| 1 | தேவனே, நீரே என் தேவன். நீர் எனக்கு மீகவும் தேவையானவர். நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது. |
| 2 | உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன். நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன். |
| 3 | ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது. என் உதடுகள் உம்மைத் துதிக்கும். |
| 4 | என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன். உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன். |
| 5 | சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன். மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும். |
| 6 | என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன். நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன். |
| 7 | நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்! நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன். |
| 8 | என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது. நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர். |
| 9 | சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள். |
| 10 | அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும். |
| 11 | ஆனால் அரசனோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார். அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள். ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார். |