நற்செய்தி

செல்வந்தனும், கம்பளிப்பூச்சியும்
ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

இன்றைய நாட்களில் பெரும் செல்வந்தர்களாகவும், தொழிலதிபர்களாகவும் திகழும் பலர், தங்களுடைய ஆரம்ப நாட்களில் ஏழைகளாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அத்தகையோரில் இங்கிலாந்தைச் சேர்ந்த "சர் டைட்டஸ் சால்ட்" (Sir Titus Salt) என்பவரும் ஒருவர். இவர் தனது சிறுவயதிலேயே ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். கடின உழைப்பு மற்றும் மன உறுதியுடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்ட டைட்டஸ், கரடுமுரடான கம்பளியை நேர்த்தியாக மாற்றும் முறையைக் கண்டறிந்தார். ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரடுமுரடான கம்பளியை, மிருதுவான கம்பளியாக மாற்றும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், அவர் பல லட்சக் கணக்கான பவுண்டுகளைச் சம்பாதித்து பெரிய தொழிலதிபர் ஆனார். ஆனால் டைட்டஸ் அதோடு நின்றுவிடவில்லை; இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் இருந்தது.

இரவும் பகலும் கடுமையாக உழைத்து, 'அல்பாகா' (Alpaca) வகை கம்பளியைப் பதப்படுத்தும் முறையைக் கண்டறிந்து, தன் துறையில் உச்சத்தைத் தொட்டார். கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதித்த பிறகு, டைட்டஸ் சால்ட் தனது தொழிலாளர்களுக்காக ஒரு சிறந்த தொழிற்பேட்டையைக் கட்டினார். அதுவே இன்றும் "சால்டேர்" (Saltaire) என்ற நகரமாக அழைக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கண்டுபிடிப்புகளும், சிந்தனைகளும் தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவின. எனவே, அந்நாட்டின் அரசியான விக்டோரியா மகாராணி, டைட்டஸுக்கு "சர்" (Sir) என்ற பட்டத்தையும், "பரோன்" (Baron) என்ற அந்தஸ்தையும் வழங்கி அவரைக் கௌரவித்தார்.

கனத்திற்கும் மரியாதைக்கும் உரிய சர் டைட்டஸ் சால்ட், இத்தனை சாதனைகளை அடைந்த பிறகும் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைந்தாரா? "காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை" (பிரசங்கி 1:8) என்று ஞானியாகிய சாலொமோன் கூறியது போல், அந்தச் செல்வந்தர் மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் இல்லாதவராகவே இருந்தார். பணத்தின் மூலம் அனைத்து சுகங்களையும் அனுபவித்தாலும், பல நாடுகளுக்குச் சென்று அனைத்து பொழுதுபோக்குகளையும் கண்டு களித்தாலும், அவருடைய உள்ளம் வறண்ட பாலைவனம் போலவே இருந்தது. டைட்டஸ் சால்ட் மனதிற்கு இளைப்பாறுதல் இல்லாமல் ஓயாத சோகத்தில் மூழ்கியிருந்தார்.

இதற்கிடையில், ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் டைட்டஸ் கலந்துகொண்டார். அன்று இறைசெய்தியில், போதகர் ஒரு கம்பளிப்பூச்சியைப் பற்றிப் பேசினார். அதை டைட்டஸ் கூர்ந்து கவனித்தார். அந்தப் போதகர் பின்வருமாறு கூறினார்:

"என் வீட்டுத் தோட்டத்தை அழகுபடுத்துவதற்காகச் சில மரப்பலகை துண்டுகளை நட்டு, அதற்குப் பலவிதமான வண்ணங்களைத் தீட்டியிருந்தேன். ஒருநாள் ஒரு கம்பளிப்பூச்சி வேகமாக வந்து, அந்த மரப்பலகையின் மேல் ஏறியது. 'வண்ணம் பூசப்பட்ட இந்தப் பலகையில் கண்டிப்பாகச் சாப்பிட ஏதாவது கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் அது அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது. அதன் கண்களுக்கு அந்த மரப்பலகைகள் மிகவும் அழகாகத் தெரிந்ததால், அங்கு நல்ல உணவு இருக்கும் என்று அது நம்பியது.

ஆனால், அங்கு எதுவும் கிடைக்காததால் மனச்சோர்வுடன் அந்தப் கம்பளிப்பூச்சி கீழே இறங்கியது. பிறகு மற்றொரு வண்ணம் பூசப்பட்ட மரப்பலகையைக் கண்டு, 'இந்த முறையாவது கண்டிப்பாக ஏதேனும் கிடைக்கும்' என்று நம்பி அதன் மேலே ஏறியது. கண்களைக் கவரும் வண்ணத்தைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. தோட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பலகைகளின் மீதும் ஏறிப் பார்த்த அந்தப் பூச்சிக்கு, ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த உலகத்திலும் பல வண்ணம் பூசப்பட்ட மரப்பலகைகள் உள்ளன. அவை: பணம், புகழ், வசதி, பொழுதுபோக்கு, அதிகாரம், ஆடம்பரம் போன்றவை. இவை பல வண்ணங்களில் மக்களைக் கவரும்படியாக ஈர்க்கின்றன. அந்தந்தத் துறைகளில் நம்பிக்கையுடன் எவ்வளவுதான் மேலே உயர்ந்தாலும், மனிதனுடைய உள்ளம் திருப்தி அடைவதுமில்லை; அவனுடைய மனதிற்கு ஓய்வு கிடைப்பதுமில்லை. ஏனென்றால், அவை அனைத்தும் வெறும் வண்ணம் பூசப்பட்ட மரப்பலகைகள் தான்" என்று சொல்லி அந்தப் போதகர் முடித்தார்.

மறுநாள் காலை, போதகரின் வீட்டுக்கதவை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். போதகர் கதவைத் திறந்ததும், வெளியே மரியாதைக்குரிய டைட்டஸ் நின்றுகொண்டிருந்தார். டைட்டஸ் போதகரிடம், "ஐயா! நேற்று நான் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டேன். உங்கள் பிரசங்கத்தில் நீங்கள் சொன்னதுபோல, நானும் வண்ணம் பூசப்பட்ட மரப்பலகைகளில் ஏறுவதும் இறங்குவதுமாக மிகச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய மனதிற்கு மெய்யான இளைப்பாறுதல் எப்படிக் கிடைக்கும் என்பதைத் தயவுசெய்து விவரிக்க முடியுமா?" என்று கேட்டார்.

அப்போது அந்தப் போதகர், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28) என்று, வாழ்க்கை எனும் பாலைவனப் பயணத்தில் சோர்ந்து போன மக்களை அன்புடன் அழைத்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் சிலுவையில் செய்து முடித்த பாவ பரிகாரத்தையும் விவரமாகச் சொன்னார்.

"எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது" (எரேமியா 17:9). பாவம் என்ற நோய் நம்முடைய இருதயத்திலிருந்து நீக்கப்பட்டால் ஒழிய, உண்மையான இளைப்பாறுதல் கிடைக்காது. இரத்தம் சிந்தப்படாமல் பாவமன்னிப்பு இல்லை. "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9).

டைட்டஸ் தனது பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டார். கர்த்தரை விசுவாசித்த அவருடைய இருதயத்தில் இயேசு கிறிஸ்து பிரவேசித்து, பாவத்தைக் கழுவி, இருதயத்தைத் தூய்மையாக்கினார். மேலும், அவருடைய பாவச் சுமையை நீக்கி, "சொல்ல முடியாத மகிமையான மகிழ்ச்சியை" அவருக்குத் தந்து ஆசீர்வதித்தார். அந்தச் செல்வந்தனின் வாழ்வில் முதன்முறையாக மனமகிழ்ச்சியும், தெய்வீகச் சமாதானமும் நிறைந்தது. அவர் பின்வருமாறு தேவனைப் போற்றிப் புகழ்ந்தார்:

"அசைக்க முடியாத பாவ சுமைகளில் மூழ்கியிருந்தேன், நீர் உம்முடைய கரத்தை நீட்டி என்னைத் தூக்கினீர்! நீக்க முடியாத பாவ பாரத்தை என்னிலிருந்து அகற்றி, கொடுத்தீரே எனக்குப் பாவத்திலிருந்து மகா விடுதலை, பெற்றேனே நான் பரலோக மகிழ்ச்சியை!"

அன்பான நண்பரே! நீங்களும் உண்மையான இளைப்பாறுதல் தராத, சமாதானம் இல்லாத 'வண்ணம் பூசப்பட்ட பலகைகளில்' ஏறிக் கொண்டிருக்கிறீர்களா? தேவனை விட்டு விலகி, உலக மாயைகளால் வழிதவறி வாழ்கிறீர்களா? வேதம் இவ்விதமாக எச்சரிக்கிறது:

"வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9).

டைட்டஸைப் போலவே, உங்கள் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது பாவமன்னிப்பையும், ஆத்துமப் பாதுகாப்பையும், தேவ சமாதானத்தையும் பெறுவீர்கள்.

தாவீது ராஜா இவ்விதமாகச் சொன்னார்: "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்" (சங்கீதம் 32:1-2).

"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).

"இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்" (2 கொரிந்தியர் 6:2). ஆமென்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.