யோவேல்

தலைப்பு: 

கிரேக்க செப்டுவஜின்ட் (LXX) மற்றும் லத்தீன் வல்கேட் (Vg.) மொழிபெயர்ப்புகள், எபிரேய மசோரெட்டிக் (MT) மூலத்தின்படியே, தேவனிடமிருந்து தீர்க்கதரிசன செய்தியைப் பெற்ற (1:1) தீர்க்கதரிசியாகிய யோவேலின் பெயரையே இப்புத்தகத்திற்குத் தலைப்பாகக் கொண்டுள்ளன. இந்தப் பெயரின் அர்த்தம் “கர்த்தரே தேவன்” (யெகோவாவே தேவன்) என்பதாகும். பழைய ஏற்பாட்டில் இப்பெயருடைய நபர்கள் 12-க்கும் மேற்பட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால், தீர்க்கதரிசியாகிய யோவேலின் பெயர் புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை மட்டுமே (அப். 2:16-21) குறிப்பிடப்படுகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் காலம்: “பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்” (1:1) என்று இவர் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். இந்த அறிமுகத்தைத் தவிர, தீர்க்கதரிசியைக் குறித்த வேறு எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் இவரது தகப்பனார் பெயரும் காணப்படவில்லை. தேவாலய பலிகள் செலுத்துதலில் இவர் மிகுந்த வைராக்கியத்தைக் காட்டினபோதிலும் (1:9; 2:13-16), ஒரு போதகராகவும் விவசாய வாழ்க்கையை நன்கு அறிந்தவராகவும் காணப்படுகிறார். ஆசாரியர்களிடமிருந்து இவர் பிரிந்து செயல்பட்டதைக் காணும்போது, இவர் ஒரு லேவியராக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இவர் ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், சாகடலின் வடகிழக்கில் உள்ள பெத்தோம் அல்லது பெத்லகேம் ஊரைச் சேர்ந்தவர் என்றும் வேதாகமத்தில் இல்லாத சில பாரம்பரியங்கள் கூறுகின்றன. ஆனால், இவரது தீர்க்கதரிசன வார்த்தைகளை ஆராயும்போது, அதில் அவர் எருசலேமுக்கு அந்நியரைப் போலப் பேசாமல், எருசலேமுக்கு அருகிலுள்ள யூதேயாவிலிருந்து வந்தவர் போலவே தென்படுவதால், அவர் யூதேயாவைச் சேர்ந்தவர் என முடிவு செய்யலாம்.

வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் மொழியியல் கூறுகளை வைத்தே இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தை கணிக்க முடியும்.

  1. பிற்கால உலகப் பேரரசுகளான அசீரியா, பாபிலோன் அல்லது பெர்சியா குறித்த எந்தக் குறிப்பும் இதில் இல்லை.

  2. யோவேலின் எழுத்து நடை, ஓசியா மற்றும் ஆமோஸ் தீர்க்கதரிசிகளைப் போல இருக்கிறதே தவிர, சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின் எழுந்த தீர்க்கதரிசிகளின் நடைபோல் இல்லை.

  3. இவருக்குப் பின் வந்த ஓசியா மற்றும் ஆமோஸின் வார்த்தைகளுக்கு (யோவேல் 3:16 / ஆமோஸ் 1:2; யோவேல் 3:18 / ஆமோஸ் 9:13) இவருடைய வார்த்தைகள் முன்னோடியாக இருப்பதால், இப்புத்தகம் யோவாஸ் ராஜாவின் காலத்தில் (கி.மு. 835-796) - அதாவது கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பொருத்தமானது.

எவ்வாறாயினும், இப்புத்தகம் எழுதப்பட்ட தேதியைத் துல்லியமாக அறுதியிட்டுச் சொல்ல இயலாவிட்டாலும், அது இப்புத்தகத்தின் ஆழமான விளக்கத்தைப் பாதிப்பதில்லை. யோவேலின் வார்த்தைகள் காலங்களுக்கு அப்பாற்பட்டவை; இதன் உபதேசங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானதாகவும், பயன்படுத்த வல்லதாகவும் இருக்கின்றன.

பின்னணி மற்றும் அமைப்பு: தீரு, சீதோன் மற்றும் பெலிஸ்தியர் இஸ்ரவேல் தேசத்திற்குள் அடிக்கடி ஊடுருவல் மேற்கொண்டனர் (3:22). நீண்டகால வறட்சி மற்றும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பசுமை நிறைந்த தேசத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி, கடுமையான பொருளாதார அழிவை உண்டாக்கியது (1:7-20). இதனால், தென்னாட்டைய ராஜ்யம் பலவீனமடைந்தது. இந்தப் பேரழிவு தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அடையாளமாக யோவேலுக்குத் தோன்றியது. பாவத்திற்கு நியாயத்தீர்ப்பாக வெட்டுக்கிளிகளின் சேதத்தைக் காணும்போது, வரவிருக்கும் ”கர்த்தருடைய நாளின்” நியாயத்தீர்ப்புகள் இவற்றைக் காட்டிலும் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்.

அந்நாளில், தேவன் தமது சத்துருக்களை நியாயந்தீர்த்து, தம்மிடம் பற்றுதலாக இருப்பவரை ஆசீர்வதிப்பார். இந்த நியாயத்தீர்ப்பிற்கான குறிப்பிட்ட பாவம் எதுவும் சொல்லப்படவில்லை, அல்லது யூதா விக்கிரகாராதனைக்காகக் கண்டிக்கப்படவும் இல்லை. ஆனாலும், ஆவிக்குரிய வாழ்வில் அக்கறையற்றிருக்கும் ஜனங்களை உண்மையான மனந்திரும்புதலுக்குத் தீர்க்கதரிசி அழைக்கிறார்: “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள்” (யோவேல் 2:13).

இறையியல் மற்றும் வரலாற்றுப் பொருட்கள்: ”கர்த்தருடைய நாள்” என்பதே யோவேல் புத்தகத்தின் மையக்கருப்பொருள். யோவேலின் செய்தியின் அனைத்துப் பகுதிகளிலும் இது ஊடுருவிச் செல்வதால், பழைய ஏற்பாடு முழுவதிலும் இக்கருத்தை அதிகமாக வலியுறுத்தும் புத்தகமாக யோவேல் இருக்கிறது (1:15; 2:1; 2:11; 2:31; 3:14). இச்சொற்றொடர் வேதாகமத்தில் 8 ஆசிரியர்களால் 19 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காலவரிசைப்படியான ஒரு சாதாரண நாளைக் குறிப்பிடவில்லை; மாறாக, கர்த்தர் ஒருவருக்கு மட்டுமே உரிய கோபாக்கினையும் நியாயத்தீர்ப்பும் வெளிப்படும் நாளைக் குறிக்கிறது. தேவனுடைய குணாதிசயங்களான வல்லமை, ஆற்றல் மற்றும் பரிசுத்தம் ஆகியவை தேவனுடைய சத்துருக்களுக்குத் திகிலூட்டும் விதமாக வெளிப்படும் பிரத்தியேகமான நாளே ‘கர்த்தருடைய நாள்’.

இது எப்போதும் கடைசி கால சம்பவங்களை மட்டுமே குறிப்பதாக இல்லை. எசேக்கியேல் 13:5-ல் நாம் காண்பது போல், பாபிலோனியர் வெற்றி பெற்று எருசலேமை அழித்துப் போட்ட நாள் போன்று, வரலாற்றில் தீர்க்கதரிசனம் நிறைவேறிய நாட்களையும் குறிக்கும். கர்த்தருடைய நாள் என்பது பூமி அதிர்ச்சிகள் (2:1-11; 3:16), கொடூரமான தட்பவெப்ப நிலை, மேகங்கள் சூழ்ந்த அடர்ந்த இருள் (2:2; செப்பனியா 1:7) மற்றும் வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுதல் (2:3, 30) ஆகியவற்றைக் கொண்ட மகா பயங்கரமான நாளாக இருக்கும் (2:11). 1:15-ல் காண்பது போல, ”அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது”.

யோவேல் புத்தகத்தின் இரண்டாம் பாதி, கர்த்தருடைய நாளுக்குப் பின் கிடைக்கும் நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தங்களைக் குறித்துப் பேசுகிறது. “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்” (2:28, 29) என்ற வாக்குத்தத்தத்தை அளிக்கிறது. எலியாவின் வருகையைக் குறித்துப் பேசுவது கிறிஸ்துவின் வருகைக்கு (Epiphany) முன்னோட்டமாக இருக்கிறது. இது ஜனங்களுக்கு மீட்டெடுக்கப்படுதலையும் நம்பிக்கையையும் தருகிறது (மல்கியா 4:5, 6). கர்த்தருடைய நாளின் விளைவாகப் பொருளாதார ஆசீர்வாதங்கள், பலன்கள் நிறைந்த வாழ்க்கை மற்றும் செழிப்பு உண்டாயிருக்கும் (2:21-27; 3:16-21). அந்த நாள் பாவிகள் மீது நியாயத்தீர்ப்பு செலுத்தப்படும் நாளாகவும், மனந்திரும்பினோர் மீது ஆசீர்வாதங்கள் பொழியப்பட்டு, தேவன் தமது ஜனத்துடனான உடன்படிக்கையை உறுதிப்படுத்தும் நாளாகவும் இருக்கும்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்: அதிகாரம் 1-ல், “பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதை வண்டுகள் தின்றது; வண்டுகள் விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது” (யோவேல் 1:4) என்று தேசத்தின் சங்காரத்தை விவரிப்பதை வாசிக்கலாம். அதிகாரம் 2-ல் தீர்க்கதரிசி இதற்கான ஆவிக்குரிய விளக்கத்தைத் தருகிறார். இங்கு வெட்டுக்கிளிகளின் சேதாரத்தைக் காட்டிலும் மேலாக, ஆவிக்குரிய சேதத்தையும் மனந்திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார். தீர்க்கதரிசி பயன்படுத்தும் உருவகங்கள்: "அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது" (2:4); "அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்" (2:7). இவை வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை மட்டுமல்ல, வரவிருக்கும் கர்த்தருடைய நாளின் பயங்கரத்தையும் குறிக்கின்றன. "கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?" (2:11) எனக் கேட்கும் அளவிற்கு அது கொடியது.

சிலர், அப்போஸ்தலர் 2:16-21-ல் பேதுரு மேற்கோள் காட்டும் யோவேலின் வசனங்கள் (2:28-32), கி.பி. 70-ல் எருசலேம் தகர்க்கப்பட்ட நாளில் நிறைவேறின என்று கருதுகின்றனர். மற்றும் சிலர், இது இறுதி நாளில் தான் நிறைவேறும் என்கின்றனர். பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டது, இவ்வார்த்தைகளின் முழுமையான நிறைவேறுதல் அல்ல; மாறாக, மேசியாவின் ராஜ்யத்திற்குப் பின் வரும் கர்த்தருடைய நாட்களில் ஊற்றப்படவுள்ள ஆவியானவரின் வல்லமைக்கு இது ஒரு முன்னோட்டமாகும் (Pre-fulfillment).

சுருக்கம்: வசனம் 1:1-ஐத் தொடர்ந்து புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மூன்று அடிப்படை பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

  1. முதல் பிரிவு (1:2–20): தீர்க்கதரிசி தன்னுடைய காலத்தில் சம்பவித்த ‘கர்த்தருடைய நாளைக்’ (பேரழிவை) குறித்து விவரிக்கிறார். தேசம் வெட்டுக்கிளிகளாலும் வறட்சியினாலும் பெரும் அழிவை சந்தித்திருந்தது. இப்பேரழிவின் விளக்கம் (1:2-12) ஜனங்கள் மத்தியில் துக்கத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் அழைப்பு விடுக்கிறது (1:13-20).

  2. இரண்டாவது பிரிவு (2:1-17): வரலாற்றில் வெட்டுக்கிளிகளால் வந்த பேரழிவைக் குறித்துப் பேசிய தீர்க்கதரிசி, அதை எதிர்காலத்தில் வரவிருக்கும் கர்த்தருடைய நாளின் சம்பவங்களுக்கு ஒப்பிடுகிறார். வரவிருக்கும் கர்த்தரின் வருகையைக் குறித்து எச்சரிப்பதுடன் (2:1-11), உபவாசம் இருந்து மனந்திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் (2:12-17).

  3. மூன்றாம் பிரிவு (2:18-3:21): கர்த்தர் நேரடியாகப் பேசுகிறார். அவர் தமது ஜனங்களிடம், "நான் உங்கள் நடுவில் இருக்கிறேன்" என்ற நிச்சயத்தைத் தருகிறார். ஜனங்களின் மனந்திரும்புதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், அவர்களுடைய ஜெபத்திற்கு தேவன் அளித்த பதிலையும் இது விவரிக்கிறது (2:18-19). புலம்பல் மகிழ்ச்சியாக மாறுகிறது. மனந்திரும்பினவர்களுக்கு தேவன் மூன்று வாக்குத்தத்தங்களைத் தருகிறார்:

    • தேசத்திற்கு தெய்வீக ஷேமம் மற்றும் செழிப்பு (2:21-27).

    • அவருடைய ஆவியை ஊற்றுவதால் உண்டாகும் ஆவிக்குரிய மீட்டமைப்பு (2:28-32).

    • எதிரிகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் இஸ்ரவேலின் நித்திய ஆசீர்வாதம் (3:1-21).

முக்கிய வாக்குத்தத்தங்கள்:

  • “நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.” (2:26)

  • “நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்.” (2:27)

  • “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.” (2:28)


யோவேல் புத்தகத்தின் விரிவான அமைப்பு (Outline)

I. வரலாற்றுப் பார்வை: கர்த்தருடைய நாளின் முன்மாதிரி (வெட்டுக்கிளி வாதை) (1:1-20) அ. செய்தியின் ஆதாரம் (1:1) ஆ. அழிவினைக் குறித்து சிந்திக்கக் கட்டளை (1:2-4) இ. அழிவின் பூரணம் (1:5-12) ஈ. அழிவின் தீவிரத்தை உணர்ந்து மனந்திரும்ப அழைப்பு (1:13-20)

II. தீர்க்கதரிசனப் பார்வை: கர்த்தருடைய நாள் விவரிக்கப்படுகிறது (2:1-17) அ. ஆபத்தின் எச்சரிக்கை மணி (2:1) ஆ. மகா பெரிய படையெடுப்பு (2:2-11) இ. மனந்திரும்புதலுக்கான உருக்கமான அழைப்பு (2:12-17)

III. கர்த்தருடைய நாளின் விளைவுகள்: மீட்பும் நியாயத்தீர்ப்பும் (2:18 – 3:21) அ. தேவன் தம் ஜனத்தின் ஜெபத்திற்கு இரங்குதல் (2:18-20) ஆ. ஆசீர்வாதங்கள் மீட்டமைக்கப்படுதல் (பொருளாதாரம்) (2:21-27) இ. ஆவிக்குரிய மறுமலர்ச்சி மற்றும் ஆவியின் ஊற்றுதல் (2:28–32) ஈ. தேசங்களின் மீதான நியாயத்தீர்ப்பு மற்றும் யூதாவின் மீட்பு (3:1-21)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.