நற்செய்தி

சுவிசேஷத்தை பற்றிய ஐந்து கேள்விகள்
ஆசிரியர்: முரளி
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

உலகம் முழுவதும் கேள்விகளால் நிறைந்துள்ளது. ஆனால், இந்த ஐந்து கேள்விகள் மட்டுமே எல்லாக் கேள்விகளுக்கும் திறவுகோலாக இருக்கின்றன. வாழ்க்கையின் மிக முக்கியமான பதில்களை இந்த ஐந்து கேள்விகளைக் கேட்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். வேதாகம சுவிசேஷத்தின் மையத்தைத் திறக்கும் இந்த ஐந்து முக்கியமான கேள்விகள், நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட ஒரு செய்தியாகும். அவை என்னவென்று பார்ப்போம்.

  1. கடவுள் யார்?

  2. மனிதன் யார்?

  3. இயேசு கிறிஸ்து யார்?

  4. இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

  5. நான் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி 1: கடவுள் யார்?

நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு மதங்கள் இருந்தபோதிலும், வேதமும் மனிதனின் மனசாட்சியும் ஒரே ஒரு ஜீவனுள்ள கடவுளின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அவரே எல்லாவற்றையும் படைத்தவர். வேதம் இந்த ஒரே மெய்யான கடவுளை நான்கு செயல்களில் வெளிப்படுத்துகிறது: அவர் படைப்பின் தேவன், பராமரிப்பின் தேவன், நீதியின் தேவன் மற்றும் மீட்பின் தேவன்.

படைப்பின் தேவன்: இந்த ஒரே கடவுள் பரந்த உலகத்தைப் படைத்தவர். ஆறு நாட்களில் தம்முடைய வார்த்தையின் வல்லமையால் ஒன்றுமில்லாமையிலிருந்து இவ்வுலகத்தைப் படைத்தார். அவர் ஒரு சாதாரணமான, கறுப்பு வெள்ளை நிறங்களால் நிறைந்த உலகத்தை உருவாக்கியிருக்கலாம்; அல்லது வெறும் மண்ணை உண்ணச் சொல்லி நம்மை வாழச் செய்திருக்கலாம்! ஆனால், இந்த உலகின் ஒவ்வொரு அமைப்பு, சமச்சீர்மை மற்றும் வண்ணங்களில் உள்ள நுணுக்கமான திட்டமிடல், அந்த மாபெரும் படைப்பாளரின் அழகு, ஞானம், வல்லமை மற்றும் நற்குணத்தைப் பிரதிபலிக்கிறது.

மேலும், வேதம் இந்தப் படைப்பாளராகிய கடவுள் இயல்பாகவே நீதியுள்ளவரும் பரிசுத்தமானவரும் என்று கூறுகிறது. அவருடைய நீதியான குணத்தின் பிரதிபலிப்பாக, அவர் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியிலும் தம்முடைய சட்டத்தை எழுதியிருக்கிறார். இது அவருக்கும், சக மனிதர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை விவரிக்கிறது. இந்தச் சட்டங்கள் பொதுவாகப் ‘பத்துக் கட்டளைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. பொறாமை, பொய் சொல்லுதல், திருடுதல், விபச்சாரம், கொலை, பெற்றோரை மதிக்காமை, ஓய்வு நாளை மீறுதல், அவருடைய பெயரை வீணாக வழங்குதல், மற்றும் மெய்யான கடவுளைத் தவிர வேறு எந்தப் பொருளையோ, விக்கிரகங்களையோ உருவாக்குதல் அல்லது வணங்குதல் ஆகியவற்றை இது தடை செய்கிறது. இந்தச் சட்டங்களில் ஏதேனும் ஒன்றை மீறுவது ‘பாவம்’ என்று அழைக்கப்படுகிறது.

பராமரிப்பின் தேவன்: இந்தப் படைப்பின் கடவுள் “கர்த்தர்” (LORD) என்றும் அறியப்படுகிறார். இது அவரது முழுமையான இறையாண்மையையும், அவர் படைத்த அனைத்தின் மீதும் அவருக்கு உள்ள முழு கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிறது. அவர் உலகத்தை உண்டாக்கியது மட்டுமல்லாமல், அதன் ஒவ்வொரு அம்சத்தையும் தீவிரமாகப் பராமரித்து ஆளுகிறார். அவரே மனிதனுக்கு சுவாசத்தையும் மற்ற அனைத்தையும் கொடுக்கிறவர்; ஒவ்வொரு மனிதனின் ஆயுட்காலம், வாழ்விடம் மற்றும் சூழ்நிலைகளை நிர்ணயிக்கிறவர்.

நீதியின் தேவன்: இந்தக் கடவுள் சர்வத்தையும் அறிந்தவராக இருப்பதால், ஒவ்வொரு மனிதனின் செயலையும், எண்ணத்தையும் முழுமையாக அறிந்திருக்கிறார். அவர் மனிதனின் வெளிப்படையான வாழ்க்கையை மட்டுமல்லாமல், உள்ளார்ந்த இருதயத்தையும் பார்க்கிறார். காம எண்ணங்களை விபச்சாரமாகவும், கோபத்தைக் கொலையாகவும் கருதுகிறார். நீியுள்ள தேவனாக, அவர் இறுதியில் எல்லாப் பாவங்களையும் தண்டிக்க வேண்டும். அதற்காக அவர் ஒரு நாளை நிர்ணயித்துள்ளார். மனிதன் கடவுளின் சட்டங்களை மீறிய ஒவ்வொரு நிகழ்வையும் அவர் கவனமாகப் பதிவு செய்கிறார்.

பாவத்தின் அளவு அதைச் செய்தவர் யார் என்பதன் அடிப்படையில் அல்ல, மாறாக, அது யாருக்கு எதிராகச் செய்யப்பட்டது என்பதன் அடிப்படையில் அளவிடப்படுகிறது. மனிதர்கள் நித்திய கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள்; எனவே அவர்களின் பாவங்கள் நரகத்தில் நித்திய தண்டனைக்குத் தகுதியானவை. கடவுளின் படைப்புகளாக, நாம் இறுதியில் நமது படைப்பாளருக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். மேலும் ஒருநாள் நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுக்காக நியாயந்தீர்க்கப்படுவோம். இப்படிப்பட்டவர்தான் வேதம் சுட்டிக்காட்டும் கடவுள்.

பலர் இந்த மெய்யான கடவுளின் இருப்பைச் சந்தேகிக்கிறார்கள். ஒருவேளை கடவுள் இருந்தால், "ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு துன்பம்?" என்று கேள்வி கேட்கிறார்கள். இதற்கான பதிலைப் புரிந்துகொள்ள, அடுத்ததாக "மனிதன் யார்?" என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி 2: மனிதன் யார்?

கடவுளின் படைப்பின் மணிமகுடம்: மனிதன் கடவுளின் சாயலில் அற்புதமாகவும், அதிசயமாகவும் படைக்கப்பட்டவன்; கடவுளை மகிமைப்படுத்தவும், என்றென்றும் அவரை அனுபவிக்கவும் உருவாக்கப்பட்டவன். படைப்பாளியாகிய கடவுளுக்கும், அவரது படைப்பான மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு மிக ஆழமானதும், சக்திவாய்ந்ததுமாகும். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான இந்த உறவு, எந்த வீழ்ச்சியாலும் முற்றிலும் அழிக்க முடியாதது. வேதம் கூறுகிறது, தேவன் “அவனுடைய நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்.” ஒவ்வொரு மூச்சிலும் மனிதன் தனது படைப்பாளருடனான பந்தத்திற்காக ஏங்குகிறான். நாம் வெறுமனே கடவுளால் படைக்கப்பட்டதால் மட்டும் இருப்பதில்லை; அவர் ஒவ்வொரு நொடியும் நம்மைப் பராமரிப்பதால் தொடர்ந்து இருக்கிறோம். அவரில் நாம் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். நம்முடைய உயிர் சக்தி, நம்முடைய இயக்கம் அனைத்தும் அவரிடமிருந்து நேரடியாக வருகிறது. இந்த விவரிக்க முடியாத பந்தம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான நித்திய ஐக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

ஒரு தாய் மற்றும் அவளுடைய பிள்ளைக்கு இடையேயான பிணைப்பில் இதன் மங்கிய சாயல் பிரதிபலிக்கிறது. எந்தத் தாயும் கருவில் குழந்தையை உருவாக்குவதில் நேரடியாக ஈடுபடுவதில்லை; ஆனால், தேவன் ஒவ்வொரு கருவிலும் உள்ள ஒவ்வொரு நரம்பு, இரத்தக் குழாய்கள் மற்றும் எலும்புகளை உருவாக்குகிறார். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான இந்தப் பிணைப்பு மனித வாழ்விற்கு அடித்தளமாகவும், அவனது இருப்பின் அங்கமாகவும் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதகுலத்தின் அனைத்து அமைதியின்மையும் இந்த ஆழமான பிணைப்புக்கான ஏக்கமேயாகும். எதுவும் நிரப்ப முடியாத ஆழமான ஒரு வெறுமையை நாம் அனைவரும் நம்மில் உணர்கிறோம். “எங்களுடைய இதயங்கள் உம்மைக் கண்டறியும் வரை அமைதியற்றவை” என்பது ஹிப்போவின் அகஸ்டின் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள். என்றென்றும் கடவுளை மகிமைப்படுத்தவும் அவரில் களிகூரவும் படைக்கப்பட்ட மனிதன், ஒரு மகிமையுள்ள படைப்பாக இருந்தபோதிலும், அவன் வீழ்ச்சியடைந்தான்!

வீழ்ச்சியடைந்த படைப்பு: முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும், கடவுளின் சாயலில் பரிபூரணமாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தங்கள் சுயவிருப்பத்தைப் பயன்படுத்தி, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். கடவுளுடனான தங்கள் சரியான நிலையிலிருந்து விலகின இதுவே “மனிதகுலத்தின் வீழ்ச்சி” என்று அழைக்கப்படுகிறது. ஆதாமும் ஏவாளும் மனித இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால், அவர்களிடமிருந்து வந்த அனைத்து மனிதர்களும், அவர்களின் தவறின் விளைவுகளை மட்டுமல்ல, அவர்களின் பாவமான குறைபாடுள்ள இயல்பையும் சுதந்தரித்துக்கொண்டனர். டோமினோக்களின் சங்கிலி போல, அவர்களுக்குப் பிறகு வரும் நாம் அனைவரும் அவர்களின் வீழ்ச்சிக்குள் தள்ளப்பட்டோம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சில குணாதிசயங்களைக் கடத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உதாரணமாக, கண், தோல், நிறம் போன்றவை நமது பெற்றோரிடமிருந்து வருவது போல, தவறு செய்யும் போக்கும் நமது மரபணுவிலேயே வந்துள்ளது! சரியானதைச் செய்வதற்குப் பதிலாகத் தவறானதைச் செய்யும் போக்கு அதுபோன்றதே. அது தலைமுறை தலைமுறையாக மனிதர்களுக்குள் கடத்தப்படுகிறது. நாம் தவறானதை நேசிக்கும் இயல்புடன் பிறந்திருக்கிறோம். மேலும் ஒவ்வொரு நாளும் மனிதர்களிடத்தில் பாவ நோயின் அறிகுறிகளைப் பார்க்கிறோம், படிக்கிறோம், நாமும் அனுபவிக்கிறோம். பொறாமை, பொய், வெறுப்பு, திருட்டு, கோபம், விவாகரத்து, ஓய்வு நாளை மீறுதல், கடவுளின் பெயரை வீணாகப் பயன்படுத்துதல் மற்றும் அவருக்கு மேலாக விக்கிரகங்களை முன்னுரிமைப்படுத்துதல் மூலம் கடவுளின் பரிசுத்த சட்டத்தை மீறுகிறோம், உடைக்கிறோம். எனவே மனிதன் ஒரு வீழ்ச்சியடைந்த, பாவமுள்ள படைப்பு.

ஆணும் பெண்ணும் ஏன் துன்பப்படுகிறார்கள்? ஆதாமும் ஏவாளும் செய்த கீழ்ப்படியாமையின் விளைவாகவும், அதைத் தொடர்ந்து கடவுள் அவர்கள் மீது விதித்த சாபங்களின் காரணமாகவுமே அனைத்து மனிதத் துன்பங்களும் தோன்றின என்று ஆதியாகமம் கூறுகிறது.

பெண்ணின் மீதான சாபங்கள்: ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் விலக்கப்பட்ட கனியை உண்டதால், அவள் சபிக்கப்பட்டாள். இதன் விளைவாக, ஒவ்வொரு பெண்ணும் இரண்டு முக்கியமான பகுதிகளில் துன்பப்படுகிறாள்: ஒன்று அவளுடைய பிள்ளைகள் மூலமாகவும், அடுத்தது அவள் கணவன் மூலமாகவும். ஒவ்வொரு பெண்ணும் வேதனையோடு பிள்ளைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், ஏவாள் தன் கீழ்ப்படியாமையால் கடவுளின் இதயத்தை உடைத்ததைப் போலவே, அவளுடைய குழந்தைகளும் அவளுக்குக் கீழ்ப்படியாமல் தொடர்ந்து அவளுடைய இதயத்தை உடைப்பார்கள். திருமணத்தில் உள்ள சாபம், ஏவாள் தன் கணவனைக் கனியை உண்ணும்படி செய்ததிலிருந்து உருவானது. அவள் எப்போதும் தன் கணவனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க ஆசைப்படுவாள்; அதேநேரம் அவன் அவளை ஆளுகை செய்ய முயற்சிப்பான். இது தொடர்ந்து குடும்பச் சண்டைகளுக்கு வழிவகுக்கும்.

ஆணின் மீதான சாபங்கள்: ஒவ்வொரு ஆணும் இரண்டு முக்கியமான பகுதிகளில் துன்பப்படுகிறான்: அவனுடைய வேலையிலும், அவனது தவிர்க்க முடியாத மரணத்திலும். முதல் மனிதனான ஆதாம், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் விலக்கப்பட்ட கனியை உண்டதால், ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, தனக்கும் தன் குடும்பத்திற்கும் உணவு பெறுவதற்காக உழைக்க வேண்டிய சாபத்திற்கு உள்ளானான். இப்போது அவனது வாழ்க்கை, கடின உழைப்பிற்கும், அழுத்தங்களுக்கும், சவால்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. எனவே, ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்து, வேலைக்குச் சென்று, தினசரி உழைப்பையும் வேலை அழுத்தங்களையும் எதிர்கொள்கிறான். வீட்டிற்குத் திரும்பும்போது, அவனது குழந்தைகள் பெரும்பாலும் அவனுக்குக் கீழ்ப்படிவதில்லை; மேலும் அவன் தன் மனைவியுடன் தொடர்ந்து கருத்து வேறுபாடுகளில் இருக்கிறான்.

இதுவே மனிதனுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்க்கை; அவனது படைப்பாளரிடமிருந்து பிரிக்கப்பட்டவனாக வாழ்கிறான். இவையெல்லாம் எங்கு கொண்டு செல்கின்றன? ஒரு சிறந்த, ஒளிமயமான எதிர்காலத்திற்கா? இல்லை. மாறாக, இது உடல் சோர்வு, நோய் மற்றும் இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது. "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" என்று கடவுள் மனிதனிடம் கூறினார். வேதம், "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று கூறுகிறது.

இப்போது, ‘பாவம்’ என்ற சிறிய வார்த்தை எவ்வாறு மனிதனின் இக்கட்டான நிலையை விளக்குகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். செய்தி இன்னும் மோசமாகிறது: மனித இனம் தானாகவே இந்த வீழ்ந்த நிலையிலிருந்து தப்பிக்க இயலாது. தவிர்க்க முடியாத மரணத்தை நோக்கிய சரிவை யாராலும் தடுக்க முடியாது. அதைத் தொடர்ந்து, பரிசுத்த கடவுளுக்கு எதிரான அனைத்துப் பாவங்களுக்காகவும் தெய்வீக நியாயத்தீர்ப்பும், நரகத்தில் நித்திய தண்டனையும் உள்ளது. மனிதன் வீழ்ச்சியுற்ற ஒரு பாவ உயிரினம்; எனவே அவனால் அவனைப் படைத்த பரிசுத்தமுள்ள படைப்பாளரை அணுக முடியாது.

மனிதனின் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறீர்களா? ஒருபுறம், மனிதனின் ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு அணுவும் தன் படைப்பாளருடன் ஆழமான உறவுக்காக ஏங்குகிறது. மறுபுறம், பாவியாக இருப்பதால், தன் சுய முயற்சியால் பரிசுத்தமான கடவுளிடம் ஏற்றுக்கொள்ளப்பட முடிவதில்லை. ஒருபுறம் எல்லையற்ற பரிசுத்த கடவுள், மறுபுறம் முற்றிலும் பாவமுள்ள மனிதன். இந்தப் பெரிய இடைவெளியை யார் நிரப்ப முடியும்?

இதுவே காலங்காலமாகக் கேட்கப்படும் மகத்தான கேள்விக்கு இட்டுச் செல்கிறது: ஒரு பாவி எவ்வாறு பரிசுத்த கடவுளுடன் ஒப்புரவாகி, அவனது வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு ஏக்கமான வெற்றிடத்தையும் நிரப்பக்கூடிய சமாதானத்தைப் பெற முடியும்? இது நம்மை மூன்றாவது கேள்விக்கு இட்டுச் செல்கிறது.

கேள்வி 3: இயேசு கிறிஸ்து யார்?

மீட்பின் தேவன்: படைப்பின் கடவுளும், பராமரிப்பின் கடவுளுமான இவரே, மீட்பின் கடவுள் என்று வேதம் வெளிப்படுத்துகிறது. மனிதகுலத்தை இந்தப் பரிதாபகரமான நிலையிலிருந்து மீட்க, அவர் அளவற்ற ஞானத்துடன் ஒரு அற்புதமான திட்டத்தை வடிவமைத்தார். இந்தத் திட்டம் முழுவதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. இவரே திரித்துவத்தின் இரண்டாம் நபராகவும், கடவுளின் ஒரேபேறான குமாரனாகவும் இருப்பவர்; கடவுளுக்குச் சமமான மகிமையும் அதிகாரமும் உடையவர். ஆனாலும், அவர் நம்முடைய மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டு, மிகுந்த மனத்தாழ்மையோடு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்த மண்ணில் முப்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அவர், தாம் வாழ்ந்த நாட்களில், அதிசயமான அற்புதங்கள், அதிகாரமுள்ள போதனைகள் மற்றும் பரிபூரணமான பரிசுத்த வாழ்க்கையின் மூலம் தனது தெய்வீகத் தன்மையை உறுதிப்படுத்தினார்.

பாவிகளாய் இருக்கும் நம் நிலையை அறிந்த அவர், நமக்கு அவசியமான இரண்டு மாபெரும் தேவைகளை நிறைவேற்றினார்:

  1. பரிபூரண வாழ்க்கை: முதல் ஆதாம் நமக்கு பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தார். ஆனால், இரண்டாம் ஆதாமாகிய இயேசு, நமக்குப் பதிலாக (நமது பிரதிநிதியாக) ஒரு பரிபூரணமான வாழ்க்கையை வாழ்ந்து, நமக்காகப் பரிபூரணமான நீதியைச் சம்பாதித்துத் தந்தார்.

  2. பரிகார பலி: அவர் சிலுவையில் சொல்ல முடியாத அவமானத்தையும், துன்பத்தையும், வேதனையையும் தாங்கி, நமது பாவங்களுக்காகப் பரிகார பலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய பரிகார பலியைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரா? ஆம், மூன்றாம் நாளில் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதன் மூலம் தேவன் தமது அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார். இதுவே உண்மையான நற்செய்தி! (1 கொரிந்தியர் 15:3,4)-ல், அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.”

கேள்வி 4: இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

பணம், வசதி மற்றும் ஆரோக்கியம் போன்ற சாதாரண உலகத் தேவைகளுக்கு மேலாகக் கடவுள் நிச்சயமாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஆனால் அதைவிட அளவிட முடியாத மகத்தான ஆசீர்வாதங்கள் உள்ளன! தேவன் நம்முடைய ஆழ்ந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய நம்முடைய பரம பிதாவாக இருக்கிறார் என்று வேதம் அழகாக விளக்குகிறது. நாம் அவரிடமிருந்து விலகி, பாவமான வாழ்க்கையால் போராடுகிறோம். நாம் மனந்திரும்பி அவரிடம் வரும்போது, அவர் நம்மை வெறுமனே வரவேற்பது மட்டுமல்ல; நமக்காக ஒரு பிரம்மாண்டமான விருந்தையும் தயார் செய்கிறார். உங்களுக்காகக் காத்திருக்கும் இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிக்கும் வரை, அவற்றின் மகிமையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. சில முக்கியமான ஆசீர்வாதங்களைப் பார்ப்போம்:

  • மன்னிப்பு (Forgiveness): உங்கள் கடந்தகால, தற்போதைய மற்றும் எதிர்காலப் பாவங்கள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பாவம் கூட உங்களைக் குற்றவாளியாக்கவோ, தண்டிக்கவோ முடியாது. இந்த ஆழ்ந்த மன்னிப்பை அனுபவிப்பது உங்கள் மனசாட்சிக்குள் இணையற்ற விடுதலையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

  • நீதிமானாக்கல் (Justification): மன்னிப்புக்கு மேலாக, கிறிஸ்துவின் சொந்த நீதி உங்கள் கணக்கிலே வைக்கப்படுகிறது. தேவனின் முன்பாக நீங்கள் பரிபூரணமாக நீதிமானாக அறிவிக்கப்படுகிறீர்கள்!

  • புத்திர சுவிகாரம் (Adoption): நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் அவரது அன்புக்குரிய சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறீர்கள். இந்த தெய்வீகத் தத்தெடுப்பின் மூலம் விலைமதிப்பற்ற, அளவிட முடியாத ஆசீர்வாதங்கள் உங்களுக்குச் சொந்தமாகின்றன.

  • பராமரிப்பு (Provision): அன்புள்ள தகப்பனைப் போல, தேவன் இந்த பூமியில் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார் (பிலிப்பியர் 4:19).

  • சிட்சை (Correction): நீங்கள் வழிதவறும்போது, அவர் அன்புடன் உங்களைத் திருத்துவதன் மூலம் சரியான பாதைக்கு மீண்டும் வழிநடத்துகிறார் (எபிரெயர் 12).

  • தெய்வீகப் பராமரிப்பு (Providence): உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், விதிவிலக்கு இன்றி அது எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் உங்கள் நித்திய நன்மைக்காகவே திட்டமிடப்பட்டுள்ளன (ரோமர் 8:28).

  • கடவுளுடைய சமாதானம் (Peace of God): நீங்கள் கடவுளுடன் ஆழமான மற்றும் நிலையான ஒப்புரவை அனுபவிப்பீர்கள். மேலும் உங்கள் இதயத்தில் ஒரு தெய்வீக அமைதி உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நிரப்பும். இந்தச் சமாதானம் ஒரு நதிபோல் பாயும்; உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேடிய இளைப்பாறுதலைக் கொண்டுவரும். உங்கள் ஆத்துமா ஏங்கிக்கொண்டிருந்தது இதைத்தான் என்பதை அப்போது நீங்கள் உணருவீர்கள்.

  • புதிய இருதயம் (New Heart): உங்கள் பழக்கவழக்கங்களிலும் குணத்திலும் உண்மையான மற்றும் நிலையான மாற்றத்திற்கான ஆசை இருந்தாலும், பெரும்பாலும் அவை தோல்வியடைந்த புத்தாண்டு தீர்மானங்களைப் போலவே இருக்கின்றன அல்லவா? இங்கே அதற்கான விடை இருக்கிறது. கடவுள் உங்களில் உள்ளான மனமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய இருதயத்தையும், மறுபிறப்பையும் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறார். போதைப்பழக்கம், ஆபாசம், கோபம், பேராசை போன்ற ஒவ்வொரு அழிவுகரமான பழக்கத்தையும் வெல்ல முடியும். நீங்கள் ஒரு காலத்தில் விரும்பிய கெட்ட காரியங்கள் தற்போது அருவருப்பாக மாறும்; மேலும் நீங்கள் ஒரு காலத்தில் புறக்கணித்த நல்ல காரியங்கள் இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக மாறும். கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் விரும்புகின்ற ஒரு புதிய விருப்பத்தை உங்களில் கண்டுகொள்வீர்கள்.

  • நித்திய ஜீவன் (Eternal Life): கடவுள் நித்திய ஜீவனை உங்களுக்குப் பரிசாக வழங்குகிறார். இந்தப் பரிசு மரணத்திற்கான அச்சத்தை அற்புதமாக நீக்கி, மரணம் ஒரு முடிவல்ல, மாறாக ஒரு பிரகாசமான புதிய ஆரம்பம் என்ற அறிவால் அதை மாற்றுகிறது. இயேசு உயிர்த்தெழுந்தது போலவே தானும் உயிர்த்தெழுவேன் எனும், கல்லறையைத் தாண்டிய அசைக்க முடியாத நம்பிக்கையை நீங்கள் பெறுகிறீர்கள். பரலோகத்தில் ஒரு நித்திய சுதந்தரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறீர்கள்.

  • மகிமைப்படுத்தல் (Glorification): இறுதியாக, அவர் உங்களைத் தம்முடைய வாரிசாக முடிசூட்டி, தம்மிடமுள்ள எல்லாவற்றையும் சுதந்தரிக்கும் உரிமையை உங்களுக்கு வழங்குகிறார்!

உண்மையில், இந்த ஆசீர்வாதங்கள் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன! அவை உங்களைத் தூய்மையான பேரின்பத்தின் உச்சிக்கு உயர்த்தி, உங்கள் இதயத்தை நிரம்பி வழியும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றன! இந்த மாபெரும் ஈவுகள் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையானது என்பதை நீங்கள் உணரவில்லையா?

இதை யோசித்துப் பாருங்கள்: மன்னிப்பு இல்லாமல் நாம் நம்முடைய கடந்தகாலப் பாவங்களின் சுமையாலும், நிகழ்காலப் பாவங்களின் நெருக்கடியாலும், எதிர்காலத்தில் அதிகமான பாவங்களாலும் கட்டப்பட்டிருக்கிறோம். நீதிமானாக்கப்படாமல், நாம் ஆக்கினைக்குள்ளானவர்களாகவும், ஒருபோதும் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் இருக்கிறோம். சுவிகாரம் இல்லாமல், நாம் இந்தக் கொடுமை நிறைந்த உலகத்தில் அனாதைகளாகத் தவிப்போம். கடவுளுடைய ஈவுகள் இல்லாமல், நம் சொந்தச் சக்தியிலும் கவலைகளிலும் மட்டுமே சிக்கியிருப்போம். அவருடைய சிட்சை இல்லாமல், இருளில் தடுமாறி, தவறான பாதைகளில் தள்ளாடுவோம். அவருடைய தெய்வீக கரம் இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை குழப்பத்திற்கு ஆளாகி, எல்லாமே நம்முடைய அழிவுக்கு ஏதுவாகவே இருக்கும். அவருடைய சமாதானம் இல்லையென்றால், நம்முடைய இருதயங்கள் அமைதியற்றதாகவும், திருப்தியற்றதாகவும் இருக்கும். புதிய இதயம் இல்லையென்றால், நாம் அழிவுகரமான நடத்தைகள் மற்றும் பழக்கங்களின் சுழற்சியில் சிக்கிக்கொள்வோம். நித்திய ஜீவன் இல்லையென்றால், நாம் நம்பிக்கையின்றி இறுதி நியாயத்தீர்ப்பின் பயத்தையும், ஆத்தும இழப்பையும் எதிர்கொள்கிறோம். இறுதியாக, மகிமையடைதல் இல்லாமல், நாம் நித்திய சுதந்தரத்தை இழப்பது மட்டுமல்லாமல், நரகத்தில் நித்திய கோபத்தைப் பெறுவோம்!

பாவியான என் அன்பான நண்பனே! இந்த அற்புதமான ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்! இவ்வளவு சிறப்பான, வாழ்க்கையை மாற்றும் ஆசீர்வாதங்கள் உன்னால் அடையக்கூடியவையாக இருக்கும்போது, ஒரு நிமிடம் கூட பாவத்தால் சிதைந்த வாழ்க்கையை வாழாதீர்கள்!

கேள்வி 5: நான் என்ன செய்ய வேண்டும்?

இந்த அற்புதமான ஆசீர்வாதங்களை உண்மையிலேயே அனுபவிக்க, சுவிசேஷம் இரண்டு அடிப்படை நிபந்தனைகளை முன்வைக்கிறது: மனந்திரும்புதல் மற்றும் விசுவாசம்.

மனந்திரும்புதல் (Repentance): இது ஒரு ஆழமான உணர்வோடு தொடங்குகிறது. நீங்கள் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்வது. "பாவம்" என்ற சிறிய வார்த்தைக்குப் பின்னால் உள்ள பெரும் பாரத்தைப் புரிந்துகொள்வது. இதுவே உங்கள் வாழ்க்கையின் எல்லாப் போராட்டங்களுக்கும், துன்பங்களுக்கும் மூல காரணம் என்பதை உணர்வது. உண்மையான மனந்திரும்புதல் என்பது உங்கள் பாவங்களிலிருந்து விலகி, உங்கள் அன்பான தகப்பனாகிய தேவனை நோக்கி முழு மனதுடன் திரும்புவதாகும். இது உங்கள் மனதையும் இருதயத்தையும் மாற்றுவது; உங்கள் சொந்த வழிகளை விட்டு, கடவுளின் வழியைத் தழுவும் முடிவு.

விசுவாசம் (Faith): இது இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பது. அவர் கடவுளுடைய குமாரன் என்றும், அவர் முழுமையான தெய்வீகமானவர் மற்றும் முழுமையான மனிதர் என்று நம்புவது. மேலும் அவரது வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் அவர் நிறைவேற்றியவற்றை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் விசுவாசிப்பதை உள்ளடக்கியது. அவருடைய பாவநிவாரண பலியே உங்கள் பாவங்களுக்கு இறுதிப் பரிகாரம் என்றும், அவர் மூலம் மட்டுமே நீங்கள் கடவுளுடன் ஒப்புரவாக முடியும் என்றும் நம்புவது.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும்போது முன்பு விவரித்த அளவிட முடியாத அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களுடையவையாகும்! உங்கள் பாவத்திற்காக மனந்திரும்புங்கள், திறந்த மனதுடன் கடவுள் பக்கமாய்த் திரும்புங்கள், இயேசு கிறிஸ்துவில் உங்களின் முழு விசுவாசத்தை வையுங்கள். அப்போது, மகிழ்ச்சியின் உச்சமும் வாழ்க்கையின் முழுமையும் உங்களுக்காகக் காத்திருக்கிறது!

தேவனுடைய சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக...

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.