கள்ள உபதேசத்திற்கு பதில்

அர்மினியர்களின் கிறிஸ்து
ஆசிரியர்: ஸ்டீவன் ஹாக்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 8 நிமிடங்கள்

ஆர்மீனியர்கள் (Arminians) என்ற பிரிவினர் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து, வேதத்திலுள்ள இயேசுகிறிஸ்துவா என்று பார்த்தால், "நிச்சயமாக இருக்க முடியாது" என்பதுதான் பதில். ஏனென்றால், கடைசி நாட்களில் "நானே கிறிஸ்து" என்று சொல்லிக்கொள்ளும் பல கள்ளக்கிறிஸ்துகள் வருவார்கள் என்று வேதம் முன்னதாகவே எச்சரிக்கிறது. "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" (மத்தேயு 24:4,5). கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். பிறரிடம் ஏமாறாமல் இருக்கும்படி நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். வேத சத்தியத்தின்படியான ஒரே கிறிஸ்துவை விசுவாசிக்கவும், நேசிக்கவும், அவரைப் பின்பற்றவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

நமது காலத்தில் எழும்பும் அநேக கள்ளக்கிறிஸ்துகளுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. வேற்று மதத்தில் சொல்லப்பட்ட அல்லது வேறு பிரிவைச் சார்ந்த கிறிஸ்துவைக் குறித்து நமக்குத் தெரியும். அவர் ஒரு மாபெரிய மனிதர் என்றும், சிறந்த தீர்க்கதரிசி என்றும், தேவனின் முதன்மையான படைப்பு என்றும், ஒரு சிறந்த ஆத்துமா என்றும், தெய்வீக சித்தமுள்ளவர் என்றும் கருதப்படுகிறார். அவர் உண்மையான தேவன், ஆனால் நித்திய தேவன் அல்ல என்றும், தன்னை விடப் பெரியவரிடமிருந்து தனது தேவத்துவத்தைப் பெறுகிறார் என்றும் கூறுவார்கள். அத்தகைய நபர் வேதம் அறிவிக்கும் இயேசுகிறிஸ்து அல்ல. அப்படிப்பட்டவரால் நாம் ஏமாற்றப்படுவோம்; அவர் ஒரு பொய்யான கிறிஸ்து.

ரோமன் கத்தோலிக்கர்களின் கிறிஸ்துவை நாம் அறிவோம். கத்தோலிக்கர்கள் நம்பும் கிறிஸ்து உண்மையான தேவன் என்று கூறுவார்கள். மனிதர்களுடைய பாவ மன்னிப்புக்காக அவர் துன்பப்பட்டு மரித்து, மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிச் சென்றார் என்றும், மீண்டும் திரும்பி வருவார் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அவர் முழுமையான இரட்சகர் அல்ல என்பது அவர்கள் வாதம். ரோமன் கத்தோலிக்கர்களின் கிறிஸ்து, பாவிகளை அவர்களின் நீதியின் செயல்கள் மற்றும் குருக்களின் (பாதிரியார்களின்) பரிந்துரை இல்லாமல் இரட்சிக்க முடியாது என்று போதிக்கிறார். அத்தகைய நபர் வேதத்தின் கிறிஸ்து அல்ல. அப்படிப்பட்டவரால் நாம் ஏமாற்றப்படுவோம்; அவரும் ஒரு பொய்யான கிறிஸ்துவே.

இந்தக் குழப்பமான பிரிவுகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கர்களின் கிறிஸ்துவை விட ஆபத்தான மற்றொரு கிறிஸ்து இருக்கிறார். அவர் பல ஆண்டுகளாக இருந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை இன்றுவரை ஏமாற்றி வருகிறார். இவர் எவ்வளவு ஆபத்தானவர் என்றால், "கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான்" (மத்தேயு 24:24).

இவரே ஆர்மீனியர்களின் கிறிஸ்து. இந்தப் பொய்யான கிறிஸ்துவுக்கும், வேதத்தின் உண்மையான கிறிஸ்துவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் தோன்றும். அதனால்தான் இந்தப் பொய்யான கிறிஸ்து மிகவும் ஆபத்தானவர். ஏனென்றால், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கு இவர் சமமான உண்மையான தேவன் என்று சொல்வார்கள். அந்தப் பொய்யான கிறிஸ்து பாவிகளை இரட்சிக்கச் சிலுவையில் மரித்தார் என்று அறிவிக்கிறார்கள். மேலும் அவர் மனிதச் செயல்பாடுகள் இல்லாமல், அவரது கிருபையால் மட்டுமே இரட்சிக்கிறார் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இவருக்கு அந்த வேற்றுப் பிரிவுகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கம் போன்றோரிடம் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் போகலாம். எனவே, மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்; ஆர்மீனியர்களின் கிறிஸ்து வேதத்திலுள்ள உண்மையான கிறிஸ்து அல்ல. மோசம் போகாதிருங்கள்!

1. ஆர்மீனியர்களின் கிறிஸ்து: உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் நேசிக்கிறார்; அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார். வேதத்திலுள்ள கிறிஸ்து: நிபந்தனையின்றி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே நேசித்து, அவர்களின் இரட்சிப்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்.

"வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்." (சங்கீதம் 5:5) "அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்." (சங்கீதம் 7:11) "துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது." (சங்கீதம் 11:5) "பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்." (மத்தேயு 11:27) "நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே... என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்." (யோவான் 17:9-10)

"இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்." (அப்போஸ்தலர் 2:47) "நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்." (அப்போஸ்தலர் 13:48) "ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது... தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு... யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது." (ரோமர் 9:10-13) "மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?... அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாய் இருந்தாரானால் உனக்கென்ன?" (ரோமர் 9:21-24) "தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே..." (எபேசியர் 1:3-4)

2. ஆர்மீனியர்களின் கிறிஸ்து: இரட்சிப்பு என்ற சலுகையை அனைவருக்கும் வழங்கி, அனைவரையும் இரட்சிக்கத் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இரட்சிப்பு என்ற சலுகையை மறுப்பதினால், அவரது முயற்சி தோல்வியடைகிறது (அவமதிக்கப்படுகிறது). வேதத்திலுள்ள கிறிஸ்து: தாம் தெரிந்துகொண்டவர்களை மட்டுமே திறம்பட அழைத்து, தம்முடைய சர்வ வல்லமையால் அவர்களை இரட்சிக்கிறார். அவர்களில் ஒருவர் கூட இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் போவதில்லை.

"அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." (ஏசாயா 55:11) "குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்." (யோவான் 5:21) "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை... அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது." (யோவான் 6:37-40) "நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்... அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது." (யோவான் 10:25-30) "நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே..." (யோவான் 17:2) "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்." (பிலிப்பியர் 2:13)

3. ஆர்மீனியர்களின் கிறிஸ்து: ஒருவன் தன் சுய சித்தத்தோடு, அதாவது சுதந்திர விருப்பத்துடன் தேடாதபட்சத்தில், தேவன் தேர்ந்தெடுக்காத ஒரு பாவியை ஆர்மீனியர்களின் கிறிஸ்துவால் மீண்டும் உயிர்ப்பித்து இரட்சிக்க முடியாது. இயேசுகிறிஸ்துவை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ மனிதர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. மனிதர்களின் அந்தச் சுய சித்தத்தின் மீது ஆர்மீனியர்களின் கிறிஸ்துவுக்கு எந்தப் பங்கும் இல்லை. வேதத்திலுள்ள கிறிஸ்து: தனது இறையாண்மை அதிகாரத்தால் அழைக்கப்பட்ட ஒரு பாவியை, தனது தீர்மானத்தின்படி எந்தவிதக் காரணமுமின்றி மீண்டும் உயிர்ப்பித்து இரட்சிக்கிறார். ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையில் உள்ள ஒருவன், மீண்டும் உயிரடையாமல் "இயேசுகிறிஸ்து எனக்கு வேண்டும்" அல்லது "வேண்டாம்" என்று தீர்மானிப்பது முடியாத காரியம். இரட்சிப்பில் விசுவாசம் என்பது மனிதப் பங்கு அல்ல; அது அவனுடைய மறுபிறப்பில் இயேசுகிறிஸ்து தம்முடைய இறையாண்மையால் அவனுக்கு வழங்கும் பரிசு.

"ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 3:3) "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்... ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்." (யோவான் 6:44, 65) "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்..." (யோவான் 15:16) "ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார்..." (அப்போஸ்தலர் 11:18) "ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்." (ரோமர் 9:16) "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." (எபேசியர் 2:1) "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு... நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு..." (எபேசியர் 2:8-10) "ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது." (பிலிப்பியர் 1:29)

4. ஆர்மீனியர்களின் கிறிஸ்து: எல்லாருக்காகவும் சிலுவையில் மரித்தார்; இதனால் அனைவரும் இரட்சிக்கப்படுவது சாத்தியமானது. ஆனால், மனிதனுடைய தீர்மானம் சிலுவையின் பக்கமாக வரும்வரை, அந்தச் சிலுவை மரணம் யாரையும் இரட்சிக்காது. இதன் காரணமாக, அவர் யாருக்காக மரித்தாரோ அவர்களில் பலர் இரட்சிக்கப்படாமலே போகிறார்கள். வேதத்திலுள்ள கிறிஸ்து: தேவனால் அழைக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்து, அவர் யாருக்காக மரித்தாரோ அவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பைச் சம்பாதித்து வைத்தார். அவரது மரணம், அழைக்கப்பட்ட தேவனுடைய மக்களின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்குப் பதிலாகத் தேவனின் நீதியை நிறைவேற்றியது.

"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்." (லூக்கா 19:10) "நானே நல்ல மேய்ப்பன்... ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்." (யோவான் 10:14, 15, 26) "தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை..." (அப்போஸ்தலர் 20:28) "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." (ரோமர் 5:10) "அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து..." (எபேசியர் 5:25) "தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." (எபிரேயர் 9:12)

5. ஆர்மீனியர்களின் கிறிஸ்து: தாம் இரட்சித்த பலர் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காததினால் இரட்சிப்பை இழக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு நித்திய பாதுகாப்பைக் கொடுத்தாலும், அது அந்த மனிதன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது எடுக்கப்பட்ட முடிவைப் பொறுத்தது. வேதத்திலுள்ள கிறிஸ்து: தன்னால் இரட்சிக்கப்பட்ட அனைவரையும் இறுதிவரை விசுவாசத்தில் வளரும்படி பாதுகாப்பார். அவர் அவர்களைத் தேவனின் ஏற்பாட்டினாலும், அவருடைய மரணத்தின் வல்லமையினாலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினாலும் இரட்சிக்கிறார் (பாதுகாக்கிறார்).

"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." (யோவான் 5:24) "நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை..." (யோவான் 10:26-29) "எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்... எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்." (ரோமர் 8:29, 30) "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?... வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." (ரோமர் 8:35-39) "கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது." (1 பேதுரு 1:2-5) "வழுவாதபடி உங்களைக் காக்கவும்... வல்லமையுள்ளவரும்... தேவனுக்குக் கனமும்... உண்டாவதாக." (யூதா 24-25)

நாம் இதுவரை பார்த்தபடி ஆர்மீனியர்களின் கிறிஸ்துவும், வேதத்தின் கிறிஸ்துவும் ஒரே நபராகத் தோன்றினாலும், அவர்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன. ஆர்மீனியர்களின் கிறிஸ்து வேறொருவர்; வேதத்தின் கிறிஸ்துவே மெய்யானவர். ஆர்மீனியர்களின் கிறிஸ்து பலவீனமானவர், உதவி செய்ய முடியாதவர், மனிதனின் சுய சித்தத்திற்கு உட்பட்டவர். ஆனால், வேதத்தின்படியான கிறிஸ்துவோ, தம்முடைய சுய சித்தத்தின்படி அனைத்தையும் செயல்படுத்துகிற கர்த்தர்.

அன்பான சகோதரனே! சகோதரியே! நீ விசுவாசித்துப் பின்பற்றுவது ஆர்மீனியர்களின் கிறிஸ்துவையா அல்லது வேதத்தின் கிறிஸ்துவையா என்ற உண்மையை நீ ஆராய்ந்து அங்கீகரிக்க வேண்டும். இனியும் ஏமாற்றப்படாதே! வேதத்தை ஆராய்ந்து உண்மையான கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். மனந்திரும்பி, வேதத்தின் கிறிஸ்துவை உன்னுடைய ஆண்டவராக விசுவாசிப்பதற்கான கிருபைக்காகத் தேவனை நோக்கி ஜெபியுங்கள்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.