| 1 | சமாரியாவில் ஆகாப்பின்அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். |
| 2 | ஒரு நாள் அரசன் அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக் கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான். |
| 3 | அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான். |
| 4 | எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை அரசன் விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான். |
| 5 | ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள். |
| 6 | அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான். |
| 7 | அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் அரசன்! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள். |
| 8 | பிறகு அவள் சில கடிதங்களை எழுதி அரசனின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். |
| 9 | அக்கடிதத்தில், “நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். |
| 10 | அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் அரசனுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது. |
| 11 | எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். |
| 12 | தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். |
| 13 | பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் அரசனுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். |
| 14 | அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர். |
| 15 | அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். |
| 16 | அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான். |
| 17 | அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், |
| 18 | “அரசனிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். |
| 19 | அவனிடம் ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும், என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார். |
| 20 | எனவே எலியா ஆகாபிடம் சென்றான். அரசனோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான். அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். |
| 21 | எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். |
| 22 | உனது குடும்பமானது நேபாத்தின் மகனான அரசன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். |
| 23 | கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். |
| 24 | உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான். |
| 25 | ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். |
| 26 | அவன் மர விக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார். |
| 27 | எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான். |
| 28 | கர்த்தர் எலியாவிடம், |
| 29 | “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார். |