உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம் பதிவிடவேண்டும்) வரையிலான வசனங்களில் இருந்து சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து வாசிக்க...
உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கான ஒரே அடையாளம் (விதைக்கிறவன் உவமை) மத்தேயு 13:1-9 (வசனம் பதிவிடவேண்டும்) வரையிலான வசனங்களில் இருந்து சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இது பரிசுத்த வேதத்தில் நாம் பலருக்கும் மிக ஆரிமுகமான ஒரு பகுதியாகும். இயேசு கிறிஸ்து அவருடைய போதனைகளில் அடிக்கடி உவமைகளை பயன்படுத்தி போதிப்பார். அவர் சொன்ன உவமைகள் அனைத்திலும், புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையானதும், அதே சமயம் மிக முக்கியமான ஒரு உவமையை நாம் மேல் வாசித்தோம். இந்த உவமை மூன்று சுவிசேஷங்களில் காணப்படுகிறது: (மத்தேயு 13:1-22), (மாற்கு 4:1-20), மற்றும் (லூக்கா 8:5-15). இந்த மூன்றிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் லூக்கா 8:11-ல் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த உவமையை நாம் சிந்திக்கலாம்.
நமக்கு மிகவும் பரிச்சியமான வேதப்பகுதிகளை வாசிக்கும்போது நமக்கு வரும் ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், "இது எனக்குத் தெரிந்த பகுதிதானே" என்று நாம் அலட்சியமாக நினைப்பதுதான். அப்படி நினைக்கும்போது, அந்த வேதபகுதியிலிருந்து நாம் வேத சத்தியத்திலிந்து ஆழங்களை அறிவதில் பின்தங்கியிருக்கிறோம். எனவே, ஒவ்வொரு முறையும் வேதத்தை வாசிக்கும்போதும், "ஆண்டவரே, உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்" என்ற ஜெப சிந்தனையோடும், வாஞ்சையோடும் நாம் தேவ வசனத்தை அணுக வேண்டும்.
விதைக்கிறவனும் நான்கு வகையான நிலங்களும்
இயேசுவானவர் சொல்லிய இந்த உவமையின் பொருள் என்ன என்பதை இயேசு கிறிஸ்துவே தெளிவாக விளக்கியுள்ளார். இந்த உவமையில் “விதைக்கிறவன்” இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பவாகவும், விதைக்கப்படுகிற விதைகள் என்பது தேவனுடைய வார்த்தைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
விதை தேவனுடைய வார்த்தையாக இருந்தால், அது விழுகின்ற நான்கு வகையான நிலங்களும் எதைக் குறிக்கின்றன? வழியருகே உள்ள நிலம், கற்பாறை நிலம், முள்ளுள்ள நிலம், மற்றும் நல்ல நிலம் உவமையில் சொல்லப்பட்ட இந்த நான்கு நிலங்களும் தேவ வசனத்தைக் கேட்கிறவர்களின் இருதயத்தின் நிலைமைகளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளன.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
இயேசு கிறிஸ்து, வசனத்தைக் கேட்கும் மக்களை நான்கு கூட்டங்களாகப் பிரிக்கிறார். தேவ வசனம் எங்கே போதிக்கப்பட்டாலும், இந்த நான்கு வகையான மக்களும் அங்கே இருப்பார்கள். அது நம்முடைய திருச்சபையாக இருந்தாலும் சரி, வேறு எந்தச் சபையாக இருந்தாலும் சரி, இந்த நான்கு பிரிவினரும் அங்கே இருப்பார்கள். இதில் நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஏனென்றால், இந்த நான்கு பிரிவினரில் ஒரு பிரிவினர் மட்டுமே உண்மையான தேவனுடைய பிள்ளைகள் என்பதை நாம் தெளிவாக இந்த வசனத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. வெறுமனே தேவ வசனத்தைக் கேட்பதாலோ, தவறாமல் சபைக்கு வந்து ஆராதனையில் கலந்துகொள்வதாலோ ஒருவன் தேவனுடைய பிள்ளையாகிவிட முடியாது. அது மட்டுமே நம்மை கிறிஸ்தவர்கள் என்று நிரூபிக்கப் போதுமானதல்ல என்பதை இந்த உவமை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இப்போது இந்த நான்கு வகையான நிலங்களை (இருதயங்களை) குறித்து விரிவாகப் பார்ப்போம்:
- வழியருகே உள்ள நிலம் (அலட்சியமான இருதயம்)
இவர்கள் தேவ வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால், அந்த வசனம் அவர்களின் இருதயத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தேவனுடைய அன்பைக் குறித்தோ அல்லது அவருடைய கோபாக்கினையைக் குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. ஒரு பாறையின் மீது தண்ணீர் ஊற்றினால் அது தேங்கி நிற்காமல் எப்படி வழுக்கிக் கொண்டு ஓடிவிடுமோ, அதுபோல வசனம் இவர்களை விட்டு விலகிவிடுகிறது.
உடனே ஆகாயத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளை விழுங்கிவிடுகின்றன. அந்தப் பறவைகள் யாரைக் குறிக்கின்றன? பிசாசைக் (சாத்தானைக்) குறிக்கின்றன. எப்போதெல்லாம் ஒருவர் வசனத்தை அலட்சியமாகக் கேட்கிறாரோ, அப்போதெல்லாம் சாத்தான் வந்து அவர்கள் இருதயத்திலிருந்து வசனத்தை எடுத்துப் போட்டுவிடுகிறான். சாத்தான் எதற்காக அப்படிச் செய்கிறான்? அவர்கள் "விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்கு" (லூக்கா 8:12) வசனத்தை எடுத்துப்போடுகிறான்.
ஏனென்றால், ஒரு மனிதனுக்கு இரட்சிப்பு தேவ வசனத்தின் மூலமாக மட்டுமே வரும் என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான், அவர்கள் வசனத்தைக் கேட்கும்போதே சாத்தான் அங்கே வந்துவிடுகிறான். பலர் சபையில் உலக சிந்தையோடே அமர்ந்திருப்பார்கள், ஆனால் அவர்கள் மனம் விசா, வேலை, வியாபாரம் என்று உலக காரியங்களைச் சுற்றி வந்துகொண்டிருக்கும். இவர்களுக்குக் கிறிஸ்தவம் என்பது ஒரு பாரம்பரியம் அல்லது வழக்கமே தவிர, அதில் ஆவிக்குரிய ஜீவன் இருக்காது.
- கற்பாறை நிலம் (உணர்ச்சிவசப்படும் இருதயம்)
இரண்டாவது பிரிவினர், கற்பாறை நிலத்தை ஒத்திருக்கிறார்கள். இவர்கள் முதல் பிரிவினரை விட சற்றுப் பரவாயில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், இவர்கள் வசனத்தைக் கேட்டவுடனே மிகுந்த சந்தோஷத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு உடனடி முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குள் வேர் இல்லாததால் இவர்களின் விசுவாசம் தற்காலிகமானது. இவர்களுக்கு உபத்திரவங்களோ, பாடுகளோ, அல்லது விசுவாசத்தின் நிமித்தம் சோதனைகளோ வரும்போது, இவர்கள் உடனே பின்வாங்கிப் போய்விடுகிறார்கள்.
இவர்கள் இயேசுவிடம் வருவது ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே; தங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும், வியாதி குணமாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், விசா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறார்கள். இயேசுவை ஒரு 'கிறிஸ்துமஸ் தாத்தா' போல நினைத்து, அவர் நம் தேவைகளை எல்லாம் தீர்த்துவைப்பார் என்ற சுயநல நோக்கத்தோடு இவர்கள் வருகிறார்கள்.
இயேசு கிறிஸ்து தன்னை உலகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒருவராக விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் பாவிகளை இரட்சிக்கவே வந்தார். உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டும் இயேசுவிடம் வருபவர்கள், பாடுகள் வரும்போது கிறிஸ்துவுக்குள் நிலைநிற்க மாட்டார்கள்.
- முள்ளுள்ள நிலம் (உலக கவலைகள் நிறைந்த இருதயம்)
மூன்றாவது பிரிவினர், முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள். இங்கு விதை விழுகிறது, முளைக்கிறது, வளர்கிறது. ஆனால், அதோடு சேர்ந்து முள்களும் வளர்கின்றன. அந்த முள்கள் எதைக் குறிக்கின்றன? உலக கவலைகள், பண ஆசை, உலக சிற்றின்பங்கள் இவைகளால் அவர்கள் நெருக்கபடுகிறார்கள்.
இவர்கள் தேவனுடைய வசனத்தைக் கேட்பார்கள், அது சரி என்று ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தங்கள் வாழ்வில் அதைச் செயல்படுத்த மாட்டார்கள். தங்களின் பாரம்பரியம், சமூக அந்தஸ்து, உலகப் பெருமை போன்றவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தேவ வசனத்தை விட உலக காரியங்கள் அவர்களை ஆட்கொள்வதால், அவர்களுடைய வாழ்வில் டவனுடைய வசனம் பலனளிக்காமல் நெருக்கப்பட்டுப் போய்விடுகிறது. வேத வசனத்தைக் கேட்கும் நான்கில் மூன்று பங்கு மக்களின் நிலைமை இதுதான். வசனத்தைக் கேட்பதினால் மட்டும் ஒருவருக்கும் எந்த ஆவிக்குரிய பிரயோஜனமும் இல்லை.
- நல்ல நிலம் (உண்மையான கிறிஸ்தவன்)
நான்காவது பிரிவினர், நல்ல நிலத்தில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள். இவர்கள் எப்படி பலன் தருகிறார்கள் என்பதற்கான விளக்கத்தை லூக்கா 8:15-ல் இயேசு கூறுகிறார்:
நேர்மையும் நற்குணமுமான இருதயம் (நொறுங்குண்ட இருதயம்): இவர்கள் தேவ வசனத்தை ஒரு நொறுங்குண்ட, தாழ்மையான இருதயத்தோடு கேட்கிறார்கள். தேவனுக்கு முன்பாகத் தங்கள் உண்மையான பாவ நிலைமையை உணருகிறார்கள். (சங்கீதம் 51:17 - "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்").
தேவனுடைய வசனத்தைக் கைக்கொள்ளுதல்: இவர்கள் வசனத்தை வெறுமனே கேட்பதோடு நின்றுவிடுவதில்லை. அதன்படி வாழ்வதற்க்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வதில்லை.
பொறுமையுடனே பலன் தருதல்: பலன் தருவது என்பது ஒரே நாளில் நடக்கும் காரியம் அல்ல. முதல் மூன்று நிலங்களில் உள்ள தடைகளை (சாத்தான், பாடுகள், உலக கவலைகள்) முறியடித்து, சோதனைகளைச் சகித்து, பொறுமையோடு அவர்கள் பலன் தருகிறார்கள்.
பலன் என்றால் என்ன? இங்கே பலன் என்பது வெறுமனே நற்கிரியைகளைச் செய்வதை மட்டும் குறிக்கவில்லை. அது "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனி" (மத்தேயு 3:8). ஒருவன் இரட்சிக்கப்படுவதே அந்த உண்மையான பலன். ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கும், பெயரளவிலான கிறிஸ்தவனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இந்த 'பலன்' (கனி) தான்.
எனவே, நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சோதித்து அறிய வேண்டும். நான் உண்மையிலேயே மனந்திரும்பி, மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவனா? என் வாழ்க்கையில் இரட்சிப்பு என்ற பலன் வெளிப்படுகிறதா? அல்லது வெறுமனே திருச்சபைக்குச் செல்லும் ஒரு பாரம்பரியக் கிறிஸ்தவனாக நான் இருக்கிறேனா? நான் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்துவிட்டேன் என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கக் கூடாது. விதைக்கப்படுகிற வசனம் நம்மை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்த வேண்டும். அதற்காக நம் இருதயங்களை தேவனுக்கு முன்பாக கீழ்படிதளோடு இருப்போம்.
முடிவுரை:
விதைக்கிறவனின் உவமை நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால், தேவ வசனத்தை வெறுமனே கேட்பதும், பாரம்பரியமாக திருச்சபைக்குச் செல்வதும் மட்டுமே ஒருவனை உண்மையான கிறிஸ்தவனாக மாற்றிவிடாது என்பதே. இந்த உவமையின் மூலம் இயேசு கிறிஸ்து நம் இருதயத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்க்க ஒரு அளவுகோலைத் தருகிறார்.
வழியருகே விழுந்த விதையைப் போல சாத்தானின் வஞ்சனைக்கு இடமளித்து வசனத்தை அலட்சியப்படுத்தாமலும்; கற்பாறையைப் போல உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டும் தேவனிடம் வந்து பாடுகள் வரும்போது பின்வாங்காமலும்; முள்களைப் போல உலகக் கவலைகளுக்கும், பண ஆசைக்கும் வசனத்தை நெருக்கிப்போட அனுமதிக்காமலும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
ஒரு உண்மையான கிறிஸ்தவன் என்பவன் நல்ல நிலத்திற்கு ஒப்பானவன். அவன் தேவனுடைய வசனத்தை நொறுங்குண்ட மற்றும் தாழ்மையான இருதயத்தோடு ஏற்று, தன்னை ஏமாற்றிக்கொள்ளாமல் வசனத்திற்குக் கீழ்ப்படிவான். எத்தகைய தடைகள் வந்தாலும் பொறுமையோடு சகித்து, உண்மையான இரட்சிப்பு என்னும் "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனியை" தன் வாழ்வில் வெளிப்படுத்துவான்.
எனவே, நாம் ஒவ்வொருவரும் எந்த வகையான நிலமாக இருக்கிறோம் என்பதை தேவ சமுகத்தில் ஆராய்ந்து பார்ப்போம். பெயரளவிலான கிறிஸ்தவ வாழ்க்கையை விட்டுவிட்டு, விதைக்கப்படும் தேவ வசனம் நம்மை உண்மையான மனந்திரும்புதலுக்கும், ஜீவனுள்ள ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் நேராக வழிநடத்த, நம் இருதயங்களை தேவனுடைய கரங்களில் முழுமையான கீழ்ப்படிதலோடு அர்ப்பணிப்போம். பரலோகத்தின் தேவனே தாமே நம்மை நல்ல நிலமாக மாற்றுவாராக!
ஜெபம்:
"நம்மை மிதமிஞ்சி நேசிக்கிற தேவனே! உமது வார்த்தையை சிந்திக்கவும் நீர் கொடுத்த நல்ல தருணத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். இந்த விதைக்கிறவனின் உவமையின் மூலம் நீர் எங்களோடு பேசினதற்காக உமக்கு நன்றி.
ஆண்டவரே, இந்த வார்த்தைகளை வெறுமனே கேட்பவர்களாக மட்டும் இருந்து எங்களை நாங்களே வஞ்சித்துக் கொள்ளாதபடி, உமது வார்த்தையினால் நடக்கிறவர்களாக எங்களை மாற்றுவீராக. நொறுங்குண்ட இருதயத்தோடு உமது வார்த்தையைக் கேட்டு, அதை எங்கள் வாழ்வில் காத்துக்கொண்டு, பொறுமையோடு மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைத் தர எங்களுக்கு கிருபை செய்தருளும். மாம்ச சிந்தனையோடும் உலக கவலைகளோடும் வாழாமல், இரட்சிப்பின் பலனை எங்கள் வாழ்வில் நாங்கள் காண எங்களுக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே, ஆமென்."