| 1 | சூகியனான பில்தாத் அப்போது பதிலாக: |
| 2 | “யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்? அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்). |
| 3 | நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்? |
| 4 | யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது. உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா? உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா? |
| 5 | “ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும். அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும். |
| 6 | வீட்டின் ஒளி இருளாகும். அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும். |
| 7 | அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது. ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான். அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும். |
| 8 | அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும். அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான். |
| 9 | அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும். ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும். |
| 10 | தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும். அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும். |
| 11 | சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும். அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும். |
| 12 | கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும். அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும். |
| 13 | கொடிய நோய் அவனது தோலை அரிக்கும். அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும். |
| 14 | தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான். பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான். |
| 15 | அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது. ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும். |
| 16 | கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும், மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும். |
| 17 | பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள். ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள். |
| 18 | ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள். அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள். |
| 19 | அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது. அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள். |
| 20 | மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள். கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள். |
| 21 | தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும். தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான். |