| 1 | தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன். தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். நான் சொல்வதைக் கேளும். |
| 2 | என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன். இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன். என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது. |
| 3 | நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன், நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. |
| 4 | நீர் என்னை உறங்கவொட்டீர். நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன். |
| 5 | நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். |
| 6 | இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன். நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன். |
| 7 | நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா? மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா? |
| 8 | தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா? அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா? |
| 9 | இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா? அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன். |
| 10 | பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது. ‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன். |
| 11 | கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன். தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன். |
| 12 | நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன். அக்காரியங்களை நான் நினைத்தேன். |
| 13 | தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை. தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை. |
| 14 | அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே. நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர். |
| 15 | உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர். நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர். |
| 16 | தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது. ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று. |
| 17 | கரு மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன. உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள். அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன. |
| 18 | உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின. உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று. பூமி அதிர்ந்து நடுங்கிற்று. |
| 19 | தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர். நீர் ஆழமான கடலைக் கடந்தீர். ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை. |
| 20 | உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர். |