கள்ள உபதேசத்திற்கு பதில்

அபிஷேகம்
ஆசிரியர்: தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

"பரிசுத்த ஆவியின் அபிஷேகம்" என்னும் சொற்றொடர் ஊழிய வட்டாரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பரிசுத்த ஆவியின் நிரப்புதலுக்காக நடத்தப்படும் காத்திருப்புக் கூட்டங்களை ‘அபிஷேகக் கூட்டங்கள்’ என்று அழைக்கின்றனர். ஒருவர் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுவிட்டால், அவர் அபிஷேகம் பெற்றுவிட்டார் என்கிறார்கள். ஆனால், இதற்கு வேதாகமத்தில் எந்தவித ஆதாரமும் இல்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல இடங்களில் ‘அபிஷேகம்’ என்ற சொல்லைக் காண்கிறோம். அரசர்கள், ஆசாரியர்கள் மட்டுமல்ல, தேவாலயத்தின் பணிமுட்டுகளும் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டதைப் பார்க்கிறோம். எதற்காக? அவர்கள் அல்லது அவைகள் இறைப்பணிக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டதை அந்த அபிஷேகம் உறுதிப்படுத்தியது.

புதிய ஏற்பாட்டில், நற்செய்தி நூல்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ‘அபிஷேகம்’ என்ற சொல்லைக் காண்கிறோம். "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்திப்படுத்தவும், என்னை அனுப்பினார் என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு வாசித்து, புத்தகத்தைச் சுருட்டிப் பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து உட்கார்ந்தார்" (லூக்கா 4:18-20).

இயேசு கிறிஸ்து ஏசாயா 61:1-3ல் தம்மைப் பற்றி முன்னுரைக்கப்பட்டதைத் தான் வாசித்துக் காட்டினார். தாம் எவ்விதமான பணிக்காக அபிஷேகம் பெற்றார், அதாவது எதற்காகப் பிரித்தெடுக்கப்பட்டார் அல்லது நியமிக்கப்பட்டார் என்பதையே இதன் மூலம் சுட்டிக்காட்டினார்.

‘கிறிஸ்து’ என்ற பெயரின் பொருளே ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்பதாகும். அப்போஸ்தலர் 4:28, 10:38 மற்றும் எபிரெயர் 1:9 ஆகிய வசனங்களிலும் ஆண்டவரைக் குறித்தே அபிஷேகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி, அபிஷேகம் என்ற சொல் 2 கொரிந்தியர் 1:21-லும், 1 யோவான் 2:20-27 ஆகிய வசனங்களிலும் மட்டும்தான் காணப்படுகிறது. இவ்வசனங்களிலும் ‘அபிஷேகம்’ என்பது ஊழியர்கள் அல்லது விசுவாசிகள் திருப்பணிக்கென்று பிரித்தெடுக்கப்பட்டதையே குறிக்கிறது. எனவே, ‘பரிசுத்த ஆவியின் அபிஷேகம்’ என்ற வார்த்தைப் பிரயோகம் வேதாகமத்திற்குச் சற்றும் ஒவ்வாத, முற்றிலும் தவறான ஒன்றாகும்.

இன்று ‘அபிஷேகம்’ என்ற சொல் பரிசுத்த ஆவியின் திருமுழுக்குக்கும், நிறைவுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இச்சொல்லின் சரியான பொருள் ‘எண்ணெய் பூசுதல்’ அல்லது ‘ஊற்றுதல்’ என்பதாகும். இதைக் குறித்து ‘பார்ன்ஸ்’ (Barnes) என்ற வேதாகம விரிவுரையாளர் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்: "மன்னர்களையும், ஆசாரியர்களையும் பதவியில் நியமிக்கும்போதும், முடிசூட்டும்போதும் எண்ணெய் ஊற்றுவதையே இச்சொல் குறிக்கிறது. தங்கள் பதவிக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்ய, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அருளும் ஈவுகளுக்கும், கிருபைகளுக்கும் அந்த எண்ணெய் அடையாளமாய் இருந்ததாகத் தெரிகிறது."

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் ராஜாக்களும் ஆசாரியர்களு என்றும் (வெளி 1:6, 5:10), இராஜரீகமான ஆசாரியக் கூட்டமாக இருக்கிறார்கள் என்றும் (1 பேதுரு 2:9) விவரிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அவர்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள் எனப்படுகின்றனர். அதாவது, பரிசுத்த ஆவியின் கிருபைகளைப் பெற்றவர்கள் என்பதற்கு இந்த அபிஷேகம் ஒரு அடையாளமாக இருக்கிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.