| 1 | நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். |
| 2 | அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார். |
| 3 | ஆனால் உங்களிடையே மோகத்திற்குறிய பாவங்கள் இருக்கக்கூடாது. உங்களிடம் எவ்வகையான தீய செயல்களும், பொருளாசையும் இருக்கக்கூடாது. ஏனென்றால் இவை தேவனுடைய புனிதமான மக்களுக்கு ஏற்றதல்ல. |
| 4 | நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். |
| 5 | பாலியல் பாவங்கள் செய்பவனும், தீயசெயல் புரிபவனும், தனக்கு மேலும் மேலும் வேண்டும் என ஆசைப்படும் சுயநலக்காரனுமான விக்கிரக வணக்கம் செய்பவனும் தேவனுடையதும், கிறிஸ்துவுடையதுமாகிய இராஜ்யத்தில் இடம் பெறுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். |
| 6 | உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. |
| 7 | எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். |
| 8 | கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். |
| 9 | வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். |
| 10 | தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். |
| 11 | இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். |
| 12 | அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். |
| 13 | அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். |
| 14 | எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம். ԇதூங்குகிறவர்களே எழும்புங்கள், மரணத்திலிருந்து எழும்புங்கள். கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.Ԉ |
| 15 | எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். |
| 16 | நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். |
| 17 | ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். |
| 18 | மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். |
| 19 | சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். |
| 20 | பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள். |
| 21 | ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள். |
| 22 | மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். |
| 23 | சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய்க் கிறிஸ்து இருக்கிறார். |
| 24 | கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள். |
| 25 | கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். |
| 26 | சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். |
| 27 | கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல |
| 28 | கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். |
| 29 | ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். |
| 30 | ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். |
| 31 | ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்Ԉ என்று எழுதப்பட்டிருக்கிறது |
| 32 | நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. |
| 33 | எனினும் ஒவ்வொரு வரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். |