| 1 | நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. | உபா 4:1 உபா 5:32 உபா 5:33 உபா 6:1-3 சங் 119:4-6 1தெச 4:1 1தெச 4:2 |
| 2 | உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. | உபா 7:18 சங் 77:11 சங் 106:7 எபே 2:11 எபே 2:12 2பேது 1:12 2பேது 1:13 2பேது 3:1 2பேது 3:2 |
| 3 | அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். | யாத் 16:2 யாத் 16:3 யாத் 16:12-35 சங் 78:23-25 சங் 105:40 1கொரி 10:3 |
| 4 | இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாகப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. | உபா 29:5 நெகே 9:21 மத் 26:25-30 |
| 5 | ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. | உபா 4:9 உபா 4:23 ஏசா 1:3 எசே 12:3 எசே 18:28 |
| 6 | ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். | உபா 5:33 யாத் 18:20 1சாமு 12:24 2நாளா 6:31 சங் 128:1 லூக் 1:6 |
| 7 | உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; | உபா 6:10 உபா 6:11 உபா 11:10-12 யாத் 3:8 நெகே 9:24 நெகே 9:25 சங் 65:9-13 எசே 20:6 |
| 8 | அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்; | உபா 32:14 2சாமு 4:6 1இரா 5:11 சங் 81:16 சங் 147:14 எசே 27:17 |
| 9 | அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம். | உபா 33:25 யோசு 22:8 1நாளா 22:14 யோபு 28:2 |
| 10 | ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். | உபா 6:11 உபா 6:12 சங் 103:2 மத் 14:19 யோவா 6:23 ரோம 14:6 1கொரி 10:31 1தெச 5:18 1தீமோ 4:4 1தீமோ 4:5 |
| 11 | உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. | சங் 106:21 நீதி 1:32 நீதி 30:9 எசே 16:10-15 ஓசி 2:8 ஓசி 2:9 |
| 12 | நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், | உபா 28:47 உபா 31:20 உபா 32:15 நீதி 30:9 ஓசி 13:5 ஓசி 13:6 |
| 13 | உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், | ஆதி 13:1-5 யோபு 1:3 சங் 39:6 லூக் 12:13-21 |
| 14 | உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், | உபா 17:20 2நாளா 26:16 2நாளா 32:25 எரே 2:31 1கொரி 4:7 1கொரி 4:8 |
| 15 | உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், | உபா 1:19 சங் 136:16 ஏசா 63:12-14 எரே 2:6 |
| 16 | உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், | உபா 8:3 யாத் 16:15 |
| 17 | என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, | உபா 7:17 |
| 18 | உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். | சங் 127:1 சங் 127:2 சங் 144:1 நீதி 10:22 ஓசி 2:8 |
| 19 | உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன். | உபா 4:26 உபா 28:58-68 உபா 29:25-28 உபா 30:18 உபா 30:19 யோசு 23:13 1சாமு 12:25 தானி 9:2 ஆமோ 3:2 செப் 1:18 செப் 3:6 லூக் 12:47 லூக் 12:48 லூக் 13:3 லூக் 13:5 |
| 20 | உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள். | 2நாளா 36:16 2நாளா 36:17 தானி 9:11 தானி 9:12 |