| 1 | நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள். இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள். |
| 2 | இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள். வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள். |
| 3 | மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள். முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள். அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது. |
| 4 | அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார். |
| 5 | தேவன் யோசேப்பை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார். எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம். |
| 6 | தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன். உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன். |
| 7 | “நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள். நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன். புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன். மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன். |
| 8 | “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன். இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்! |
| 9 | வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை நீ தொழுதுகொள்ளாதே. |
| 10 | கர்த்தராகிய நானே உன் தேவன். நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன். இஸ்ரவேலே, உன் வாயைத் திற, நான் உன்னைப் போஷிப்பேன். |
| 11 | “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை. இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை. |
| 12 | எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன். இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள். |
| 13 | என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால், என் விருப்பப்படியே வாழ்ந்தால், |
| 14 | அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன். இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்” என்றார். |
| 15 | கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள். |
| 16 | தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார். அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”. |