உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

தேவனின் சித்தத்தை அறிதல் - பகுதி 3
ஆசிரியர்: D. யஷ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்

சகோதரர் G. பிபு அவர்கள் “தேவனுடைய சித்தத்தை அறிவது எப்படி?” என்ற தலைப்பின் கீழ் பலரும் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பகிரப்பட்டுள்ள கருத்துக்கள் “தேவனுடைய சித்தத்தை அறிதல்” என்ற தலைப்பை இன்னும் ஆழமாகவும், வெவ்வேறு கோணங்களிலும் படிப்பதற்கு உதவும் என்று எண்ணி, அவற்றை இந்தக் கட்டுரை வடிவில் தொகுக்க முடிவு செய்தேன். இந்த மூன்றாம் பாகத்தில், கேள்வி மற்றும் பதில் வடிவில் இத்தலைப்பை இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.

கேள்வி 1: பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலும், நம்முடைய தேவன் பேசும் தேவனாகவே இருக்கிறார். இன்றும் தேவன் நம்மிடம் அப்படித்தான் பேசுகிறார் என்று ஏன் நினைக்கக்கூடாது? வேத வசன ஆதாரத்தைக் கொண்டு விளக்குங்கள்.

பதில்: தேவன் நம்மிடம் பேசுகிறார் என்பது தெளிவானது. ஆனால், 'அவர் எப்படிப் பேசுகிறார்?' என்பதுதான் முக்கியமான கேள்வி. வேதத்தின் வடிவில் தேவனுடைய முழுமையான வெளிப்பாடு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத்த வேதத்தின் மூலமாகத்தான் தேவன் நம்மிடம் பேசுகிறார். பரிசுத்த ஆவியானவர் வேத சத்தியத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவும், அவற்றைப் பயன்படுத்தவும் நமக்கு உதவுவதன் மூலம் நம்மை வழிநடத்துகிறார். வேத வசனத்திற்கு அப்பாற்பட்டு, நமக்கு புதிய செய்திகளைக் கொடுப்பதற்காக அவர் நேரடியாக நம்மிடம் பேசுகிறார் என்று சொல்வதற்கு எந்த வேத ஆதாரமும் இல்லை.

ஆதாம், ஆபிரகாம், மோசே, நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் பலரிடம் தேவன் பேசினார் என்று வேதத்தில் வாசிக்கிறோமே என்று கேட்பது நியாயமான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால் வாசகர்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், தேவன் யாரிடம் நேரடியாகப் பேசினார்? தேவன் குறிப்பாகத் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களிடம் மட்டுமே நேரடியாகப் பேசினார்.

உதாரணமாக, தேவன் பார்வோனிடம் கனவு மூலம் பேசினார். ஆனால் அந்தக் கனவு குறித்த விளக்கம் பார்வோனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அந்தக் கனவைக் குறித்து அவருக்குத் தெரிவித்தது யார்? ஒரு தீர்க்கதரிசி (யோசேப்பு) வந்து அந்தக் கனவு குறித்த விளக்கத்தைத் தெரிவித்தார். அதாவது, தேவன் ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்தை நிறுவவே கனவின் மூலம் பார்வோனிடம் பேசினார். தீர்க்கதரிசிக்குத் தெரியாமல், அவரது ஈடுபாடு இல்லாமல் தேவன் பார்வோனுக்கு எதையும் வெளிப்படுத்துவார் என்று நினைக்க முடியாது. யோசேப்பு சிறையில் இருந்தபோது கூட, பானபாத்திரக்காரர்களின் தலைவனும், சுயம்பாகிகளின் தலைவனும் ஒரு கனவு கண்டதாக வாசிக்கிறோம். அந்தச் சந்தர்ப்பத்தில் கூட, அது தேவனுடைய தீர்க்கதரிசியான யோசேப்பை உயர்த்துவதற்காகத் தேவன் செய்த செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

புறஜாதி அரசனான நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவின் மூலம் தேவன் சொல்ல விரும்பிய அனைத்து விஷயங்களையும் அவன் அறிந்தானா? இல்லை. அந்நிய தேசத்தில் தானியேலின் ஊழியத்தை நிலைநிறுத்துவதே தேவனின் நோக்கமாக இருந்தது. தேவன் கொர்னேலியுவிடம் பேசினார், ஆனால் பேதுருவின் உதவி இல்லாமல் தேவன் கொர்னேலியுவுக்கு சத்தியத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்ல முடியாது. அவ்விதமாகவே, தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் அல்லாதவர்களுடன் தேவன் பேசிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்லது அப்போஸ்தலர்களுடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பதைக் காணலாம். இதைத் தவிர, தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத எவரிடமும் தேவன் பேசியதாகவோ, தமது வெளிப்பாட்டைக் கொடுத்ததாகவோ வேதத்தில் ஏதேனும் பதிவுகள் உண்டா? இல்லை.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், பழைய ஏற்பாட்டிலோ அல்லது புதிய ஏற்பாட்டிலோ தேவன் எல்லோரிடமும் பேசவில்லை. தேவன் தோன்றி எல்லா விசுவாசிகளிடமும் நேரடியாகவோ, சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலமாகவோ பேசினார் என்று நாம் வேதத்தில் எங்கும் வாசிப்பதில்லை. ஆகவே, ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவர் அன்றாடம் எடுக்க வேண்டிய ஒவ்வொரு முடிவுக்கும் (உதாரணமாக: நான் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டுமா? வேண்டாமா? இந்த வேலையைச் செய்ய வேண்டுமா? வேண்டாமா?) தேவன் தினமும் நேரடியாகப் பேசியதாகவும், இது போன்ற காரியங்களில் வழிநடத்தியதாகவும் வேதம் கூறவில்லை. தேவன் சிலரிடம் மட்டுமே பேசினார் என்று வாசிக்கிறோம்.

அந்தச் சிலருக்கு தேவன் வழங்கிய அந்த வெளிப்பாட்டின் அடிப்படையில், எல்லா விசுவாசிகளும் நடக்க வேண்டும் என்று தேவன் ஆரம்பத்திலிருந்தே போதித்ததற்கு வேதத்தில் தெளிவான சான்றுகள் உள்ளன.

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29)

இந்த வசனத்தில், மறைவானவைகள் கர்த்தருக்கு மட்டுமே சொந்தமானவை என்றும், அவற்றை அறிவது நம்முடைய பணி அல்ல என்றும், ஆனால் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள் மட்டுமே நமக்குரியவை என்றும் கற்பிக்கப்படுகிறது. அவற்றை நாம் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்; அவற்றின்படி நாம் வாழ வேண்டும். அவைகளிலிருந்து வலதுபுறமோ இடதுபுறமோ விலகக்கூடாது. இது விசுவாசிகள் அனைவருக்கும் தேவன் கொடுத்த கட்டளை. ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்குப் புதிய வெளிப்பாடுகளைத் தருவேன் என்று தேவன் விசுவாசிகளுக்கு எந்தப் புதிய வாக்குறுதியையும் அளிக்கவில்லை.

பெற்றோர்களுக்குத் தேவன் கொடுத்திருக்கும் பொறுப்பைப் பற்றி வேதத்தில் பார்த்தால்:

"இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி..." (உபாகமம் 6:6,7)

இந்த வசனத்தில், 'நீங்கள் தேவனின் முன்னிலையில் காத்திருந்தால், தேவன் உங்களுக்குப் புதிய வெளிப்பாடுகளை வழங்குவார், அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும்' என்று சொல்லாமல், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காரியங்களை உங்கள் இதயத்தில் வைத்து, அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள் என்றுதான் சொல்லுகிறார்.

வேதத்தின் வடிவில் தேவன் நமக்கு வெளிப்படுத்தியவைகளே நமக்கு ஆதாரம். தேவனுடைய சித்தம் அவருடைய வார்த்தையில் முழுமையாகவும் தெளிவாகவும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் வெளிப்படுத்தியதற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதே தேவன் தொடக்கத்தில் இருந்தே நமக்குக் கற்பித்த பாதை. ஆகவே, தேவன் ஒவ்வொரு விசுவாசியிடமும் தினந்தோறும் நேரடியாகவோ அல்லது கனவுகள் மூலமாகவோ பேசுவார் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? வேதம் முழுவதும் நாம் பார்க்கும்போது, தேவன் அனைவரையும் எவ்விதமாக வழிநடத்தினாரோ, அவ்விதமாகவே உங்களையும் வழிநடத்துவார். தேவன் தம்முடைய பரிசுத்த வேதத்தின் மூலம் நம்மிடம் பேசுகிறார்.

தேவன் ஒவ்வொரு விசுவாசியிடமும் நேரடியாகவோ, கனவுகள் மூலமாகவோ, தரிசனங்கள் மூலமாகவோ பேசுகிறார் என்பதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பலர் அவ்விதமாகப் போதிக்கின்றனர். தேவன் வாக்களிக்காததைச் செய்கிறவராகச் சித்தரிக்கப்படுகிறார். புதிய போதனைகளைத் திருச்சபையில் புகுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தேவன் அவருடைய வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுகிறார். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் நாம் அதைப் புரிந்துகொள்ள முடியும். அதன் விதிகளை நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும். வேதம் தேவனுடைய முழுமையான வெளிப்பாடு; இது நிறைவானதும், நமக்குப் போதுமானதுமாகும். அதில் முழு விசுவாசத்தோடு இருப்போம். இதைத் தாண்டிப் புதிய வெளிப்பாடுகளுக்காக நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


கேள்வி 2: யோவேல் 2:28-30-ல் வாசிக்கிறோம்: "அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்... அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்..." இதில் "அந்நாட்களிலே" என்றால் எந்த நாட்கள்? அந்த நாட்கள் வரும்போது எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்வார்களா?

பதில்: யோவேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனம் எந்த நாட்களில் நிறைவேற வேண்டுமோ, அந்தக் கடைசி நாட்கள் பெந்தெகோஸ்தே நாளில் தொடங்கின. 'இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் (பரிசுத்த ஆவி ஊற்றப்படுதல், அப்போஸ்தலர்கள் அந்நிய பாஷைகளில் பேசுதல் முதலியன) அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடக்கிறது' என்று அப். பேதுரு கூறினார் (அப்போஸ்தலர் 2:16-21).

ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியதாகக் கருத முடியாது. இது முழுமையாக நடக்கவில்லை என்பது தீர்க்கதரிசனத்தை வாசித்த எவருக்கும் புரியும். இந்தச் சந்தர்ப்பம் அந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் ஆரம்பம் மட்டுமே. யோவேல் தீர்க்கதரிசனத்தில் உள்ள சில காரியங்கள் அப்போஸ்தலர்களின் காலத்தில் நிறைவேறின. ஆனால், "வானத்திலே அற்புதங்களையும், பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்... சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்" (யோவேல் 2:30-31) போன்ற காரியங்கள் இன்னும் நிறைவேற வேண்டியதாக உள்ளன.

கடைசி நாட்கள் என்பது பெந்தெகோஸ்தே நாளில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. ஆனால், பெந்தெகோஸ்தே நாளில் நிறைவேறிய யோவேல் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில், இந்த நாளில் தேவன் ஒவ்வொருவரிடமும் சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் பேசுகிறார் என்று சொல்ல முடியாது. புதிய ஏற்பாட்டின் மற்ற வசனங்களை ஆராயும்போது, தேவன் இம்முறையில் பேசுவது அப்போஸ்தலர் காலத்திற்கு மட்டுமே உட்பட்டது என்பதையும், வேதம் முழுமை பெற்ற பிறகு அத்தகைய நேரடி வெளிப்பாடுகள் தேவையில்லை என்பதால் அவை நிறுத்தப்பட்டன என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். எனவே, இன்றைய நாட்களில் ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய சித்தத்தை அறியச் சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் புதிய வெளிப்பாடுகளைப் பெறுகிறார்கள் என்று கூறுவதற்கு இந்த வசனத்தில் அடிப்படை ஆதாரமில்லை.


கேள்வி 3: ரோமர் 8:16, "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்" என்று வாசிக்கும்போது, ​​தேவன் நம்மிடம் பேசமாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

பதில்: ஆவியானவர் எதைக் குறித்துச் சாட்சியிடுகிறார்? நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற உறுதியை அவர் நமக்கு வழங்குகிறார். இந்த வசனத்தின் சந்தர்ப்பத்தை நாம் ஆராய்ந்தால், அப். பவுல் ரோமர் 8:1-ல் "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" என்று தொடங்குகிறார். மேலும் 13-வது வசனத்தில் "மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்" என்று கூறுகிறார்.

இந்த வார்த்தைகளின்படி, ஆவியானவரால் வழிநடத்தப்படுவது அல்லது ஆவியின்படி நடப்பது என்பது, ஆவியானவர் நம்மில் உற்பத்தி செய்யும் ஆவியின் கனிகளுக்கு ஏற்ப செயல்களைச் செய்வதாகும். இவ்வாறு ஆவியால் வழிநடத்தப்படுபவர்களே தேவனுடைய பிள்ளைகள்.

ஆகவே, ஒரு விசுவாசி மாம்சத்தின் கிரியைகளை ஆவியினால் அழித்து, ஆவியின் கனிகளுக்கு இசைவான செயல்களைச் செய்தால், அது அந்த விசுவாசிக்கு என்ன சாட்சியாக இருக்கிறது? அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர், தேவனுடைய பிள்ளைகள் என்று அது சாட்சியிடுகிறது. பரிசுத்த ஆவியானவர் "நீங்கள் தேவனுடைய பிள்ளைகள்" என்று உங்கள் காதில் வந்து சொல்ல மாட்டார், அல்லது அதை உங்கள் கனவிலோ தரிசனத்திலோ வெளிப்படுத்த மாட்டார். மாறாக, நம் வாழ்வில் ஆவியின் கனிகளை உற்பத்தி செய்வதன் மூலமே அந்தச் சாட்சியைத் தருகிறார். நாம் ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறோம் என்பதற்கான அத்தாட்சியை (சாட்சியை) நம் வாழ்வில் காண முடிந்தால், அதுவே ஆவியானவர் நம்மோடு கூடச் சாட்சி கொடுப்பதாகும்.

எனவே, இன்றைய நாட்களில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியிடமும் தனிப்பட்ட விதத்தில் பேசி, சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலம் புதிய வெளிப்பாடுகளைத் தருவார் என்று கூறுவதற்கு இந்த வசனத்தில் எந்த ஆதாரமும் இல்லை.


கேள்வி 4: யோவான் 16:13-ல், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்... வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" என்று பார்க்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் பேசுவதில்லை என்றால், வரப்போகிற காரியங்களைக் குறித்து அவர் நமக்கு எப்படிப் போதிக்க முடியும்?

பதில்: இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் யோவான் 14:26-ல், "பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" என்றார். இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்குக் கற்பித்த விஷயங்களை நினைவுகூருவது மட்டுமல்லாமல், "இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்" (யோவான் 16:12) என்றும், பரிசுத்த ஆவியானவர் வரும்போது அவற்றை உங்களுக்கு வெளிப்படுத்துவார் என்றும் கூறினார்.

அவர் வெளிப்படுத்தும் காரியங்கள் கிறிஸ்துவைப் பற்றிய காரியங்கள். அவை தேவனால் அப்போஸ்தலர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டு, புதிய ஏற்பாட்டில் புத்தக வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'வரவிருக்கும் காரியங்கள்' அனைத்தும் கிறிஸ்துவுடன் தொடர்புடையவை. இது, இன்றைய நாட்களில் "நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும்?" என்று ஒவ்வொரு விசுவாசிக்கும் பரிசுத்த ஆவியானவர் தனித்தனியாக வெளிப்படுத்துவதைக் குறிக்கவில்லை.

ஒருவேளை தேவன் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தது போலவே இன்றும் புதிய வெளிப்பாடுகளைக் கொடுக்கிறார் என்றால், அந்தப் புதிய வெளிப்பாடுகளும் வேதவசனங்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைகளும் வேதத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் வேதம் முழுமையடைந்துவிட்டது. இன்று அநேகர், தேவன் தங்களுக்குப் புதிய காரியங்களை வெளிப்படுத்தினார் என்று சாட்சி கொடுக்கிறார்கள். நவீன காலப் போதகர்கள் சிலர், ஜோதிடக்காரன் கூறுவது போல் பொதுவான காரியங்களைக் கூறிவிட்டு, அவை நடந்த பிறகு "தேவன் முன்பே வெளிப்படுத்தினார்" என்று பெருமை பாராட்டுகிறார்கள். ஆனால், பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்க நினைத்த எல்லாவற்றையும் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் மூலம் வேதத்தின் 66 புத்தகங்களில் கொடுத்துவிட்டார். அதுவே நமக்குப் போதுமானது.


கேள்வி 5: 1 கொரிந்தியர் 2:10-ல் "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்" என்று சொல்லப்பட்டிருக்கிறதே. ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துவார் என்று வேதம் சொல்லும்போது, நீங்கள் வெளிப்படுத்த மாட்டார் என்று சொல்கிறீர்களா?

பதில்: இந்த வசனத்தின் சந்தர்ப்பத்தைக் கவனிப்போம். அப். பவுல் இதற்கு முந்தைய வசனங்களில், உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தியதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம் என்று கூறுகிறார். 1 கொரிந்தியர் 1:18-ல், "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது" என்கிறார்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றி தேவன் வேதத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலும், உலக ஞானிகளால் அதைக் காண முடியவில்லை. ஜென்ம சுபாவமான மனிதனால் (Natural man) தேவனுடைய காரியங்களை உணர முடியாது; அவை அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும் (1 கொரிந்தியர் 2:14). ஆனால், விசுவாசிகளாகிய நமக்கு அவை ஏன் புரிகின்றன? தேவன் தம்முடைய ஆவியால் நம் மனக்கண்களைத் திறந்து, மறுபிறப்பைத் தந்திருப்பதால்தான் நம்மால் அவற்றைக் காண முடிகிறது. இதுதான் "தேவன் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்" என்பதன் பொருள்.

இது சுவிசேஷத்தின் மகிமையை உணர்வதைக் குறிக்கிறதே தவிர, தினசரி வாழ்க்கைக்குத் தேவையான புதிய வெளிப்பாடுகளைத் தேவன் தருவார் என்று சொல்வதற்கு இந்த வசனத்தில் எந்த அடிப்படையும் இல்லை.


கேள்வி 6: 1 கொரிந்தியர் 14:29, 30: "தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம்... அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்." இந்த வசனத்தில் தேவன் வெளிப்படுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்று தேவன் நமக்குப் புதிய காரியங்களை வெளிப்படுத்த மாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

பதில்: இது தீர்க்கதரிசன வரத்திற்கும், அந்நிய பாஷை வரத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட எழுதப்பட்ட அதிகாரம். தீர்க்கதரிசனம் சொல்வது திருச்சபைக்குப் பக்திவிருத்தியை உண்டாக்கும். இங்கே 'தீர்க்கதரிசனம்' என்பது எதிர்காலத்தில் நடப்பதை அறிவிப்பது என்ற அர்த்தத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை; ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தைகளைக் கற்பிப்பதும் அறிவிப்பதும் இதில் அடங்கும்.

'வெளிப்பாடு' (Revelation) என்ற வார்த்தையை இங்கே 'புதிய சத்தியங்களை வெளிப்படுத்துவது' என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஏற்கனவே உள்ள சத்தியங்களைச் சரியாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டு, இதுவரை காணாத ஆழத்தைக் கண்டு உணர்வதையே இது குறிக்கிறது. கிரேக்க மொழியில் 'மூடியதைத் திறப்பது, திறந்து போதிப்பது' என்ற பொருளை இது தருகிறது. இந்த வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களை வெளிப்படுத்துவார் என்று சொல்ல முடியாது.


கேள்வி 7: யோவான் 14:12-ல், "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்" என்று இயேசு சொன்னார். 'பெரிய கிரியைகள்' என்பதை 'பெரிய வெளிப்பாடுகள்' என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாதா?

பதில்: "என்னைவிடப் பெரிய கிரியைகளைச் செய்வார்கள்" என்ற வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து தண்ணீரின் மீது நடந்ததைப் போலவோ, ஐந்து அப்பங்களில் ஐயாயிரம் பேரைப் போஷித்தது போலவோ யாரும் செய்யவில்லை. தரத்திலும் (Quality), வல்லமையிலும் இயேசுவை விடப் பெரிய கிரியைகளை எந்த அப்போஸ்தலரும் செய்யவில்லை.

அப்படியானால், இயேசுவின் வார்த்தை எப்படி நிறைவேறியது? 'மகத்துவம்' என்பது தரத்தில் இல்லை, அளவிலேயே (Quantity) உள்ளது. இயேசு கிறிஸ்துவின் ஊழியம் யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியா பகுதிகளோடு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் இடையிலான சுவரைத் தகர்த்த பிறகு, அப்போஸ்தலர்கள் உலகம் முழுவதும் சுவிசேஷத்தை அறிவித்தனர். எண்ணிக்கையிலும், பரப்பளவிலும் சீஷர்கள் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

'பெரிய கிரியைகள்' என்பதை 'பெரிய வெளிப்பாடுகள்' என்று அர்த்தம் கொண்டால், இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தியதை விட மேலான ஒன்றை அப்போஸ்தலர்கள் வெளிப்படுத்த முடியுமா? பரலோக காரியங்களை விட மேலான வேறொரு பரலோகத்தைப் பற்றிப் பேச முடியுமா? இல்லவே இல்லை! எனவே, இந்த வசனத்திற்கும் விசுவாசிகளுக்குப் புதிய வெளிப்பாடுகள் கிடைப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


கேள்வி 8: வேதம் முழுமையானதும், போதுமானது என்றும் சொல்கிறீர்கள். ஆனால் வேதத்தில் ராக்கெட் அறிவியலோ, கணினி தொழில்நுட்பமோ இல்லை. அப்படியானால் வேதம் முழுமையானது என்று எப்படிச் சொல்ல முடியும்?

பதில்: இது காரியத்தைத் திசைதிருப்பிக் கேட்பதாகும். 2 தீமோத்தேயு 3:16,17-ல், "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது... தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக..." என்று வேதம் கூறுகிறது. இதன் அர்த்தம், ஒரு மனிதன் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதற்கும், இரட்சிப்பிற்கும், ஆத்மீக வாழ்விற்கும் தேவையான முடிவுகளை எடுப்பதற்கும் வேதம் போதுமானது என்பதாகும்.

ராக்கெட் அறிவியல் அல்லது கணினி தொழில்நுட்பம் வேதத்தில் இல்லைதான். ஆனால் மனிதன் எதையும் உருவாக்கவும், கண்டுபிடிக்கவும் தேவையான பொதுவான ஞானத்தைத் தேவன் கொடுத்திருக்கிறார். அது உலகத்திற்குரிய அறிவு. 'வேதம் போதுமானது' என்று நாம் கூறும்போது, தார்மீக மற்றும் ஆன்மீகக் காரியங்களைப் (Moral and Spiritual matters) பற்றிப் பேசுகிறோம். ஆன்மீக ரீதியில் ஒரு மனிதன் முழுமையடைவதற்கு வேதம் போதுமானது.


கேள்வி 9: தேவன் வேதத்தின் மூலம் மட்டுமே பேசுகிறார் என்று சொல்வது, ​​தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்துவது ஆகாதா? அவரை ஒரு பெட்டியில் அடைப்பது போல் ஆகாதா? அவர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் இல்லையா?

பதில்: தேவனால் வேறு விதமாகப் பேச முடியாது என்று நாங்கள் கூறவில்லை; அவர் தாம் ஏற்படுத்திய முறைப்படி பேசுகிறார் என்றே கூறுகிறோம். உதாரணமாக, "இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு" என்று வேதம் சொல்வது, தேவனை ஒரு பெட்டியில் வைப்பது போலாகுமா? தேவனால் வேறு வழியில் நம்மை இரட்சிக்க முடியாதா? முடியும். ஆனால், "இயேசு கிறிஸ்துவே வழி" என்று தேவன் ஒரு பாதையைத் தீர்மானித்திருக்கும்போது, அந்த வழியில் நடப்பதுதான் கீழ்ப்படிதல்.

அதுபோலவே, தேவன் இன்று வேதத்தின் மூலம் பேசுவதையே தமது வழியாக வைத்துள்ளார். தேவன் விதித்துள்ள பாதையை ஏற்றுக்கொள்வது அவரை மட்டுப்படுத்துவது ஆகாது. மாறாக, இது கள்ள உபதேசங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக தேவன் நமக்குத் தந்திருக்கும் பாதுகாப்பு வேலியாகும்.


கேள்வி 10: நீதிமொழிகள் 3:5,6 - "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." என்னுடைய எல்லா நடத்தையிலும் அவருடைய அதிகாரத்திற்கு நான் எப்படி அடிபணிவது?

பதில்: ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயத்திற்கும் நாம் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் தேவன் குரல் கொடுத்துப் பேசுகிறாரா என்பதே கேள்வி. நீதிமொழிகள் 19:21 சொல்வது போல, "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்."

நமது எல்லா நடத்தையிலும் "அவருடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்வது" என்பது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதாகும். வேத வார்த்தையின் வடிவில் தேவன் நமக்கு அருளியிருக்கும் வெளிப்பாட்டின்படி நாம் வாழ்ந்தால், அவர் என் பாதைகளை நேராக்குவார். ஒவ்வொரு அடியிலும் "இப்படிச் செய், அப்படிச் செய்" என்று ஒரு குரல் மூலம் தேவன் சொல்ல மாட்டார்; மாறாக, வேதத்தின் ஆலோசனையின்படி நடக்கும்போது அவர் நம்மை வழிநடத்துகிறார்.


கேள்வி 11: ஒரு மெல்லிய குரல் என்னை வழிநடத்துகிறது என்று பெரிய பெரிய ஊழியர்கள் கூறுகிறார்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு நபர் "நான் அமெரிக்கா செல்வது தேவ சித்தமா?" என்று ஜெபிக்கும்போது, ஏசாயா 11:14-ல் "அவர்கள்... மேற்கேயிருக்கிற..." என்ற வார்த்தையைப் பார்த்து, "மேற்கு நோக்கி விமானத்தில் செல்வது தேவ சித்தம்" என்று தவறாகப் பொருள் கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். வேதத்தை வாசிக்க இது சரியான முறையா? இல்லை.

ஒவ்வொரு நாளும் அந்த நபரை வழிநடத்துவதாகச் சொல்லப்படும் அந்த 'மெல்லிய குரல்', ஏன் ஒருமுறை கூட 'நீ வேதத்தை வாசிக்கும் முறை தவறானது' என்று சொல்லவில்லை? ஏனென்றால், அது உண்மையான தேவனின் குரல் அல்ல. அந்தக் குரல் பெரும்பாலும் சொந்த மனதின் குரலாகவோ அல்லது பிசாசின் ஏமாற்று வேலையாகவோ இருக்கலாம். வேதத்திற்குப் புறம்பான அகுரல்கள் (Voices) ஆபத்தானவை. உண்மையான ஆத்மீக வளர்ச்சிக்கு உதவாத, வேதத்தை சரியாகப் போதிக்காத அந்தக் குரலை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.


கேள்வி 12: 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் ஆவியின் வரங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. தேவன் தீர்க்கதரிசனத்தின் மூலம் புதிய வெளிப்பாடுகளை வழங்க விரும்பவில்லை என்றால், அவர் ஏன் சபைக்கு அத்தகைய வரத்தை வழங்கினார்? "தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள்" (1 கொரிந்தியர் 14:39) என்ற வார்த்தைகளை எவ்வாறு புரிந்துகொள்வது?

பதில்: தீர்க்கதரிசனம் என்ற வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தீர்க்கதரிசனம் சொல்வது என்பது, மக்கள் முன் நின்று தேவனுடைய வார்த்தைகளை (வேத வசனங்களை) அதன் உண்மையான அர்த்தத்துடன் விளக்கி அறிவிப்பதாகும். இந்த அர்த்தத்தில் தீர்க்கதரிசன ஊழியம் இன்றும் உள்ளது.

ஆனால், வேதத்தில் இல்லாத புதிய வெளிப்பாடுகளைக் கொடுக்கும் அர்த்தத்திலான தீர்க்கதரிசன ஊழியம் (Office of the Prophet) இப்போது இல்லை. வெளிப்படுத்தின விசேஷம் 19:10-ல் "இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது" என்று பார்க்கிறோம். இயேசுவைக் குறித்துச் சாட்சியளிப்பவர்களும், அவரைப் குறித்துப் பிரசங்கிப்பவர்களும் ஒரு வகையில் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். ஆனால், எனக்குத் தனிப்பட்ட புதிய வெளிப்பாடுகள் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்துகொள்ளக் கூடாது.


கேள்வி 13: 1 தெசலோனிக்கேயர் 5:19-21: "ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்." இதன் அடிப்படையில், தேவன் இன்றும் நம்மிடம் பேசவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

பதில்: "ஆவியை அவித்துப்போடுதல்" என்பது, தேவன் தமது வார்த்தையில் (வேதத்தில்) வெளிப்படுத்திய கட்டளைகளுக்கு எதிராக நாம் செயல்படும்போது நடப்பதாகும். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு (வேத வசனத்திற்கு) கீழ்ப்படிய மறுக்கும்போது நாம் ஆவியை துக்கப்படுத்துகிறோம்.

"தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்" என்பது, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும்போது அதை அலட்சியப்படுத்தாதீர்கள் என்ற பொருள்படும். எல்லாவற்றையும் வேத வசனத்தைக் கொண்டு சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.


கேள்வி 14: ஆகார், காயீன் போன்ற சாதாரண மனிதர்களிடமும் தேவன் பேசவில்லையா?

பதில்: தேவன் ஆகாரிடம் பேசியது, தீர்க்கதரிசியான ஆபிரகாமின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. காயீனின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும், முதல் மனிதனும் தீர்க்கதரிசியுமான ஆதாமின் குடும்பத்துடன் தொடர்புடையது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் போது சாஸ்திரிகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்ட செய்திகள், பின்னர் மரியாளின் மூலமாகவும் அப்போஸ்தலர்கள் மூலமாகவும் வேதத்தில் பதிவு செய்யப்பட்டன. தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் உறுதிப்படுத்தப்படாத, அல்லது அவர்களது ஊழியத்தோடு தொடர்பில்லாத தனிப்பட்ட வெளிப்பாடுகள் வேத வரலாற்றில் அரிது. வேதம் முழுமையான பிறகு, அத்தகைய தனிப்பட்ட வெளிப்பாடுகளுக்கு அவசியமில்லை.


கேள்வி 15: எபேசியர் 4:11-ல், "அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும்... ஏற்படுத்தினார்" என்று பார்க்கிறோம். இன்றும் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் இருந்தால், அவர்கள் தேவனின் வெளிப்பாடுகளைப் பெறுவார்கள் தானே?

பதில்: எபேசியர் 2:20-ல், "அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்" என்று வாசிக்கிறோம். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திபாரம் (Foundation) ஒருமுறைதான் போடப்படும். அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் திருச்சபையின் அஸ்திபாரமாக இருந்தார்கள். அவர்கள் மூலமாகத்தான் வேதம் நமக்குக் கிடைத்தது.

இப்போது மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் அந்த அஸ்திபாரத்தின் மேல் திருச்சபையைக் கட்டுகிறார்கள். இன்றும் அப்போஸ்தலர்கள் இருக்கிறார்களா? இல்லை. அவர்களுடைய போதனைகள் (வேதம்) நம்மிடம் உள்ளன.

லூக்கா 16-ல் ஐசுவரியவான் - லாசரு கதையில், ஐசுவரியவான் தன் சகோதரர்களிடம் ஒருவரை அனுப்பும்படிக் கேட்டபோது, ஆபிரகாம்: "அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்" என்றார். அப்போது மோசேயும் தீர்க்கதரிசிகளும் உயிருடன் இல்லை; ஆனால் அவர்கள் எழுதிவைத்த வேதம் இருந்தது. அதுபோலவே, இன்றும் அப்போஸ்தலர்கள் நம்முடன் இல்லை என்றாலும், அவர்கள் எழுதிவைத்த வேத வார்த்தைகள் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.