இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரில் ஒருவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், மற்றொருவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் (நாத்திகர்). அந்த நாத்திக நண்பர் விசுவாசியான தன் நண்பனிடம், "கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதற்கென்று கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புத்தாண்டு போன்ற பல சிறப்பு தினங்கள் உண்டு. மற்ற மதத்தினர்களுக்கும் அவர்களுக்கென்று பல சிறப்பு தினங்கள் உண்டு. ஆனால், என்னைப்போன்ற நாத்திகனுக்கென்று எந்தவித சிறப்பு தினங்களும் இல்லை," என்று சொன்னார். இதைக் கேட்ட அவனது நண்பன், "ஏன் இல்லை? உன்னுடைய தினத்தைத் தான் உலகமே சிறப்பாகக் கொண்டாடுகிறது! ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றான்.
'தேவன் இல்லை' என்று மதிகேடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறான் என்று வேதபுத்தகத்தை அருளிய தேவன் சொல்கிறார். கடவுள் இருக்கிறார் என்பதற்கான மிக முக்கியமான அடையாளம் அவருடைய படைப்புகளே! தேவனே இந்த உலகத்தையும், அதில் உள்ள எல்லாவற்றையும் மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதனின் பெருமையுள்ள இருதயமானது, உலகம் பரிணாமத்தின் (Evolution) மூலம் தானாகவே தோன்றியிருக்கிறது என்கிறது. மீனிலிருந்து தவளை வந்தது, தவளையிலிருந்து முதலை வந்தது, முதலையிலிருந்து குரங்கு வந்தது, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று, தான் காணாத ஒன்றைக் குறித்து மனிதன் யூகத்தின் அடிப்படையில் அடுக்கிக்கொண்டே செல்கிறான்.
முதலில் உலகில் சில மூலக்கூறுகள் இருந்தன; ஏதோ ஒரு சூழ்நிலையில் அவைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு செல் உயிரியைத் தோற்றுவித்தன; பிறகு அது பல செல் உயிரியாக மாறியது என்றெல்லாம் அவன் விளக்கமளிக்கிறான். ஒரு கோப்பை தேநீர் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அறிவியல் ஆய்வின் மூலம் அதில் எத்தனை சதவிகிதம் பால் இருக்கிறது, சர்க்கரை இருக்கிறது, தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிடலாம். ஆனால், அந்தத் தேநீரைத் தயாரித்தவர் யார் என்று அறிவியலால் சொல்ல முடியுமா? இதே உதாரணம் பரிணாமக் கொள்கைக்கும் பொருந்தும். ஒரு உயிரின் அடிப்படை அலகான செல்லினை (Cell) ஆய்வகத்தில் செயற்கையாக மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், எந்த ஒரு விஞ்ஞானியாலும் அந்தச் செல்லுக்கு உயிரைக் கொடுக்க முடியாது. பல ஆண்டுகளாக, பல விதங்களில் மனிதன் செல்லுக்கு உயிரைக் கொடுக்க முயன்று கொண்டிருக்கிறான்; ஆனால் அவனால் முடியவில்லை.
உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நானும் அனுபவபூர்வமாக இதை எழுதுகிறேன்: ஒரு செல் என்பது மிக மிகச் சிக்கலான அமைப்பு. ஒரு நொடிப்பொழுதில் பல ஆயிரக்கணக்கான வேதிவினைகள் செல்லுக்குள் நிகழ்கின்றன. ஒரு உயிரினம் என்பது அதைவிடப் பன்மடங்கு சிக்கலான அமைப்பு. இதில் ஒரு வேதிவினை சரியாக நடைபெறாவிட்டாலும், அந்த உயிரி உயிர் வாழ்வது மிகக் கடினம். அப்படியிருக்க, இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும் மிகச் சரியாகப் பரிணாமத்தின் மூலம் தோன்றி, ஒரு சமநிலையில் தானாகவே வாழ்கின்றன என்கிற கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுளின் எதிரியான பிசாசானவன் இப்படிப்பட்ட கொள்கைகளை உருவாக்கி, மனிதனை நம்பவைத்து, தன்னால் இயன்றவரை மனிதர்களை தேவனிடமிருந்து பிரித்து, தன்னுடன் நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
இந்த உலகத்தைப் படைத்தவர் தேவனே! அவரே இந்த உலகத்தை ஆளுகை செய்கிறார். இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பும் தேவன் எவ்வளவு மகத்துவமானவர் என்பதை வெளிப்படுத்துகிறது. உலகத்தில் பல காலகட்டங்களில் வாழ்ந்த பல அறிவியல் அறிஞர்களும், உயிரிகள் மற்றும் இயற்கையின் சிக்கலான தன்மையைப் பார்க்கும் பொழுது, 'கடவுள் என்கிற ஒருவர் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்கிறோம்' என்றே சொல்லியிருக்கிறார்கள்.
கடவுளாகிய இயேசு கிறிஸ்துவானவர் இந்த உலகத்தில் வந்தார் என்பது உண்மை! இதற்கு உலகச் சரித்திரமே சாட்சி பகருகிறது. அதை யாராலும் மறுக்க முடியாது. அவருடைய வருகை இந்த உலகச் சரித்திரத்தையே 'கிறிஸ்துவுக்கு முன்', 'கிறிஸ்துவுக்குப் பின்' என்று இரண்டாகப் பிரித்திருக்கிறது. அவர் செய்த போதனைகளும், நிகழ்த்திய அற்புதங்களும் கூட உலகச் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. உலகத்தின் முதல் மனிதர்களாகிய ஏவாள் முதலில் பாவம் செய்தாள்; பிறகு ஆதாமும் பாவம் செய்தான். இதன் மூலம் முழு மனித இனமுமே பாவத்திற்குள்ளாக வந்தது. 'இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை' என்று வேதம் கூறுகிறபடி, பாவமே செய்யாத இயேசு கிறிஸ்து தன்னுடைய இரத்தத்தைச் சிலுவையில் சிந்தியதின் மூலம் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டுக்கொண்டார். எப்படி ஒரு மனிதனுடைய பாவத்தினாலே முழு உலகமும் பாவிகள் என்று தீர்க்கப்பட்டதோ, அப்படியே இயேசு கிறிஸ்து என்ற ஒருவருடைய இரத்தம் சிந்துதலினாலே, யாரெல்லாம் அவரை மீட்பராக ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் தங்களுடைய பாவத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்திருப்பதால், அவர்கள் மரணத்திற்குப் பிறகு நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் 'தேவன் இருக்கிறார்' என்ற சிந்தையைத் தேவன் கொடுத்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. யாரெல்லாம் கடவுளை அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில், யாரோ ஒருவர் மூலமாகத் தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார். நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையும் ஏதோ தற்செயலாக உங்கள் பார்வைக்கு வந்துவிடவில்லை! கடவுள் உங்களையும் நேசிப்பதால், உங்களையும் தன்னுடைய பிள்ளையாக மாற்ற விரும்புவதால், தேவனே இதை உங்கள் கரங்களில் கொடுத்திருக்கிறார். நீங்கள் பாவி என்பதை உணர்ந்து, உண்மையாய் அவரை நோக்கிப் பார்க்கும்பொழுது, உங்களுக்கும் தேவன் தன்னை வெளிப்படுத்துவார். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுது, இந்த உலகம் தரக்கூடாத உன்னதமான சந்தோஷத்தையும், சமாதானத்தையும், பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், நித்திய வாழ்விற்கான உறுதியையும் அவர் உங்களுக்கும் தருவார்! அவரை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா?