| 1 | அந்த இரண்டு தூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைவரைக்கும் குனிந்து: |
| 2 | ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து, உங்கள் கால்களைக் கழுவி, இரவில்தங்கி, காலையில் எழுந்து புறப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, இரவில் வீதியிலே தங்குவோம் என்றார்கள். |
| 3 | அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டார்கள். |
| 4 | அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதர்களாகிய வாலிபர்கள்முதல் முதியவர்கள்வரையுள்ள மக்கள் அனைவரும் நான்கு திசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு |
| 5 | லோத்தைக் கூப்பிட்டு: இந்த இரவில் உன்னிடம் வந்த மனிதர்கள் எங்கே? நாங்கள் அவர்களுடன் உறவுகொள்ள அவர்களை எங்களிடம் வெளியே கொண்டுவா என்றார்கள். |
| 6 | அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடம் போய்: |
| 7 | சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம். |
| 8 | இதோ, கன்னிகைகளான இரண்டு மகள்கள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்களுடைய இஷ்டப்படி செய்யுங்கள்; இந்த மனிதர்கள் என்னுடைய கூரையின் நிழலிலே வந்ததால், இவர்களுக்கு மட்டும் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். |
| 9 | அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாக வந்த இவனா நியாயம் பேசுவது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைவிட உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்க நெருங்கினார்கள். |
| 10 | அப்பொழுது அந்த மனிதர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் பக்கம் வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி |
| 11 | தெருவாசலிலிருந்த சிறியோர்களும் பெரியோர்களுமாகிய மனிதர்களுக்குப் பார்வையற்றுப்போகச் செய்தார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள். |
| 12 | பின்பு அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: இந்த இடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? உன்னுடைய மகன்களாவது, மகள்களாவது, மருமகன்களாவது பட்டணத்தில் உனக்குரியவர்கள் யாராவது இருந்தால், அவர்களை இந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. |
| 13 | நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். |
| 14 | அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் மகள்களைத் திருமணம் செய்யப்போகிற தன் மருமகன்களோடு பேசி: நீங்கள் எழுந்து இந்த இடத்தைவிட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமகன்களின் பார்வைக்கு அவன் கேலிசெய்வதைப் போலிருந்தது. |
| 15 | விடியற்காலமானபோது அந்தத் தூதர்கள் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாமலிருக்க எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனை அவசரப்படுத்தினார்கள். |
| 16 | அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவனுடைய மனைவியின் கையையும், அவனுடைய இரண்டு மகள்களின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். |
| 17 | அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ என்றார். |
| 18 | அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே |
| 19 | உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்னுடைய உயிரைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக தெரியச்செய்தீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் இறந்துபோவேன். |
| 20 | அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். |
| 21 | அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடி, இந்த விஷயத்திலும் உனக்கு தயவுசெய்தேன். |
| 22 | விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் எனப்பட்டது. |
| 23 | லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. |
| 24 | அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியச்செய்து |
| 25 | அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். |
| 26 | அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள். |
| 27 | விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய் |
| 28 | சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது. |
| 29 | தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடும்போது, லோத்தை அந்த அழிவிலிருந்து தப்பிச்செல்லும்படி அனுப்பிவிட்டார். |
| 30 | பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடுகூட அவனுடைய இரண்டு மகள்களும் மலையிலே தங்கினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு மகள்களும் ஒரு குகையிலே குடியிருந்தார்கள். |
| 31 | அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடு இணைய பூமியிலே ஒரு மனிதனும் இல்லை. |
| 32 | நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடு உறவுகொள்வோம் வா என்றாள். |
| 33 | அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடு உறவுகொண்டாள்: அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். |
| 34 | மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடு உறவுகொண்டேன்; இன்று இரவும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீயும் போய் அவரோடு உறவுகொள் என்றாள். |
| 35 | அப்படியே அன்று இரவிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடு உறவுகொண்டாள்; அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். |
| 36 | இந்த விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். |
| 37 | மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். |
| 38 | இளையவளும் ஒரு மகனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் வம்சத்தாருக்குத் தகப்பன். |