| 1 | அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக: |
| 2 | “யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன. எனவே நான் உனக்குப் பதில் கூறவேண்டும். நான் நினைத்துக்கொண்டிருப்பதை விரைந்து உனக்குக் கூறவேண்டும். |
| 3 | நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்! ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன். |
| 4 | “தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய். ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது. |
| 5 | தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும். |
| 6 | தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம். அவன் தலை மேகங்களைத் தொடலாம். |
| 7 | அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான். அவனை அறிந்த ஜனங்கள் ‘அவன் எங்கே?’ என்பார்கள். |
| 8 | கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான். ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது. அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான். |
| 9 | அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள். அவன் குடும்பத்தினர் அவனை மீண்டும் பார்ப்பதில்லை. |
| 10 | அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள். தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும். |
| 11 | அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன. ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும். |
| 12 | “கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும். அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான். |
| 13 | “கெட்ட மனிதன் தீமையில் களிப்பான். அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான். அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும். |
| 14 | ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும். பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும். |
| 15 | தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான். ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான். தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார். |
| 16 | பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும். பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும். |
| 17 | அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான். |
| 18 | தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான். தன்னுடைய உழைப்பின் பலனை அவன் அனுபவிக்க அனுமதிக்கப்படமாட்டான். |
| 19 | அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான். |
| 20 | “தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது. |
| 21 | அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை. அவன் வெற்றி தொடராது. |
| 22 | தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான். அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்! |
| 23 | தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு, அவனுக்கெதிராக தேவன் அவரது எரியும் கோபத்தை வீசுவார். தீயவன் மேல் தேவன் தண்டனையைப் பொழிவார். |
| 24 | தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம், ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும். |
| 25 | அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும். அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும். அவன் பயங்கர பீதி அடைவான். |
| 26 | அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும். எந்த மனிதனும் பற்றவைக்காத ஒரு நெருப்பு அவனை அழிக்கும். அவன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் அந்த நெருப்பு அழிக்கும். |
| 27 | தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்) பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும். |
| 28 | தேவனுடைய கோப வெள்ளத்தில் அவன் வீட்டிலுள்ளவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும். |
| 29 | தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார். அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான். |