| 1 | அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும். தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன. |
| 2 | நீரே யாவரினும் அழகானவர்! நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார். |
| 3 | வாளை எடும். மேன்மையான ஆடைகளை அணியும். |
| 4 | நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்! நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும். அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும். |
| 5 | உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன. நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது அரசனாயிரும். |
| 6 | தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும். நன்மையே உமது செங்கோலாகும். |
| 7 | நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர். எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை அரசனாக்கினார். |
| 8 | வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும். தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும். |
| 9 | மணத்தோழியரே அரசனின் குமாரத்திகள் ஆவர். உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள். |
| 10 | மகளே, கேள், கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு. |
| 11 | அரசர் உன் அழகை விரும்புகிறார். அவர் உன் புது மணமகன். நீ அவரைப் பெருமைப்படுத்துவாய். |
| 12 | தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள். அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள். |
| 13 | அரச குமாரத்தி பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள். |
| 14 | மணமகள் அழகிய ஆடையணிந்து அரசனிடம் அழைத்துவரப்பட்டாள். மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர். |
| 15 | அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர். மனமகிழ் வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர். |
| 16 | அரசே, உம் மகன்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள். தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர். |
| 17 | உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன். என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள். |