| 1 | இவ்வாறு சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடித்தான். அவன் கட்ட விரும்பியவற்றையெல்லாம் கட்டிமுடித்தான். |
| 2 | பிறகு கர்த்தர் மீண்டும் அவன் முன் கிபியோனில் தோன்றியதுபோல தோன்றினார். |
| 3 | கர்த்தர் அவனிடம் , “நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன். |
| 4 | உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும். |
| 5 | “நீ இவ்வாறு செய்து வந்தால், இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தவனாகவே இருப்பான். இந்த வாக்குறுதியைத்தான் உனது தந்தையான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறேன். நான் அவனிடம், ‘இஸ்ரவேல் உன் சந்ததியிலிருந்தே எப்பொழுதும் ஆளப்படும்’ என்று கூறியிருக்கிறேன். |
| 6 | “ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. |
| 7 | நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன். |
| 8 | இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள். |
| 9 | மற்றவர்களோ, ‘அவர்கள் தமது தேவனாகிய கர்த்தரை விட்டு விலகினார்கள். அதனால் இவ்வாறு ஆயிற்று. அவர்களது முற்பிதாக்களை அவர் எகிப்திலிருந்து மீட்டார். ஆனால் அவர்களோ அந்நிய தெய்வங்களை நாடினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இது போன்ற தீமைகளைச் செய்தார்’ என்பார்கள்” என்றார். |
| 10 | சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயின. |
| 11 | அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும் தேவதாரு மரங்களையும் தங்கத்தையும் கொடுத்து வந்தான். |
| 12 | எனவே, தீரு என்னும் நகரில் இருந்து பயணப்பட்டு சாலொமோன் கொடுத்த நகரங்களை எல்லாம் ஈராம் பார்வையிட்டான். அப்போது அவன் திருப்தியடையவில்லை |
| 13 | ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது. |
| 14 | ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான். |
| 15 | சாலொமோன் ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட அடிமைகளை கட்டாயப்படுத்தினான். மேலும் அவர்களைப் பயன்படுத்தி பலவற்றைக் கட்டினான். அவன் மில்லோவைக் கட்டினான். எருசலேம் நகரைச் சுற்றி ஒரு சுவரையும் பின்னர் ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். |
| 16 | முன்பு, எகிப்து மன்னன் கேசேரைச் சண்டையிட்டு எரித்துவிட்டான். அங்கு வாழ்ந்த கானானியரையும் கொன்றான். சாலொமோன் பார்வோன் மன்னனின் மகளையும் மணந்துக்கொண்டான். எனவே திருமணப் பரிசாக இந்நகரத்தைச் சாலொமோன் பெற்றுக்கொண்டான். |
| 17 | சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான். |
| 18 | மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும் |
| 19 | தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான். |
| 20 | அந்நாட்டில் இஸ்ரவேலர் அல்லாதாரும் வாழ்ந்தனர். அவர்கள் எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோராகும். |
| 21 | இஸ்ரவேலர்களால் சிலர்களை அழிக்க முடியவில்லை. ஆனால் சாலொமோன் அவர்களை அடிமைகள்போல வேலைசெய்ய கட்டாயப்படுத்தினான், அவர்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றனர். |
| 22 | சாலொமோன் இஸ்ரவேலர்களை அடிமையாக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இரத ஏவலர்களாகவும் இருந்தனர். |
| 23 | சாலொமோனின் திட்டக்குழுவில் 550 மேற்பார் வையாளர்கள் இருந்தனர். இவர்கள் வேலைக்காரர்களின் எஜமானர்கள். |
| 24 | பார்வோன் மன்னனின் மகள் தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான். |
| 25 | ஒவ்வொரு ஆண்டும் மூன்றுமுறை சாலொமோன் பலிபீடத்தில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். இது சாலொமோனால் கர்த்தருக்காகக் கட்டப்பட்ட பலிபீடம். அவன் கர்த்தருக்கு முன் நறுமணப் பொருட்களை எரித்தான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவந்தான். |
| 26 | சாலொமோன் அரசன் ஏசியோன் கேபேரிலே கப்பங்களைச் செய்வித்தான். அந்நகரம் ஏலோத்துக்கு அருகில் செங்கடலின் கரையில் ஏதோம் நாட்டில் இருந்தது. |
| 27 | ஈராம் அரசனின் ஆட்களில் சிலருக்குக் கடல் பற்றி அறிவு அதிகமாக இருந்தது. அவர்களை அவன் சாலொமோனிடம் அனுப்பி கப்பற் படையில் பணிபுரியச் செய்தான். |
| 28 | சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது. |