தேவன்

ஆராதனையின் முக்கியத்துவம்
ஆசிரியர்: ஜெ.சி.ரைல்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 7 நிமிடங்கள்

 

1. சிருஷ்டிகருக்கு கனம் செலுத்துதல்

இக்கருத்தைக் குறித்து நான் அதிகமாக விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். ஏனெனில், இக்கட்டுரையை வாசிப்பவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களாகவே இருப்பார்கள். "பக்திமார்க்கம் என்பது தனிமனித விஷயம், அதைப் பொதுவாக அனுசரிக்கத் தேவையில்லை" என்று அவர்களில் யாரும் துணிகரமாகச் சொல்ல மாட்டார்கள் என்றும் நம்புகிறேன். கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களும், பெயரளவிலே கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கலாம். அநேக கிறிஸ்தவர்கள், தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களில் வித்தியாசங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்திலே, சக விசுவாசிகளோடு கூடிவந்து தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

தேவனுக்கு ஆராதனை செலுத்த மறுப்பது, அவர் ஒருவர் இருக்கிறார் என்பதையே ஏற்காத அறிவீனமாகும். தன்னை சிருஷ்டித்தவருக்கு கனம் செலுத்த விரும்பாதவனுக்கு, 'தேவன் இருக்கிறார்' என்கிற உண்மையை முழுமையாகப் புறந்தள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கும். 'தேவன்' என்கிற ஒரு மகா பெரிய வல்லமை இருக்கிறதென்றும், அந்தத் தேவனை ஆராதிக்க (வழிபட) வேண்டும் என்கிற உணர்வும் உலகெங்கும் உண்டு. அப்படியில்லையென்றால், சிலை வழிபாடுகள் தோன்றியிருக்கக் காரணமேயில்லை. தேவன் ஒருவர் இருக்கிறார் என்கிற எண்ணம் மனித மனதில் இருப்பதாலேயே, ஒவ்வொரு தேசத்தாரும் தங்கள் சிந்தனைக்கேற்ற தேவர்களை உருவாக்கி, வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

யூதர்கள், மனிதன் ஓய்வுநாளுக்கு முந்தைய மாலை வேளையிலே (வெள்ளிக்கிழமை) படைக்கப்பட்டதற்கான காரணத்தைக் குறித்துக் கூறும்போது, "மனிதன் விழித்துச் செயல்படத் தொடங்கும்போது, அவன் செய்யும் முதல் செயல் தனது சிருஷ்டிகரை ஓய்வுநாளிலே ஆராதிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் அவனை அந்நாளில் படைத்தார்" என்பார்கள். தான் ஒரு சிருஷ்டி என்பதை உணர்ந்தவுடனேயே, தன்னை உருவாக்கிய சிருஷ்டிகரைத் தொழுதுகொள்வதே அவனது முதல் பணியாக இருக்க வேண்டும். "தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்வதே எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை" (பிரசங்கி 12:13). அப்படிப்பட்டவனே 'முழுமையான மனிதன்' ஆவான். தேவனை அறியாத மனிதன் மனிதனல்ல, மிருகத்திற்கு ஒப்பானவன். ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றுவதற்கு தேவபக்தி அவசியமாகிறது. தேவபயம் இல்லையெனில் மனிதன் நியாயமாக நடந்துகொள்ள மாட்டான்; ஏனெனில் தேவனை அலட்சியப்படுத்துகிறவன் நியாயத்தையும் அலட்சியப்படுத்துகிறவனாகவே இருப்பான்.

2. தேவனுடைய பிள்ளைகளை அடையாளம் காட்டுதல்

தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதை அடையாளம் காட்டுவதில் பொது ஆராதனைக்குப் பெரும் பங்கு உண்டு என நான் உறுதியாகக் கூறுவேன். பொதுவாகவே மனிதன் கூடிவாழும் இயல்புடையவன் (Social Being). அவன் தன் சக மனிதர்களைப் பிரிந்து தனித்து வாழ விரும்புவதில்லை. எல்லாக் கால கட்டத்திலும் தேவன் மனிதனுடைய இந்தக் குணாதிசயத்தைத் தமது மகிமைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் தமது ஜனங்களுக்குப் பொது ஆராதனையையும், அந்தரங்க ஜெபத்தையும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள் தனிப்பட்ட விதத்திலும், மற்றவர்களோடு இணைந்தும் தம்மை வணங்கும்படிச் செய்திருக்கிறார்.

தேவனுடைய ஜனங்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ, அங்கெல்லாம் நிச்சயமாகத் தேவன் சபையைக் கூட்டியிருந்திருக்கிறார் என்பதை உலக முடிவில் நாம் அறிந்துகொள்வோம். அவரது ஜனங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஒன்றாகக் கூடிவந்து தங்கள் பரம பிதாவை ஆராதித்திருக்கிறார்கள். அவர்கள் எதற்காகக் கூடிவந்தார்கள்? உலகத்தாருக்குத் தங்களைத் தேவனின் சாட்சிகளாகக் காண்பிக்கவும், தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவும், உற்சாகப்படுத்தவும், ஒருவருக்கொருவர் உதவி செய்யவும், தேற்றவும் கூடினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகவாசிகள் அனைவரோடும் என்றென்றும் வாழ்வதற்கான பயிற்சியையும் ஆயத்தத்தையும் இப்பூமிக்குரிய ஆராதனையில் பெற்றுக்கொண்டார்கள்.

"இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்" (நீதிமொழிகள் 27:17). நாம் விசுவாசிக்கிற மற்றும் செய்கிற காரியங்களையே மற்றவர்களும் விசுவாசித்துச் செய்கிறார்கள் என்பதை அறியாமல் தனித்திருக்கும் மனிதன், ஐக்கியத்தின் ஆசீர்வாதத்தை அறியாதவனாக இருக்கிறான். மற்றவர்களும் நம்மைப் போலவே விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிவது நமது ஆத்துமாவுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும். பொது ஆராதனைக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

வேதாகம வரலாறு முழுவதையும் நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களானால், தேவனுடைய பரிசுத்தவான்கள் பொது ஆராதனையில் ஈடுபட்டிருந்ததைப் பல சந்தர்ப்பங்களில் கவனிக்கலாம். காயீன் - ஆபேல் காலத்திலேயே, அவர்கள் காணிக்கைகளைச் செலுத்த தேவனிடம் ஒருமித்து வந்தார்கள் என்பதை அறிவோம். நோவாவின் காலத்திலும், அவரும் அவர் குடும்பத்தாரும் பேழையிலிருந்து வெளியே வந்தவுடன் செய்த முதல் காரியம், தேவனுக்குப் பலிபீடம் கட்டி ஆராதித்ததுதான். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய நம் முற்பிதாக்களின் வாழ்க்கையிலும் பொது ஆராதனையைக் காண முடியும். அவர்கள் எங்கே கூடாரங்களைப் போட்டார்களோ, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.

மோசேயின் காலத்தில் சீனாய் மலையில் தொடங்கி, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இபூலோகத்தில் ஊழியம் செய்த காலம் வரையிலும் இஸ்ரவேல் மக்கள் தொடர்ந்து பொது ஆராதனையில் ஈடுபட்டிருந்ததை வேதத்தில் காண்கிறோம். ஆசரிப்புக் கூடாரத்திலோ, ஆலயத்திலோ தேவனைத் தொழுதுகொள்ள வராத எவனும் இஸ்ரவேல் ஜனத்தாரிலிருந்து அறுப்புண்டு போவான். புதிய ஏற்பாட்டிலும், "எங்கே இரண்டோ அல்லது மூன்றோ பேர் என் நாமத்தினாலே கூடிவருகிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்" (மத்தேயு 18:20) என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார். அப்போஸ்தலர்களும் தாங்கள் சபை நிறுவிய இடங்களிலே, விசுவாசிகள் சபையாகக் கூடிவருவதையே வலியுறுத்தினார்கள். "சபை கூடுதலை விட்டுவிடாதிருங்கள்" (எபிரேயர் 10:25) என்பதே பிரதானமான கட்டளையாக இருந்தது.

தனி ஜெபத்தில் ஈடுபடாத மனிதனுடைய இருதயத்தில் கிருபை இல்லை என்பது எவ்வளவு நிச்சயமோ, அதுபோல பொது ஆராதனை இல்லையென்றால் அங்கே கிறிஸ்தவமே இல்லை. ரோம சாம்ராஜ்ஜியத்தின் உபத்திரவ காலங்களில், கிறிஸ்தவம் தடை செய்யப்பட்டிருந்தபோது பகிரங்கமான பொது ஆராதனை சாத்தியமற்றதாக இருந்தது உண்மைதான். ஆனால், அவை விதிவிலக்கான சூழ்நிலைகளே தவிர, அதுவே நியதி அல்ல.

3. பக்திவிருத்தி அடைதல்

இப்போது உங்கள் கவனத்தைத் திருச்சபை வரலாற்றின் பக்கம் திருப்புங்கள். அப்போஸ்தலர் காலம் தொடங்கி இக்காலம் வரை, ஆத்துமாக்களின் பக்திவிருத்திக்குத் தேவன் சபையைப் பெரிதும் பயன்படுத்தியிருப்பதைக் காண்பீர்கள். நித்திரையிலிருந்த ஆத்துமாக்கள் விழிப்படைந்தது எவ்விடத்திலே? இருளில் இருந்தவர்கள் வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டது எங்கே? மரித்த நிலையிலிருந்த ஆத்துமாக்கள் உயிர்பெற்றது எவ்விடத்திலே? ஐயத்தில் இருந்தவர்கள் தெளிவையும், துயரத்தில் இருந்தவர்கள் ஆறுதலையும் எங்கே பெற்றார்கள்? கிறிஸ்துவை ஆராதிக்கும் விசுவாசிகள் கூடிவந்த சபையில்தானே!

ஒரு தேசத்தில் பொது ஆராதனையை நிறுத்தி, ஆலயங்களை மூடிவிட்டு, மக்கள் கூடிவருவதைத் தடை செய்தால், அந்தத் தேசத்தின் ஆவிக்குரிய நிலை பயங்கரமாகச் சீர்குலைந்துவிடும். வேதாகமத்தைத் தடை செய்வதும், பொது ஆராதனையைத் தடுப்பதும் சாத்தானுக்குச் செய்யும் பேருதவியாகும். "விசுவாசம் கேள்வியினாலே வரும்" (ரோமர் 10:17). மக்கள் ஆராதனைக்கென்று கூடிவரும்போது, அங்கே கிறிஸ்துவின் சிறப்பான பிரசன்னம் இருக்கிறது.

இன்று அநேகருக்குப் பொது ஆராதனைகள் வெறும் சடங்காச்சாரமாக மாறிப்போயிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆயிரக்கணக்கான பெயர்க்கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குச் சென்றும், ஆவிக்குரிய நன்மையை அடையாதவர்களாகவே இருக்கிறார்கள். பார்வோனின் கனவில் வந்த அவலட்சணமான ஏழு பசுக்களைப் போல, அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் இளைத்துப்போயிருக்கிறார்கள். இதைக் காரணம் காட்டி, ஆலயத்திற்குச் செல்லாதவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு நல்ல காரியத்தை ஒருவன் தவறாகப் பயன்படுத்துவதால், அந்தக் காரியமே தவறு என்று ஆகிவிடாது. ஆலயத்திற்குச் சென்று தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்களிடத்தில்தான் நீங்கள் அநேக நற்பண்புகளைக் காண முடியும்.

எபிரேய நிருபத்தின் ஆசிரியர் கூறியதை நாம் மறக்கக்கூடாது: "சபை கூடுதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்" (எபிரேயர் 10:25). பிறர் நம்மைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் நாம் பொது ஆராதனையில் தவறாமல் பங்குகொள்வோம். தேவனுடைய ஆலயத்திற்குச் செல்லாமல், அவருடைய நாளைத் திருடி வேறு காரியங்களுக்குப் பயன்படுத்துகிறவர்களின் வழியை நாம் பின்பற்றாதிருப்போம். தாவீது கூறியதுபோல நாமும் சொல்லக்கடவோம்: "கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்" (சங்கீதம் 122:1). "ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும், என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்" (சங்கீதம் 84:10).

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.