உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

சிலுவையும், சுயமும்
ஆசிரியர்: A.W. பிங்க் 1886-1952
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 11 நிமிடங்கள்

"அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." (மத்தேயு 16:24)

இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பினால்" என்று கூறுவது ஒரு தீர்மானத்தையும், திட்டத்தையும் குறிக்கிறது. "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" என்பதே அந்த அழைப்பு.

மேலும், லூக்கா 14:27-ல் கிறிஸ்து, "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" என்றும், "தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" என்றும் கூறுகிறார். எனவே, இது நம்முடைய விருப்பத்திற்கு விடப்பட்ட காரியமல்ல; கிறிஸ்துவின் சீஷத்துவத்திற்கு இது மிக அவசியம். கிறிஸ்தவம் என்பது ஒரு சத்தியத்தை ஏற்றுக்கொள்வதையோ, சில விதிகளுக்குக் கீழ்ப்படிவதையோ, அல்லது ஒரு மதத்தைப் பின்பற்றுவதையோ விட மேலானது. முதலாவதாக, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது. எனவே, நீங்கள் கிறிஸ்துவுடன் எந்த அளவுக்கு நெருங்கிய உறவு வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு மட்டுமே நீங்கள் உண்மையான கிறிஸ்தவனாக இருக்க முடியும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கை. நாம் கிறிஸ்துவோடு நடப்பதில் வளர வேண்டும். "ஆட்டுக்குட்டி எானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே" (வெளிப்படுத்துதல் 14:4) என்று வேதம் சொல்லுகிறது. ஆனால், மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அங்கும் இங்கும் தற்செயலாகவும், அவ்வப்போதும் தேவனை அரைகுறை இருதயத்துடன் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தேவனைப் பின்பற்றுவது போல் தோன்றுவார்கள்; ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சுயத்திற்கும் உலகத்திற்கும் அதிக இடத்தையும், கிறிஸ்துவுக்குக் குறைந்த இடத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால், காலேபைப் போல் "கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றுகிறவர்கள்" (எண்ணாகமம் 14:24) மட்டுமே முழுமையான மகிழ்ச்சியைக் காண்பார்கள்.

எனவே அன்பானவர்களே! கிறிஸ்துவைப் பின்பற்றுவதே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், அவரைப் பின்பற்ற வேண்டிய இந்தப் பாதையில் உபத்திரவங்களும் தடைகளும் உள்ளன. ஆரம்பத்தில் நாம் வாசித்த வசனத்தின் முதல் பகுதி இந்தக் கருத்தைத்தான் தெரிவிக்கிறது. அந்த வசனத்தின் முடிவில் "என்னைப் பின்பற்றக்கடவன்" என்ற வார்த்தை இருப்பதைக் கவனியுங்கள். அவரைப் பின்தொடர்வதற்கு 'சுயம்' தடையாக நிற்கிறது. உலகம் எண்ணற்ற ஈர்ப்புகளாலும் தடைகளாலும் திணறடிக்கிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து கூறுகிறார்: "ஒருவன் எனக்குப் பின் வர விரும்பினால் - (முதலில்) அவன் தன்னைத்தான் வெறுத்து, (இரண்டாவது) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, (மூன்றாவது) என்னைப் பின்பற்ற வேண்டும்". கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒரு சிலர் மட்டும் ஏன் அவரை நெருக்கமாகவும், தெளிவாகவும், ஒரே சிந்தையோடும் பின்பற்றுகிறார்கள் என்பதை இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான முதல் படி, ஒவ்வொரு நாளும் சுயத்தை வெறுத்து, சுயநலத்தை மறுப்பதாகும்.

‘சுயத்தை வெறுப்பது’ மற்றும் 'சுயத்தைப் புறக்கணிப்பது' ஆகிய இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. 'சுயத்தை வெறுப்பது’ என்பது பொதுவாக உலகிலும் கிறிஸ்தவர்களிடையேயும் 'தனக்குப் பிடித்தமானதை விட்டுவிடுவது' என்று கருதப்படுகிறது. ஆனால் எதை விட்டுவிட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் இந்த 'விட்டு விடுவதை' உலகப்பிரகாரமான காரியங்களாகிய திரைப்படங்கள், வன்முறை விளையாட்டுகள், சூதாட்டம் போன்றவற்றைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள், துக்க நாட்கள் அல்லது சில சடங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்கிறார்கள். இவை மனிதனுடைய சுயநீதியைத்தான் வளர்க்கின்றன. இருப்பினும், இயேசு கிறிஸ்து அவரைப் பின்பற்றுவதற்கு வகுத்த முதல் விதி: தனக்குப் பிரியமானதை மட்டும் விட்டுவிடுவதல்ல, தன்னைத்தானே வெறுப்பதாகும்; அதாவது தன் ஆசைகளை மட்டும் கைவிடாமல், தன்னைத்தானே கைவிடுவதாகும்.

"ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து" என்று சொல்வதன் அர்த்தம் என்ன? ஒரு நபர் தனது சுயமரியாதையையும், சுய ஞானத்தையும் நம்ப மறுப்பது என்று அர்த்தம். என் சுய உரிமைகளை விட்டுக்கொடுப்பதையும், சுயத்தைத் துறப்பதையும் இது குறிக்கிறது. நமது வசதிகள், விருப்பங்கள், அந்தஸ்து மற்றும் சுயநலம் போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துவதே இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், சுயத்தை முழுமையாகத் துறந்துவிடுதல் என்று பொருள்.

அன்பு நண்பர்களே! "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" (பிலிப்பியர் 1:21) என்று அப்போஸ்தலனாகிய பவுலோடு நாமும் கூறுவோம். "கிறிஸ்து எனக்கு ஜீவன்" என்றால் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல், அவரைப் பின்பற்றுதல், அவரை மகிமைப்படுத்துதல் மற்றும் அவருக்கு நம்மையே அர்ப்பணித்தல் என்று அர்த்தம். "உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று" ரோமர் 12:1-ல் வாசிக்கிறோம். இதுவே சுயத்தை முற்றிலும் கைவிடுவதாகும்.

இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் "சிலுவையைச் சுமப்பது" மிக முக்கியமானது. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பொறுப்பற்ற ஆடம்பர வாழ்க்கை அல்ல; அது ஒரு சீரிய தீர்மானம். அது ஒழுக்கமும் தியாகமும் நிறைந்த வாழ்க்கை. சீஷத்துவ வாழ்க்கை சுயத்தைத் துறப்பதில் தொடங்கி, சுயநலத்தின் முடிவை நோக்கிச் செல்கிறது. இந்த வசனத்தில் சொல்லப்பட்ட சிலுவை ஒரு சிலையாக அல்ல, மாறாக வாழ்க்கையின் ஆதாரமாகவும், சீஷத்துவத்தின் சின்னமாகவும், ஆவிக்குரிய அனுபவமாகவும் சித்தரிக்கப்படுகிறது. கிறிஸ்து சிலுவையின் மூலமே பிதாவின் சிம்மாசனத்திற்கு ஏறினார் என்பது போலவே, கிறிஸ்தவன் தேவனுடன் ஐக்கியம் கொள்வதற்கும், இறுதியில் ஜீவகிரீடத்தைப் பெறுவதற்கும் சிலுவை மட்டுமே பாதையாக இருக்கிறது. நம்முடைய பாவம் மன்னிக்கப்படும்போது கிறிஸ்துவின் பலியின் நன்மைகள் நமக்குக் கிடைக்கும்; ஆனால், சிலுவை நம் அன்றாட வாழ்வில் ஒரு அனுபவமாக மாறும்போது மட்டுமே பாவ சுபாவத்தின் மீது நாம் வெற்றி கொள்ள முடியும்.

மத்தேயு 16:21,22-ல் உள்ள சந்தர்ப்பத்தைப் பார்ப்போம். இயேசு தாம் எருசலேமுக்குப் போய், பாடுபட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்து, "ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே" என்று கடிந்து கொண்டான். பேதுருவின் இந்த வார்த்தைகள் உலக சிந்தனையையே காட்டின. உலக தத்துவத்தின் சாரம் சுய பாதுகாப்பு; ஆனால் கிறிஸ்துவின் செய்தியின் சாரம் சுய தியாகம். பேதுருவின் ஆலோசனையில் சாத்தானின் சோதனையைக் கண்ட கிறிஸ்து, அவனைக் கடிந்துகொண்டார். பின்னர், "என்னைப்போலவே என்னைப் பின்தொடருகிறவனுக்கும் ஒரு சிலுவை உண்டு" என்பதை உணர்த்தினார். கிறிஸ்து எருசலேமுக்குச் சென்று மரிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவரைப் பின்தொடர விரும்புபவர்கள் சிலுவையைச் சுமக்க வேண்டியதும் அவ்வளவு அவசியமாக இருக்கிறது.

சிலுவையைச் சுமப்பவன் என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? இன்று அநேக தேவபிள்ளைகளுக்கு "சிலுவை" பற்றிய வேதப்பூர்வமான புரிதல் இல்லை. வியாதி, குடும்பப் பிரச்சினைகள் அல்லது துன்பங்களை "இது என் சிலுவை" என்று பலர் தவறாகக் கூறுகிறார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டில் "சிலுவை" என்ற வார்த்தை பன்மை வடிவத்தில் (Crosses) எங்கும் பயன்படுத்தப்படவில்லை; "ஒரே சிலுவை" என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலுவை என்பது நம் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதல்ல (Passive Voice); நாமே விரும்பி எடுத்துக்கொள்ள வேண்டியது (Active Voice). சிலுவை என்பது கிறிஸ்துவின் பாடுகளை வெளிப்படுத்தும் சத்தியத்தின் சின்னமாகும்.

சிலுவையை அடையாளப்படுத்தும் மூன்று முக்கிய காரியங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்:

  1. உலகத்தின் வெறுப்பு: உலகம் கிறிஸ்துவை வெறுத்து, அவரைச் சிலுவையில் அறைந்தது. யோவான் 15-ம் அதிகாரத்தில், உலகம் தன்னையும் தம்முடையவர்களையும் வெறுத்ததாகக் கிறிஸ்து கூறுகிறார். நாம் கிறிஸ்துவைப் போல வாழும்போது, உலகம் நம்மையும் வெறுக்கும். கிறிஸ்துவை சீஷனாகப் பின்பற்ற விரும்பிய ஒருவன், "முதலில் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண உத்தரவு கொடும்" என்று கேட்டான் (லூக்கா 9:59). அதற்கு இயேசு, "மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா" என்றார். இது கடினமாகத் தோன்றலாம், ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது உலக பாசபந்தங்களை விட மேலானது. நீங்கள் கிறிஸ்துவை நெருக்கமாகப் பின்பற்றும்போது, உலகம் உங்களைப் பைத்தியக்காரராகப் பார்க்கும்.

  2. தேவ சித்தத்திற்கு முழுமையான கீழ்ப்படிதல்: கிறிஸ்து தம் ஜீவனைக் கொடுத்தது பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே ஆகும் (யோவான் 10:17,18). பிலிப்பியர் 2:8 கூறுவதுபோல, அவர் சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். சிலுவையைச் சுமப்பது என்பது, நாமும் நம் சுய விருப்பத்தை வெறுத்து, தேவ சித்தத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதாகும்.

  3. பிறருக்காகத் தியாகம் செய்தல்: "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்" (1 யோவான் 3:16). இதுவே கல்வாரியின் தர்க்கம். தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; கிறிஸ்துவுக்காகத் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் கண்டடைவான் (மத்தேயு 16:25).

கிறிஸ்து பிதாவை மகிமைப்படுத்தவும், தேவ அன்பை வெளிப்படுத்தவும் பூமிக்கு வந்தார். இப்போது, "பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" (யோவான் 20:21) என்று கூறி, நம்மை அனுப்புகிறார்.

அன்பான சகோதரனே! சகோதரியே! "இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்" (2 கொரிந்தியர் 4:10). கிறிஸ்துவின் மரணத்தின் அனுபவம் நம்மில் இருக்கிறதா? குறைந்தபட்சம் சிலுவையைச் சுமக்க ஆரம்பித்துவிட்டோமா? பாவத்தை ஜெயிப்பதற்கும், பழைய மனிதனின் மீது வெற்றி பெறுவதற்கும் ஒரே வழி, சிலுவையை நம் வாழ்வில் அனுபவபூர்வமாகச் சுமப்பதுதான்.

"ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நம்மை நாமே ஆராய்ந்து, நம் வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.