கிறிஸ்தவ ஒழுங்கு

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவு...
ஆசிரியர்: D.யஷ்வந்த் குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 13 நிமிடங்கள்

திருமணம் என்றாலே அது ஒரு கடினமான பொறுப்பு. சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் வேலை செய்கிறார். அதன்படி கணக்கிட்டால், வாரத்தில் 40 முதல் 60 மணி நேரம் அலுவலக வேலைக்காகச் செலவிடுகிறார். ஆனால், திருமண உறவுக்காக ஒவ்வொருவரும் வாரத்தில் 168 மணிநேரமும் (24x7), வருடத்தில் 365 நாட்களும் உழைக்க வேண்டும். திருமண உறவில் விடுமுறை என்பதே இல்லை. நான் இங்கு 'உழைப்பு' என்று குறிப்பிடுவது கடினமான வேலை பளுவை அல்ல; மாறாக, திருமண பந்தத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதைக் குறிக்கிறேன். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் செய்யும் பணியில் உங்களை அர்ப்பணிக்கவும், அவர்களை நேசிக்கவும், பலப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் இந்த உழைப்பு அவசியம். இது அன்புடனும் ஆர்வத்துடனும் செய்யப்படும் ஒரு நற்பணியாகும்.

சிலர் திருமண உறவை வலுப்படுத்த எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை; திருமணத்தின் போது உறுதிமொழிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். கிறிஸ்துவுக்கும் அவருடைய மணவாட்டியான திருச்சபைக்கும் உள்ள உறவைப்போல, தங்கள் திருமண பந்தத்தை மாற்றியமைக்க அவர்கள் முயற்சி செய்வதில்லை (எபேசியர் 5:22-33). சொல்லப்போனால், அவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமே இருப்பதில்லை. திருமணம் என்பது உங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல; நீங்கள் விரும்பியபடி வாழ்வதற்காகவோ அல்லது விரும்பியதைப் பெற்றுக்கொள்வதற்காகவோ அல்ல. இந்த சத்தியத்தைத் தம்பதியினர் உணர வேண்டும். கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, அவருடைய ஆவியைப் பெற்று, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரை முன்மாதிரியாகக் கொண்டு, அவரை மகிமைப்படுத்தும்படி இருவரும் இணைந்து வாழ்வதே உண்மையான 'கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவு'.

அத்தகைய வாழ்க்கை எப்படி இருக்கும்? கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

1. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் இணைந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு, ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து, நல்ல நட்புடன் இறுதிவரை வாழலாம். இருப்பினும், அது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட உறவாக இருக்க முடியாது. 'மையமாக' என்ற வார்த்தையை நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுழல்வதைப் போலவே, கணவன் மற்றும் மனைவியின் உறவும் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு சுழல வேண்டும்.

திருமணத்தில் நீங்கள் இணைந்திருப்பது தேவனுடைய திட்டம் என்பதையும், அதில் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு என்பதையும் முதலில் உணர வேண்டும். பேச்சிலும், செயலிலும், நடத்தையிலும் கிறிஸ்துவின் சாயலாக மாறுவதற்கு கணவன் மனைவி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளை வளர்ப்பதிலும், வேலையில் ஏற்படும் நெருக்கடிகளிலும், உறவினர்களால் வரும் சோதனைகளிலும், இன்னும் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் இயேசுவை மட்டுமே நோக்கி முன்னோக்கிச் செல்பவர்களாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் இணைந்து கிறிஸ்துவை ஆராதிக்க வேண்டும், இணைந்து கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்த வேண்டும், இணைந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும், இணைந்து கிறிஸ்துவைப் பின்தொடர வேண்டும், இணைந்து கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். சுருக்கமாக, இருவரும் இணைந்து கிறிஸ்துவுக்கு நல்ல சாட்சிகளாக வாழ வேண்டும்.

2. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்துகொள்வார்கள்.

சேவை அல்லது ஊழியத்திற்கு இயேசு கிறிஸ்துவை விடச் சிறந்த உதாரணம் யாரும் இருக்க முடியாது. அவர் தேவனுடைய சொரூபமாய் இருப்பதை அறிந்திருந்தும், சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பிதாவிடம் செல்லப்போகிறார் என்பதை அறிந்திருந்தும், தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் சீஷர்களின் கால்களைக் கழுவ நேரம் ஒதுக்கினார் (யோவான் 13:1-17). இதைக் கண்டு பேதுரு பதற்றமடைந்ததில் ஆச்சரியமில்லை. ‘என்னைப் போன்ற பாவியின் அழுக்குக் கால்களை ஆண்டவர் ஏன் கழுவ வேண்டும்?’ என்று பேதுரு நினைத்திருக்கலாம். ஆம், சீஷர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்காகவே இயேசு அதைச் செய்தார்.

அதேபோல, திருமண உறவிலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் பணிவிடை செய்துகொள்ள வேண்டும். அவர்களின் இந்தச் செயல் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இச்செயல் கடினமானதாகவும், மனத்தாழ்மையைக் கோருவதாகவும் இருக்கலாம். சோம்பலும், தற்பெருமையும் திருமண உறவைப் படிப்படியாக அழித்துவிடும். மனத்தாழ்மையுடன் கூடிய சேவையே, ஒரு கணவன் தன் மனைவியை (அல்லது மனைவி தன் கணவனை) உண்மையாக நேசிக்கிறான் என்பதற்கான அடையாளமாகும்.

3. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் மனத்தாழ்மையுடன் இருப்பார்கள்.

இயேசு, "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்" என்று கூறினார் (மத்தேயு 11:29). மனத்தாழ்மையைக் குறித்த விஷயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே நமக்கு முன்மாதிரி. எத்தனை காலம் தான் உங்களுக்கு நீங்களே முக்கியத்துவம் கொடுத்து வாழ்வீர்கள்? உங்களைப் பற்றியே சிந்தித்து, உங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதிலேயே திருப்தி அடைவீர்களா?

மனத்தாழ்மை என்பது உங்கள் துணையை உங்களை விட மேலானவராக எண்ணி அவர்களுக்கு மதிப்பளிப்பதாகும். அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்தல், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பது, அவர்களுக்கு பணிவிடை செய்வது, அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவது மற்றும் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிப்பது ஆகியவை இதில் அடங்கும். கிறிஸ்துவைப் போன்ற சிந்தையைத் தரித்துக்கொள்ள எல்லா தம்பதிகளும் திருமண வாழ்வில் விழிப்போடு இருக்க வேண்டும்.

4. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மன்னிக்கிறவர்களாக இருப்பார்கள்.

கிறிஸ்தவத் திருமண உறவில் இணைந்த இருவரும் 'மீட்கப்பட்ட பாவிகள்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் துணையின் வார்த்தைகள், தோற்றம், செயல்கள், சில சமயங்களில் அவர்களின் மௌனம் கூட உங்களைப் புண்படுத்தலாம். ஆனால், அவர்களின் மீதான கோபத்தையும் வெறுப்பையும் உங்கள் மனதிலேயே வைத்திருந்தால், நாளடைவில் அது உங்கள் திருமண உறவில் விரிசலை உண்டாக்கி, அதை அழித்துவிடும். அதன் பிறகு திருமண உறவில் இனிமையான தோழமை தொடராது.

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (எபேசியர் 4:32). விசுவாசிகளை கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராக்கும்படி வேதம் கட்டளையிடுகிறது என்றால், ஒரே சரீரமாக இணைக்கப்பட்ட கணவனுக்கும் மனைவிக்கும் இந்த விதிமுறை எவ்வளவு முக்கியமானது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

5. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில் தியாகத்தோடு கூடிய அன்பு இருக்கும்.

இயேசு கிறிஸ்து தம்மைச் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, தியாகம் செய்து நமக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இங்கே முக்கிய விஷயம், உங்கள் துணைக்காக உயிரைக் கொடுப்பது மட்டுமல்ல; அவர்களுக்காக வாழ்வதும்தான். சிலர் தங்கள் துணைக்காக மரிக்கவும் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களுக்காகத் தியாகத்தோடு வாழ்வது அதைவிடக் கடினம். கணவன் மனைவி இருவரும் இயேசு கிறிஸ்துவைப் போல ஒருவரையொருவர் தியாகமாக நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தியாக அன்பு என்பது தன் துணைக்கு எது நல்லது, எது சிறந்தது, எது ஆரோக்கியமானது என்பதை அறிந்து அதையே செய்வதாகும்.

உதாரணமாக, இயேசு கிறிஸ்து, "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்" (எபேசியர் 5:27). நீங்களும் அப்படியே செய்யுங்கள். இயேசு கிறிஸ்துவைப் போல, நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறுவதற்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் பங்கை நீங்கள் சரியாகச் செய்யும்போது, நீங்கள் அவர்களை உண்மையாகவே நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

6. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுகிறவர்களாக இருப்பார்கள்.

ஒரு கிறிஸ்தவனின் ஐக்கியம் கிறிஸ்துவுடனும் சக விசுவாசிகளுடனும் இருக்கிறது என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் (1 யோவான் 1:3). கிறிஸ்துவுடனான ஐக்கியம் பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம்; இப்போது சக விசுவாசியுடனான (குறிப்பாக உங்கள் துணையுடனான) ஐக்கியம் பற்றிக் காண்போம்.

ஒருவருக்கொருவர் பேசுவதும், கலந்துரையாடுவதும் இல்வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாகும். கணவன் மனைவி இருவருமே அன்றாட உரையாடல்களில் பேசுபவர்களாகவும், அதே சமயம் கேட்பவர்களாகவும் இருக்க வேண்டும். எப்போதும் ஒருவரே பேசுவதும், மற்றவர் கேட்டுக்கொண்டே இருப்பதும் நல்ல பழக்கமல்ல. இந்த விஷயத்தில் பலர் தோல்வியடைகிறார்கள். சில ஆண்கள், மனைவியிடம் அன்பாகவும் கனிவாகவும் பேசுவது ஆண்மைக்கு அழகல்ல என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு கணவனும் தன் மனைவி சொல்வதைக் கேட்கவும், அவளிடம் பேசுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இதுவே ஒரு கணவனின் சிறந்த பண்பு. 'இது நமக்குப் பொருந்தாது' என்று பெண்கள் நினைக்கக் கூடாது; ஏனெனில் மேற்கூறிய விஷயங்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும்.

"சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது" என்கிறது பரிசுத்த வேதம் (நீதிமொழிகள் 10:19). எனவே, உங்கள் திருமண உறவு ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உரையாடலிலும் ஐக்கியத்திலும் கவனமாக இருங்கள். உங்களது உரையாடல் "...எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருக்கக்கடவது" (கொலோசெயர் 4:6).

7. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் ஐக்கியத்தில் வளருகிறவர்களாக இருப்பார்கள்.

இந்தப் பணியை நாம் கிறிஸ்துவுடன் செய்கிறோம். கிறிஸ்துவின் கிருபையிலும் ஞானத்திலும் வளர வேண்டும் என்பதே ஒவ்வொரு விசுவாசியின் விருப்பமாகும். எபேசு திருச்சபை கிறிஸ்துவுடன் ஐக்கியப்படவும், கிறிஸ்துவோடு நெருங்கி வரவும் அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபித்தார் (எபேசியர் 1:14-19). இந்த வளர்ச்சியால் கிறிஸ்து மகிமைப்படுகிறார்.

திருமணம் அல்லது குடும்ப உறவு என்பது பூமிக்குரியது மட்டுமல்ல (ஆதியாகமம் 2:24; எபிரேயர் 13:4). கணவன் மனைவி இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில், ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் ஐக்கியத்தில் வளர்வதைக் கண்டு கிறிஸ்து மகிமைப்படுகிறார். இது பலருக்குத் தெரிவதில்லை; எனவேதான் கணவன்-மனைவி உறவு ஆவிக்குரிய வாழ்வில் அவ்வளவு முக்கியமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், விசுவாசியான நீங்கள் இந்த சத்தியத்தை உணர்ந்து, உங்கள் துணையுடனான உறவில் வளர்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும்.

8. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுடன் வாழ்வார்கள்.

உங்கள் கவனம் எப்போதும் குழந்தைகள், அவர்களின் கல்வி, வீடு, எதிர்காலத் திட்டங்கள், வங்கி இருப்புத்தொகை போன்றவற்றிலேயே இருப்பதைவிட, கிறிஸ்துவின் மீதும், அவருடைய வாக்குறுதிகளின் மீதும் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்காதபோதோ, வேலையை இழக்கும்போதோ அல்லது பொருளாதார நெருக்கடியின்போதோ நீங்கள் ஏமாற்றமடையலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும்போது ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள் (ரோமர் 10:11; 1 யோவான் 3:3).

கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கை மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் நம்மைத் தொடர்ந்து ஓடச் செய்கிறது. "கிறிஸ்து உங்களுக்கு மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார்" (கொலோசெயர் 1:27). கணவன் மனைவி இருவரும் தங்கள் மனதை தற்காலிகமான உலகப் பொருட்களிலிருந்து விலக்கி, கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் மகிழ்ச்சியடையக் கற்றுக்கொள்ளுங்கள்.

9. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மற்றும் மனைவி இருவரும் திருச்சபையில் ஐக்கியப்படுவார்கள்.

கிறிஸ்து திருச்சபைக்காகத் தனது உயிரைக் கொடுத்தார். எனவே, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவும் திருச்சபைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையவும், பிறருக்கு அன்புடன் ஊழியம் செய்யவும், நமது வரங்களையும் திறமைகளையும் சபையின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தவும் திருச்சபை அவசியம். மேலும், ஒன்றாக ஆராதிக்கவும், தியாகத்துடன் கூடிய வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்ளவும், வேத அறிவு மற்றும் பக்தியில் வளரவும் சபை ஐக்கியம் மிக அவசியமானது.

நிச்சயமாக, தனிப்பட்ட திருமணத்தை விட தேவனுடைய பார்வையில் திருச்சபையே முக்கியமானது (இயேசு ஒரு தனிப்பட்ட திருமணத்திற்காக மரிக்கவில்லை, மணவாட்டியாகிய சபைக்காகவே மரித்தார்). ஆகவே, கணவன் மனைவி இருவரும் திருச்சபையில் இணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாகத் தங்களின் பங்களிப்பைச் சரியாகச் செய்வது மிக முக்கியம்.

முடிவுரை இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது எளிதான காரியமல்ல. அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு மிகுந்த அர்ப்பணிப்பும், பரிசுத்த ஆவியானவரின் உதவியும் நமக்குத் தேவை. எல்லாவற்றிலும் (குறிப்பாக திருமணத்தின் மூலம்) கிறிஸ்துவை மகிமைப்படுத்த ஒரு வலுவான, ஆழமான வாஞ்சை நமக்கு இருக்க வேண்டும். கிறிஸ்துவை உங்கள் திருமணத்தின் மையமாக வைப்பதன் மூலம் கிடைக்கும் எல்லையற்ற திருப்தியை, கிறிஸ்துவுக்குள் ஒவ்வொரு தம்பதியினரும் கண்டுகொள்ள வேண்டும் என்பதே எனது ஜெபமும் வேண்டுதலுமாக இருக்கிறது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.