| 1 | பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கினான். | 1இரா 6:1-14 |
| 2 | அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான். | 1இரா 6:1 |
| 3 | தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது. | 1நாளா 28:11-19 |
| 4 | முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான். | யோவா 10:23 அப் 3:11 அப் 5:12 |
| 5 | ஆலயத்தின் பெரிய மாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து, | 1இரா 6:15-17 1இரா 6:21-17 1இரா 6:22-17 |
| 6 | அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது. | 1நாளா 29:2 1நாளா 29:8 ஏசா 54:11 ஏசா 54:12 வெளிப் 21:18-21 |
| 7 | அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான். | யாத் 26:29 1இரா 6:20-22 1இரா 6:30-22 எசே 7:20 |
| 8 | மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான். | யாத் 26:33 1இரா 6:19 1இரா 6:20 எபிரெ 9:3 எபிரெ 9:9 எபிரெ 10:19 |
| 9 | ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான். |
| 10 | அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான். | 1இரா 6:23-28 |
| 11 | அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்து முழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது. |
| 12 | மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்து முழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது. |
| 13 | இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது. | யாத் 25:20 |
| 14 | இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவுப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான். | யாத் 26:31-35 மத் 27:51 எபிரெ 9:3 எபிரெ 10:20 |
| 15 | ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி, | 1இரா 7:15-24 எரே 52:20-23 |
| 16 | சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதளம் பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான். | 1இரா 6:21 |
| 17 | அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடது புறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான். | 1இரா 7:21 |