகிறது (2 கொரிந்தியர் 11:2-4, வெளிப்படுத்தல் 19:7-9, 21:1-4). அது கிறிஸ்துவின் மணமகள்; அவளுக்காகவே இயேசு மரித்தார். கணவர்கள் எவ்வாறு தங்கள் மனைவிகளை நேசிக்கவேண்டும் என்பதை அறிவுறுத்தும் சூழலில், "கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்" என்று எபேசியர் 5-ல் பவுல் எழுதுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் திருச்சபையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்ட இதைவிட வேறு என்ன சொல்ல முடியும்?
பரிசுத்தவான்களின் ஐக்கியமாகிய திருச்சபை:
ஆரம்பத்திலிருந்தே தேவன் தமது மக்களை நடத்தும் முறையில் சமூகத்தை வலியுறுத்துகிறார். சொல்லப்போனால், வேதத்தில் தேவபக்தியுள்ள பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து விவாதிக்கும்போது, தேவனுடைய மக்கள் ஒரு சமூகமாக ஒன்றாக வளர்வதையே அது வலியுறுத்துகிறது. இன்றைய கிறிஸ்தவர்களாகட்டும், கடந்த 2000 ஆண்டுகளாகட்டும், தேவன் உள்ளூர் திருச்சபையை அந்தச் சமூகத்தின் வாகனமாகவே ஏற்படுத்தியுள்ளார். சில சமகால இயக்கங்கள் பாரம்பரியமான உள்ளூர் திருச்சபையைப் பற்றிய புரிதலை மாற்றி, அது வெறுமனே நண்பர்கள் சமயங்களில் சபையாகக் கூடுவதாக மாற்றியுள்ளனர். ஆனால் அது புதிய ஏற்பாட்டில் நாம் காணும் காட்சி அல்ல.
புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறோம்; இளைஞர்களும், முதியவர்களும் கலந்திருப்பதைப் பார்க்கிறோம். முதிர்வயதான ஆண்கள் வாலிப ஆண்களுக்கும், முதிர்வயதான பெண்கள் வாலிபப்பெண்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள். ஆராதனைக்கு வருகிற மக்கள் பலதரப்பட்டவர்களாக, பல தொழில்களை உடையவர்களாக, பல பின்புலங்களை உடையவர்களாக இருந்தனர். சமூகத்தில் காணப்படும் பிரிவுகளுக்குத் திருச்சபையில் இடம் இல்லை என்று பவுல் வலியுறுத்துகிறார். திருச்சபை என்பதில் வேற்றுமையில் ஒற்றுமையைக் காணமுடியும். அதில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் திருச்சபையின் மொத்த வளர்ச்சிக்கு உதவுகிறவனாக இருக்கிறான். ஒருவன் ஒரு குறிப்பிட்ட குழுவுடன் தன்னைச் சுருக்கிக்கொள்வதை வேதம் ஒருபோதும் அங்கீகரிக்காது.
வருத்தமாக, நாம் வாழும் இந்த நாட்களில் திருச்சபைத் தலைவர்கள் சபையாகக் கூடும் மக்களை தன்னலமற்ற கிறிஸ்துவின் அன்பின் மாதிரியாக மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுடைய மோசமான முன்மாதிரிகள் ஆராதிப்பதற்குச் சபையாக ஒன்றுகூடி வருதல் என்ற வேதத்தின் கட்டளையை எடுத்துப் போடக்கூடாது. சந்தேகமே இல்லை, உள்ளூர் சபைகளில் குறைகள் இருக்கும். ஏனெனில் அது குறைவுள்ள மற்றும் பாவிகளான மக்களால் ஆனது. அப்போஸ்தலர்களின் பிரமாணம் திருச்சபையை "பரிசுத்தவான்களின் ஐக்கியம்" என்று குறிப்பிடுகிறது.
நாம் திருச்சபையினுள் வரும்போது அதில் எந்தப் பிரச்சினையும், சச்சரவுகளும், ஏமாற்றங்களும் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் இருக்காது என நினைத்துக்கொள்கிறோம். ஆனால், நாம் மறந்துவிடுவது என்னவென்றால், நாம் குறைவுள்ளவர்களாக, குறைகளைச் சுமக்கிறவர்களாக, தோல்வியாளர்களாக, பாவிகளாக ஒரு சமூகமாகக் கூடுகிறோம். துல்லியமாகச் சொன்னால், நம்மில் குறைபாடுகளும் தவறுகளும் இருப்பதால்தான் நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம்.